Published : 10 Apr 2021 03:12 AM
Last Updated : 10 Apr 2021 03:12 AM

கோவிட் தடுப்பூசி: கற்பிதம் களைவோம்

தொகுப்பு: நிஷா

கரோனாவிடமிருந்து நம்மைத் தற்காத்துக்கொள்வதற்கு, தடுப்பூசியே நம்முன் இருக்கும் ஒரே வழி. இருப்பினும், அதை ஏற்றுக்கொள்வதற்கு மக்களிடம் ஒருவிதத் தயக்கம் நிலவுகிறது. கோவிட் தடுப்பூசிகளைப் போட்டுக் கொண்டவர்களுக்கும் சில நாட்களில் கோவிட் தொற்று ஏற்படுவதாகச் செய்திகள் வருகின்றனவே? தடுப்பூசிகள் சரியாக வேலை செய்வ தில்லையா? தடுப்பூசிகளால் கரோனா தொற்று ஏற்படுகிறதா என்பன போன்று பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன.

உண்மை எது, பொய் எது என்று பிரித்துணர முடியாத போலி செய்திகள்/ வதந்திகள் வாட்ஸ்அப்களில் அதிக அளவில் பகிரப்படுவதால் ஏற்படும் சந்தேகங்கள் இவை. இத்தகைய போலி செய்திகள், கரோனா தடுப்பூசிகளுக்கு எதிரான மனநிலையை மக்களிடம் வலுவாக்கியிருக்கின்றன. தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்குவரும் என்று ஆவலுடன் காத்திருந்த மக்கள், அது பயன்பாட்டுக்கு வந்த நிலையில் ஏற்றுக்கொள்ள மறுக்கும் அளவுக்கு, தேவையற்ற சந்தேகங்கள் விதைக்கப்பட்டுள்ளன. இந்தச் சந்தேகங்களுக்கான அறிவியல்பூர்வ விளக்கங்கள்:

பக்க விளைவுகள்

# கோவிட் நோய்க்கு எதிராகத் தடுப்பூசி போட்டுக்கொள்பவர் களுக்குக் காய்ச்சல், உடல் வலி, தலைவலி போன்ற சாதாரண பக்கவிளைவுகள் முதல் 24 மணி நேரத்துக்குள் தோன்றி, அதிகபட்சம் 72 மணிநேரத்துக்குள் சரியாகிவிடும்.

# தடுப்பூசி போட்டுக்கொண்டு மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் தொடர்ந்தால் உடனே எச்சரிக்கை யடைந்து ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். காய்ச்சலுடன் இருமல் சேர்ந்தால் இருமடங்கு எச்சரிக்கை உணர்வுடன் மருத்துவர் பரிந்துரையுடன் சி.டி. ஸ்கேன் எடுத்துப் பார்க்கலாம்.

# தடுப்பூசியால் ஏற்படும் சாதாரண பக்கவிளைவுகள் பெரும்பாலும் 24 மணிநேரத்துக்குள் ஆரம்பித்து 72 மணிநேரத்துக்குள் சரியாகிவிடும்.

தடுப்பூசி பெற்றவர்களுக்கு எப்படி கோவிட் வருகிறது?

வைரஸின் அடைக்காலம்

ஒருவருக்குக் கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதிலிருந்து / உடலுக்குள் வந்ததிலிருந்து அந்த நோய்க்கான அறிகுறிகள் உடலில் தென்படுவதற்கு எடுத்துக்கொள்ளும் காலம் அடைக்காலம் (Incubation period). கரோனா வைரஸ் தொற்றுக்கு அடைக்காலம் சராசரி 5 முதல் 6 நாட்கள், அதிகபட்சம் 14 நாட்கள். இதன் காரணமாகத்தான் தொற்று கண்ட நபர் இருக்கும் வீடுகளை 14 நாட்கள் தனிமைப்படுத்துகிறோம். இந்த அடைக்காலத்தில் அறிகுறி தோன்றும்வரை அந்த நபரே நோய் இருப்பதை அறிய இயலாது.

ஒருவர் தடுப்பூசியை வெள்ளிக் கிழமை போட்டுக்கொள்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அதற்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை நண்பர் களுடன் ஒரு கெட்டுகெதரில் அவர் கலந்துகொண்டு அங்கு கரோனா தொற்றைப் பெற்றுவிட்டால், அப்போதி லிருந்து அடைக்காலம் ஆரம்பமாகும். அவருக்கு ஆறாவது நாள் கரோனா தொற்றின் அறிகுறிகள் தோன்றக் காத்திருக்கின்றன என்றால் சனிக்கிழமை காய்ச்சல் அடிக்கும். ஆனால், அவர் வெள்ளிக்கிழமை தடுப்பூசி போட்டுக்கொண்டிருக்கிறார்.

