

கரோனா தொற்றைத் தடுப்பதற்காக அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தடுப்பூசியைப் போடும் பணியைத் தொடங்கியுள்ளன. இந்நிலையில், பிரிட்டன், தென் ஆப்பிரிக்காவில் புதிய வகை கரோனா வைரஸ் பரவுவதாக வரும் செய்திகள் அதிர்ச்சியூட்டுகின்றன.
இந்தியாவில் கரோனா வைரஸ் கட்டுக்குள் இருக்கிறது என்று நிம்மதிப் பெருமூச்சு விட்ட நேரத்தில், புதிய வகை கரோனா வைரஸ் பரவிவிடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இந்நிலையில் அதுகுறித்த சந்தேகங்களைத் தீர்க்கும் நோக்கத்துடன் சிவகங்கையைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் டாக்டர் A.B.ஃபரூக் அப்துல்லாவிடம் சில கேள்விகளை எழுப்பினோம்.
புதிய வகை கரோனா வைரஸ் தொற்றால் கவலை அளிக்கும் விஷயங்கள் என்னென்ன? இந்தியாவுக்குப் பாதிப்பு வருமா?
தற்போது இங்கிலாந்தில் பரவி வருவது புதிய வகை கரோனா வைரஸ் அல்ல. பழைய கரோனா வைரஸ்தான். சிறு மரபணு மாற்றமடைந்துள்ளது. எனவே, இதை மாற்றமடைந்த கரோனா வைரஸ் அல்லது உருமாறிய கரோனா வைரஸ் என்று அழைக்கலாம். ஆங்கிலத்தில் Variant என்று அழைக்கிறோம்.
கவலை தரக்கூடிய விஷயம் யாதெனில் இந்த உருமாறிய கரோனா வைரஸ் முந்தையதை விடவும் வேகமாகத் தொற்றிப் பரவும் ஆற்றல் கொண்டதாக இருக்கிறது. முந்தைய வைரஸை விடவும் 70% அதிக வேகத்துடன் பரவும் தன்மை இதற்கு இருக்கிறது.
இந்தியா போன்று ஜனநெருக்கடி மிகுந்த இடத்தில் எளிதாகவும் வேகமாகவும் தொற்றும் வைரஸ் பரவுமாயின் அது நமக்குப் பிரச்சினையாகவே அமையும்.
கரோனா வைரஸ் மாற்றம் இயல்பானதா? இதுவரை எத்தனை முறை மாற்றம் நிகழ்ந்துள்ளது?
வைரஸ்கள் தங்களுடைய மரபணுக்களில் மாற்றங்கள் காண்பது என்பது இயற்கையானது. இவ்வகை மரபணு மாற்றங்களை Mutations என்று அழைக்கிறோம். இத்தகைய மரபணு மாற்றங்கள் எப்போது எங்கு நிகழும் என்பதை நம்மால் கணிக்க இயலாது. இதுவரை கரோனா வைரஸில் அதன் மூதாதையரை ஒப்பிடும்போது 4000 மரபணு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால் அவை அனைத்தும் மிகச்சிறிய அளவில் நிகழ்ந்த மாற்றங்கள்.
இங்கிலாந்தில் தற்போது பரவி வரும் இந்த மாற்றமடைந்த வைரஸ் குறித்து நாம் அதிகம் பேசுவதற்குக் காரணம் - இந்த மாற்றம் வைரஸ் பரவலை அதிகப்படுத்தியிருப்பதே ஆகும்.
பிரிட்டன், தென் ஆப்பிரிக்காவில் பரவிய கரோனா வைரஸ் ஒரே மாதிரியானதா? வெவ்வேறா?
பிரிட்டனில் பரவும் மாற்றமடைந்த கரோனா வைரஸுக்கு VUI 202012/01 என்று பெயரிடப்பட்டுள்ளது. இதற்கு ஆய்வுக்குள்ளாகியிருக்கும் மாற்றமடைந்த வைரஸ் (Variant Under Investigation) என்று பொருள்.
