

கரோனா தடுப்பூசி உருவாக்கத்தில் உலக நாடுகளிடையே போட்டா போட்டி நிலவுகிறது. இதுவரை 11 கரோனா தடுப்பூசிகள் மக்களின் நம்பிக்கையைப் பெறும் விதத்தில் அமைந்துள்ளன. அமெரிக்காவின் பைசர் (Pfizer) நிறுவனமும் ஜெர்மனியின் பயோஎன்டெக் நிறுவனமும் இணைந்து ‘BNT162b2’ கரோனா தடுப்பூசியைத் தயாரித்துள்ளன. மூன்றாம் கட்ட ஆய்வில் இருக்கும் இத்தடுப்பூசி 90 சதவீத பலன் தருவதாகவும் அவசரப் பயன்பாட்டுக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் (FDA) அனுமதி கேட்க இருப்பதாகவும் இந்த நிறுவனங்கள் சமீபத்தில் அறிவித்தன.
தங்களது ‘ஸ்புட்னிக்-வி’ தடுப்பூசி 92 சதவீத பலன் தருவதாக அடுத்த இரண்டு நாள்களில் ரஷ்யா அறிவித்தது. இந்த வாரம், அமெரிக்காவின் மாடர்னா நிறுவனம் தயாரித்துள்ள ‘எம்ஆர்என்ஏ-1273’ (mRNA-1273) தடுப்பூசி 94.5 சதவீதச் செயல்திறன் கொண்டுள்ளதாகத் தெரிவித்து, உலக மக்களிடம் அதிக எதிர்பார்ப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
‘கரோனாவுக்குத் தடுப்பூசி அவசர மாகத் தேவைப் படுகிறது என்பதில் சந்தேகம் இல்லை. எந்த நாடு அதை முதலில் வெளியிடுகிறது என்பதும் முக்கியமில்லை. தற்போது ஆய்வில் இருக்கும் தடுப்பூசி நிறுவனங்கள் முழுமையான முடிவுகளைச் சமர்ப்பித்த பிறகு அதிகபட்ச தரநிர்ணயங்களைப் பின்பற்றி, மிகவும் பாதுகாப்பானதாகவும், அதிக செயல்திறன் உள்ளதாகவும் தீர்க்கமாக உறுதி செய்யப்படும் தடுப்பூசிதான் பொதுப்பயன்பாட்டுக்கு வெளியிடப்படும் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தச் சூழலில் போட்டிபோடும் இந்த மூன்று தடுப்பூசிகளின் கள நிலவரம் என்ன?
பைசர் தடுப்பூசி
பைசர் தடுப்பூசியில் ‘எம்ஆர்என்ஏ’ (mRNA/messenger RNA) தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. தடுப்பூசித் தயாரிப்பில் இதுவரை வழக்கத்தில் இல்லாத தொழில்நுட்பம் இது. இந்த வழியில் எளிதாகவும் விரைவாகவும் தடுப்பூசி தயாரிக்கலாம் என்பதுதான் இதற்குக் காரணம். கரோனா வைரஸில் ‘ஆர்என்ஏ’ எனும் மரபுச்சங்கிலி உள்ளது. ‘ஆர்என்ஏ’வில் பல பிரதிகள் உண்டு. அவற்றில் ஒரு பிரதி ‘எம்ஆர்என்ஏ’. இந்த இரண்டிலும் ஒரே மாதிரியான மரபணு வரிசையே இருக்கும். மனித உடல் செல்களில் புரதங்களைத் தயாரிப்பதற்கான செய்முறைக் குறிப்புகள் அதில் எழுதப்பட்டிருக்கும். ஆகவே, ‘எம்ஆர்என்ஏ’வைத் தனியாகப் பிரித்து, அதுபோலவே செயற்கைமுறையில் தயாரித்து, நானோதுகள் கொழுப்புப் பந்துகளுக்குள் செலுத்தி இந்தத் தடுப்பூசியைத் தயாரிக்கின்றனர்.
