

கரோனா நோய்ப் பரவலில் மிகவும் சவாலாக இருப்பது நோய் தீவிரமான பிறகு சிகிச்சை அளிப்பதே. நோய் தீவிரம் அடைந்தபின் ஆக்சிஜன் செலுத்தியும் பெரும்பாலும் பலன் கிடைப்பதில்லை. இதனால் மருத்துவமனைகளின் பணிச்சுமை அதிகரிக்கிறது.
நோய்த் தொற்று ஏற்பட்டு ஒரு வாரத்துக்குள் சிகிச்சை அளிப்பது முக்கியம். ஆக்சிஜன் அளவு 90-க்குக் கீழே குறைந்த பிறகு மருத்துவமனைகளுக்கு வருவது பெரிதும் பலனளிக்காது. இந்த நிலைக்குப் போவதற்கு முன் சமூக அளவில் ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை அளிப்பதுதான் சிறந்த வழி.
இதற்கு டாக்டர் ஜி.ராமானுஜம் கூறும் சில எளிய ஆலோசனைகள்:
1. லேசான காய்ச்சல், உடல்வலி, சளி போன்ற அறிகுறிகள் இருப்பவர்கள் உடனடியாகப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்
2. பாசிட்டிவ் என வந்தவர்கள் அனைவரும் அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், துணை சுகாதார மையம் போன்ற மருத்துவ நிலையங்களில் சிகிச்சை பெறலாம்.
3. எல்லா பாசிட்டிவ் நோயாளிகளும் அவர்களது குடும்பத்தினரும் மூன்று வேளையும் ஆக்சிஜன் அளவைப் பார்க்க வேண்டும்.
4. Ivermectin, Azithromycin, Vitamin C போன்ற மருந்துகளை மருத்துவரின் ஆலோசனைக்குப் பின்னர் எடுத்துக்கொள்ள வேண்டும்
5. பாசிட்டிவ் ஆனவர்களில் 40 வயதுக்கு மேலே உள்ள அனைவரும் மருத்துவர் ஆலோசனைப்படி 5-ம் நாள் அருகில் உள்ள மருத்துவமனையில் சி.டி. ஸ்கேன் எடுக்க வேண்டும் .
6. ஆக்சிஜன் அளவு 95-க்குக் கீழ் வந்தாலோ, சி.டி.ஸ்கேனில் 20%க்கு மேல் பாதிப்பு இருந்தாலோ ஆரம்ப சுகாதார மருத்துவரின் கண்காணிப்பில் உடனடியாக ஸ்டீராய்டு, ரத்தம் உறைவைத் தடுக்கும் மருந்துகளை வீடுகளிலேயே எடுத்துக் கொள்ளலாம். இது அவர்களின் நிலை மோசமாவதை வெகுவாகக் குறைக்கும்.
7. சி.டி. ஸ்கேனில் 50% பாதிப்பு இருந்தாலோ ஆக்சிஜன் அளவு 90க்குக் கீழ் வந்தாலோ உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைகளுக்குச் செல்ல வேண்டும்.
மருத்துவமனைகளில் வழங்கப்படும் சிகிச்சைகளைவிடச் சமூக அளவில் அளவில் எதிர்கொள்வதே பெருந்தொற்றுக் காலத்தில் பலனளிக்கும். தமிழகத்தில் மிகச்சிறந்த சுகாதாரக் கட்டமைப்பு இருக்கிறது. அதை முறையாகப் பயன்படுத்தினால் நோயாளிகள் தீவிர நிலைக்குச் செல்வதை வெகுவாகக் குறைக்கலாம். மருத்துவமனைகளில் ஆக்சிஜன், படுக்கை, மருந்துகள் போன்றவற்றில் பற்றாக்குறை ஏற்படுவதும் வெகுவாகக் குறையும்.
தொகுப்பு: நிஷா