Published : 10 Oct 2020 09:40 am

Updated : 10 Oct 2020 09:40 am

 

Published : 10 Oct 2020 09:40 AM
Last Updated : 10 Oct 2020 09:40 AM

அஞ்சலி: டாக்டர் கே.வி. திருவேங்கடம் - மருத்துவர் ஆசிரியர் சிறந்த மானுடன்

dr-k-v-thiruvenkadam

நண்பர்களாலும் மருத்துவத் துறையினராலும் ‘கே.வி.டி.’ என்று வாஞ்சையுடன் அழைக்கப்பட்ட டாக்டர் கே.வி. திருவேங்கடம் ஓர் அசாத்திய மருத்துவர். தியாகராய நகர் வாணி மகாலுக்கு எதிரே உள்ள அவருடைய வீடு, சென்னையில் இன்றும் பழமை மாறாமல் இருக்கும் வீடுகளில் ஒன்று. 85 வயதைக் கடந்துவிட்ட பிறகும்கூட, மருத்துவ சேவைக்காக அந்த வீட்டின் முன்னறையைத் திறந்தே வைத்திருந்தவர். நோய் குறித்து நோயாளரிடம் விரிவாகக் கேட்டறிவது, அறிகுறிகளில் கவனம் குவிப்பது, பிரச்சினையை முழுமையாக உள்வாங்கிக்கொண்டு மருந்துகளைப் பரிந்துரைப்பது போன்ற அம்சங்களில் முழுகவனம் செலுத்தியவர். அந்தக் கால மருத்துவர்களுக்கே உரிய இந்தத் தன்மைகளைத் தன் கடைசிக்காலம்வரை தீவிரமாகக் கடைப்பிடித்த கே.வி.டி. (94), அக்டோபர் 3 அன்று காலமானார்.

என் நெருங்கிய உறவினர் ஒருவருக்கு ‘ஆட்டோ இம்யூன் டிசீஸ்’ எனப்படும் கடுமையான அலர்ஜி நிலை இருந்தது. இது தொடர்பான மருத்துவ நிபுணரைத் தேடியபோது, எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனையின் முன்னாள் இயக்குநர் ரெக்ஸ் சற்குணம், டாக்டர் கே.வி.டி.யைப் பரிந்துரைத்தார். அரிதான அந்தப் பிரச்சினைக்கு கே.வி.டி. சிகிச்சை அளித்தார். ஒவ்வொரு நோயாளியைப் பரிசோதிப்பதற்கும் நீண்ட நேரம் எடுத்துக்கொள்வதை அப்போதுதான் பார்த்தேன். இன்றைக்குக் காலில் சக்கரம் கட்டிக்கொண்டு, நோயாளியிடம் செலவழிக்கும் ஒவ்வொரு நிமிடத்துக்கும் கட்டணம் வசூலிக்கும் மருத்துவர்களுக்கு மத்தியில் கே.வி.டி. ஒரு அபூர்வ மனிதர்.

மாணவர்கள் மொய்த்த ஆசிரியர்

ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரியில் அரசு தங்கப் பதக்கம், பனகல் ராஜா பதக்கம் ஆகியவற்றைப் பெற்று 1950-ல் மருத்துவப் படிப்பை கே.வி. திருவேங்கடம் நிறைவு செய்தார். நுரையீரல், ஆஸ்துமா -அலர்ஜி நோய்களுக்குச் சிகிச்சையளிக்க பிரிட்டனின் லண்டன், கார்டிப் ஆகிய ஊர்களில் இருந்த மருத்துவமனைகளில் 1958-59களில் பயிற்சிபெற்றார். எடின்பர்க்கில் உள்ள ராயல் மருத்துவக் கல்லூரியின் ஆய்வாளராகவும் செயல்பட்டார். நுரையீரல் நோய், ஆஸ்துமா, அலர்ஜி ஆகிய துறைகளில் நிபுணராகத் திரும்பினார்.

