

இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட கரோனா மருத்துவப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்களில் கடந்த வாரம் வரை 42 சதவீதத்தினர் மட்டுமே முதல் தவணை தடுப்பூசியைப் போட்டுக்கொண்டுள்ளனர். தமிழகத்தில் இந்த அளவு மிகவும் குறைவு. 21.4 சதவீதத்தினர் மட்டுமே போட்டுக்கொண்டுள்ளனர். இந்த நிலைமை பொதுமக்கள் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு யோசிக்க வைக்கிறது. ஆனால், இப்படித் தயங்குவது சரியா?
கரோனா வைரஸ் உண்டாக்கும் கோவிட் 19 நோய் உலகம் காணாத புதிய நோய். இதற்கான தடுப்பூசிகளும் புதியவை. எல்லாத் தடுப்பூசிகளும் அவசரகால பயன்பாட்டுக்குத்தான் அனுமதி பெற்றுள்ளன. இவற்றின் செயல்திறன் (Efficacy) இன்னும் முழுமையாக அறியப்படவில்லை. இவை எவ்வளவு காலம் ஆற்றல் உள்ளவையாக இருக்கும் என்ற காலக்கெடுவும் (Effectiveness) தெரியவில்லை. அதிக அறிமுகம் இல்லாத விருந்தாளியை வீட்டுக்குள் உடனே அனுமதிக்கத் தயங்குவோம் அல்லவா? அதுபோலவே மருத்துவப் பணியாளர்கள் கரோனா தடுப்பூசிக்குத் தயக்கம் காட்டுகிறார்கள்.
அடுத்ததாக, இந்தியாவில் ‘கோவேக்சின்’ தடுப்பூசிக்கு அவசர அனுமதி கொடுப்பதில் ஒன்றிய அரசு காட்டிய அவசரம் மருத்துவர்கள் மத்தியில் பல சந்தேகங்களை ஏற்படுத்தியது. தடுப்பூசி குறித்து இந்திய மருத்துவ வல்லுநர்களின் வேறு பட்ட கருத்துக்களும், தடுப்பூசித் தயாரிப்பில் புகுந்த புதிய முயற்சிகளும் மருத்துவப் பணியாளர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் விஷயத்தில் சரியான முடிவை எடுக்கத் தடை போட்டன.
தடுப்புச்சுவர் எழுப்பும் வதந்திகள்
மேலும், கரோனா தடுப்பூசி விஷயத் தில் ஒவ்வொரு நாளும் புதிய புதிய அறிவியல் செய்திகள் வந்துகொண்டி ருக்கின்றன. அதைவிடப் பல மடங்கு வேகத்தில் சமூக ஊடகங் களில் தடுப்பூசி குறித்த தவறான தரவுகளும் வதந்திகளும் குவிந்து விடுகின்றன. அவற்றில் எவற்றை எடுத்துக்கொள்வது, எவற்றைப் புறந்தள்ளுவது என்கிற தெளிவு பல மருத்துவர்களுக்கே இல்லை.
அடுத்து, கரோனா தடுப்பூசி தொடர் பாக எல்லாத் தகவல்களும் எல்லா மருத்துவப் பணியாளர் களுக்கும் தெரிந்திருக்க நியாய மில்லை. அதனால், மற்றவர் களுக்குத் தடுப்பூசி மீது அச்சம் இருப்பதுபோல் இவர்களுக்கும் இருப்பதில் வியப்பில்லை.
இப்போது இந்தியாவில் கரோனா பாதிப்பு மிகவும் குறைந்துவிட்டது. இனிமேல் தடுப்பூசி தேவையா என்கிற கேள்வியும் தயக்கத்தை ஏற்படுத்து கிறது. ஏற்கெனவே கரோனா சிகிச்சையில் முன் களத்தில் பணியாற்றிய மருத்துவப் பணியாளர்களில் பலரும் கரோனா தொற்றுக்கு எதிரான இயற்கைத் தடுப்பாற்றல் கிடைத்திருக்கும் என்கிற எண்ணத்துடன் தடுப்பூசிக்குத் தயக்கம் காட்டுபவர்களும் இருக்கின்றனர்.
ஆற்றல் மிகுந்த தடுப்பூசி எது?
‘கோவேக்சின்’ தடுப்பூசியில் இறந்த நிலையில் உள்ள கரோனா வைரஸ்கள் பயன்படுத்தப்படுவதால், இதன் ஆற்றல் சிறப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது. அதே நேரத்தில் இதன் ஆய்வு முடிவுகள் முழுவதுமாக வந்த பிறகு, அவற்றின் அடிப்படையில் தடுப்பூசியைத் தேர்வுசெய்து கொள்ளலாம் என்று தற்காலிகமாகத் தடுப்பூசிக்குத் தயக்கம் காட்டுபவர்களும் உள்ளனர். இப்படிப் பல காரணங்களால் இந்தியாவில்தான் கரோனா தடுப்பூசிகளைச் செலுத்திக் கொள்ள மருத்துவப் பணியாளர்கள் தயங்குகின்றனர்.
அந்நிய நாடுகளில் என்ன நிலைமை?
