

‘எல்லோருக்கும், எல்லா நோய்களும், எல்லாவிதமான தொந்தரவுகளையும் எப்போதும் ஏற்படுத்துவதில்லை.’
இதற்கு கரோனாவை விட்டால் வேறு சிறந்த எடுத்துக்காட்டு இருக்க முடியாது. இந்தப் புதிய வைரஸ் நோய், சிலருக்கு ஜலதோஷம்போல் எட்டிப்பார்த்துவிட்டுப் போய்விடுகிறது. சிலருக்கு உயிரையே பறிக்கும் அளவுக்குச் செல்கிறது.
இதன் அறிகுறிகள் என்று புதிது புதிதாக அறிவிக்கப்படுகின்றன. ஆனால், எல்லாத் தொந்தரவு களும் எல்லோருக்கும் ஏற்படுவதில்லை. பலருக்குத் தொற்று இருக்கிறது என்று ஆர்.டி. பி.சி.ஆர். பரிசோதனை செய்தால் மட்டுமே தெரியவருகிறது. ஆனால், பாதிக்கப்பட்டவரோ எந்தத் தொந்தரவும் இல்லாததுபோல் சாதாரணமாக இருக்கிறார்.
இதேபோலத்தான் நமது உடலில் பல நோய்கள் எந்தவிதத் தொந்தரவுகளையும் அறிகுறி களையும் வெளிக்காட்டாமல் தோன்றி,வளர்ந்துகொண்டிருக்கும். இந்த நோய்களுக்கு பரம்பரையோ மரபணுவோகூடக் காரணமாக இருக்கலாம். இந்த நோய்கள் என்றாவது ஒரு நாள் வெளிப்படும். அப்படி வெளிப்படும் முதல்முறையே நோயாளியின் கடைசி நாளாகவும் மாறலாம். அல்லது மோசமான பெரும் பாதிப்பாக வெளிப்படலாம்.
நோயில்லாமல் நலிவா?
நான் பணிபுரிந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மயங்கிய நிலையில், ஐ.சி.யூவிற்கு 55 வயதுடைய ஒருவரைக் கொண்டுவந்தார்கள்.
‘அவருக்கு ரத்த அழுத்தம் இருக்கிறதா, சர்க்கரை நோய் இருக்கிறதா, இதய நோய் இருக்கிறதா’ என்று விசாரித்தால், எல்லா வற்றுக்கும், ‘இல்லை’ என்கிற பதிலே கிடைத்தது.
‘எந்த நோய்க்காவது மருந்து, மாத்திரை சாப்பிடுகிறாரா?’ என்று கேட்டால், ‘அவர் இதுவரை மருத்துவமனைக்கே போனதில்லை. அவருக்கு இதுவரை எந்த நோயு மில்லை, எந்தத் தொந்தரவு மில்லை. நல்லாத்தான் இருந்தாரு... திடீர்னு இன்னைக்குக் காலையில்தான் இப்படி மயங்கிட்டாரு’ என்றார்கள்.
ஆபத்தான நிலை
அவரைப் பரிசோதனை செய்தபோது, ரத்த சர்க்கரையின் அளவு 456 மி.கி./டெ.லி. இருந்தது. கொலஸ்டிரால், ஹெச்.பி.ஏ.1 சி. அளவுகள் அதிகரித்தி ருந்தன. கீட்டோன் பொருட்கள் மிகுந்து உடல் அமிலதன்மையை அடைந்து விட்டிருந்தது. ஏ.பி.ஜி. பரிசோதனை, பிற ரத்த, சிறுநீர் பரிசோதனைகள் இதை உறுதிசெய்தன.
ரத்த அழுத்தம் 170/100 எம்.எம்./ஹெச்.ஜி. என அதிகரித்திருந்தது. இதயப் பரிசோதனையில் மாரடைப்பும் ஏற்பட்டிருந்தது. ஆக, அந்த நோயாளி ஏற்கெனவே நீரிழிவு, மிகை ரத்த அழுத்தம், ரத்த மிகை கொலஸ்டிரால் நோயாளி என்பது தெரியவந்தது.
ஆனால், இவற்றுக்கான எந்தப் பரிசோதனையையும் இதற்கு முன் அவர் செய்துகொண்டிருக்கவில்லை.நோயைக் கண்டறியவும் இல்லை. சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கவும் இல்லை. முதல் அறிகுறியே மோசமான பாதிப்பாக உருவெடுத்துள்ளது. கட்டுப்படாத நீண்ட கால நீரிழிவு நோயால் ஏற்படும் சர்க்கரை அமில பாதிப்பும் (Diabetic ketoacidosis, மாரடைப்புமாக (Myocardial infarction).
அவருக்குத் தேவைப்பட்ட திரவங்களைக் கொடுத்து, இன்சுலின் கொடுத்து, இதயத்தைச் சீராக்கி, ஒருவழியாக அவரைக் காப்பாற்றி வீட்டுக்கு அனுப்பிவைத்தோம்.
வெளித்தெரியாத பனிப்பாறை
இதேபோல், மிகை ரத்த அழுத்தம் உள்ளவர்கள் அது பற்றித் தெரியாமலேயே இருப்பார்கள். சிலருக்குத் தலைவலி, தலைபாரம், தலைச்சுற்றல் போன்ற தொந்தரவுகள் இருக்கலாம். இவர்களின் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு மோசமாகும்போதோ, சிறுநீரகம் பாதிக்கப்பட்ட நிலை வரும்போதோதான் மிகை ரத்த அழுத்த பாதிப்பு இருப்பதையே தெரிந்துகொள்வார்கள்.
கடலில் மிதக்கும் பனிப்பாறைகளின் நுனி சிறிதாக இருக்கும். அதைப் பார்த்து தப்புக்கணக்கு போட்டுவிடக் கூடாது. அப்படித் தப்புக்கணக்கு போட்டதால்தான், உலகின் மிகப் பெரிய கப்பலாக இருந்த டைட்டானிக் கடலில் மூழ்கியது. இது ஒருபுறம் என்றால், இன்னும் சில பனிப்பாறைகள் வெளியே தெரியவும் செய்யாது.
உடலில் அறிகுறிகளுடன் உருவாகும் நோய்கள், வெளியில் தெரியும் பனிப்பாறை போன்றவை. அறிகுறி தென்படாமல் உருவாகும் நோய்கள், தண்ணீருக்குள் மூழ்கியிருக்கும் பனிப்பாறை போன்றவை. எனவே, கவனமாக இருக்க வேண்டும். நம் உடலில் இயல்புக்கு மாறாகத் தோன்றும் மிகச் சிறிய அறிகுறியையும் குடும்பப் பொது மருத்துவரிடம் காட்டி ஆலோசனை பெற்றுக்கொள்ள வேண்டும். அதேநேரம் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆண்டுக்கு ஒரு முறை உடல்நலத்தை அறிவதற்கான பரிசோதனைகளை செய்துகொள்வது உகந்தது.
கட்டுரையாளர்,
மருத்துவப் பேராசிரியர் தொடர்புக்கு: muthuchellakumar@gmail.com