இதை உடலுக்குள் செலுத்தியதும் பயனாளியின் ரத்தத்தில் கரோனா வைரஸின் கூர்ப்புரதங்கள் (Spike proteins) உற்பத்தியாகும். அதைக் கவனிக்கும் தடுப்பாற்றல் மண்டலம் அந்நியர்கள் உடலுக்குள் நுழைந்து விட்டனர் எனக் கணித்து, அவற்றை எதிர்ப்பதற்காக எதிரணுக்களை (Antibodies) நிரந்தரமாக உருவாக்கி விடும். அதற்குப் பிறகு அவருக்கு நாவல் கரோனா வைரஸ் தொற்றுமானால், இந்த எதிரணுக்கள் அதை அழித்துவிடும்; கோவிட்-19 நோய் தடுக்கப்படும். இந்த முறையில் செயல்படுகிற இத்தடுப்பூசியின் பாதுகாப்புத் தன்மை குறித்து அறிவியலாளர்கள் பல சந்தேகங்களை எழுப்பியுள்ளனர்.
பிரச்சினைகள் என்ன?
முதலாவதாக, இதன் மூன்றாம் கட்ட ஆய்வில் 44,000 தன்னார்வலர்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டதில் 94 பேரின் முடிவுகளே கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன என்கிறார், அதன் தலைமைச் செயல் அதிகாரி ஆல்பர்ட் போர்லா. எனவே, இதன் பலன் இன்னும் உறுதிப்படவில்லை என்பது தெளி வாகிறது. அடுத்ததாக, அமெரிக்காவின் ‘எஃப்டிஏ’, அவசரப் பயன்பாட்டுக்கு இதை அனுமதிக்க, இப்போதுள்ள தரவுகள் போதுமானவையாக இல்லை. மூன்றாவதாக, இதன் ஆய்வு முடிவுகள் ‘லான்செட்’ போன்ற மருத்துவ ஆய்விதழ்களில் வெளியிடப்பட்டு மதிப்பாய்வு (Peer-review) செய்யப்பட வில்லை.
நான்காவதாக, இதைப் பாதுகாப்பதற்கு மைனஸ் 70 – 80 செல்சியஸ் வெப்பநிலை உள்ள ஆழ்உறை குளிர்பதனப்பெட்டிகள் தேவை. இப்படியான குளிர்சங்கிலிப் (Cold chain) பாதுகாப்பு அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில்கூட இல்லை. இந்தியாவிலும் இது இல்லை. மேலும், இதன் தரம் குறித்து இந்தியாவில் ஆய்வு செய்யப்படவில்லை. இறுதியாக, இது மரபு சார்ந்த புதுவித தடுப்பூசி என்பதால், பயனாளியின் மரபணுவுக்கு ஏதேனும் பாதகம் செய்யுமா என்பது போகப்போகத்தான் தெரியவரும். இதன் தயாரிப்பில் வைரஸ் கிருமியை நேரடியாகப் பயன்படுத்தவில்லை என்பதும் இந்தத் தடுப்பூசி போடப்படு வதன் மூலம் பயனாளிக்குக் கரோனா தொற்று ஏற்பட வாய்ப்பில்லை என்பதும் தான் இதன் முக்கியமான நன்மைகள் என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.
மாடர்னா தடுப்பூசி
மாடர்னாவின் ‘எம்ஆர்என்ஏ-1273’ தடுப்பூசி அதன் தயாரிப்பிலும் செயல் முறையிலும் ஏறக்குறைய பைசரின் தடுப்பூசி போன்றதே. ஒரே வித்தியாசம், இதைப் பாதுகாக்க தற்போதுள்ள குளிர்பதனப்பெட்டிகளே போதும். இதை 30,000 தன்னார்வலர்களுக்குப் போட்டுப் பரிசோதித்த மூன்றாம் கட்ட ஆய்வில் 94.5% பலன் கிடைத்ததாக இடைக்கால ஆய்வு முடிவு தெரிவித் துள்ளது. முழு முடிவுகள் வந்தபிறகே இதன் திறன் குறித்து முடிவுசெய்ய முடியும் என்பது வல்லுநர்களின் கருத்து. மேலும், இது இன்னமும் மருத்துவ ஆய்வேடுகளில் பதிவாகவில்லை என்பதும் வல்லுநர்களின் மதிப்பாய் வுக்குச் செல்லவில்லை என்பதும் இதன் செயல்திறனை இப்போதே ஒப்புக்கொள்ளத் தடைகளாக உள்ளன.
