ஃபோலிக் அமிலம் பிறவிக் குறைபாட்டையும் வெல்லும் எளிய உயிர்ச்சத்து
ஹார்ப்பர் மே, மூன்று வயதுப் பெண் குழந்தை. அந்தக் குழந்தை அண்மையில் டிஸ்னி வேர்ல்டு சென்றுவந்ததை ஒளிப்படமாக அவளுடைய தாய் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துகொள்ள, உலகமே அந்தக் குழந்தையைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறது. இதில் என்ன ஆச்சரியம்?
டிஸ்னி வேர்ல்டில் வலம்வந்த ஹார்ப்பர் மேயை அனைவரும் கொண்டாடுவதற்குக் காரணம் ‘ஸ்பைனா பிஃபிடா’ என்கிற பிறவிக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவள் அவள் என்பதால் மட்டுமல்ல, அதை எதிர்த்துத்தொடர்ந்து போராடும் அவளது வலிமைக்காகவும்தான்.
மூன்று வயது மட்டுமே நிரம்பிய அந்தக் குழந்தைக்கு இதுவரை பத்து முறைக்கும் மேல் அறுவைசிகிச்சைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன, அதுவும் தண்டுவடத்தில். ஸ்பைனா பிஃபிடா என்கிற இந்தப் பிறவிக் குறைபாட்டை வெல்ல ஹார்ப்பர் மே எடுத்த தொடர் முயற்சிகளைப் பற்றி அறியும்முன், ஸ்பைனா பிஃபிடா பற்றி அறிந்துகொள்வோம்.
மூளையும் தண்டுவடமும்
நிற்பது, நடப்பது, உட்கார்வது, ஓடுவது என நமது இயக்கத்துக்குக் காரணமான ஆணைகளை இடுவது தலைமைச் செயலகமான மூளை. அதைக் கட்டுப்படுத்தி, செயல்படுத்துவது முதன்மைக் கம்பித்தடம் போன்ற நமது தண்டுவட நரம்புகளே. மூளை, தண்டுவடம் என்கிற இந்த முக்கிய உறுப்புகள் இரண்டையும் பல அடுக்கு பாதுகாப்புடன் படைத்துள்ளது இயற்கை.
மூளைக்கு எப்படி மெனிஞ்சஸ் என்கிற மூன்றடுக்குப் பாதுகாப்பு உறையும்அதற்கு மேல் மண்டையோடு என்கிற உறுதியான வளையமும் இருக்கின்றனவோ, அதேபோல் மூளையிலிருந்து வெளிவரும் நரம்பு மண்டலத்துக்கும் மெனிஞ்சியல் உறைகளும் அதற்கு மேல் முதுகுத் தண்டுவட எலும்புகளும் பாதுகாப்பை வழங்குகின்றன. அதேபோல் மூளையைக் கதகதப்பாக வைத்துக்கொள்ள உதவும் சி.எஸ்.எஃப். என்கிற மூளை தண்டுவட திரவம், தண்டுவட நரம்புகளின் வெப்பத்தைச் சீராக்கிப் பாதுகாக்கிறது. இவை அனைத்துக்கும் மேலாக, தோல் என்கிற முக்கிய உறுப்பு, வெப்பத்தின் அளவை மாற்றும் குளிர்சாதனப் பெட்டிபோல் வேலைசெய்வதால்தான், நம்மால் இயங்கவே முடிகிறது.
ஆனால், ஒரு சிலருக்கு மட்டும் கரு உருவாகும் தொடக்க நாள்களிலேயே, பல்வேறு காரணங்களால் இந்தப் பாதுகாப்பு வளையங்களில் ஒன்றோ இரண்டோ உருவாகாமல் போக நேரிடலாம். அதில் மண்டையோட்டுக் குறைபாட்டுடன் மூளை உருவாவதை Encephalocele என்றும், தண்டு வட எலும்புக் குறைபாட்டுடன் நரம்பு மண்டலம் உருவாவதை Spina bifida with myelocele என்றும் மருத்துவ உலகம் அழைக்கிறது.
என்ன பிரச்சினை?
எளிதாகச் சொல்ல வேண்டுமென்றால் நமது வீட்டில் எரியும் மின்விளக்கு, கண்ணாடிக் கவசம் இல்லாமல் மின்னிழை மட்டும் எரிவது மூளையில் உருவாகும் குறைபாடு என்றால், வீட்டின் மின்கம்பிகள் பாதுகாப்புக் குழாய்க்குள் இல்லாமல், சுவரெங்கும் பரவிக் கிடப்பதுடன் சுவரே சரிந்தும் கிடப்பது ஸ்பைனா பிஃபிடா என்று சொல்லலாம்.
