Published : 05 Sep 2015 03:10 PM
Last Updated : 05 Sep 2015 03:10 PM

மனவலிமை பெற மருத்துவ மூலிகைகள்

தாமரை, ஆயுர்வேதத்தில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. செந்தாமரை, வெண்தாமரை என இருவகை தாமரை மலர்கள் இருந்தாலும், மருத்துவத்தில் வெண்தாமரையே அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.

மூளை வளர்ச்சி

உடல் ஆரோக்கியத்துக்கு வெண்தாமரைக் குடிநீர் மிகவும் ஏற்றது. மூன்று வாரங்களுக்குத் தொடர்ந்து வெண்தாமரை பூ கஷாயம் குடித்துவந்தால் மூளை வளர்ச்சியடையும். இதயம் தொடர்புடைய எண்ணற்ற நோய்களைப் போக்க வெண்தாமரை பூ கஷாயம் ஏற்றது. தினம் மூன்று வேளை வெண்தாமரை பூ கஷாயம் சாப்பிட மனநோய் குணமாகும்.

பார்வைத் தெளிவு

வெண்தாமரை பூ, இலை, தண்டு, கிழங்கு ஆகியவற்றைத் தலா 100 கிராம் எடுத்து, அவற்றை நன்றாகச் சாறு பிழிந்து முக்கால் கிலோ நல்லெண்ணெயில் கலந்து அடுப்பில் கொதிக்கவைக்கவும். நன்றாகக் கொதித்த உடன் அதை இறக்கி ஆறவைத்து, காற்று புகாத பாட்டிலில் அடைத்து வைக்கவும். தினமும் இதைத் தலைக்குத் தேய்த்து ஊறவைத்துக் குளித்துவந்தால், மனம் தெளிவடையும்.

உயர் ரத்தஅழுத்தம்

வெண்தாமரைப் பூக்களைக் காய வைத்துப் பொடியாக்கி வைத்துக்கொள்ளவும். தினசரி 5 டீஸ்பூன் பொடியை ஒன்றரை டம்ளர் நீரில் போட்டு, அடுப்பில் வைத்துச் சுண்டக்காய்ச்ச வேண்டும். அதை வடிகட்டி பால், சர்க்கரை சேர்த்துத் தினம் இரண்டு முறை குடித்தால் மனப் பரபரப்பு சீராகும்.

அதிமதுரம்

அதிமதுரத்தின் மருத்துவக் குணங்கள் உணரப்பட்டு, உலகத்தின் பெரும்பாலான மருத்துவ முறைகளில் பயன்படுத்தப்படுகிறது. மிக எளிய முறையில் அதிமதுரத்தைப் பயன்படுத்தினாலே, அநேக நோய்களை நீக்கிவிட முடியும்.

அதிமதுரம், வாதுமைப் பிசின், வேலம் பிசின் ஆகியவற்றை வகைக்கு 10 கிராம் சேகரித்துக்கொண்டு, 250 கிராம் சர்க்கரையுடன் தண்ணீர் சிறிதளவுவிட்டு, பாகு பதம் வரும்வரை காய்ச்ச வேண்டும். தேன் பதம் வரும்போது மேற்கண்ட சூரணங்களைக் கொட்டிக் கிளறி, லேகியம் தயாரித்து மூன்று முறை இரண்டு தேக்கரண்டியளவு சாப்பிட்டால், மனச்சோர்வு மாறும்.

அதிமதுரத்தை நன்கு பொடித்துப் பாலில் கலக்கி சிறிதளவு தேன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், தாதுவிருத்தி உண்டாகும், உற்சாகம் அதிகரிக்கும்.

அதிமதுரம், திராட்சை ஆகிய இரண்டையும் சமமாகப் பொடி செய்து 50 முதல் 100 கிராம் எடுத்துத் தண்ணீரில் அரைத்துப் பாலில் கலக்கி சாப்பிட்டுவந்தால், மனப் பரபரப்பு மட்டுப்படும்.

