Published : 12 Sep 2020 09:08 AM
Last Updated : 12 Sep 2020 09:08 AM

ஆர்.எல்.எஃப்.-100: கரோனா நோயாளிகளின் உயிர் காக்குமா?

டாக்டர் கு. கணேசன்

உலக மக்களின் கழுத்தை நெருக்கிக்கொண்டிருக்கும் கரோனாவின் கோரப்பிடியிலிருந்து விடுபட நல்லதொரு மருந்தும் தடுப்பூசியும் விரைவில் வராதா என்று ஏங்காதவர்கள் இல்லை. கரோனா தொற்றைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் புதிய வழிகளைக் கண்டுபிடிக்க உலகம் முழுவதிலும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் இரவு, பகல் பாராமல் போராடிக்கொண்டிருக்கின்றனர்.

அதன் பலனாக கரோனாவுக்கான மருந்துகள், தடுப்பூசி ஆய்வுகள் குறித்தும் ஒவ்வொரு நாளும் புதுப்புது தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன. இந்த வரிசையில் அண்மையில் சேர்ந்துள்ள மருந்து, ‘ஆர்.எல்.எஃப்.-100’ (RLF - 100). கடைசிகட்ட கரோனா நோயாளிகளுக்கு உயிர் காக்கும் மருந்தாக ஆய்வுரீதியில் இதைப் பயன்படுத்தலாம் என்று அமெரிக்கா வின் FDA அனுமதி அளித்துள்ளது.

‘ஆர்.எல்.எஃப்.’ என்பது என்ன?

அமெரிக்காவில் உள்ள ‘ரிலீஃப்’ (Relief) மருந்து நிறுவனம் காப்புரிமை பெற்றிருக்கும் பன்முகப் புரதக்கூறு (Polypeptide) அடங்கிய மருந்து ‘ஆர்.எல்.எஃப்.’. இந்த நிறுவனம் கடந்த 40 ஆண்டுகளாக நாள்பட்ட சுவாச நோய்களுக்குப் புரதங்களிலிருந்து புதிய மருந்தைக் கண்டுபிடிப்பதில் முனைப்புக்காட்டிவருகிறது.

அமெரிக்க மருத்துவர் சாமி செய்ட் (Sami Said) 1970-ல் ‘ஆபத்தான சுவாச நோய்களைப் புரதங்கள் வழியாகக் குணப்படுத்த முடியும்’ என்ற கோட்பாட்டை அறிமுகப்படுத்தினார். இந்த அடிப்படையில் அவர் ‘வி.ஐ.பி.’ (Vasoactive Intestinal Polypeptide - VIP) எனும் புரதத்தைக் கண்டுபிடித்தார். தமிழில் சொல்ல வேண்டுமானால், ‘நாளச்செயலூக்கக் குடல் பன்முகப்புரதம்’. முதன்முதலில் இந்தப் புரதத்தை அவர் குடல் செல்களில் கண்டறிந்ததால் இந்தப் பெயரைச் சூட்டினார். அதற்குப் பிறகு உடலின் பல பகுதிகளில் இது இருப்பது கண்டறியப்பட்டது. முக்கியமாக, நுரையீரல் திசுக்களில் இது அதிகமாக இருக்கிறது.

உயிரினங்களிலும் மனிதரிடமும் மேற்கொள்ளப்பட்ட தொடர் ஆராய்ச்சிகளில் இந்தப் புரதத்துக்குப் பலதரப்பட்ட மருத்துவக் குணங்கள் இருப்பது தெரியவந்தது. முக்கியமாக, பிரேசிலில் நடந்த ஓர் ஆய்வில் கரோனா வைரஸ் நுரையீரல் செல்களிலும் மோனோசைட்டுகள் எனும் தடுப்பாற்றல் செல்களிலும் கோடி கோடியாகப் படியாக்கம் செய்து வளர்வதை இது தடுக்கிறது என்பது உறுதியானது. மேலும், இது உடலில் தோன்றும் அழற்சி நிலைகளைக் கட்டுப்படுத்துகிறது; நுரையீரல் திசுக்களுக்குத் திடீர் சேதம் உண்டானால் சீராக்குகிறது. ‘சைட்டோகைன் ஸ்டார்ம்’ (Cytokine storm) எனும் தடுப்பு மண்டல மிகைச் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தி, உயிர் ஆபத்தைத் தடுக்கிறது.

