

வாசகர்களின் கேள்விகளுக்கு இந்த வாரம் பதில் அளிக்கிறார் திருச்சி இ.எஸ்.ஐ. மருத்துவமனையின் சிறப்புநிலை சித்த மருத்துவர் எஸ். காமராஜ்:
என்னுடைய பித்தப்பையில் 1 செ.மீ. அளவுக்குக் கல் இருக்கிறது. ஆனால் வாந்தி இன்ன பிற தொந்தரவுகள் இல்லை. இதைக் கரைக்க வழியுள்ளதா?
- கே. சுந்தரி ஹரி, சாத்தூர்
பித்தப்பையில் கற்கள் இருப்பதாகவும், அதனால் உங்களுக்கு எந்தவிதத் தொந்தரவும் இல்லை எனவும் கூறியிருக்கிறீர்கள்.
சித்த மருத்துவத்தில் கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய், உருக்கு செந்தூரம், சிலாசத்து பற்பம், நண்டுக்கல் பற்பம், நீர்முள்ளி, சிறுபீளை, நெருஞ்சில் சேர்ந்த மருந்துகள் பித்தப்பையில் கற்கள் உருவாவதைத் தடுக்கவும், கரைக்கவும் உதவுகின்றன.
மேலும் மஞ்சள் கரிசாலை, வெள்ளை கரிசாலை, நீலி, குப்பைமேனி, வல்லாரை, கொட்டைக்கரந்தை போன்ற மூலிகைகள் பித்தப்பை, கல்லீரலைப் பாதுகாக்கின்றன. எந்த நோயும் வராமல் தடுக்கின்றன. கல்லீரல் பித்தப்பை, மண்ணீரல், காமாலை என்ற மஞ்சள் காமாலை நோய்கள் வராமலும் தடுக்கின்றன.
என் வயசு 24, கல்லூரி மாணவன், எடை 60 கிலோ. ஆறு மாதங்களுக்கு முன்பு சிறுநீரகக் கல் பிரச்சினை காரணமாக, ஒரு மாதம் தொடர்ந்து ஆங்கில மருந்து உட்கொண்டேன். அப்போது வலி குறைந்தது. ஏற்கெனவே, எனக்குக் கைநடுக்கம் இருந்தது. மருந்து உட்கொண்ட பின்பு கைநடுக்கம் அதிகமானதால் மருந்தை நிறுத்திவிட்டேன். தற்போது மீண்டும் வலி எடுக்கிறது. சிறுநீரகக் கல் பிரச்சினை தீரவும், கைநடுக்கம் குறையவும் இயற்கை மருந்துகளைக் கூற முடியுமா?
சிறுநீரகத்தில் கற்கள் இருப்பதாகவும், கை நடுக்கம் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளீர்கள். காசு, பணம் செலவில்லாமல், நம்மைச் சுற்றியுள்ள சிறுபீளை மூலிகையும், நெருஞ்சி மூலிகையும் 15 மி.மீ. வரையுள்ள சிறுநீரகக் கற்களைக் கரைக்கக்கூடிய வல்லமை பெற்றவை. இதுபோக நீர்முள்ளி, கல்லுருக்கிச் செடி, நண்டுக்கல், குங்கிலியம், சிலாசத்து, உருக்கு செந்தூரம் போன்ற உபரச, உப்பு, செந்தூரம் கலந்த மருந்துகளும் சிறுநீரகக் கற்களைக் கரைக்க உதவுகின்றன.
கை நடுக்கத்துக்கு அமுக்கரா கிழங்கைத் தனியாகவோ அல்லது சுக்கு, திப்பிலி, மிளகு, ஏலக்காய், சிறுநாகப்பூ, கிராம்பு, சீனி கலந்த மருந்துகளையோ அல்லது அமுக்கரா சூரண மாத்திரை, அஸ்வகந்தி லேகியம் ஆகியவற்றை மருத்துவர் ஆலோசனையோடு எடுத்துவரக் கை நடுக்கம் தீரும். ஏதாவது ஒரு யோகாசனம் அல்லது மூச்சுப் பயிற்சி செய்துவந்தால் நோயைத் தீர்த்து, ஆயுளை வளர்க்கமுடியும்.
‘நலம், நலமறிய ஆவல்' கேள்வி - பதில் பகுதி தொடர்ந்து வெளிவரும். பல்வேறு மருத்துவ முறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் பதில் அளிப்பார்கள். வாசகர்கள் முக்கியமான மருத்துவ சந்தேகங்களை தொடர்ந்து அனுப்பலாம்.
மின்னஞ்சல்: nalamvaazha@thehindutamil.co.in
முகவரி: நலம், நலமறிய ஆவல், நலம் வாழ,
தி இந்து, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை-2