

கரோனாவின் கோரப்பிடியி லிருந்து மீண்டுவிட்டதாக நம்பி மக்கள் இயல்பு வாழ்க்கைக் குத் திரும்பத் தொடங்கிய சில மாதங்களுக்குள், கரோனாவின் இரண்டாம் அலை பரவியுள்ளது. 2020 அக்டோபர் வரை கரோனா வைரஸ் எவ்வளவு வேகமாகப் பரவியதோ, அதைவிட இப்போது மிக வேகமாகப் பரவிவருகிறது. அந்தக் காலகட்டத்தில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரமாக உயர 32 நாள்கள் தேவைப்பட்டன. ஆனால், இரண்டாவது அலைக் காலத்தில் 17 நாள்களில் இதே அளவை எட்டிப் பிடித்திருக்கிறது கரோனா பரவல்.
இந்த ஆபத்தின் வீரியத்தை உணர்ந்து விரைந்து செயலாற்ற வேண்டிய அரசு, அரசு அமைப்புகள், முதல் அலையின் அனுபவத்திலிருந்து பாடம் கற்றுக் கொண்டதுபோல் தெரியவில்லை. நிலைமையின் தீவிரம் புரிந்த பின்னரும், தொடரும் அரசின் மெத்தனப் போக்கு கவலையளிக்கிறது.
முதல் அலை ஏற்பட்டபோது, பெரும்பாலான மாநிலங்களில் ஒரே மாதிரியான பாதிப்பு இருந்தது. இந்த முறை 8 மாநிலங்களில் மட்டும் 84 சதவீதம் தொற்று பதிவாகியிருக்கிறது. இந்தப் பட்டியலில் தமிழகமும் அடங்கும். தமிழகத்தில் நடைபெற உள்ள தேர்தலும் திருவிழா காலமும் நோய்ப் பரவலை மேலும் அதிகரிக்கும். வேற்றுருவ வைரஸ் பரவல், முந்தைய வைரஸ் பரவலைவிட அதிக வேகத்தில் இருப்பதாகவும் விஞ்ஞானிகள் எச்சரிக்கிறார்கள். இந்தப் பின்னணியில்தான் பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள், வழிபாட்டுத் தலங்கள், மால்கள் உள்படப் பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடங்களைத் திறக்க தமிழக அரசு அனுமதித்துள்ளது.
அறிவியலைப் புறந்தள்ளுகிறதா அரசு?
கரோனா பெருந்தொற்று போன்ற பேரிடராக உருவான காலத்தில், அதிலிருந்து மீள்வதற்கு உலக நாடுகள் அறிவியலையே துணைக்கு அழைத்தன. 2020 ஏப்ரல் 16இல், தமிழகத்தில் கரோனா பாதிப்புக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 1,000-க்கும் குறைவாக இருந்தபோது, இன்னும் ஒரு சில நாள்களில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பூஜ்யமாகிவிடும் என்று முதல்வர் தெரிவித்திருந்தார்.
ஆனால் அதன் பின்னர், அபாயகரமான அளவுக்கு கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. இன்றைக்கு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் 9 லட்சத்தை நோக்கித் தமிழகம் நகர்ந்துகொண்டிருக்கிறது. ஒரு நாளைக்கு 2,500 பேருக்கு மேல் கரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிவருகிறார்கள்.
அண்டை மாநிலமான கேரளம், இந்த நோயைக் கையாள்வதில் வெளிப்படைத் தன்மையுடன் அறிவியல் பூர்வமாகவும் அணுகுமுறையை வெளிப்படுத்தி, மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியது. தமிழக அரசு வெளிப்படைத்தன்மை யுடனும் அறிவியல் பூர்வமாகவும் செயல்படவில்லை என்கிற குற்றச்சாட்டுத் தொடக்கத்திலிருந்து இருக்கிறது. இதனால் ஏற்பட்ட பாதிப்பு சரிசெய்ய முடி யாத ஒன்றாகவே இன்றுவரை தொடர்கிறது.
