Published : 19 Sep 2020 09:58 AM
Last Updated : 19 Sep 2020 09:58 AM

தனியார் மருத்துவமனைகள், சமூகப் புறக்கணிப்பு கரோனா நோயாளிகளை மிரட்டும் இரட்டை ஆபத்துகள்

மகிழ்

ஊரில் குடும்ப நிகழ்வு ஒன்றுக்குச் சென்றுவிட்டு திருச்சி மாவட்டத்துக்குத் திரும்பிய நாளில் காய்ச்சல், உடல்வலி, தலைவலி போன்றவை தொடங்கியதாகத் தெரிவித்தார் அம்மா. அதேநேரம் கோவிட்-19-க்கான அறிகுறிகளாகச் சுட்டப்படுபவை அவருக்குத் திட்டவட்டமாகத் தெரியவில்லை. சமீபத்திய வாரங்களாகப் பல மாவட்டங்களில் வேறு சில காய்ச்சல் வகைகளும் பரவலாகியிருக்கின்றன. கோவிட்-19 உடன் இவற்றுக்கான அறிகுறிகளும் பலரால் குழப்பிக்கொள்ளப்படுகின்றன.

ஐந்து நாள்களாக விடாமல் காய்ச்சல் அடித்தது. அத்துடன் லேசான மூச்சுத்திணறலும் இருந்தது சந்தேகத்தை அதிகரித்தது. குடும்ப மருத்துவரைப் பார்த்தோம். உடனடியாக சி.டி. ஸ்கேன், ரத்தப் பரிசோதனை, இ.சி.ஜி. போன்றவற்றை எடுக்கச் சொன்னார். கோவிட்-19 தாக்கியிருந்தால், நுரையீரலைத்தான் அது பெரும்பாலும் பாதிக்கும். நுரையீரல் கடுமை யாகப் பாதிக்கப்படுவதால்தான், கோவிட்-19 நோயில் பலரும் மூச்சுவிடச் சிரமப்படுகிறார்கள், திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்தும் போகிறார்கள். மருத்துவமனைகளில் வென்டிலேட்டர், ஆக்சிஜன் விநியோகம் போன்றவை மூலம் அவர்களைக் காப்பாற்ற முயல்கிறார்கள்.

சி.டி. ஸ்கேன் முடிவு வந்தது. அம்மாவுக்கு நுரையீரல் எந்த வகையிலும் பாதிக்கப்பட்டி ருக்கவில்லை என்றார் குடும்ப மருத்துவர். மற்றொரு மூத்த மருத்துவருடன் இது குறித்து ஆலோசித்தபோது, கோவிட்-19 நோய்க்கான எந்த அறிகுறியும் அந்த ஸ்கேனில் தென்படவில்லை என்றார். சற்றே நிம்மதியாக இருந்தது.

கூடுதல் பரிசோதனைகள்

ஏழாம் நாளிலும் காய்ச்சல், மூச்சுத்திணறலி லிருந்து அம்மா முழுமையாக விடுபடவில்லை. இரவில் ஏதேனும் சிக்கல் வந்துவிடக் கூடாதே என்று நினைத்து, மற்றொரு மருத்துவர் மூலம் கோவிட்-19 சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அங்கு ‘சி.ஆர்.பி’(சி ரியாக்டிவ் புரோட்டின்) எனப்படும் துரிதப் பரிசோதனை மூலம் கோவிட்-19 இருக்கிறதா என்பதைக் கண்டறிய முதல்கட்ட பரிசோதனை நடத்தப்பட்டது. அந்தப் பரிசோதனையில் அளவீடு இயல்புக்கு மாறாக அதிகரித்திருந்தது. அந்த மருத்துவமனையின் மருத்துவர்கள் கோவிட்-19 இருக்கிறதா, இல்லையா என்பதை உறுதிப்படுத்தவில்லை. அதேநேரம் உங்களுக்கு எந்த ஆபத்தான அறிகுறிகளும் இல்லை. வீட்டிலேயே நீங்கள் ஓய்வெடுக்கலாம் என்று கூறி அம்மாவை அனுப்பிவைத்தார்கள்.

சி.ஆர்.பி. பரிசோதனை முடிவு குறித்து, முன்பு ஆலோசித்த மூத்த மருத்துவரிடம் மீண்டும் காட்டியபோது, அளவீடுகள் கோவிட்-19 பாதிப்புபோல் இல்லை என்றார். உங்கள் அம்மாவுக்கு சி.ஆர்.பி மற்றும் சி.டி. ஸ்கேன் பரிசோதனை முடிவுகள் இரண்டும் எதிரெதிராக இருக்கின்றன. அதனால் இது கோவிட்-19 ஆக இருக்க சாத்தியமில்லை அதேநேரம் வேறு தொற்றாக இருக்கலாம் எனக் கணித்தார்.

