முதுமை: நேற்று இன்று நாளை

முதுமை: நேற்று இன்று நாளை
Updated on
2 min read

முதுமை சிறப்பிக்கப்பட வேண்டும், முதியோரின் நலன் காக்கப்பட வேண்டும் எனும் நோக்கில் ஆண்டுதோறும் அக்டோபர் 1 அன்று, உலக முதியோர் நாள் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டின் முதியோர் நாளைச் சிறப்பிக்கும் விதமாக, கடந்த வியாழன் மாலை 5 மணிக்கு ‘முதியோரின் நிலை - நேற்று இன்று நாளை’ எனும் இணையவழிக் கருத்தரங்கை ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் நடத்தியது. துளசி பார்மசிஸ், ஆஸியானா சுபம் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த நிகழ்ச்சியை வழங்கின. மூத்த முதியோர் நல மருத்துவரும், ‘முதுமை எனும் பூங்காற்று’ இதழின் சிறப்பாசிரியருமான பத்ம வ.செ. நடராஜன் சிறப்புரை ஆற்றினார். உரையின் முக்கியப் பகுதிகள்:

நீடிக்கும் ஆயுள்

அந்தக் காலத்தில் காசநோய், சளி, இருமல் போன்ற தொற்றுநோய்கள், சீதபேதி, தொழுநோய், சொரி, படை, சிரங்கு உள்ளிட்ட சரும நோய்கள் போன்றவை மனிதர்களைக் காவு வாங்கும் அளவுக்குப் பெரும் நோய்களாக இருந்தன. இன்று இந்த நோய்கள் அனைத்துக்கும் மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டன. அறிவியலின் வளர்ச்சியாலும், மருத்துவத் துறையில் ஏற்பட்ட முன்னேற்றத்தாலும்இன்று சிகிச்சையளிக்க முடியாத நோய்களே இல்லை எனும் நிலை நிலவுகிறது.

இன்றைய காலகட்டத்தின் முக்கிய நோய்களான மாரடைப்பு, நீரிழிவு,உயர் ரத்த அழுத்தம் போன்றவற்றுக்கு எளிதில் சிகிச்சை கிடைக்கிறது. மாரடைப்பு என்றால் மரணம் என்றிருந்த நிலை மாறி, எளிய அறுவை சிகிச்சை மூலம் ஆயுள்காலம் நீட்டிக்கப்படுகிறது. சில தடுப்பூசிகளும் மனிதரின் ஆயுள்காலத்தைப் பெருமளவு நீட்டித்துள்ளன. எடுத்துக்காட்டாக, நிமோனியா சளிக் காய்ச்சலுக்குப் போடப்படும் தடுப்பூசி. இப்படியாக மனிதரின் ஆயுளை அதிகரிக்கும் முயற்சிகள், இன்று தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

நிம்மதியே முக்கியம்

உலக அளவில் 50 ஆண்டுகளுக்கும் குறைவாக இருந்த ஒருவரின் சராசரி ஆயுள்காலம் இன்று 75 ஆண்டுகளாக உயர்ந்துள்ளது. இது விரைவில் 85 ஆண்டுகளாக உயரும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. 1950-ல் 25% ஆக இருந்த நம் நாட்டின் இறப்பு விகிதம், 2023-ல் 7.7% ஆகக் குறையும் எனப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

பெரும்பாலான முதியவர்களுக்கு, நீண்ட காலம் வாழ்வதைவிட, இறக்கும்வரை ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்பதே ஆசையாக உள்ளது. அன்றாடம் ஏராளமான பிரச்சினைகளை அவர்கள் எதிர்கொள்கிறார்கள். குடும்பத்தில் அவர்கள் சந்திக்கும் அவமானங்களும் அவர்கள் மீது பிள்ளைகள் ஏவும் வன்முறைகளும் துயர் மிகுந்தவை.

உணவும் உடற்பயிற்சியும்

முதியவர்கள் தங்களுடைய உடலையும் நலனையும் நல்ல முறையில் பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும். ஆரோக்கியமான உணவு, எளிய உடற்பயிற்சி, நல்ல உறக்கம் போன்றவை முதுமைக் காலத்தை மகிழ்ச்சியானதாக மாற்றும். காலையில் நல்ல உணவு, மதியம் மிதமான உணவு, இரவில் குறைவான உணவு என்கிற வகையில் உணவருந்துவது நல்லது. புரதம் நிறைந்த உணவைக் கட்டாயம் சாப்பிட வேண்டும். வெள்ளைச் சர்க்கரைக்குப் பதில் நாட்டுச் சர்க்கரையைப் பயன்படுத்தலாம்.

உடற்பயிற்சியைப் பொறுத்தவரை, வேகமான நடைப்பயிற்சி நல்லது. நடக்க முடியவில்லை என்றால், நாற்காலியில் அமர்ந்தவாறே கையையும் காலையும் நீட்டி மடக்கி உடற்பயிற்சி செய்யலாம். முதுமையின் நலனுக்கு விட்டமின் டி அவசியம். வெயில் விட்டமின் டியின் ஊற்று என்பதால், வெயிலில் உடற்பயிற்சி செய்வது நல்லது, உடற்பயிற்சி செய்ய முடியவில்லை என்றால், வெயிலில் சும்மா உட்கார்ந்துகூட இருக்கலாம்.

தொகுப்பு: நிஷா

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in