அந்நிய நாடுகளில் இந்தத் தயக்கம் இல்லை. காரணம், அவர்கள் நாட்டுத் தடுப்பூசிகளுக்கு அவசரகால அனுமதி கொடுக்கப்படுவதற்கு முன்னால், அவர்கள் பயன்படுத்தப்போகும் தடுப்பூசிகள் எல்லாமே மூன்றாம் கட்ட ஆய்வுகளை முடித்துவிட்டன. அவை தடுப்பாற்றலியல் வல்லுநர்களுக்குத் திருப்தியான முடிவுகளைத் தந்துவிட்டன. மேலும், அந்தத் தடுப்பூசிகளின் ஆய்வு முடிவுகள் குறித்த தரவுகள் பொதுமக்களுக்கு வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட்டுவிட்டன. தடுப்பூசிகள் பற்றிய விவரங்களும் தெளிவாகக் கூறப்பட்டுவிட்டன. ஊடகவியலாளர்களும் பொதுமக்களும் எழுப்பிய சந்தேகங்களுக்கு வல்லுநர்கள் தகுந்த பதில்களைக் கொடுத்து விட்டனர். அந்தப் பதில்களில் அனைவருக்கும் திருப்தி ஏற்பட்டுவிட்டதால், அங்கே தடுப்பூசி போட்டுக்கொள்ளத் தயக்கம் ஏற்படவில்லை.
என்ன செய்ய வேண்டும்?
‘லேன்சட்’ போன்ற நம்பகமான மருத்துவ அறிவியல் ஆய்வேடுகள் தரும் தரவுகளை அடிப்படையாகக்கொண்டு, கரோனா தடுப்பூசிகளின் மேல் நம்பிக்கை வைத்து, உடல்தகுதி கொண்ட இந்திய மருத்துவப் பணியாளர்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வர வேண்டும். அவர்கள் சமூக உணர்வுடன் பொதுமக்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ வேண்டும். செய்வார்களா?
இரண்டாம் தவணைத் தடுப்பூசியை 12 வாரங்களுக்குப் பிறகு போட்டுக்கொள்ளலாம் என்கிறார்களே, அது சரியா?
முதல் தவணையில் போட்டுக்கொண்ட தடுப்பூசியின் முழுமையான பலன் கிடைப்பதற்கு 12 வாரங்கள்வரை இடைவெளி தேவைப்படுவதாக இப்போது அறியப்பட்டுள்ளது. உதாரணமாக, பிரிட்டனில் ஆக்ஸ்போர்டு தடுப்பூசியை (இந்தியாவில் இதன் பெயர் கோவிஷீல்டு) நான்கு வாரங்கள் இடைவெளியில் போட்டுக்கொண்டவர்களுக்கு 54.9% தடுப்பாற்றலைத் தருவதாகவும், 12 வாரங்கள் இடைவெளியில் போட்டுக்கொண்டவர்களுக்கு 82.4% தடுப்பாற்றலைத் தருவதாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த இடைப்பட்ட காலத்தில் இன்னும் அதிகம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியைப் போட்டுவிடலாம்; இரண்டாம் தவணைத் தடுப்பூசிகளைத் தேவையான அளவுக்குத் தயாரித்துக்கொள்ளவும் முடியும். ஆனால், இந்தியாவில் இந்த வழிமுறையைப் பின்பற்ற வல்லுநர்களின் ஒப்புதல் இதுவரை கிடைக்கவில்லை. இங்கு இந்தத் தடுப்பூசி நான்கு வார இடைவெளியில் வழங்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது ஒரு காரணமாக இருக்கலாம்.
கரோனா தடுப்பூசிகள் நம் உடலில் செயல்படுவதைத் தெரிந்துகொள்ள முடியுமா?
முடியும். பொதுவாக, ஒரு தடுப்பூசியைப் போட்டுக்கொண்ட பிறகு நம் தடுப்பு மண்டலத்தில் உருவாகும் ‘ஐஜிஜி’ (IgG) எதிரணுக்களை அளந்து தடுப்பூசி செயல்படுகிறதா என்பதைச் சொல்வது மருத்துவ வழக்கம். இந்த எதிரணுக்கள் அந்த நோய்க்குரிய கிருமிகளுக்கு எதிரானவை. ஆனால், கரோனா தடுப்பூசிகளைப் பொறுத்த அளவில் கரோனா வைரஸின் கூர்ப்புரதங்களைக் (Spike proteins) குறிவைத்து அவை செயல்படுவதால், இந்தக் கூர்ப்புரதங்களுக்கு எதிராக எதிரணுக்கள் உருவாகியிருக்கின்றனவா என்பதையும் அளக்க வேண்டும். ‘கூர்ப்புரத எதிரணுக்கள் பரிசோதனை’ (Anti-SARS-COV-2 S antibody test’) எனும் நுட்பமான பரிசோதனை இதற்கு உதவும். இந்தப் பரிசோதனையை இரண்டாம் தவணைத் தடுப்பூசி போட்டுக்கொண்டு 14 நாள் கழித்து மேற்கொள்ள வேண்டும்.
