

சமூக இடைவெளி 2020-ல் முதன்முதலாக நடைமுறைப்படுத்தப்பட்ட கட்டுப்பாடு அல்ல. அது நூறாண்டு பழமையானது. ஜெர்மனியைச் சேர்ந்த கார்ல் ஃபுலுக (Carl Flügge) எனும் நுண்ணுயிரி வல்லுநர் 1897-ல் பரிந்துரைத்த வழிமுறை அது.
ஒரு மனிதரிடமிருந்து வெளிப்படும் நீர்த்திவலைகள் பரவும் வேகமும் கடக்கும் தூரமும் மனிதர், சூழ்நிலைக்கு ஏற்ப மாறுபடும். ஒரு மனிதரிடமிருந்து வெளிப்படும் நீர்த்திவலைகள், அதிகபட்சமாக 24 அடிக்குக்கூடச் (8 மீட்டர்) செல்லக்கூடும். இருந்தாலும் பல்வேறு சாத்தியக்கூறுகளின் அடிப்படையில், 6 அடி (2 மீட்டர்) சமூக இடை வெளியைப் பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறது.
மட்டுப்படும் வேகம்
கரோனா பரவும் வேகத்தை மட்டுப்படுத்த சமூக இடைவெளி பெருமளவு உதவும் என்கின்றன ஆராய்ச்சிகள். கரோனா பரவலை முற்றிலும் கட்டுக் குள் கொண்டுவந்திருக்கும் தைவான், நியூசிலாந்து போன்ற நாடுகள் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு.
கட்டுக்குள் வரும் பரவல்
கரோனாவால் பாதிப்புக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை, சமூக இடைவெளியைப் பின்பற்ற வில்லை என்றால் நான்கு நாள்களிலும், சமூக இடைவெளியைப் பின்பற்றினால் எட்டு நாள்களிலும் இரட்டிப்பு அடையும் என்கின்றன ஆய்வுகள். ஓர் எடுத்துக்காட்டு இன்னும் தெளிவை ஏற்படுத்தும்.
ஒரு நாட்டில் கரோனா பரவத் தொடங்குகிறது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அடுக்கேற்ற முறையில் இரட்டிப்பு ஆகிக்கொண்டே போகும் என்பதால், 36 நாள்களில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 512 ஆக உயர்கிறது. அதன் பின்னர், அரசாங்கம்-1 சமூக இடைவெளியை நடைமுறைப்படுத்துகிறது. அரசாங்கம்-2 சமூக இடைவெளியை நடைமுறைப்படுத்தவில்லை. 60 நாள்களுக்குப் பின்னர், அரசாங்கம்-1 ஆளும் பகுதியில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,096 ஆக இருக்கும். அரசாங்கம்-2 ஆளும் பகுதியில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 30,000-க்கும் அதிகமாக இருக்கும்.
அலட்சியம் ஆபத்து
கோவிட்-19 பெருந்தொற்றால் இதுவரை உலக அளவில் 4 கோடிப் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 லட்சம் பேர் பலியாகியுள்ளனர். இந்த நிலையில்தான், பொது ஊரடங்கில் பல தளர்வுகள் நம் நாட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்போதைய சிறு அலட்சியம்கூட நமக்குப் பெரும் ஆபத்துக்கு வழிவகுக்கும். நம்முடைய பாதுகாப்பு மட்டுமல்ல; இந்த நோயைப் பொறுத்தவரைச் சுற்றத்தின் பாதுகாப்பும் நம் பொறுப்புணர்வைச் சார்ந்தே இருப்பதால், ஊரடங்கு தளர்வுக்குப் பிந்தைய காலகட்டத்தில் கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியிருக்கிறது.