

என்னுடைய வீட்டுக்கு அருகில் வசித்த முதியவருக்கு 70 வயதுக்கு மேல் இருக்கும். ஒரு தனியார் நிறுவனத்தில் உயர் பதவி வகித்து ஓய்வு பெற்றவர், அன்பானவர்.
இரண்டு மாதங்களுக்கு முன்னர், முழுமையான ஊரடங்கு நடைமுறையிலிருந்தபோது, முகக் கவசமின்றி அவர் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்ததைப் பார்த்தேன். “இந்தச் சூழ்நிலையில் நீங்கள் வெளியில் வருவது, அதுவும் முகக் கவசமின்றி உலாவுவது நல்லது இல்லையே” என்று கூறினேன்.
“வீட்டிலேயே எவ்வளவு நேரம்தான் சும்மா இருப்பது? வெளியில் நடக்கவில்லை என்றால், சுகர் ஏறிவிடுகிறது. தலைச்சுற்றல் வருகிறது. எனக்கு பிரஷர், கொலஸ்ட்ரால், ஆஸ்துமா, தைராய்டு ஆகியவற்றுடன் இதயத்தில் இரண்டு, மூன்று அடைப்புகள்கூட உள்ளன. கரோனாவுக்குப் பயந்து வீட்டுக்குள்ளேயே இருந்தால், என்னுடைய உடல்நிலை இன்னும் மோசமாகிவிடும்” என்று சிரித்தபடியே கூறினார்.
“எங்களைவிட நீங்கள்தான் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மாஸ்க் அணிந்தாவது வெளியே வர முயலுங்கள்” என்று சொன்னேன். “அந்தக் கருமத்தைப் போட்டுக்கிட்டு எப்படி நடக்க முடியும். மூச்சு வாங்குதே” என்றவர், “மாஸ்க் அணிவது நுரையீரலைப் பாதிக்கும். யாருக்கும் அது புரிவதில்லை. முடிந்தால் நீங்களும் மாஸ்க் அணியாதீர்கள்” என்றார்.
ஜாம் ஜாமென்று திருமணம்
மூன்று வாரங்களுக்கு முன்னர், என்னுடைய வீட்டுக்கு குடும்பத்துடன் அவர் வந்திருந்தார். தன் மகளுக்குத் திருமணம் என்று அழைப்பிதழ் கொடுத்தார். சேலம் அருகிலிருக்கும் ஒரு சிற்றூரில் திருமணம் நடக்கவிருப்பதாகக் கூறினார். இந்தச் சூழ்நிலையில் இப்படி ஊரைக் கூட்டித் திருமணம் நடத்துவது அவசியம்தானா என்ற கேள்வி எனக்கு எழுந்தபோதும், அதை அவரிடம் கேட்காமல் அமைதியாக இருந்துவிட்டேன்.
20 நாள்களுக்கு முன்னர் அலுவலகத்துக்குச் செல்லும் போது, அவருடைய வீட்டுவாசலில் அவரைப் பார்த்தேன். “கல்யாணத்தை ஜாம் ஜாமென்று நடத்த வேண்டும் இல்லையா. அதுதான் இப்போதே கிளம்பிவிட்டோம்” என்றார்.
500 பேருக்கு மேல் பங்கேற்பு
கரோனா காலத்தில், திருமணத்தை எளிமையாக நடத்துவதன் அவசியத்தையும், இல்லையென்றால் நேரும் ஆபத்துகளையும் விளக்கினேன். “கரோனாவுக்கு எல்லாம் பயந்தால், வாழ முடியாது. நமக்கு இருப்பது ஒரு பொண்ணுதான். அவ கல்யாணத்தை, கரோனாவுக்குப் பயந்தெல்லாம் எளிமையாக நடத்த முடியாது. சம்பந்தி வீட்டிலும் பேசிவிட்டேன், குறைந்தது 500 பேராவது கல்யாணத்துக்கு வருவார்கள்” என்று பெருமிதத்துடன் கூறினார். 50 பேருக்கு மேல், திருமண நிகழ்வில் கூடக் கூடாது என்ற அரசு அறிவுறுத்தலை அவரிடம் சுட்டிக்காட்டினேன். அவரோ, அதிகார மட்டத்தில் தனக்கு இருக்கும் நண்பர்களைப் பற்றியும் தனது செல்வாக்கு குறித்தும் சொல்லிச் சிரித்தார்.
கரோனா தொற்று
திருமணம் முடிந்து பத்து நாள்களுக்கு முன்னர் அவருடைய வீட்டில் ஆள்கள் தென்பட்டார்கள். மறுநாள் காலையில், அவருடைய மகனிடமிருந்து அழைப்பு வந்தது. தன்னுடைய அப்பாவுக்கு கரோனா பாசிட்டிவ் என்று வந்திருப்பதாகவும், வடசென்னையிலிருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருப்பதாகவும் கூறினார். மறுநாள் காலையில் அவரை அழைத்து விசாரித்தபோது, அப்பா அபாயகரமான கட்டத்தில் இருக்கிறார் என்றார். அன்று மாலை அவரிடமிருந்து வந்த தொலைபேசி அழைப்பு, அந்தப் பெரியவரின் மரணத்தை அறிவிப்பதாக இருந்தது.
உடனடியாக அவருடைய வீட்டுக்குச் சென்றேன். அவருடைய மகள் கதவைத் திறந்தார். அந்த முதியவரின் மனைவி, தன்னிலை மறந்து தரையில் படுத்து அழுதுகொண்டிருந்தது என் கண்ணில்பட்டது. உள்ளே செல்ல நான் முயன்றபோது, அவருடைய மகள் என்னை வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை.
“வெளியிலிருந்தே பேசுங்கள். உள்ளே வருவது நல்லதல்ல. எங்களுடைய கரோனா பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை” என்றார். இந்த எச்சரிக்கையுணர்வும் பொறுப்புணர்வும், மறைந்த அந்தப் பெரியவருக்கும் இருந்திருந்தால், இந்தத் துயரம் நிகழ்ந்திருக்காதே என எண்ணும்போதே என் கண்கள் பனித்தன.
தொடர்புக்கு: nalamvaazha@hindutamil.co.in