Published : 26 Sep 2020 09:01 AM
Last Updated : 26 Sep 2020 09:01 AM

செப். 29 உலக இதய நாள் - கரோனா காலம்: இதயத்துக்கும் கவனம் தேவை

டாக்டர் செந்தில்குமார் நல்லுசாமி

உலகை ஆட்டிப்படைத்துவரும் கரோனா வைரஸ், நுரையீரலைத் தாக்கிச் செயலிழக்கச் செய்யும் அதேநேரம் இதயம், சிறுநீரகம் போன்ற உள்ளுறுப்புகளையும் பாதிக்கச் சாத்தியம் உண்டு.

இக்கட்டான இந்த நேரத்தில் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது அவசியம். புற்றுநோய், காசநோய், எச்.ஐ.வி. போன்ற நோய்களைவிட இதய நோய் பாதிப்பால் ஏற்படும் மரணங்கள் உலகில் அதிகம். ஆண்டுதோறும் இதய நோய்களால் 1.70 கோடிப் பேர் உயிரிழக்கின்றனர். அடுத்த பத்து ஆண்டுகளில் இது 2.30 கோடியாக உயரும் என்கின்றன ஆய்வு முடிவுகள்.

புகைப்பிடித்தல், மதுப்பழக்கம், ஆரோக்கிய மற்ற உணவு, உடல் உழைப்பின்மை போன்றவற்றைத் தவிர்த்தாலே இதயக் கோளாறுகளால் ஏற்படும் 80 சதவீத மரணங்களைத் தவிர்க்க முடியும் என்கிறது உலக இதயக் கூட்டமைப்பு.

ரத்தக் கட்டிகள்

கரோனா வைரஸால் இதய நோய் பாதிப்புக்கு ஆளானவர்கள் மூன்று வகைகளில் பாதிக்கப்படலாம். முதலாவதாக, ரத்தக் கட்டி (Hypercoagulable state) ஏற்படச் சாத்தியம் அதிகம்.

இந்த ரத்தக் கட்டிகள் இதயத்துக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் ஏற்பட்டால் மாரடைப்பும், மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டால் பக்க வாதமும் ஏற்படலாம். அதேபோல், நுரையீரலில் ஏற்பட்டால் Pulmonary embolism ஏற்படும். அதாவது காலில் ரத்தக்கட்டிகள் ஏற்பட்டு, அந்தக் கட்டிகள் உடைந்து நுரையீரலுக்குச் செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பை ஏற்படுத்தும். இதனால், மூச்சுத்திணறல் ஏற்படும்.

இரண்டாவதாக, இதயத் தசைகளின் ‘பம்பிங்’ திறன் குறைவாக இருப்பவர்களுக்கு கரோனா தொற்று ஏற்படுவதற்குச் சாத்தியம் அதிகம். அதனால், பின்விளைவுகளும் ஏற்படும். அவற்றிலிருந்து அவர்கள் மீள்வதற்கான நாள் அதிகமாகும்.

மூன்றாவதாக, சீரற்ற இதயத் துடிப்பு (Atrial fibrillation) ஏற்படவும் சாத்தியம் உண்டு. அத்துடன், இதய நோய் இல்லாதவர்களுக்குக் கூட கரோனா வைரஸால் இதயத் தசைகள் பாதிக்கப்பட்டு, பம்பிங் திறன் குறையக்கூடும். எனவே, கரோனா தொற்று ஏற்படாமல் இருக்க அரசு கூறும் வழிகாட்டு நெறிமுறைகளைத் தீவிரமாகப் பின்பற்றுவது அவசியம்.

ஐந்தும் முக்கியம்

இதய நோய் ஏற்படாமல் இருக்க உணவுக் கட்டுப்பாடு, முறையான உடற்பயிற்சி, ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள், நல்ல எண்ணம், நல்ல சுற்றுச்சூழல் ஆகிய ஐந்தும் முக்கியம்.

நம் உடல் உறுப்புகளில் முக்கியமானது இதயம். மூளைச்சாவு அடைந்தவர்களுக்குக் கூட இதயம் வேலை செய்து கொண்டிருக்கும். எனவே, இந்த இதயத்தைப் பத்திரமாகப் பாதுகாத்துக்கொள்ள வேண்டியது நம் கடமை.

கட்டுரையாளர், இதய சிகிச்சை நிபுணர் தொடர்புக்கு: drnsenthilkumar.nallusamy@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x