Last Updated : 17 Oct, 2020 09:31 AM

 

Published : 17 Oct 2020 09:31 AM
Last Updated : 17 Oct 2020 09:31 AM

உரிய நேரத்தில் சிகிச்சை பெற்றால் கோவிட் ஒரு பொருட்டே இல்லை

கோவிட் 19 பாதிப்புக்கு உள்ளான இளம் வயதினர் சிலரே அதற்கு எதிர்ப்புத்திறன் பெறுவதற்கும் மீண்டுவருவதற்கும் போராடிவரும் நிலையில், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 29 முதியவர்கள் குணமடைந்திருக்கின்றனர். இவர்கள் அனைவருமே ஆனந்தம் முதியோர் இல்லத்தைச் சேரந்த ஆதரவற்ற முதியோர்!

வாரிசு இல்லாத, போக்கிடம் அற்ற ஏழை முதியவர்களுக்காக 16 ஆண்டுகளுக்கு முன்பாக சென்னை அம்பத்தூரிலிருந்து செங்குன்றம் செல்லும் சாலையில் கள்ளிக்குப்பத்தில் தொடங்கப்பட்ட இலவச முதியோர் இல்லம் ‘ஆனந்தம்’. இதன் நிர்வாக அறங்காவலர் பாகீரதி.

இந்த இல்லத்தில் 60 முதல் 94 வயதுவரையுள்ள 105 முதியவர்கள் இருக்கின்றனர். ஆண்கள், பெண்கள் தனித்தனியாக தங்கும் வசதி இருக்கிறது. அத்துடன் அந்தப் பகுதியில் அரசுப் பள்ளியில் படிக்கும் முதல் தலைமுறைக் குழந்தைகளுக்காக இலவச மாலை நேர வகுப்புகளையும், அந்தப் பகுதி மக்களுக்காக இலவச மருத்துவமனையும் நடத்தப்பட்டுவருகிறது.

எச்சரிக்கை வளையம்

தங்கள் இல்லத்து முதியவர்கள் கரோனாவைக் கடந்துவந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார் பாகீரதி:

“கரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்ட மார்ச் மாதத்திலிருந்தே இல்லத்துக்கு வரும் விசிட்டர்களை அனுமதிக்காமல் இருந்தோம். ஏனென்றால் பிறந்த நாள், இறந்தவர்களின் நினைவு நாளில் இங்கிருக்கும் முதியவர்களுடன் சேர்ந்து பலர் கொண்டாடிவிட்டுச் செல்வது வழக்கம். ஆனால், மார்ச் மாதத்திலிருந்து இப்படிப்பட்ட விசிட்டர்களை அனுமதிக்கவில்லை.

கபசுரக் குடிநீர், நிலவேம்புக் குடிநீர், மல்ட்டி விட்டமின் மாத்திரைகள், விட்டமின் சி இருக்கும் நெல்லி, கொய்யா போன்றவற்றைக் கொடுத்துவந்தோம். இன்ஃபுளுயன்ஸா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி போடுவது உள்ளிட்ட திட்டங்களையும் செயல்படுத்தினோம்.

கரோனா பாசிட்டிவ்

இந்நிலையில் முதியோர் இல்லங்களில் இருக்கும் அனைவருக்கும் டெஸ்ட் எடுக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டதைத் தொடர்ந்து, மாநகராட்சி களத்தில் இறங்கியது. செப்டம்பர் 5 அன்று மாநகராட்சி சுகாதார அதிகாரிகள், இங்கிருக்கும் அனைவரிடமும் மாதிரிகளை எடுத்துச்சென்றனர். 29 பேருக்கு கரோனா பாசிட்டிவ் என முடிவு வந்தது.

அனைவரும் ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அந்த மருத்துவ மனையின் டீன் டாக்டர் பாலாஜி, மருத்துவர்கள் வினோத்குமார், கீதா, புனிதா உள்ளிட்டோர் அடங்கிய குழு முதியவர்களைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொண்டது. ஏற்கெனவே, இல்லத்தில் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த நோய் எதிர்ப்பாற்றல் மிகுந்த உணவின் காரணமாக, மருத்துவர்களின் சிகிச்சைக்கு அவர்களுடைய உடல் ஒத்துழைத்தது. இந்த 29 பேரில் 84 வயது, 94 வயது கொண்ட முதியவர்களும் இருந்தார்கள். மூச்சுவிடுவதில் பிரச்சினை இல்லாத நிலையை பன்னிரண்டு நாள் தொடர் சிகிச்சையின் மூலம் அனைவரும் எட்டியிருந்தனர்.

அனைவருக்குமே நெகட்டிவ் ஆன பிறகு இல்லத்துக்கு அனுப்பப்பட்டனர். இல்லத்துக்குத் திரும்பிய பிறகு, அருகிலிருக்கும் ஒரு விடுதியில் 15 நாள்கள் அவர்களைத் தனிமைப்படுத்தி ஒரு மருத்துவர், செவிலியர் கண்காணிப்பில் கவனித்துவருகிறோம். சத்தான உணவை வழங்குகிறோம். தன்னலமற்ற மருத்துவர்களின் சேவையால் இல்லத்தில் இருக்கும் முதியவர்களும் தற்போது பாதுகாப்பாக இருக்கிறார்கள்.”

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x