

அன்றாட வாழ்க்கையில் நாம் ஏற்படுத்திக் கொள்ளும் தவறான பழக்கவழக்கங்களாலும் நடவடிக்கைகளாலும், நம்முடைய உடலை நாமே எப்படியெல்லாம் வருத்திக் கொள்கிறோம்? இதனால் நம்முடைய உடல் அடையும் பாதிப்புகள் என்னென்ன? உடல் அடைந்த பாதிப்பிலிருந்து விடுபடுவது எப்படி? இது போன்ற பாதிப்புகளைத் தவிர்ப்பது எப்படி? இப்படி நிறைய கேள்விகளுக்கான பதிலை நாடகத்தின் வழியாகவே தந்திருக்கிறார் வானொலி அண்ணா என்.சி. ஞானப்பிரகாசம்.
குழந்தை களுக்கு விளையாட்டுப் பொருளாக நாணயங்களைத் தரும் பெரியவர்களின் அஜாக்கிரதை, வளர்ப்புப் பிராணிகளை வளர்க்கும் வீடுகளில் அவற்றை வளர்ப்பவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள்… எனப் பல்வேறு மருத்துவ நலப் பிரச்சினைகளை மையப்படுத்தி நாடகங்களை எழுதியிருக்கிறார் நூலின் ஆசிரியர்.
ஒவ்வொரு நாடகத்தின் இறுதியிலும் அந்தந்தத் துறை சார்ந்த மருத்துவரின் ஆலோசனையுடன், நாடகம் முடிவது நல்ல உத்தி. இந்த முறையில் வானொலிக்காக எழுதப்பட்ட 22 நாடகங்களின் தொகுப்பாக வந்திருக்கிறது `நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ - மருத்துவ நாடகங்கள் என்னும் இந்நூல். இதில் இடம்பெற்றிருக்கும் `ஹெல்மெட்’ இன்றைய சூழலுக்கேற்ற நாடகம்.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் - மருத்துவ நாடகங்கள்; என்.சி. ஞானப்பிரகாசம்; ரூ. 150; வெளியீடு: கற்பக வித்யா பதிப்பகம், ஜே-6, லாயிட்ஸ் காலனி, ராயப்பேட்டை, சென்னை-14. தொலைபேசி: 044-28474510