இருப்பினும், அடுத்த நாளான சனிக்கிழமை தோன்றும் காய்ச்சல் தடுப்பூசியின் சாதாரண பக்கவிளைவால் தோன்றியதா? அல்லது கரோனாவால் தோன்றியதா என்பதை எப்படி அறிவது? தடுப்பூசியின் பக்கவிளைவால் தோன்றியதாக இருந்தால் தடுப்பூசி போட்டுக்கொண்ட மூன்று நாட்களுக்குள் சரியாகிவிடும். கரோனா தொற்றினால் ஏற்பட்ட அறிகுறியாக இருந்தால், காய்ச்சல் மூன்று நாட்கள் கடந்தும் தொடரும் கூடவே இருமல் தோன்றும். உடனே சுதாரித்துக்கொள்ள வேண்டும். இது தடுப்பூசியால் ஏற்பட்டதன்று. மாறாக நாம் ஏற்கனவே பெற்ற தொற்றின் அறிகுறி என்பதை உணர வேண்டும். உடனே பரிசோதனை செய்து சிகிச்சை எடுக்க வேண்டும்.

முழு தடுப்பாற்றல் கிடைக்க எடுத்துக்கொள்ளும் நேரம்

கோவிட் நோய்க்குத் தடுப்பூசி போட்டுக்கொண்ட சில நாட்களில் கரோனா தொற்று ஏற்படுகிறதென்றால் தடுப்பூசிகள் ஏன் நோயைத் தடுக்க வில்லை என்கிற கேள்வி வரலாம். இந்தியாவில் தற்போது போடப்படும் இரண்டு தடுப்பூசிகளான கோவேக்சின், கோவிஷீல்டு ஆகியவற்றில், கோவேக்சின் தடுப்பூசி முதல் டோஸ் பெற்று 28 நாட்கள் இடைவெளியில் இரண்டாவது டோஸ் பெற்று, அதன் பிறகு 14 நாட்கள் கழித்தே முழு நோய்த் தடுப்பாற்றலைப் பெற முடியும்.

கோவிஷீல்டு தடுப்பூசியைப் பொறுத்தவரை முதல் டோஸ் பெற்ற 22 நாட்களுக்குப் பிறகுதான் முழு நோய்த் தடுப்பாற்றல் உருவாகிறது.

இரண்டாவது டோஸ் போடப்பட்டு 14 நாட்கள் கழித்தே சிறந்த நோய்த் தடுப்பாற்றல் கிடைப்பது ஆய்வுகளில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

எனவே, தடுப்பூசி போட்டுக்கொண்ட அடுத்த நாளிலிருந்து நோய்த் தடுப்பாற்றல் கிடைத்துவிட்டது என்று நம்பி முகக்கவசம் இல்லாமல் கூட்டங்களில் கலந்துகொண்டால் தொற்றைப் பெறும் சாத்தியம் அதிகம்.

நோய் தடுப்பாற்றல்

இரண்டாவது டோஸ் தடுப்பூசி பெற்று இரண்டு வாரங்கள் கழித்தும்கூட சில மருத்துவர்களுக்கு அறிகுறிகளுடைய கரோனா தொற்று வந்துள்ளது. அறிகுறிகளுடைய நோயைத் தடுக்கும் கோவிஷீல்டு தடுப்பூசியின் திறன் 70 சதவீதம், கோவேக்சின் தடுப்பூசியின் அறிகுறிகளுடைய நோய் தடுக்கும் திறன் 80 சதவீதம். அதாவது கோவிஷீல்டு போடப்பட்ட நபருக்கு 70 சதவீதம் தொற்று ஏற்படும் வாய்ப்பு குறைக்கப்படுகிறது. கோவேக்சின் போடப்பட்ட நபருக்கு 80 சதவீதம் தொற்று ஏற்படும் வாய்ப்பு குறைக்கப்படுகிறது. அதாவது, எந்தத் தடுப்பூசியும் 100 சதவீதம் நோய் தடுக்கும் திறனுடன் இல்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

கோவிஷீல்டு போடப்பட்டவருக்கும் கூட அறிகுறிகளுடன் தொற்று ஏற்பட 30 சதவீதம் வாய்ப்புண்டு. கோவேக்சின் போடப்பட்டவருக்கும்கூட அறிகுறி களுடன் தொற்று ஏற்பட 20 சதவீதம் வாய்ப்புண்டு. ஆனால், இதுவரை நடைபெற்ற ஆய்வு முடிவில், கோவிட் தடுப்பூசி போட்டுக் கொண்ட வர்களுக்குத் தீவிர கரோனா தொற்று ஏற்படவில்லை என்பது ஆறுதலான செய்தி.