ஸ்பைனா பிஃபிடா என்கிற இந்தப் பிறவிக் குறைபாடு கர்ப்பகால சர்க்கரை நோய், கர்ப்பகால கிருமித்தொற்று, ஊட்டச்சத்துக் குறைபாடு, வலிப்பு நோய்க்காகத் தாய் உட்கொள்ளும் மருந்து, பெற்றோருடைய மரபியல் காரணங்கள் போன்றவற்றால் ஆயிரத்தில் ஐந்து குழந்தைகளுக்கு ஏற்படக்கூடும் என்கிறது புள்ளிவிவரம். ஆசிய ஆப்ரிக்க நாடுகளில் அதிகம் காணப்படும் இந்தக் குறைபாடு, பெண் குழந்தைகளையே சற்று அதிகம் பாதிக்கிறது.
சிக்கலின் முடிச்சுகள்
இந்தப் பாதுகாப்பு கவசம் இல்லாத தண்டுவட நரம்புகள், மின்கம்பிகள்போல் வெளித் தெரிவதால் என்ன பிரச்சினை என்றால், ஸ்பைனா பிஃபிடா குறைபாடு முதுகுத் தண்டுவடத்தில் அமைந்துள்ள இடத்தைப் பொறுத்தும், குறைபாட்டின் நீள அகலத்தைப் பொறுத்தும் அறிகுறிகள் வேறுபடுகின்றன. ஸ்பைனா பிஃபிடா குறைபாட்டை நிவர்த்தி செய்யும் அறுவைசிகிச்சைகளும் அதற்கேற்ப வேறுபடுகின்றன. இந்தக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களில் வெகு சிலருக்கு முற்றிலும் வெளியே தெரியாத, அறிகுறிகள் எதுவுமில்லாத ஸ்பைனா பிஃபிடா அக்கல்டா (Spina Bifida Occulta) என்கிற நிலை ஏற்படலாம்.
ஆனால், பெரும்பாலான குழந்தைகளில் முதுகுத் தண்டில் நீர்க்கசிவுடன் கூடிய வீக்கம் (spina bifida cystica), கால்கள் இயங்காமல் முடக்குவாதம், கால் தசைகள் - முட்டிகளில் குறைபாடு, சிறுநீர்க் கட்டுப்பாடின்மை, மன வளர்ச்சி குறைபாடு, மூளைக்காய்ச்சல், வலிப்பு நோய் – எளிதாகத் தொற்றும் நோய்த்தொற்றுகள் போன்றவை ஏற்படக் காரணமாகலாம். இதனால், அந்தக் குழந்தைகள் வாழ்நாள் முழுவதும் எல்லாச் செயல்பாடுகளுக்கும் மற்றவர்களைச் சார்ந்திருக்கும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள். அடிக்கடி மருத்துவ உதவி பெற வேண்டிய கட்டாயத்துக்கும், வாழ்நாளின் பெரும்பகுதியை மருத்துவமனைகளில் கழிக்க வேண்டிய சூழலும் உருவாகலாம்.
ஸ்பைனா பிஃபிடா என்கிற இந்தப் பிறவிக் குறைபாட்டை முறையாக மேற்கொள்ளப்படும் கர்ப்ப கால ஸ்கேனிங் மூலம் கருவிலேயே கண்டறியலாம். கருவின் பன்னிரண்டாவது வாரத்தில் மேற்கொள்ளப்படும் NT ஸ்கேன், இருபதாம் வாரத்தில் மேற்கொள்ளப்படும் டார்கெட் ஸ்கேனிங்கில் கண்டறியப்பட்ட பிறகு, உறுதிப்படுத்த MSAFP என்கிற ரத்தப் பரிசோதனையும் மேற்கொள்ளப்படுகிறது. ஸ்பைனா பிஃபிடாவுடன் மற்ற குறைபாடு களையும் டார்கெட் ஸ்கேனிங் கண்டறிவதுடன், குறைபாட்டுக்குத் தகுந்தவாறு சிகிச்சை குறித்து முடிவெடுக்கவும் முடியும்.
அசுரக் குழந்தைகளின் கதை
இது போன்ற ஸ்கேனிங் வசதிகள் இல்லாத 1950-களில் அப்படிப் பிறந்த குழந்தைகளை வெறும் சதைப்பிண்டக் குழந்தைகள், அசுரக் குழந்தைகள் என்று மக்கள் கருதியுள்ளனர். அப்படிப் பிறந்த குழந்தைகள், முன்னோரின் சாபத்தால் பிறந்தவுடனேயே இறந்ததாகவும் ரிவா லெஹரரின் ‘Golem Girl: A Memoir’ என்கிற தன்வரலாற்றுப் புத்தகம் கூறுகிறது. தானும் வெறும் களிமண்ணால் உருவான பெண்ணாகக் (Golem Girl) கருதப்பட்டதைக் கண்ணீருடன் விவரித்துள்ளார் ரிவா லெஹரர்.