கோவிட்-19 இல்லை என்று மீண்டும் உறுதிப்பட்டதால் நிம்மதியடைந்தோம். அதற்கு அடுத்த நாள் நெஞ்சுக்குழியில் வலிக்கிறது என்று மாலை நேரத்தில் அம்மா கூறினார். அடுத்த நாள் காலை இதய சிகிச்சை நிபுணர் ஒருவரைப் பார்த்தோம். மூன்று நாள்களுக்கு முன்பாகவே இ.சி.ஜி. பார்க்கப்பட்டிருந்த நிலையில், அன்றும் மருத்துவர்கள் பார்த்துவிட்டுப் பெரிய பிரச்சினை ஏதுமில்லை. கோவிட்-19 இருப்பதற்கான அறிகுறிகள் இல்லை என்றார்கள். அதேநேரம் நீங்கள் வேறொரு மருத்துவமனையில் கோவிட்-19 ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை (மூக்கு-வாய்க்குள் ஸ்வாப் குச்சியால் மாதிரி எடுப்பது) செய்வது நல்லது என்றார்கள். அம்மாவுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்ய வேறொரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம்.

மறைமுக மிரட்டல்

திருச்சி மாநகரின் மையப்பகுதியில் உள்ள சிறு மருத்துவமனை அது. அங்கே பழைய பரிசோதனை முடிவுகள் எல்லாவற்றையும் வாங்கிப் பார்த்தார்கள். பிறகு, “உங்களுக்குக் கோவிட்-19 இருப்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. கோவிட்-19 நோயைப் பொறுத்தவரை இரண்டே நாளில் அறிகுறிகள் எல்லாம் மாறிவிடும். ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்துவிடலாம். ஆனால், அதற்கு முதலில் நீங்கள் உள்நோயாளியாக (இன்பேஷன்டாக) சேர வேண்டும்” என்றார்கள். சரி, உள்நோயாளியாகச் சேர்வதற்கான நடைமுறைகள் என்ன என்று விசாரித்தோம்.

“ஒரு நாளுக்கு அறை வாடகை உள்ளிட்ட மருத்துவச் செலவு 30,000 ரூபாய், ஒரு நாளுக்கான மருந்துகள் 20,000 ரூபாய். ஐந்து நாள்கள் முதல் கட்டமாகத் தங்க வேண்டிவரும். அதற்கு மொத்தமாக மருத்துவச் செலவு ஒன்றரை லட்சம் ரூபாய், மருந்துச் செலவு ஒரு லட்சம் ரூபாய். மொத்தம் இரண்டரை லட்சம் ரூபாய் வருகிறது. இதில் இரண்டு லட்சம் ரூபாயை இப்போது நீங்கள் கட்டினால், உள்நோயாளியாக சேர்ந்துகொள்ளலாம். ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனையையும் செய்துவிடலாம்” என்றார்கள்.

எங்களுக்குத் தூக்கிவாரிப் போட்டது. கோவிட்-19 இருக்கிறதா, இல்லையா என்பது உறுதிசெய்யப்படவில்லை. இதுவரை மேற்கொண்ட பரிசோதனைகள் கோவிட்-19 இருப்பதற்கான அறிகுறிகளைக் காட்டவில்லை, எந்த மருத்துவரும் அப்படிச் சொல்லவில்லை. ஆனால், இந்த மருத்துவமனையிலோ ‘காசு கட்டுங்கள், எல்லாம் செய்துவிடலாம்’ என்று மறைமுகமாக மிரட்டியது அதிர்ச்சி தந்தது. அரசு நிர்ணயித்த கட்டணம், அவசரகால உதவி போன்ற எதைப் பற்றியும் அந்த மருத்துவமனை நிர்வாகம் கருத்தில்கொள்ளவில்லை.

கண்டுகொள்ளப்படாத முறைகேடுகள்

ஒருவேளை அம்மாவுக்கு கோவிட்-19 இல்லையென்று முடிவு வந்தால் என்ன செய்வார்கள்? திருச்சி உறையூரில் அரசு அங்கீகரித்த தனியார் பரிசோதனை மையம் ஒன்றில், பரிசோதனை மாதிரி எடுத்த அனைவருக்கும் கோவிட்-19 இருப்பதாக முடிவு திரித்துக் கூறப்பட்டது. தனியார் மருத்துவமனைகளும் அந்தப் பரிசோதனை மையமும் கூட்டுச்சேர்ந்து இதுபோன்ற செயல்பாட்டில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது. அந்தப் பரிசோதனை மையம், கோவிட்-19 பரிசோதனை நடத்துவதற்கான அனுமதியை மாவட்ட ஆட்சியர் சமீபத்தில்தான் ரத்து செய்திருந்தார்.

ஆனால், எங்கள் அம்மாவிடம் நடந்து கொண்டதுபோல், தனியார் மருத்துவ மனைகள் மறைமுக மிரட்டலில் ஈடுபட்டது கண்டுகொள்ளப்படுவதில்லை. வேறு பல மருத்துவமனைகளிலும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்வீர்களா என்று விசாரித்த போது, புறநோயாளிகளுக்குச் செய்வதில்லை. உள்நோயாளிக்கு மட்டும்தான் செய்வோம் என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்கள். உள்நோயாளி என்றால் முன்பணம் கட்டிச் சேர்ந்தாக வேண்டும் என்பதே நிலைமை.