நாடு திரும்பிய பிறகு, தான் பயின்ற ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் இளம் வயதிலேயே பேராசிரியர் பணியில் சேர்ந்தார். சிறிது காலத்திலேயே அந்தக் கல்லூரியின் புகழ்பெற்ற பேராசிரியர்களுள் ஒருவராக அவர் மாறினார். கல்லூரியில் இளநிலை மருத்துவ மாணவர்களும் முதுநிலை மருத்துவ மாணவர்களும் எப்போதும் அவரைச் சூழ்ந்து குழுமியிருந்து கவனிப்பது வழக்கம்.

அதற்குக் காரணம் இருந்தது.துறையில் நிகழ்ந்த சமீபத்திய மாற்றங்களையும் உள்வாங்கிக்கொண்டு பிரதிபலிப்பவராக அவர் இருந்தார். வார நாள்கள் முழுக்க நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதிலும் பயிற்றுவிப்பதிலும் செலவிட்ட அவர், உலகின் முன்னணி மருத்துவ ஆய்விதழ்களை ஞாயிற்றுக் கிழமைகளில் படித்துத் தன் திறனை பட்டைதீட்டிக்கொண்டு செயல்பட்டார். ‘நடமாடும் மருத்துவக் கலைக்களஞ்சியம்’ என்று மருத்துவத் துறையினரால் போற்றப்பட்டார்.

“ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை தோறும் பொது சிகிச்சை வகுப்பு நடைபெறும். அதில் மிகவும் சிக்கலான நோயாளிகள் குறித்து கே.வி.டி.விளக்குவார். அதைக் கேட்பதற்கு மற்ற கல்லூரிகளில் இருந்தெல்லாம் மருத்துவ மாணவர்கள் வருவது வழக்கம்.

பேராசிரியர் பணியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையின் ஆலோசகராகச் செயல்பட்டார். அப்போதும் முதுநிலை மருத்துவ மாணவர்கள் அவரிடம் கற்றுக்கொள்வதற்குக் கிடைத்த வாய்ப்பை வீணாக்கவில்லை” என்று சென்னையைச் சேர்ந்த மூத்த இதயவியல் நிபுணர் ஜெ.எஸ்.என். மூர்த்தி குறிப்பிடுகிறார்.

குணப்படுத்தும் பேச்சு

பேராசிரியராக இருந்த காலத்தில் அரசு மருத்துவமனையின் அனைத்து உள்நோயாளிகளையும் பார்த்து ஆலோசனையும் சிகிச்சையும் அளிக்கக்கூடிய ஒரு சில மருத்துவர்களில் கே.வி.டி.யும்ஒருவராக இருந்தார். அப்படி நேரடியாக உள்நோயாளிகளை அவர் சந்தித்தபோது, மருத்துவ மாணவர்கள் குழு அவரைப் பின்தொடர்ந்து சென்று அனுபவரீதியாகவே பல நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டதும் நிகழ்ந்தது.

இன்றைக்கு அனைத்தையும் நவீன கருவிகளைக்கொண்டு மருத்துவர்கள் பரிசோதித்துவரும் நிலையில், அந்தக் கால மருத்துவர்களின் தனித்திறனாகத் திகழ்ந்த நேரடிப் பரிசோதனையில் கே.வி.டி.கவனம் செலுத்தினார். பரிசோதனை மூலமாகவே நோயைக் கணிப்பதில் வல்லவராக இருந்தார்.

அலோபதி மருத்துவத்தில் குறிப்பிட்ட நோய், குறிப்பிட்ட உறுப்புக்கு மட்டுமே பொதுவாக சிகிச்சையளிக்கப்படுகிறது. அதற்கு மாறாக ஒரு நோயாளியின் முழு உடலுக்கும் சிகிச்சையளிப்பதில் கவனம் செலுத்தியவர் கே.வி.டி. நோயாளி கூறும் அறிகுறிகளைப் பொறுமை யாகக் காதுகொடுத்துக் கேட்பது, அவர்களுடைய மன சஞ்சலங்களைப் போக்கும் என்ற நம்பிக்கையைக் கொண்டிருந்தார். அவரது விரிவான பரிசோதனை முறைகளைப் பார்த்து சில நோயாளிகள் ‘கற்கால மருத்துவர்’ என்று வேடிக்கை யாகக் குறிப்பிட்டதும் உண்டு. அதேநேரம் நோயாளியிடம் அறிகுறிகளைக் கேட்பதில் அவர் செலுத்தும் கவனத்தின் விளைவாக, அவரைச் சந்தித்துப் பேசினாலே பாதி குணமடைந்துவிட்டதாக நினைத்த நோயாளிகளும் உண்டு.

