

மன இறுக்கம் அடைவதற்கான காரணங்கள் என்னென்ன, அவற்றைத் தவிர்க்கும் வழிகள் என்னென்ன என்பதைப் பொருத்தமான உண்மைச் சம்பவங்களின் மூலம் விவரிக்கிறது டி.ஐ. ரவீந்திரனின் `கலங்காதிரு மனமே’ என்னும் இந்நூல்.
தற்போது ஏற்பட்டிருக்கும் வாழ்க்கை மாற்றங்களே மன இறுக்கத்துக்குக் காரணம் என்பதைப் பல ஆதாரங்களின் மூலம் மறுக்கிறார் நூலாசிரியர். எல்லாக் காலத்திலுமே மன இறுக்கம் என்பது இருந்து வந்திருக்கிறது. அதற்கான காரணங்கள்தான் காலத்துக்கு ஏற்ப மாறிவருகின்றன என்பதை இந்நூலில் இடம்பெற்றிருக்கும் பல உதாரணங்களின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
மாற்றத்தை விரும்பாத மனசு
நம் மனதில் தோன்றும் எண்ணங்களே நம்மை வழிநடத்து கின்றன. ஒரு குறிப்பிட்ட வேலையைக் காலம்காலமாக ஒரே மாதிரியாகச் செய்துகொண்டிருப்பவர்கள், காலப்போக்கில் அந்தப் பணியில் ஏற்படும் தொழில்நுட்ப வளர்ச்சியால் ஏற்படும் மாற்றங் களுக்குப் பழகிக்கொள்வதற்கு ஒரு சிலர் விரும்பமாட்டார்கள். இரண்டு நாள் பழகினால், அது வந்துவிடும். ஆனால், அந்த மாற்றத்தைத் தெரிந்துகொள்வதற்குப் பதிலாக, அதிலிருந்து தப்பிக்க என்னென்ன வழிகள் இருக்கிறதோ அதையெல்லாம் செய்வார்கள். அலுவலகத்தில், வீட்டில் இருப்பவர்களின் மீது பழிபோடவும் இவர்கள் தயங்க மாட்டார்கள். இப்படிச் செய்யாமல் மாற்றத்தை இயல்பாக எடுத்துக்கொள்பவர்களுக்கு, மாற்றத்தை விரும்புபவர்களுக்கு மன இறுக்கம் வருவதில்லை என்பதற்கு, பல உதாரணங்கள் இருக்கின்றன.
புரிந்துகொள்வதன் சிறப்பு
கணவன், மனைவி இடையே பரஸ்பரம் புரிந்துகொள்ளாமையாலேயே பல பிரச்சினைகள் முற்றி விவாகரத்துவரை செல்கின்றன. ஷெர்லினும் வெய்னேலும் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் தம்பதி. வெய்னேல், தொழிற்சாலை ஒன்றில் பாரம் தூக்கும் வண்டி ஓட்டுநர். வெயிலின் கொடுமை தாங்காமல் வெய்னேல் ஒருநாள் மயங்கிவிழுகிறார். தீவிரச் சிகிச்சைக்குப் பின் கண் திறக்கும் வெய்னேலுக்கு தன்னுடைய மனைவியையும் நான்கு குழந்தைகளையும் அடையாளம் காணமுடியவில்லை. ஆனால், அவருடைய பால்ய நண்பனை அடையாளம் காண முடிந்தது. அவருடைய வாழ்க்கையின் 20 ஆண்டு நினைவுகளை அழித்துவிட்ட, அந்த நோயின் பெயர் ரெட்ரோகிரேட் அம்னீஷியா. மொத்தக் குடும்பமும் நிலைமையைப் புரிந்துகொண்டு, அவருக்கு உதவுகிறது. மனைவி, குழந்தைகள் எனக் கடந்த 20 ஆண்டுகளில் அவருக்கு உண்டான உறவுகளைப் பொறுமையோடு புரியவைக்கிறது அவருடைய குடும்பம். இத்தகைய புரிந்துகொள்ளல்தான் வாழ்க்கையின் அடிப்படை என்பதை விளக்குகிறது இந்தப் புத்தகம்.
கலங்காதிரு மனமே
(டென்ஷன் இல்லாத வாழ்க்கை)
டி.ஐ. ரவீந்திரன்,
விலை ரூ.180, கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை 17. தொலைபேசி: 044-24332682