தென் ஆப்பிரிக்காவில் பரவி வரும் மாற்றமடைந்த கரோனா வைரஸுக்குப் பெயர் 501.V2 ஆகும்.
மேற்சொன்ன இரண்டும் மரபணுவின் இருவேறு இடங்களில் மாற்றம் கண்டவை. எனவே இரண்டு இரு வேறு மாற்றங்கள். ஒன்றல்ல. ஆனாலும், இவற்றை புதிய வைரஸ்கள் என்று கூற இயலாது. புதிய வைரஸாக தோற்றம் எடுக்கும் அளவு பெரிய அங்க மாற்றங்களை அவை சந்திக்கவில்லை
இந்த இரு வேறு கரோனா வைரஸ்கள் எந்தெந்த நாடுகளில் பரவியுள்ளன?
தென் ஆப்பிரிக்காவில் உதயமான 501.V2 மாற்றமடைந்த வைரஸ் - ஆஸ்திரேலியா மற்றும் பிரிட்டனில் கண்டறியப்பட்டுள்ளது. பிரிட்டனில் தோன்றியுள்ள VUI202012/01 மாற்றமடைந்த வைரஸ் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
உருமாறிய கரோனா வைரஸ் இதற்கு மேலும் மாறுமா?
வைரஸ்களின் வாழ்வியல் சுழற்சியில் தலைமுறை தலைமுறையாக அவை மரபணுக்களில் மாற்றமடைந்து கொண்டேதான் இருக்கும். எனினும் அத்தகைய அனைத்துப் பரிணாம மாற்றங்களினாலும் நமக்கு ஊறு நேரிடும் என்று கூறவியலாது. 4000 முறை மரபணு மாற்றம் அடைந்த கரோனா வைரஸில், நாம் இரண்டு மாற்றங்களைப் பற்றி மட்டுமே பெரிதாகப் பேசுகிறோம். இதற்கான காரணம் அந்த மாற்றங்களினால் அதிகம் தொற்றும் திறனை அவை வளர்த்துக்கொண்டிருப்பதே. ஆம். இன்னும் பல மரபணு மாற்றங்களை அவை சந்திக்கும். அவற்றைக் கூர்ந்து நோக்க வேண்டும்.
உருமாறிய கரோனா வைரஸ் முந்தையதை விட ஆபத்தானதா? மனித செல்களை அதிகம் பாதிக்குமா? உயிரிழப்பை அதிகரிக்குமா?
உருமாறிய கரோனா வைரஸ்கள் இரண்டிலுமே நோய் தொற்றும் திறன்தான் அதிகம் இருப்பதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதேயன்றி உயிரிழப்பை அதிகரிப்பதாக இதுவரை ஆய்வு முடிவுகள் இல்லை. மேற்சொன்ன இரண்டு மாற்றமடைந்த வைரஸ்களும் முந்தையதை விட எளிதாக சுவாசப் பாதை செல்களுடன் ஒட்டிக்கொள்ளும் திறனைப் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
கரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்தவர்களின் எதிர்ப்பு சக்தியை இந்த உருமாறிய கரோனா வைரஸ் குறைக்குமா? ஏற்கெனவே கரோனா வந்தவர்களைப் பாதிக்குமா?
ஏற்கெனவே ஒரு முறை கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, மீண்டு வந்தவர்களின் எதிர்ப்பு சக்தியை இந்த உருமாறிய கரோனா வைரஸ் குறைக்கும் வாய்ப்பு இல்லை.
கரோனா வைரஸ்கள் சுவாசப் பாதை செல்களுடன் ஒட்டப் பயன்படும் ஸ்பைக் புரதங்களின் ஒருசில கூறுகளில் மட்டுமே மரபணு மாற்றம் நிகழ்ந்துள்ளது. இருப்பினும் இன்னும் பெரும்பான்மை ஸ்பைக் புரதம் உருவாக்கும் மரபணுக்குள் மாற்றமடையாமல் அப்படியே இருக்கின்றன. எனவே ஏற்கெனவே தொற்றடைந்து நல்ல முறையில் எதிர்ப்பு சக்தியை தங்களிடம் வைத்திருப்பவர்களுக்கு இந்த உருமாறிய கரோனா வைரஸ்களால் பாதிப்பு பெரிதாக இருக்காது.