‘ஸ்புட்னிக் - வி’ தடுப்பூசி
‘உலக சுகாதார நிறுவனத்திடம் அவசரப் பயன்பாட்டுக்கு அனுமதி கேட்டு உலக அளவில் முதன்முதலில் பதிவுசெய்யப்பட்ட கரோனா தடுப்பூசி’ எனும் சிறப்பு ‘ஸ்புட்னிக்-வி’ தடுப்பூசிக்கு உண்டு. 1957இல் விண்ணுக்கு அனுப்பப்பட்ட ரஷ்யாவின் முதல் செயற்கைக்கோளான ‘ஸ்புட்னிக்’கின் பெயரை இது பெற்றுள்ளது. ‘வி’ என்பது ‘Vector vaccine’ ஐக் குறிக்கிறது. ரஷ்யாவின் ‘கமாலியா தேசிய ஆய்வு மையம்’ இதைத் தயாரிக்கிறது.
ஏறக்குறைய இறுதிக்கட்ட ஆய்வில் இருக்கும் இந்தத் தடுப்பூசித் தயாரிப்பில் ஒரு கடத்துயிரியை (Vector) ஏந்துபொருளாகப் பயன்படுத்து கின்றனர். இந்த வழியில் எளிதாகவும் விரைவாகவும் தடுப்பூசி தயாரிக்கலாம் என்பது மட்டுமன்றி, பாதுகாப்புக்கும் உறுதிகொடுக்கும் தொழில்நுட்பம் இது. ஏற்கெனவே, ‘எபோலா’வுக்கு இதே போல் தடுப்பூசிகளை உருவாக்கிய அனுபவம் ‘கமாலியா’வுக்குக் கைகொடுக் கிறது. மனிதருக்கு வழக்கமாகச் சளி, ஜலதோஷம் உள்ளிட்ட சுவாச நோய்களை ஏற்படுத்தும் ‘அடினோ வைரஸ்’தான் இதில் ஏந்துபொருள். அடினோ வைரஸின் மரபணுவை அகற்றிவிட்டு, அந்த இடத்தில், வீரியம் குறைக்கப்பட்ட நாவல் கரோனா வைரஸின் கூர்ப்புரத மரபணுக் குறியீடுள்ள (Spike protein gene code) புரதக்கூறை எடுத்துச் செலுத்திவிடுகின்றனர்.
இவ்வாறு மறு உருவாக்கம் செய்யப் பட்ட அடினோ வைரஸ்களைத் தேவைக்குத் தயாரித்துத் தடுப்பூசியாக மனிதருக்குச் செலுத்துகின்றனர். இதனால், பயனாளியின் ரத்தத்தில் கரோனா கூர்ப்புரதங்கள் உருவாகின்றன. அவரது தடுப்பாற்றல் மண்டலம் இவற்றை அந்நியர்களாகப் பாவித்துத் தாக்குதல்களை நடத்து வதற்கு எதிரணுக்களை உற்பத்தி செய்துவிடுகிறது. இவர்களுக்கு அடுத்த முறை கரோனா தொற்று ஏற்படும்போது இந்த எதிரணுக்கள் அதை அடையாளம் கண்டு தொடக்கத்திலேயே அழித்து விடுகிறது. அதனால், கோவிட்-19 நோய் வருவது தடுக்கப்படுகிறது.
பலன்கள் என்னென்ன?
புனேயில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனமும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் இணைந்து AZD1222 எனும் தடுப்பூசியைத் தயாரித்துள்ளன. (இந்தியாவில் இதன் பெயர் கோவிஷீல்டு). இதுவும் அடினோ வைரஸ் தடுப்பூசிதான். ஆனாலும், ‘ஸ்புட்னிக்-வி’ தயாரிப்பு புதுமையானது. சூட்கேஸின் கூடுதல் பாதுகாப்புக்கு இரட்டைப் பூட்டு இருப்பதைப்போல், ‘ஸ்புட்னிக்-வி’ தடுப்பூசியில் இரண்டு வெவ்வேறு வகை அடினோ வைரஸ்கள் கடத்துயிரிகளாகச் செயல்படுகின்றன. இந்தத் தொழில்நுட்ப உத்தி உலகில் முதல்முறையாகப் பயன்படுத்தப் படுகிறது என்பது இதன் தனிச்சிறப்பு.