அரசின் மீதான விமர்சனங்கள்
கரோனா பரவலின் தொடக்கக் காலத்தில், அதைக் கட்டுப்படுத்துவதற்கு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் முறையாகவும் விரைவாகவும் எடுக்கப் பட்டிருக்கவில்லை. எத்தனை பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள், அவர்களில் எத்தனை பேர் வீட்டுத் தனிமையில் இருக்கிறார்கள், எத்தனை பேர் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளார்கள் என்னும் அடிப்படைத் தகவல்களை உரிய முறையில் சேகரிக்க முடியவில்லை. இந்தக் குற்றச்சாட்டு எழுவதற்கு முக்கியக் காரணம் பெரும்பாலோர் பரிசோதனை மையங்களுக்கு வருவதையே தவிர்த்தது தான். கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு கரோனா நோயாளிகள் எண்ணிக்கையில் தேசிய அளவில் இரண்டாம் இடத்திலும், கரோனா இறப்பு எண்ணிக்கையில் இந்திய அளவில் மூன்றாம் இடத்திலும் தமிழ்நாடு இருந்தது.
அந்தக் காலகட்டத்தில், கரோனா பரிசோதனைகளும் உரிய அளவில் மேற்கொள்ளப்படவில்லை. 2020 மார்ச் 7 அன்று, தமிழகத்தில் முதல் கரோனா தொற்று கண்டறியப்பட்டது. இருந்தும் 2020 மார்ச் 16 வரை தமிழகத்தில் 90 மாதிரிகளே பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தன. அதே காலகட்டத்தில், கேரளத்தில் 1,500 மாதிரிகளும், கர்நாடகத்தில் 750 மாதிரிகளும் பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தன. கரோனாவைக் கட்டுப்படுத்த கேரளம் அறிவியல்பூர்வ நடவடிக்கைகளில் ஈடுபட்டு, அதிக அளவிலான பரிசோதனைக்கு முக்கியத்துவம் அளித்தபோது, தமிழக அரசு கபசுரக் குடிநீரை வழங்கி, மக்கள் கவனத்தைத் திசைதிருப்பியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.
முரண்களும் முறைகேடுகளும்
கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை குறித்த அறிவிப்பிலிருந்த முரண்களும், கரோனா பரிசோதனை குறித்த முன்னுக்குப் பின் முரணான தகவல்களும், அரசின் மீதான மக்களின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குறி யாக்கின. அந்தப் போக்கு தொடர்கிறது என்பதை, கரோனா தடுப்பூசிக்கு மக்கள் காட்டும் தயக்கம் உணர்த்துகிறது. முதல் கட்டமாக முன்களப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டபோது, தேசிய அளவில் தடுப்பூசி போட்டுக்கொள்ள அதிகமானோர் முன்வராத மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாக இருந்தது. இப்போதும்கூட தமிழக கிராமப்புறங்களில் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு பெரும்பாலோர் முன்வருவதில்லை.
அரசின் அலட்சியம்
கரோனா பரவல் உச்சத்திலிருந்தபோது தீபாவளிப் பண்டிகையை ஒட்டி, பள்ளி, கல்லூரி, திரையரங்குகளைத் திறப்பதற்கு அரசு அனுமதி அளித்தது. கரோனாவைத் தொடக்கத்திலேயே கட்டுக்குள்கொண்டுவந்திருந்த கேரளம், ஓணம் கொண்டாட்டத்தின்போது கட்டுப்பாடுகளின் எல்லை மீறப்பட்டதால், புதிதாகப் பாதிப்புக்குள்ளாவோரின் எண்ணிக்கையில் தேசிய அளவில் முதலிடத்துக்கு வந்தது. தமிழக அரசு இதைக் கருத்தில் கொள்ளாமல், கல்லூரிகளையும் திரையரங்குகளையும் திறந்தது. ஏற்கெனவே அச்சமின்றி, அலட்சியத்துடன் இருந்த மக்கள் வெளியே சுற்றிக்கொண்டிருந்த நிலையில் திரையரங்குகளைத் திறப்பது எத்தகைய ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதையோ, கரோனாவைக் கட்டுப்படுத்த பத்து மாதங்களாக எடுக்கப்பட்ட முயற்சிகளை நீர்த்துப்போக வைத்துவிடும் என்பதையோ அரசு கவனத்தில் கொள்ளவில்லை.