உருமாறிய கரோனா வைரஸைத் தற்போதைய தடுப்பூசிகள் கட்டுப்படுத்துமா? அல்லது தடுப்பூசி மருந்துகளை மேம்படுத்த வேண்டுமா?
ஸ்பைக் புரதத்தின் உருவாக்கத்தில் பங்கு வகிக்கும் மரபணுக் கூறில் சிறிய பகுதியில் மட்டுமே மாற்றம் நிகழ்ந்துள்ளது. தற்போது வரை நிகழ்ந்துள்ள மரபணு மாற்றங்கள் வைரஸைப் பெருமளவு மாற்றவில்லை. நாம் தற்போது கண்டறிந்து வைத்துள்ள தடுப்பூசிகள் அனைத்தும் ஸ்பைக் புரதத்தை உருவாக்கும் மரபணுக்களில் பெரும்பகுதிகளுக்கு எதிராக எதிர்ப்பு சக்தியை உருவாக்குமாறு தயாரிக்கப்பட்டுள்ளதால் இந்த மாற்றமடைந்த வைரஸ்களை நமது தற்போதைய தடுப்பூசிகள் திறம்படத் தடுக்கும் என்றே நம்பப்படுகிறது.
எனவே, இப்போது கண்டறியப்பட்ட தடுப்பூசிகள் உருமாறிய கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தப் போதுமானதாக இருக்கும். இருப்பினும் வருங்காலத்தில் இன்னும் அதிக மாற்றங்களை வைரஸ் சந்தித்தால் அப்போது நமது தடுப்பூசிகளை அதற்கு ஏற்றவாறு மேம்படுத்த வேண்டியிருக்கும்.
உருமாறிய கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த ஸ்புட்னிக் தடுப்பு மருந்து பயனுள்ளதாக இருக்கும் என்று ரஷ்யாவும், பைசர் தடுப்பு மருந்து பலனளிக்கும் என்று ஜெர்மனியும் தெரிவித்துள்ளதே?
ஆம். ஸ்புட்னிக்-5 என்பது வைரஸின் ஸ்பைக் புரதத்தை எடுத்து மற்றொரு மனிதனைத் தாக்கும் சாதாரண பலம் குன்றிய அடினோ வைரஸில் புகுத்திச் செய்யப்படும் தொழில்நுட்பத்தில் உருவான தடுப்பூசியாகும்.
ஃபைசர் தடுப்பூசி என்பது மெசஞ்சர் ஆர்.என்.ஏவைச் செலுத்தி அதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் புதிய தொழில்நுட்பத்தைக் கொண்டதாகும்.
மேற்சொன்ன இரண்டிலும் வைரஸின் மரபணுக் கூறுகளில் மாற்றமடைந்த கூறுகளோடு சேர்த்து மாற்றமடையாத கூறுகள் பெரும்பான்மை இருப்பதால் இரண்டுமே உருமாறிய கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் என்று மருத்துவ நிறுவனங்கள் கூறியிருக்கின்றன.
முன்னெச்சரிக்கையாக இருக்க பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்? முகக்கவசம், சமூக இடைவெளி, கை கழுவுதல் மட்டும் போதுமா?
வைரஸ் எத்தனை வேகமாகப் பரவினாலும் சரி. அதைப் பற்றி நமக்குப் பெரிய அச்சம் தேவையில்லை. நாம் பொதுவெளியில் முகக்கவசம் அணிதல், அதன் மூலம் பிறருக்குத் தொற்றைப் பரப்பாமல் இருத்தல், கைகளைக் கழுவுதல், அதன் மூலம் நமது கைககளில் இருக்கும் வைரஸ்களை அழித்தல், கூடவே தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்தால் நிச்சயம் கரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த முடியும்.