Published : 22 Aug 2020 08:28 am

Updated : 22 Aug 2020 08:28 am

 

Published : 22 Aug 2020 08:28 AM
Last Updated : 22 Aug 2020 08:28 AM

கரோனாவை எதிர்க்கத் தடுப்புமருந்து மட்டும் போதுமா?

corona-vaccine

இ. ஹேமபிரபா

இன்றைக்கு யாராவது ஒருவரை நிறுத்தி உடனடியாக நடந்தாக வேண்டிய ஒரு நல்ல விஷயம் என்று எதை எதிர்பார்க்கிறீர்கள் என்று கேட்டால், ‘கரோனாவுக்குத் தடுப்பு மருந்து’ என்று யோசிக்காமல் பதில் சொல்லுவார். அந்த அளவுக்கு அரசும் மக்களும், அதை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள். ஆனால், ஆய்வாளர்களும், மருத்துவர்களும் வேறு கருத்தை வைத்திருப்பார்கள். கரோனாவை விரட்டத் தடுப்பு மருந்து மட்டும் போதாது, சிகிச்சைக்கான மருந்தும் தேவை என்பார்கள்.


எளிதாகச் சொல்ல வேண்டு மென்றால், ஒரு தடுப்பு மருந்து உரு வாக்கப்பட்டு, அது எல்லா இடத்துக்கும் சென்று சேர்ந்து, மக்கள் பயன்பாட்டுக்கு வந்து, நோயை ஒழிப்பது என்பது ஒருநாளில், ஒரு மாதத்தில் முடிகிற செயல் அல்ல. ரஷ்யாகூட தடுப்பு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக அறிவித்திருக்கிறது. ஆனால், ஓர் அறிவிப்பு வந்தவுடன் எந்த நோயும் நிச்சயம் ஒழிந்துவிடாது.

சிகிச்சை மருந்து ஏன் தேவை?

போலியோ நோயை எடுத்துக் கொள்வோம். 1990 வரை ஆண்டுக்கு 500 முதல் 1,000 பேர் இந்தியாவில் போலியோ பாதிப்புக்கு உள்ளாகிவந்தார்கள். 2009-ம் ஆண்டுவரை, உலகின் மொத்த போலியோ நோயாளி எண்ணிக்கையில் 60 சதவீதத்தினர் இந்தியாவிலிருந்தார்கள். அரசின் உறுதியான முன்னெடுப்பால், ஒவ்வொரு குழந்தையாகத் தேடிக் கண்டறிந்து, யாரும் விடுபட்டுப் போகாமல் போலியோ தடுப்பு சொட்டு மருந்து சென்றடைந்தது. 2011 ஜனவரி 13-க்குப் பிறகு புதிதாக எந்த போலியோ நோயாளியும் கண்டறியப்படவில்லை என்று தெரிந்ததும், போலியோவில் இருந்து மீண்டுவிட்டதாக 2014-ம் ஆண்டுதான் இந்தியா அறிவித்தது.

ஆக, ஒரு தொற்றுநோயை ஒழிப்பது என்பது உடனடியாக நிகழ்ந்துவிடக் கூடியதல்ல. கடந்த நூறு நாள்களில் புதிதாக எந்தக் கரோனா நோய்த் தொற்றாளரும் இல்லை என்று அறிவித்திருந்த நியூசிலாந்தில் திடீரென்று ஒரே குடும்பத்தில் நால்வருக்குத் தொற்று இருப்பது தெரியவந்திருக்கிறது. எங்கிருந்து தொற்று வந்தது என்பதை ஆராய்ந்துகொண்டிருக்கிறார்கள். இஸ்ரேலில்கூட கரோனாவின் முதல் அலையின்போது ஒருநாளில் அதிகபட்சத் தொற்று எண்ணிக்கையாக 700 ஆக இருந்தது, ஊரடங்குத் தளர்வுக்குப் பின் இரண்டாம் அலை உருவானபோது, 2,000 வரை சென்றுவருகிறது.

கரோனாவைப் போன்று எளிதில் வேகமாகப் பரவும் தொற்றுநோய்க் கிருமிகள், சிறு தீப்பொறியிலிருந்து உண்டாகும் காட்டுத்தீ போல் தொடக்கப் புள்ளி தெரியாமல் பரவுகின்றன. அதுவும் உலகமயமாக்கல் பின்னணியில் கரோனா தொற்று உலகம் முழுக்கப் பரவியிருக்கும் வேளையில், மக்கள் அனைவருக்கும் தடுப்பு மருந்து சென்று சேர்ந்து நோய் முற்றிலும் ஒழிக்கப்படப் பல ஆண்டுகள் ஆகலாம். நடுவில் பலர் பாதிப்புக்கு உள்ளாகலாம். இந்தக் காரணங்களால் சிகிச்சை மருந்துகளைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஆய்வாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டுவருகின்றனர்.