இதையொட்டி, ‘ரிலீஃப்’ நிறுவனம் ‘நியூரோ ஆர்.எக்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து ஆர்.எல்.எஃப். - 100 மருந்தை ‘அவிப்டாடில்’ (Aviptadil) எனும் விற்பனைப் பெயரில் செயற்கை யாகத் தயாரித்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக ஆஸ்துமா, ஒவ்வாமை, நுரையீரல் உயர் ரத்த அழுத்தம், நுரையீரல் சுருக்கம், துகள் கழலை (Sarcoidosis) ஆகிய நோய்களுக்கு ஆர்.எல்.எஃப். - 100 நல்ல பலன் அளித்துவருகிறது. சரி, இது எப்படி கரோனாவுக்கு மருந்தாக மாறியது?

கரோனாவுக்கு மருந்து!

அமெரிக்காவில் உள்ள ‘ஹூஸ்டன் மெத்தடிஸ்ட் மருத்துவமனை’க்கு (Houston Methodist Hospital) கரோனா நோய்க்குச் சிகிச்சை பெறவந்த 54 வயது நபருக்குக் கடுமையான மூச்சுத்திணறல் இருந்தது. அவருக்குப் பழைய மருந்துகள் அனைத்தும் கொடுக்கப்பட்ட போதிலும், கரோனா கட்டுப்படவில்லை; சுவாசச் செயலிழப்பு (Respiratory failure) எனும் தீவிர பாதிப்புக்குத் தள்ளப்பட்டார். வென்டிலேட்டரில் வைக்கப்பட்டிருந்த அந்த நபருக்கு ஆர்.எல்.எஃப்.-100 மருந்தை வழங்கிப் பரிசோதித்தனர். அவருடைய நுரையீரல் பாதிப்பு வேகமாகக் குறையத் தொடங்கியது. நான்கு நாட்களில் கரோனா கட்டுக்குள் வந்தது. வென்டிலேட்டரிலிருந்து விடுதலையும் கிடைத்தது.

இதேபோன்று இன்னும் 15 கரோனா நோயாளிகளுக்கு இதைப் பயன்படுத்தியபோதும் பலன் கிடைத்தது. இந்த நோயாளிகளின் நெஞ்சு எக்ஸ்-ரே, சி.டி. ஸ்கேனில் கரோனா பாதிப்பு குறைந்திருப்பதும், இவர்களுக்கு ரத்த ஆக்ஸிஜன் அளவு 50 சதவீதம் மேம்பட்டதும், கரோனாவின் ஆதிக்கப் பரவலை உறுதிப்படுத்தும் பலதரப்பட்ட ‘ஆய்வக நோய் முன்காட்டிகள்’ (Lab. Bio-markers) இயல்புக்குத் திரும்பியதும் இந்த மருந்தின் பலனை உறுதிப்படுத்தின. எனவே, உயிருக்குப் போராடும் கரோனா நோயாளிகளுக்கு ஆர்.எல்.எஃப். - 100 மருந்தைக் கொடுத்துப் பரிசோதிக்க அமெரிக்காவின் FDA அவசர அனுமதி அளித்துவிட்டது.

கு. கணேசன் 

பலன் தருவது எப்படி?

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட வர்களில் பெரும்பாலோர் சுவாசச் செயலிழப்பு காரணமாகவே உயிரிழக்கின்றனர். நுரையீரலில் நுண் காற்றறை (Alveoli) செல்கள் பெருமளவில் அழிந்துபோவதே, அதற்கு முதன்மைக் காரணம். எப்படித் துளைகள் உள்ள ரப்பர் பந்தில் காற்றை நிரப்ப முடியாதோ, அப்படியே அழிந்துபோன நுரையீரல் செல்களால் ஆக்ஸிஜனை உறிஞ்சி உடலுக்கு விநியோகிக்க முடியாது. காற்றிழந்த கார் சக்கரத்தை பங்சர் பார்த்து ஓட்டுவதைப்போல் இந்தச் செல்களைப் புதுப்பித்தால் மட்டுமே, நுரையீரல் மறுபடியும் செயல்பட முடியும். அந்தப் புதுப்பித்தலை ஆர்.எல்.எஃப். - 100 நுரையீரலில் மேற்கொள்கிறது என்பதுதான் இந்த மருந்தின் தனித்தன்மை.