அதிமதுரம், சோம்பு, சர்க்கரை ஆகியவற்றை வகைக்கு 35 கிராம் எடுத்து, தனித்தனியாக நன்கு சூரணம் செய்து, பின் ஒன்றாகச் சேர்த்துத் தேனில் குழைத்துச் சாப்பிட்டுவந்தால், மனப் பாரத்தால் ஏற்பட்ட தலைவலி நீங்கும். இதையே தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், தொடர்ந்து தொல்லை கொடுக்கும் தலைவலி நீங்கும்.

அதிமதுரம், கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் ஆகியவற்றைச் சம எடையாக எடுத்துச் சூரணம் செய்து அரை தேக்கரண்டியளவு தேனில் குழைத்துச் சாப்பிட்டால் தலைவலி தீரும். இதே சூரணத்தை நெய்யில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் anxiety-யால் ஏற்பட்ட டென்ஷன் தலைவலி நீங்கும்.

சங்கப் புஷ்பி (சங்குப்பூ)

வெள்ளை சங்குப்பூ செடியின் (ஸ்வேத சங்கப் புஷ்பி) வேர், பூ, காய், இலை ஆகியவற்றைக் கல்கமாக செய்து பயன்படுத்துவது, ஆச்சார்யா சரகரின் கூற்றுப்படி அறிவை வளர்க்கும். மூலிகைகளில் வெள்ளை சங்கப் புஷ்பியே சிறந்தது.

மேத்ய ரசாயனத்தில் நான்கே மூலிகைகள் மட்டுமே உள்ளன.

1. வல்லாரைச் சாற்றைப் பயன்படுத்துவது.

2. அதிமதுரச் சூரணத்தைப் பாலில் கலந்து பயன்படுத்துவது.

3. சீந்தில் கொடியின் சாற்றைப் பயன்படுத்துவது

4. வெள்ளை சங்கு புஷ்பச் செடியின் வேர், பூ, காய், இலை ஆகியவற்றைக் கல்கமாக செய்து பயன்படுத்துவது.

வெண்பூசணி

பூசணிக்காய்க்கு வெண்பூசணி, கல்யாணப் பூசணி என்ற பெயரும் உள்ளது. பல்வேறு மருத்துவக் குணங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

புத்தி சுவாதீனம் இல்லாதவர்களுக்குச் சிகிச்சையளிக்கும்போது தினசரிப் பூசணிக்காய் சேர்ந்த உணவைக் கொடுக்க, புத்தி சுவாதீனம் படிப்படியாக மாறி நல்ல நிலைமைக்குத் திரும்பும். மருத்துவத்தில் பூசணிக் காயின் நீர்விதை பயன்படுத்தப்படுகிறது.

ரத்தச் சுத்திக்கு, ரத்தக் கசிவு நீங்க, வலிப்பு நோய் சீராக, குடலில் உள்ள நாடாப்புழுக்கள் வெளியேற மற்றும் சிறுநீரக நோய்கள் போன்றவற்றைக் குணப்படுத்த வெண் பூசணி பயன்படுத்தப்படுகிறது.

வெண் பூசணிக் காயின் சாறு 30 மில்லியளவு எடுத்து, ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்துச் சாப்பிட்டால் இதயப் பலவீனம் நீங்கும், ரத்தச் சுத்தியாகும்.

பிரபல ஆயுர்வேத நிபுணர், டாக்டர் எல். மகாதேவன் அளித்து வந்த பதில்கள், தொடர் கட்டுரைகள் இப்பகுதியுடன் நிறைவடைகின்றன.

அதேநேரம் 'நலம், நலமறிய ஆவல்' கேள்வி - பதில் பகுதி தொடர்ந்து வெளிவரும். பல்வேறு மருத்துவ முறைகளைச் சேர்ந்த மருத்துவர்கள் விரைவில் பதில் அளிக்க இருக்கிறார்கள். வாசகர்கள் தங்களுடைய முக்கியமான மருத்துவச் சந்தேகங்களை மட்டும் தொடர்ந்து அனுப்பலாம்.

மின்னஞ்சல்: nalamvaazha@thehindutamil.co.in

முகவரி: நலம், நலமறிய ஆவல், நலம் வாழ, தி இந்து,

கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை - 600 002

தொடர்புக்கு: mahadevan101@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x