மருந்துத் தயாரிப்பை வேகப்படுத்துதல்

ரெம்டெசிவிர் (Remdesivir), டெக்சாமெத்தசோன் (dexamethasone), டோசிலிஸுமாப் (Tocilizumab) ஆகிய மருந்துகள் கரோனா சிகிச்சைக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. இன்னும் சில மருந்துகள் உலக அளவில் பயன் பாட்டிலும் பரிசீலனையிலும் உள்ளன. ஏற்கெனவே, இந்த மருந்துகளுக்கான தட்டுப்பாடு தென்படத் தொங்கியுள்ளது. இந்தியாவிலும், உலகம் முழுக்கவும் மருந்து உற்பத்தி தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

இதை இன்னும் வேகப்படுத்தும் முயற்சியில், செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence) எனப்படும் நவீன முறை ஆய்வு மேற்கொள்ளப் பயன்படுத்தப்பட்டுள்ளது. மனிதன் சிந்திப்பது போலவே, செயற்கையாக நுண்ணறிவுத் திறனை உருவாக்கி, அதன்மூலம் புதுப்புது வழிகளைத் தேடும் முறை இது. எடுத்துக்காட்டாக, ஒரு தேர்ந்த மருத்துவ நிபுணர், தனக்குத் தெரிந்த நூறு வழிகளில் எது சிறந்தது என்று யோசிப்பார். ஆனால், இந்த மென்பொருள் மூலம் ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் தகவல்களை ஆராய்ந்து, அதிலிருந்து சிறந்த வழிமுறையைக் கண்டறிய முடியும். மனிதன் கண்டறிந்த கணக்கிடும் கருவி (calculator) நம்மைவிட அதிக எண்களை நினைவில் வைத்துக்கொண்டு விடை தருகிறதில்லையா, அதைப் போல்.

ரெம்டெசிவிர் உள்ளிட்ட மொத்தம் 12 மருந்துகளுக்கு, எளிய உற்பத்தி முறையைக் கண்டறியச் செயற்கை நுண்ணறிவு முறை பயன்படுத்தப்பட்டு உள்ளது. ஒரு பொருளை உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்படும் மூலப்பொருள்களின் விலை குறைவாக இருந்தால், பொருளின் விலையும் குறையும். அதனால், விலை மலிவான மூலப்பொருளும் ஒரு காரணியாக எடுத்துக்கொள்ளப்பட்டது. வேகமாகத் தயாரிப்பது, விலை குறைந்த தயாரிப்புக் கருவிகள் இந்த ஆய்வின் மற்ற காரணிகள். நாம் யோசிக்க முடியாத அளவில், 11 மருந்துகளுக்கான உற்பத்தி முறைகளை எளிமைப்படுத்தித் தந்திருக்கிறது இந்த ஆய்வு. பொதுவாக இந்தக் கண்டுபிடிப்புகள் காப்புரிமை பெறப்பட்டு லாபத்துக்கே விற்கப்படும். கரோனா விஷயத்தில் காப்புரிமை மட்டும் பெறப்படும், லாபம் நோக்கமல்ல என்பது நிம்மதி தரும் விஷயம்.

புதிய முயற்சிகள்

நாவல் கரோனா வைரஸுக்கென்று புதிய சிகிச்சை மருந்து குறித்த தேடலில், முன் வரிசையில் நிற்பது, ‘செயற்கை யாக எதிரணுக்களைத் தயார் செய்தல்’. பொதுவாக, வைரஸ் தொற்று ஏற்பட்டவுடன், நம் நோய் எதிர்ப்பு மண்டலம், கிருமிகளை அழிக்க எதிரணுக்களை உருவாக்கும். நாவல் கரோனா வைரஸ் நம் உடலுக்குப் பழக்கப்படாதது, புதிதானது. அதனால், தொற்று ஏற்பட்டவுடன் உடனடியாக எது சரியான எதிரணு என்று நம் நோய் எதிர்ப்பு மண்டலத்துக்குத் தெரிவதில்லை. அதனால், எது சரியான எதிரணு என்று தேர்ந்தெடுத்து, பின்பு அதிக அளவில் உற்பத்திசெய்யும். இதற்கு ஆகும் கால தாமதத்தில், வைரஸ் உடலை ஆக்கிரமித்து வெற்றி பெற்றால், உயிரிழப்பு நேர்கிறது.