“பிறந்தபோது நான் ஒரு பெண்ணா, மனித இனத்தைச் சேர்ந்தவளா அல்லது உயிருடன் பிறந்த வெறும் மண்ணுருண்டை தானா?”என்கிற கேள்வி தனக்கே எழுந்ததாகக் கூறும் ரிவா, தனக்கு ஏற்பட்ட சிரமங்களை விரிவாக எடுத்துரைத்திருக்கிறார். உலகம் தன்னை ஒரு அசுரக் குழந்தை என்று நினைத்தபோது, பல்வேறு அறுவை சிகிச்சைகள் மூலம் படிப்படியாகத் தன்னை ஒரு மனுஷியாக்கியது மருத்துவர்கள்தாம்; அத்தனைக்கும் துணைநின்றது தனது தாய் என்றும் அவர் கூறுகிறார். தழும்புகள் நிறைந்த ரிவாவின் வாழ்க்கைப் புத்தகம், இந்த நோயின் பழைய காலத்தை அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது.
மருத்துவத் தொழில்நுட்பம் பெருமளவு முன்னேறியுள்ள இன்றைய காலகட்டத்தில், ஹார்ப்பர் மே போன்ற ஸ்பைனா பிஃபிடா குழந்தைகளுக்கு மூன்று வயதிலேயே பத்து முறைக்கும் மேல் தண்டுவட அறுவை சிகிச்சைகள், இயன்முறை சிகிச்சைகள், பிரத்யேக நடைவண்டிகள், புனரமைப்பு, தொடர் ஆதரவு என அந்தக் குழந்தையை இயல்பாக்குவதற்கான அனைத்தும் சாத்தியமாகியுள்ளன.
தடுப்பது எப்படி?
இவ்வளவு பிரச்சினைகளைத் தரக்கூடிய ஸ்பைனா பிஃபிடா வராமலேயே தடுக்க முடியாதா? அதைத் தடுப்பது மிக எளிது. பச்சைக் காய்கறிகள், கீரை வகைகள், பழங்கள், பருப்பு, கொட்டை வகைகள், சிறுதானியம் போன்றவற்றை உண்ணும்போது இவற்றில் இயற்கையாகவே காணப்படும் ஃபோலிக் அமிலம், செல்களின் டி.என்.ஏ., ஆர்.என்.ஏ. வளர்ச்சிக்கும், மூளை -நரம்புகளின் வளர்ச்சிக்கும் பெருமளவு உதவுகிறது. அத்துடன், ஸ்பைனா பிஃபிடா, என்கெஃபலோசீல் போன்ற பிறவிக் குறைபாடுகளை 70-75% வரை தடுக்கிறது.
கருவில் வளரும் குழந்தைக்கு நன்மை செய்வது மட்டுமன்றி, கருச்சிதைவையும் குறைப்பிரசவத்தையும் கட்டுப்படுத்தி, தாயின் ரத்த சோகைக்கும் அருமருந்தாவதால் ‘கருவின் தோழி’ என்று கொண்டாடப்படுகிறது ஃபோலிக் அமிலம் என்கிற இந்த எளிய ‘பி’ விட்டமின். ஆனால், இயற்கை தரும் உணவு வகைகளில் இருக்கும் ஃபோலிக் அமிலம், சமைக்கும்போது நீரில் கரைந்து சிதைந்துவிடுவதால், 400 முதல் 600 mcg ஃபோலிக் அமில மாத்திரைகள் கர்ப்ப காலத்தில் பரிந்துரைக்கப்படுகின்றன.
கர்ப்ப காலத்தின் தொடக்க நிலையில் மட்டுமன்றி, கருத் தரிப்பதற்கு முன்பாகவே, ஏன் திருமண வயதை அடையும்போதே பெண்கள் இதை உட்கொள்வது அவசியம். இரும்புச்சத்து - ஃபோலிக் அமில மாத்திரைகளைக் கர்ப்பிணிப் பெண்களுக்கும், பருவ வயதை எட்டிய பெண்களுக்கும் அரசு இலவசமாக வழங்கிவருவது இதனால்தான்.
அக்டோபர் மாதம்,ஸ்பைனா பிஃபிடா விழிப்புணர்வு மாதம். நமது சந்ததியினர் ஊனமின்றி ஆரோக்கியத்துடன் வாழ, ஸ்பைனா பிஃபிடா, ஆரோக்கிய உணவு முறை குறித்த கூடுதல் விழிப்புணர்வு நமக்கு அவசியம். அடுத்து வரும் சந்ததியின் ஆரோக்கியம், நம் கைகளில்தான் உள்ளது.
கட்டுரையாளர், மகப்பேறு மருத்துவர்.
தொடர்புக்கு: sasithra71@gmail.com