‘ஸ்புட்னிக்-வி’ தடுப்பூசி ஒருவருக்கு இரண்டு தவணைகள் போடப்படுகிறது. முதல் தவணைத் தடுப்பூசியில் ‘ஆர்ஏடி26’ (rAd26) எனும் அடினோ வைரஸ் ‘ஏவுதள’மாகிறது. பயனாளியின் செல்களுக்குள் வைரஸ்கள் நுழைவதற்கு முன்பே அவற்றை அழித்து விடக்கூடிய எதிரணுக்களை (Humoral cellular immunity) இது உருவாக்குகிறது. 21 நாள்கள் கழித்துப் போடப்படும் இரண்டாம் தவணைத் தடுப்பூசியில் ‘ஆர்ஏடி5’ (rAd5) எனும் அடினோ வைரஸ் ‘ஏவுதள’மாகிறது. இது அவரது நினைவு தைமஸ் செல்களை (Memory T cells) மேம்படுத்தித் தடுப்பாற்றலை நீட்டிக்கிறது; செல்களுக்குள் புகுந் துள்ள வைரஸ்களையும் அழிக்கிறது.
மேலும், இது திரவத் தடுப்பூசி, பவுடர் தடுப்பூசி என இரண்டுவிதமாகத் தயாரிக்கப்படுகிறது. திரவத் தடுப்பூசியைக் குளிர்பதனப்பெட்டியில் மைனஸ் 18 டிகிரி செல்சியஸிலும், பவுடர் தடுப்பூசியை இரண்டிலிருந்து எட்டு டிகிரி செல்சியஸ் வரையிலும் பாதுகாக்க முடியும். இது நம் வீட்டுக் குளிர்பதனப்பெட்டியில் நிலவும் வெப்பப் பாதுகாப்பு. ஆகவே, இந்தியாவில் இந்தத் தடுப்பூசியைப் பராமரிப்பதற்குக் ‘குளிர்சங்கிலி’யில் பிரச்சினை இல்லை என்பது இன்னொரு கூடுதல் நன்மை.
‘ஸ்புட்னிக்-வி’ தடுப்பூசி மாஸ்கோ வில் மட்டும் 19,000 பேருக்கு முதல் தவணையாகவும் 6,500 பேருக்கு இரண்டாம் தவணையாகவும் போடப்பட்டுப் பரிசோதிக்கப்பட்டது. ரஷ்ய அதிபர் புதினின் மகளுக்கே இது சோதனைமுறையில் செலுத்தப்பட்டது. இப்படி ரஷ்யாவில் மட்டுமல்லாமல் ஐக்கிய அரபு நாடுகளிலும் மூன்றுகட்ட ஆய்வுகள் முடிந்து மூன்று மாதங்கள் ஆகின்றன. இந்த ஆய்வுகளின் முடிவுகள் 85 சதவீத்தினருக்கு எவ்விதப் பக்கவிளைவும் ஏற்படவில்லை என்கின்றன. இந்தியாவில் இதன் மூன்றாம் கட்ட ஆய்வைத் தொடங்க டாக்டர் ரெட்டி மருந்து நிறுவனத்துடன் ரஷ்யா ஒப்பந்தம் செய்துள்ளது. இதுவரை 13,000 தன்னார்வலர்கள் இந்த ஆய்வுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆய்வு முடிவுகளிலும் இதன் செயல்திறன் உறுதிப்படுமானால் இந்தியாவில் இதைப் பயன்படுத்தத் தயங்க வேண்டியதில்லை.
தவிரவும், இந்தத் தடுப்பூசி குறித்த விவரம் ‘லான்செட்’ மருத்துவ இதழில் வெளியாகியுள்ளது. இனி, தடுப்பாற்ற லியல் வல்லுநர்கள் மதிப்பாய்வு செய்ய வேண்டியது மட்டுமே நிலுவையில் உள்ளது. அதுவும் முடிந்துவிட்டால் ‘ஸ்புட்னிக்-வி’ தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரம் கிடைத்துவிடும்.
ஆக, இன்றுள்ள கள நிலவரப்படி உலகில் கரோனாவை ஒழிக்கும் முதல் தடுப்பூசியாக ‘ஸ்புட்னிக்-வி’ முந்திக்கொள்ள அதிக வாய்ப்பு இருக்கிறது. ஏற்கெனவே, 50க்கும் மேற்பட்ட உலக நாடுகள் இந்தத் தடுப்பூசியின் வணிக விநியோகத்துக்கு ரஷ்யாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளன. அந்தப் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றிருப்பதால் நமது எதிர்பார்ப்பு அதிகமாவதிலும் நியாயம் இருக்கிறது.
கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்,
தொடர்புக்கு: gganesan95@gmail.com