பிற்காலத்தில் சென்னை அரசு மருத்துவக் கல்லூரியிலும் பணியாற்றிய அவர், மொத்தம் 31 ஆண்டுகள் பேராசிரியராகப் பணிபுரிந்திருக்கிறார். இந்தக் காலத்தில் ஆயிரக்கணக்கான மருத்துவ மாணவர்கள் உருப்பெறக் காரணமாக இருந்தார். பிற்காலத்தில் ‘ஐ.சி.எம்.ஆர்.’ வழிகாட்டுதலுடன் தனது குழுவின் மூலமாக சிக்குன் குன்யா நோயை சென்னையில் கண்டறிந்தார். டைபாய்டு காய்ச்சலுக்கு எந்த மருந்தைக் கொடுக்க வேண்டும் என்பது குறித்தும் ஆராய்ச்சி நடத்தியிருக்கிறார்.

தேசிய அளவில் சிறந்த மருத்துவப் பேராசிரிய ருக்கான டாக்டர் பி.சி. ராய் விருது, பத்ம ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார். இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் (I.C.M.R.) அறிவியல் ஆலோசனைக் குழுவிலும், எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கல்விக் குழுவிலும் உறுப்பினராகச் செயல்பட்டி ருக்கிறார். இத்தனை நெருக்கடியான பணிகளுக்கு மத்தியிலும், தன் மற்றொரு காதலான ஆங்கில இலக்கியத்திலும் புலமைமிக்கவராக கே.வி.டி. திகழ்ந்தார்.

குறையாத கரிசனம்

“மருத்துவத் துறையை அதற்கான உண்மையான உணர்வுடனும் கண்ணோட்டத்துடனும் அணுகியவர் டாக்டர் கே.வி.திருவேங்கடம். நோயாளி களை மையப்படுத்திய அணுகுமுறை, ஏழைகள் மீதான கரிசனம், மருத்துவ நெறிமுறைகளிலிருந்து சற்றும் வழுவாமை, தன் அறிவை இளைஞர்களுக்குக் கடத்துதல் ஆகிய பண்புகளை அவர் தீவிர மாகக் கடைப்பிடித்தார். அவர் ஒரு சிறந்த மருத்துவர், ஆராய்ச்சியாளர், பேராசிரியர், சிறந்த மானுடன்” என்று ராமச்சந்திரா மருத்துவப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் வி. குருமூர்த்தி ஒரு கட்டுரையில் சிலாகித்துக் கூறியிருக்கிறார்.

நோயாளிகளிடம் எந்த வேற்றுமையும் பாராமல் செயல்பட்ட கே.வி.டி., மருத்துவ நெறிமுறைகளை எதற்காகவும் விட்டுக்கொடுக்காதவர். தன்னை நாடிவந்த நோயாளிகளில் பலர் போதிய ஊட்டச்சத்து இல்லாமல் வாடுவதைப் பற்றிக் கவலைப்பட்ட மருத்துவரும்கூட. ‘ஏழை நோயாளிகளுக்கு அன்புடன் சிகிச்சை அளிப்பதுதான் மருத்துவம்’ என்கிற கொள்கையைக் கடைசிவரை கடைப்பிடித்துவந்தார். காலம் அவரைப் போற்றுவதற்கு, இந்த ஒரு அம்சம் மட்டுமே போதும்.

கட்டுரையாளர் தொடர்புக்கு: valliappan.k@hindutamil.co.in


அஞ்சலிடாக்டர் கே.வி. திருவேங்கடம்மருத்துவர்ஆசிரியர்சிறந்த மானுடன்மருத்துவத் துறைமாணவர்கள்ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரிதங்கப் பதக்கம்பனகல் ராஜா பதக்கம்குணப்படுத்தும் பேச்சுகரிசனம்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author