நுண் காற்றறை செல்களில் ‘ஆல்வியோலர் டைப் ஒன்’ (Alveolar type 1 cells), ‘ஆல்வியோலர் டைப் டு’ (Alveolar type 2 cells) என இரு வகைகள் இருக்கின்றன. இவற்றில் இரண்டாம் வகை செல்கள் மிகுந்த சேதமடையும்போதுதான், சுவாசச் செயலிழப்பு ஏற்படுகிறது. ஆகவே, அதை ஈடுகட்ட இரண்டாம் வகை செல்கள்தான் அதிகம் தேவை. ஆர்.எல்.எஃப். - 100 மருந்து இரண்டாம் வகை செல்களின் உற்பத்திக்குப் பெரிதும் உதவுகிறது. அப்போது, முதலாம் வகை செல்கள் அழிந்த இடங்களிலும் இரண்டாம் வகை செல்கள் துளிர்த்துவிடுவதால் ஆக்ஸிஜன் – கரியமில வாயுப் பரிமாற்றப் பணி மீள்கிறது; சுவாசத்தடை நீங்குகிறது.

மேலும், இரண்டாம் வகை செல்கள் நுரையீரலில் ஒருவித விசைக்குறைப்பானை (Surfactant) உற்பத்திசெய்கின்றன. செல்களில் ஆக்ஸிஜன் பரிமாற்றம் ஆவதற்கு, இந்த விசைக்குறைப்பான்கள் தேவைப்படுகின்றன. சக்கரங்கள் எளிதாகச் சுழல்வதற்கு மசகு உதவுவதுபோல், ஆல்வியோலர் செல்களில் விசைக்குறைப்பான்கள் செயல்பட்டால்தான் ஆக்ஸிஜன் பரிமாற்றம் எளிதாக நிகழும். தற்போது கரோனா சிகிச்சைக்குக் கொடுக்கப்படும் மருந்துகளில் ஆர்.எல்.எஃப். - 100 போன்று இரண்டாம் வகை ஆல்வியோலர் செல்களுக்கு உதவும் மருந்து வேறு எதுவும் இல்லை என்கின்றனர் நிபுணர்கள்.

கரோனாவிலிருந்து விடுதலை!

கரோனா வைரஸின் வெளிப்பக்க ஈட்டிமுனைப் புரதங்கள் (Spike proteins), பயனாளியின் ஆல்வியோலர் செல்களில் இரண்டாம் வகை செல்களின் ACE2 ஏற்பிகளுடன் இணைந்து தொற்றை ஏற்படுத்துவதுதான் அதிகம். இங்குதான் கரோனா கிருமிகளும் கோடிக்கணக்கில் உருவாகின்றன; அத்துடன் ‘சைட்டோகைன் ஸ்டார்ம்’ எனும் திடீர் தாக்கமும் உருவாகிறது. இந்த நிகழ்வின்போது இரண்டாம் வகை ஆல்வியோலர் செல்கள் சுனாமி போன்ற பேரழிவுக்கு ஆட்படுகின்றன.

குறிப்பாக, முதியவர்களுக்கும் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்ற துணைநோய் உள்ளவர்களுக்கும் இந்தச் செல் அழிவு பன்மடங்காகிறது. ஆகவேதான், இவர்களுக்கு நுரையீரல்கள் விரைவில் செயலிழந்து, சுவாசப் பிரச்சினை பெரிதாகிறது. வென்டிலேட்டர் - ‘எக்மோ’ கருவிகள் தேவைப்படும் அளவுக்கு நோய் மோசமாகிறது. அப்போது அவர்கள் உயிருக்குப் போராடுகின்றனர்.

இம்மாதிரியான நோயாளிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக வந்திருக்கிறது, ஆர்.எல்.எஃப். – 100 மருந்து. இந்த மருந்தை வழங்கும்போது நுரையீரல் தொடர்பான பாதிப்பிலிருந்து கரோனா நோயாளிகள் மிக விரைவில் மீண்டுவருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நம்பிக்கை தரும் நல்ல செய்தி இது.

கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்

தொடர்புக்கு: gganesan95@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x