பொதுவாக எதிரணுக்கள் ரத்த பிளாஸ்மாவில் இருக்கும். நடை முறையில் இருக்கும் ‘பிளாஸ்மா சிகிச்சை முறை’யில் ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவை மட்டும் பிரித்தெடுத்து, நோயாளிகளுக்குக் கொடுக்கிறார்கள். மற்ற மருந்துகள் செயலற்றுப் போய், நோய்த் தொற்று தீவிரம் அடைந்தவர்களுக்கு இம்முறை பயன்பாட்டில் இருக்கிறது, நோயிலிருந்து மீள்வதற்குப் பெரிதளவில் உதவவும் செய்கிறது. செயற்கையாக எதிரணு தயாரிப்பது என்பது, பிளாஸ்மாவில் உள்ள அனைத்து நோய்களுக்கான எதிரணுக் களில் இருந்து, கரோனா வைரஸுக்கான எதிரணுக்களை மட்டும் பிரித்தெடுத்து, அவற்றை அதிக அளவில் உற்பத்தி செய்வது. இந்த முயற்சியில் இஸ்ரேலைத் தொடர்ந்து, பல்வேறு இடங்களிலும் இது சார்ந்த வெற்றி தென்பட்டுவருகிறது.

நம் உடலில் நோயை எதிர்க்க, நோய் எதிர்ப்பு மண்டலம் மட்டும் செயல்படுவதில்லை. உடலுக்குள் வைரஸ் நுழைந்தவுடன், குறிப்பிட்ட மனித செல்களுடன் மட்டும் பொருந்தும். அது மட்டுமல்லாமல் வைரஸால், தன்னைத் தானே இனப்பெருக்கம் செய்துகொள்ள முடியாது. மனித செல்லின் செயல்பாட்டைப் பயன்படுத்தித்தான், தம்முடைய எண்ணிக்கையை அவற்றால் பெருக்கிக் கொள்ள முடியும். வைரஸ் நுழையும் மனித செல் இப்படித்தான் செயலிழந்து போகிறது. ஒரு செல் அழியும்போது, அருகிலிருக்கும் செல்லுக்கு ஒரு சமிக்ஞை அனுப்பும். என்னை ஒருவன் கொல்கிறான், நீயாவது தப்பிப் பிழைத்துக்கொள் என்று அழிவில் இருக்கும் செல், சொல்லிவிட்டுச் சாகும்.

அதாவது, அழிவில் இருக்கும் மனித செல், இன்டர்ஃபெரான் (interferon) என்னும் புரதத்தை வெளி யிடும். நச்சுயிரிப் பெருக்கத் தடுப்புப் பொருளாக இது செயல்படும். இவற்றை, செயற்கையாகவும் தயாரிக்க முடியும். சினாய்ர்ஜென் (Synairgen) என்னும் நிறுவனம், செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட இன்டர்ஃபெரானைப் பயன்படுத்தியபோது நல்ல முன்னேற்றம் தெரிந்தது. கரோனா வைரஸ் சுவாசப் பாதையை அதிகமாகக் குறிவைக்கிறது என்பதால், சளிக்கு நாம் பயன்படுத்தும் மருந்துகள்போல், சுவாச மருந்தாகவும், நாசிவழி செலுத்தப்படும் சொட்டு மருந்தாகவும் இந்த மருந்தைக் கொடுக்க முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.

எனவே, தடுப்பு மருந்து ஆராய்ச்சிக்கு ஈடாக சிகிச்சைக்கான ஆய்வுகளும் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. இங்கே குறிப்பிடப்பட வேண்டிய விஷயம், இது போன்ற பல்வேறு ஆய்வுகள் நடந்துகொண்டிருந்தாலும், இறுதியில் பயன்பாட்டுக்கு எது வந்துசேரும் என்பதைத் திட்டவட்டமாகச் சொல்ல முடியாது என்பதே. எந்த மருந்து சிறப்பாகச் செயல்படும் என்று தெரியாதது ஒருபுறம் இருந்தாலும், கரோனாவால் பொருளாதாரம் ஏற்கெனவே பாதிக்கப் பட்டுள்ள நிலையில், ஆய்வுகளுக்கான செலவுகளும் நிதியுதவிக் குறைவும் இந்த முடிவுகளைத் தீர்மானிக்கக்கூடிய அம்சமாக இருக்கும்.

தொடர்புக்கு: hemazephyrs@gmail.com

கட்டுரையாளர், இஸ்ரேல் டெக்னியான் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஆராய்ச்சியாளர்


கரோனாகொரோனாதடுப்புமருந்துசிகிச்சை மருந்துதயாரிப்பை வேகப்படுத்துதல்ரெம்டெசிவிர்புதிய முயற்சிகள்புதிய சிகிச்சைபொருளாதாரம்Artificial intelligenceபோலியோ நோய்Corona VaccineCorona

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author