திருச்சி மாவட்டத்தில் இந்த நிலை என்றால், இன்னும் சில ஊர்களில் தனியார் மருத்துவமனைகள் விடுதிகளுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு கோவிட்-19 நோயாளிகளைச் சிகிச்சைக்குச் சேர்த்துக்கொள்கின்றன. ஒவ்வொருவருக்கும் தனித்தனி அறை கொடுத்து ஓய்வெடுக்கச் சொல்கிறார்கள். வேளா வேளைக்கு உணவும் பொதுவாகப் பரிந்துரைக்கப்பட்ட மருந்தும் வழங்கப்படுகின்றன. மற்றபடி அவசரத் தேவை என்றால் மட்டுமே மருத்துவர் வருவார். நோயாளி இயல்புநிலைக்குத் திரும்பிவிட்டால், வீட்டுக்கு அனுப்பப்படுகிறார். இதற்கு ஒரு நாளுக்கு 10,000 ரூபாய்க்குக் குறையாமல் வசூலிக்கப்படுகிறது.

சமூகப் புறக்கணிப்பு நோய்

கோவிட்-19-க்கான அறிகுறிகள் இல்லை என்று பல மருத்துவர்கள் கூறிவிட்டாலும், அம்மா தொடர்ந்து வேதனையை அனுபவிப்பதைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அரசு காய்ச்சல் பரிசோதனை முகாம்களிலேயே பரிசோதனை செய்துகொண்டுவிட்டால் என்ன என்று தோன்றியது. குறைந்தது கோவிட்-19 இல்லை என்ற தெளிவு கிடைத்துவிடும், பயப்படாமல் வேறு சிகிச்சை பெற மருத்துவமனைக்குச் செல்லலாமே என்று தோன்றியது. எங்கள் பகுதியில் நடந்த காய்ச்சல் முகாமுக்குச் சென்றோம். பெரிய கூட்டமில்லை. அங்கே இருந்த அரசு ஊழியர்கள் பயப்படாமல் பரிசோதனை செய்துகொள்ளுங்கள் என்று ஆதரவாகப் பேசினார்கள். ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைக்குப் பிறகு, சத்து மாத்திரைகளையும் வழங்கினார்கள். ஒரு நாள் இடைவெளியில் அம்மாவுக்கு நெகட்டிவ் என்ற தகவலும் வந்தது.

ஒரு புறம் கோவிட்-19 காரணமாக மக்கள், நோயாளிகள், மருத்துவர்கள், முன்களப் பணியாளர்கள் என யாராக இருந்தாலும் இயல்பாக நடமாடவோ செயல்படவோ முடியவில்லை. கோவிட்-19 காரணமாக ஏற்படும் மரணங்கள் அதிக எண்ணிக்கையில் இல்லையென்ற போதிலும், எளிதில் தொற்றிக்கொள்ளும் நோயாக இருப்பதால் அனைவருக்குமே பயம் இருக்கிறது. இந்தப் பயம் சுகாதாரமான பழக்கவழக்கங்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், அறிவியல்பூர்வ அணுகுமுறை போன்றவற்றை நோக்கி நம்மை நகர்த்தியிருக்க வேண்டும். ஆனால், நடைமுறையில் பலரும் இந்தத் தன்மைகளை நோக்கி நகர்த்தப்படுவதில்லை. அதீத பயம் ஒருபுறம், மற்றொருபுறம் யாருக்குக் கோவிட்-19 வந்தாலும் அவர்களைச் சமூகப் புறக்கணிப்பு செய்யும் மனோபாவம் பரவலாகக் காணப்படுகிறது.

இந்த அம்சங்கள் கோவிட்-19 பரிசோதனை செய்துகொள்ளும் ஆர்வத்தைக் குறைக்கின்றன, அப்படியே பரிசோதனை செய்துகொண்டு பாசிட்டிவ் என்று முடிவு வந்தால் அதை ஏற்றுக்கொள்ள முடியாத மனநிலையை நோக்கியும் இட்டுச்செல்கின்றன. ஒருவேளை பாசிட்டிவ் என்று முடிவு வந்துவிட்டால் அக்கம்பக்கத்தினர், நண்பர்கள் நம்மைப் புறக்கணித்துவிடுவார்களோ என்ற அச்சம் மக்களைப் பிடித்தாட்டுகிறது. ஒரு புறம் மருத்துவமனைகள் ஏற்படுத்தும் பொருளாதார நெருக்கடி, மற்றொருபுறம் நெருக்க மானவர்களின் புறக்கணிப்புக்கு ஆளாகாமல் இருக்க வேண்டும் என்ற இரட்டை நெருக்கடியில் தமிழக மக்கள் அவதிப்படுகிறார்கள். நிதர்சனத்தில் நோய்க்கு எதிராகப் போராடுவதற்குப் பதிலாக, மருத்துவமனை ஏற்படுத்தும் நெருக்கடிகளுக்கு எதிராகவும், மக்களின் மூடநம்பிக்கை-சமூகப் புறக்கணிப்புக்கு எதிராகவுமே தமிழகம் மோசமாகப் போராடிக்கொண்டிருக்கிறது.

தொடர்புக்கு: nalamvaazha@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x