எனவே, தடுப்பூசியைப் போட்டுக் கொண்டவர்களுக்கு அறிகுறிகளற்ற கரோனா தொற்று ஏற்படலாம். போட்டுக் கொண்ட சிலருக்கு அறிகுறிகளுடைய கரோனா தொற்றும் ஏற்படலாம். இருப்பினும் பெரும்பான்மை சமூகத்தினரை அதிலும் எளிதில் பாதிக்கப் படக்கூடிய மக்களைத் தீவிர கரோனா தொற்றிலிருந்தும் மரணங்களிலிருந்தும் காக்கும் தன்மை தடுப்பூசிகளுக்கு உண்டு என்பது ஆய்வு முடிவுகளின் மூலம் கிடைத்துள்ள உண்மை.

கோவிட் தடுப்பூசிகளால் ஏன் தொற்று ஏற்படாது?

கோவிஷீல்டு என்பது சிம்பன்சி இனத்தில் (வாலில்லா குரங்கு) சாதாரண சளி, இருமலை உருவாக்கும் அடினோ வைரஸை வாகனமாகப் பயன்படுத்தி, அதில் கரோனா வைரஸின் கூர்புரத மரபணுக்களை உட்புகுத்தி உருவாக்கப்பட்டது. இத்தகைய தொழில்நுட்பத்தை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், ஆஸ்ட்ரா ஜெனேகா ஆகிய இரண்டு நிறுவனங்களும், 2012இல் வளைகுடா நாடுகளில் ஏற்பட்ட மெர்ஸ் கோவி (Middle east respiratory syndrome - MERS COv) காலத்திலேயே ஆய்வுசெய்து வைத்திருந்தன. தற்போதைய கரோனா வைரஸ் பெருந்தொற்றுக் காலத்தில் அந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தடுப்பூசியாக உருவாக்க முடிந்திருக்கிறது. அந்தத் தொழில்நுட்பத்தின் முக்கிய அம்சமே சிம்பன்சி அடினோ வைரஸ் மனிதர்களின் உடலுக்குள் பல்கிப்பெருக இயலாது என்பதுதான். எனவே, கோவிஷீல்டு தடுப்பூசி மூலம் கோவிட் நோயை உருவாக்க இயலாது.

கோவேக்சின் தடுப்பூசியைப் பொறுத்தவரை அதன் தொழில்நுட்பம், கரோனா வைரஸை வளர்த்தெடுத்து அதன் அங்கங்கள் சிதையாதவாறு கொன்று (Inactivating), அந்த வைரஸின் பிரேதங்களைத்தான் தடுப்பூசியாகச் செலுத்துகிறார்கள். எனவே, கோவேக்சினாலும் கோவிட் நோயை உருவாக்க இயலாது.

தடுப்பூசிகளால் கோவிட் வருமா?

# தடுப்பூசி பெற்ற 24 மணி நேரம் முதல் 72 மணி நேரத்துக்குள் ஏற்படும் காய்ச்சல், தலைவலி போன்றவற்றைத் தடுப்பூசிகளின் சாதாரண பக்கவிளைவுகள் என்று கொள்ளலாம் - தடுப்பூசி பெற்று 72 மணி நேரத்துக்குப் பிறகும் காய்ச்சல் தொடர்ந்தாலோ இருமல் நீடித்தாலோ உடனே ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்ய வேண்டும்.

# தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் இடையேயும் அறிகுறிகளற்ற / அறிகுறி களுடைய கரோனா தொற்றுவதற்குச் சாத்தியம் உண்டு.

# தடுப்பூசி போட்டுக்கொண்டவர் களுக்குத் தீவிர கரோனா ஏற்படும் சாத்தியம் குறைவு. ஆயினும் தொற்றுப்பரவலைத் தடுக்க தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்.

# 45+ வயதுக்கு மேல் உள்ள அனைவரும் அச்சமின்றி தடுப்பூசி போட்டுக்கொண்டு தீவிர கரோனாவைத் தடுத்துக்கொள்ள வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x