Published : 08 May 2021 03:14 AM
Last Updated : 08 May 2021 03:14 AM

நலம்தானா 04: உடலைப் புரிந்துகொள்ள வேண்டாமா?

பிரபல திரைப்பட இயக்குநர் ஒருவர், அவருடைய பெற்றோ ரின் முழு உடல் பரிசோதனை தொடர்பாக சில மாதங்களுக்கு முன் என்னைச் சந்தித்தார். “நீங்களும் ஐம்பதைக் கடந்துவிட்டீர்கள். உங்கள் மனைவியும் 45 வயதைக் கடந்து விட்டார். நீங்கள் இருவரும் முழு உடல் பரிசோதனை செய்துகொள்ளலாமே” என்றேன்.

“வேண்டாம். எங்களுக்கெல்லாம் ஒன்றுமில்லை. பிறகு பார்த்துக்கொள்ள லாமே” என்றார். “இது அக்டோபர் மாதம். மார்பகப் பரிசோதனைக்கான மாதம். அது தொடர்பான பரிசோதனைகளைச் செய்துகொள்ள ஏற்ற மாதம்” என்றேன்.

அதிர்ச்சி தந்த முடிவுகள்

அரை மனதோடு பரிசோதனைகளை முடித்துவிட்டு வந்தார். அவருடைய அப்பா-அம்மா 70 வயதைக் கடந்திருந்தபோதும் நோய் எதுவுமே இல்லை. ஆனால், ‘எங்களுக்கு ஒன்றுமில்லை’ என்று கூறிய இயக்குநருக்கு சர்க்கரை தாறுமாறாக இருந்தது. சாப்பிடுவதற்கு முன் 190, சாப்பிட்ட பிறகு 300-ஐ கடந்தும் இருந்தது. கொழுப்பு, தைராய்டு குறைபாடு போன்ற பிரச்சினைகளும்கூட இருந்தன.

அவருடைய மனைவிக்கோ மார்பகப் பரிசோதனையில் (Mammogram) மார்பகப் புற்றுநோய்க்கான சில அறிகுறிகள் தென்பட்டன. இயக்குநர் ஆடிப்போய்விட்டார். அவர் இதை எதிர்பார்த்திருக்கவில்லை. மனைவிக்கு மார்பக புற்றுநோய் ஏற்பட்டுள்ளது என்பதை அவரால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. “எந்தவிதத் தொந்தரவு மில்லையே. லேடி டாக்டர்கூடப் பரிசோதித்துவிட்டுக் கட்டி எதுவும் தென்படவில்லை என்று கூறினாரே. எப்படி வந்தது?” என்று புலம்பித் தவித்தார்.

வேறாரு ஸ்கேன் மையத்துக்குப் போய் மார்பகப் பரிசோதனை மேற்கொள்ளப் பட்டது. எம்.ஆர்.ஐ. மார்பகப் பரிசோத னையும் மேற்கொள்ளப்பட்டது. மகப்பேறு, அறுவைசிகிச்சை நிபுணர்களை யும் பார்த்தார். திசுப் பரிசோதனை (Biopsy) மேற்கொள்ளப்பட்டு இரண்டு பிரபல ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப் பட்டது. இரண்டும் மார்பகப் புற்றுநோயை உறுதிசெய்தன.

நல்லவேளையாக ஆரம்ப நிலையில் (Carcinoma in situ) நோய் கண்டறியப் பட்டதால், அறுவை சிகிச்சையில் முழுமையாகக் குணப்படுத்த முடிந்தது. இப்போது பார்த்தாலும் முழு உடல் பரிசோதனை குறித்துப் பெருமையாகப் பேசுவதுடன், தன் குடும்பத்தினர் அனை வருக்கும் முறையாகப் பரிசோதனை செய்து கொள்கிறார் அந்த இயக்குநர்.

முழு உடல் பரிசோதனை

அறிகுறி இல்லாமலும் நோய்கள் மனித உடலுக்குள் ஏற்பட்டு, வளர்ந்து கொண்டிருக்குமெனப் பார்த்தோம் இல்லையா? இப்படி அறிகுறி இல்லாத நோய்களை எப்படிக் கண்டறிவது என்கிற கேள்வி வரலாம். அதற்கான பதில்தான், முழு உடல் பரிசோதனை (Master Health Checkup-Whole body).

முழு உடல் பரிசோதனையை எந்த வயதில் செய்ய வேண்டும்?

முன்பெல்லாம், 50 வயதுக்கு மேல் பார்த்துக்கொள்ளலாம் என்பார்கள். தற்போது 40 வயதுக்கு மேல் என்றாகிவிட்டது. 30-35 வயதிலேயே மாரடைப்பால் இறப்பவர்களைப் பார்க்கிறோம். குறைந்தபட்சம் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் செய்துகொள்வது நல்லது.

வாய்ப்பைத் தவறவிடுகிறோம்

கல்லூரிகள், புதிதாக வேலையில் சேரும்போது (கல்லூரிகளில் வேலைக்குச் சேரும்போதா, கல்லூரிகளிலும் புதிதாக வேலைக்குச் சேரும்போதுமா?) உடல்நலம் குறித்த சான்றிதழ் (Physical Fitness Certificate) கேட்கப்படுவது வழக்கம். இதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்வ தில்லை. “சார், பச்சை மையில் ஒரு கையெழுத்து வேணும்” என்பார்கள். உடல்தகுதிச் சான்றிதழ் என்று மறந்தும்கூடச் சொல்ல மாட்டார்கள்.

‘எல்லாம் நன்றாக இருக்கிறது’ என்று தெரிந்த மருத்துவரிடம் சான்றிதழ் கேட்பதையே பெரும்பாலோர் வழக்கமாக கொண்டுள்ளார்கள். அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி உடலை முறையாகப் பரிசோதனை செய்துகொள்வதில்லை.

ஆண்டுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்யும்போது, அறிகுறிகள் தோன்றாத நோய்களை ஆரம்பத்திலே கண்டறிய முடியும். ஏனென்றால், தொந்தரவுகளை ஏற்படுத்தாத நோய்கள்கூட என்றைக்காவது ஒரு நாள், நோய் முற்றிய நிலையில் அறிகுறிகளை வெளிப்படுத்தும். அப்போது அவை உடலை வெகுவாகப் பாதித்து, மரணம் வரைக்கும்கூட நம்மை அழைத்துச் சென்றுவிடலாம்.

உங்கள் உடலைப் புரிந்துகொள்ளவும், தேவைப்படும் நேரத்தில் சிகிச்சை பெறவும் அவசிய பரிசோதனைகள் குறிப்பிட்ட இடைவெளியில் தேவை என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்.

கட்டுரையாளர், மருத்துவப் பேராசிரியர் தொடர்புக்கு: muthuchellakumar@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x