50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்தாலும், பெருவாரியான இடங்களில் இந்தக் கட்டுப்பாடுகள் பின்பற்றப்படவில்லை. அதை உறுதிசெய்ய வேண்டிய நிலையி லிருந்த அரசும், ரசிகர்களுக்கு அறிவுறுத்த வேண்டிய நிலையிலிருந்த திரைத் துறையினரும் மௌனமாக இருந்தனர். அதேபோல், தஞ்சை மாவட்டத்தில் 17 பள்ளிகள், 6 உயர்கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது மற்றொரு எடுத்துக்காட்டு.
தலைவர்களின் அலட்சியம்
இன்னும் சில நாள்களில் தமிழ் நாட்டுக்குச் சட்டப்பேரவைத் தேர்தல் நடை பெறப்போகிறது. அதைப் பொறுப்புணர்வுடன் முன்னெடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு தேர்தல் ஆணையத்துக்கும், அரசியல் கட்சிகளுக்கும், தலைவர்களுக்கும் மட்டு மல்ல; நமக்கும் உள்ளது. ஆனால், கரோனா பெருந்தொற்றை எதிர்கொள்வதற்குத் தேவைப்படும் சமூகப் பொறுப்புணர்வு யாருக்காவது இருக்கிறதா என்கிற கேள்வியை, தேர்தல் பரப்புரைகளில் பெருந்திரளாகக் கூடும் கூட்டம் உறுதி செய்கிறது. வழிநடத்த வேண்டிய தலைவர்களே, திருத்தப்பட வேண்டிய நிலையிலிருக்கிறார்கள் என்பதை, முகக் கவசம் அணியாத அவர்க ளுடைய அலட்சியம் உணர்த்துகிறது.
அத்துடன் மதம், சடங்கு சார்ந்த நிகழ்வு களில் பெருமளவு மக்கள் கூடுவதும் பேராபத்தே. வெளிநாட்டுப் பயணிகள், வெளி மாநிலப் பயணிகள் தமிழகம் வருவதற்குத் தடை இல்லாததால் பலரும் வருகிறார்கள். மாநிலத்துக்குள்ளும் எந்தக் கவலையும் இன்றி பொதுப் போக்குவரத்து வசதிகளில் மக்கள் பயணிப்பதும் கரோனா பரவலுக்கு முக்கியக் காரணமே.
நமக்கும் பொறுப்பு உண்டு
கரோனா பெருந்தொற்றுப் பரவலுக்கு அரசை மட்டும் முழுமையாகக் குறைகூறிவிட முடியாது. நமக்கும் பெரும் பங்கு உண்டு. முகக் கவசம், கை சுத்தம் பேணுதல், தனிமனித இடைவெளி, சமூக இடைவெளி ஆகியவற்றை முறையாகப் பின்பற்றி இருந்தால், கரோனாவின் இரண்டாம் அலை தமிழகத்தில் ஏற்பட்டிருக்கச் சாத்தியமே இல்லை. அலட்சியம், பேராபத்தில் முடியும் என்பதை 2020ஆம் ஆண்டு நமக்கு உணர்த்தியுள்ளது. இனியாவது விழிப்புடன் இருக்க வேண்டும்.
கடந்த ஆண்டு முதல் அலை எழுந்த போது, அதை எப்படி எதிர்கொள்வது என்ற புரிதலும் விழிப்புணர்வும் அரசுக்கு இல்லாமல் இருந்தது. அப்போது எந்தத் தடுப்பூசியும் கண்டுபிடிக்க பட்டிருக்க வில்லை. அந்த நிலை இன்றைக்கு மாறிவிட்டது. தமிழகத்தில் அடுத்து அமையப் போகும் மாநில அரசு கரோனா தொற்று சார்ந்த தவறுகளைச் சீரமைத்து, வெளிப்படைத் தன்மையுடன் செயலாற்றி, மக்களிடம் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வையும் நம்பிக்கையையும் ஏற்படுத்துவதே இரண்டாம் அலையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முதல் படி. அரசின் முன்முனைப்புடன் மக்களின் முழுமையான ஒத்துழைப்பும் கூடினால், கரோனாவின் எந்த அலையும் முடிவுக்கு வந்துவிடும்.
கட்டுரையாளர் தொடர்புக்கு: mohamed.hushain@hindutamil.co.in