முக்கியமாக, ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு கரோனா வைரஸ்களுக்கு எதிரான எதிரணுக்கள் (Covid antibodies) உற்பத்தியாகாது. இவர்களுக்குக் கரோனா கூர்ப்புரதங்களுக்கு எதிரான எதிரணுக்கள்தான் (Spike protein antibodies) உருவாகும். ஆகவே, இவர்கள் ‘கூர்ப்புரத எதிரணுக்கள் பரிசோதனை’ மூலம் தடுப்பூசியின் செயல்பாட்டைத் தெரிந்துகொள்ள முடியும். ஒருவேளை இவர்களுக்கு கரோனா வைரஸ்களுக்கு எதிரான எதிரணுக்கள் இருந்தால், அறிகுறிகள் அற்ற கரோனா தொற்று வந்து சென்றிருக்கும் என்று பொருள்.
அதேநேரத்தில் கோவேக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு கரோனா வைரஸ்களுக்கு எதிரான எதிரணுக்கள் உற்பத்தியாகும். இவர்களுக்கு வழக்கமான எதிரணுக்கள் பரிசோதனையில் (Covid antibody test) தடுப்பூசியின் செயல்பாட்டைத் தெரிந்துகொள்ள முடியும். இவர்களுக்குக் ‘கூர்ப்புரத எதிரணுக்கள் பரிசோதனை’ தேவையில்லை.
ஏழை நாடுகள் தடுப்பூசி பெறுவது எப்படி?
பெரும் பாலான வளர்ந்த நாடுகளும் வளரும் நாடுகளும் கரோனா தடுப்பூசிகளைப் போடத் தொடங்கிவிட்ட நிலையில், ஏழை நாடுகள் பலவும் தடுப்பூசிக்காக வளர்ந்த நாடுகளின் உதவியை எதிர்நோக்கியுள்ளன. கரோனா போன்ற வைரஸ் பெருந்தொற்றுக்குப் போதுமான தடுப்பூசி கிடைக்காமல் உலகில் ஒரு பகுதி நாடுகள் பாதிப்புக்கு உள்ளானால், அது அந்தக் கிருமியை வெகுகாலம் புழக்கத்தில் வைத்திருக்கவே வழிசெய்யும். அப்போது அந்தக் கிருமி பலதரப்பட்ட வேற்றுருவ மாற்றங்களுக்கு (Variants) உள்ளாகும்.
அந்தப் புதுவகைக் கிருமிகள் மற்ற நாடுகளுக்குப் பரவினால், அங்குள்ள மக்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டிருந்தாலும் அந்தத் தடுப்பூசிக்குப் பலன் இல்லாமல் போகலாம். இந்த நிலைமையைத் தடுப்பதற்காகவும் புதிய கிருமிகள் பரவும் மற்ற நாடுகளில் பொருளாதார ரீதியில் பாதிப்புகள் ஏற்படுத்து வதைத் தடுப்பதற்காகவும் உலக சுகாதார நிறுவனம் ஓர் ஏற்பாடு செய்துள்ளது. கரோனா தடுப்பூசிக்கென்றே ‘சர்வதேசத் தடுப்பூசிக் கூட்டமைப்பு’டன் இணைந்து (Global Vaccine Alliance - Gavi) ‘ஆக்ட்-ஆக்ஸிலெரேட்டர்’ எனும் அமைப்பை அது ஏற்படுத்தியுள்ளது. இதற்கு ‘கோவேக்ஸ் செயல் திட்டம்’ (Covax scheme) என்று பெயர்.
இந்த அமைப்பு அமெரிக்கா, பிரிட்டன், ஃபிரான்ஸ், கனடா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், ஜப்பான், சுவிட்சர்லாந்து போன்ற வளர்ந்த நாடுகளிடம் நிதியுதவி பெற்று, கரோனாத் தடுப்பூசியை வாங்கி ஏழை நாடுகளுக்கு வழங்குகிறது. இந்த அமைப்பிலிருந்து முதலில் உதவிபெற்றுள்ள நாடு கானா. ‘கோவாக்ஸ் செயல்திட்டம்’ மூலம் தடுப்பூசி போட்டுக்கொண்ட முதல் நபர் கானா நாட்டின் அதிபர் நானா அகுஃபோ அடோ (Nana Akufo-Addo).
இவை தவிர, வளர்ந்த நாடுகள் பலவும் மனிதாபிமான அடிப்படையில் தடுப்பூசிகளை ஏழை நாடுகளுக்கு இலவசமாகவோ சலுகை விலையிலோ நேரடியாக வழங்குவதும் உண்டு. வங்கதேசம், நேபாளம், பூட்டான், மால தீவுகள், மியான்மார், இலங்கை ஆகிய அண்டை நாடுகளுக்கு அண்மையில் லட்சக்கணக்கான தவணை கோவிஷீல்டு தடுப்பூசியை இந்தியா இலவசமாக அனுப்பியுள்ளது.
கட்டுரையாளர்,
பொதுநல மருத்துவர்,
தொடர்புக்கு: gganesan95@gmail.com