வலிப்பு நோய் திருமணத் தடையா?

வலிப்பு நோய் திருமணத் தடையா?
Updated on
1 min read

எனக்கு 8 வருடங்களாக வலிப்பு நோய் உள்ளது. என்னுடைய வயது 30. இதுவரை மூன்று முறை வலிப்பு வந்துள்ளது. இரண்டு ஆண்டு இடைவெளியில் அடுத்தடுத்து வலிப்பு வந்திருக்கிறது. எல்லா வலிப்புமே அதிகாலையில் நன்கு தூங்கிக்கொண்டிருந்த நேரத்தில்தான் வந்தது. சமீபகாலமாக என்னுடைய கை, கால்கள் நடுக்கம் எடுக்கிறது. இந்த ஆண்டில் திருமணம் செய்யத் திட்டமிட்டிருக்கிறேன். இந்த நிலையில் நான் என்ன முடிவெடுப்பது? திருமணம் செய்துகொள்ளலாமா? எந்த மாதிரி உணவை உண்ண வேண்டும்?

- கே. குமாரசாமி, கத்தார்

சென்னையைச் சேர்ந்த நரம்பியல் நிபுணர் டாக்டர் ஜெ.பாஸ்கரன் பதிலளிக்கிறார்:

உங்களுக்கு இருப்பது வலிப்பு நோய். ஈ.ஈ.ஜி., ஸ்கேன் போன்ற பரிசோதனைகளுக்குப் பிறகே டெக்ரிடால் மாத்திரைகள் கொடுக்கப்பட்டிருக்கும் என்று நம்புகிறேன். மீண்டும் மீண்டும் வலிப்பு வருவதற்கு நான்கு காரணங்கள் சொல்லப்படுகின்றன:

காரணங்கள்

1. வலிப்புக்கான மாத்திரைகளைப் பரிந்துரைத்தது போல எடுத்துக்கொள்ளாமல் இருப்பது.

2. போதிய இரவுத் தூக்கம் இல்லாமல், கண் விழித்திருப்பது.

3. நோய்த் தொற்றுகளால் ஜுரம் போன்றவை தாக்கியிருப்பது.

4. அல்லது வந்திருப்பது வலிப்பைச் சேர்ந்ததாக இல்லாமல் இருக்கலாம்.

என்ன செய்ய வேண்டும்?

1. ரத்தத்தில் டெக்ரிடால் அளவை சரிபார்க்கவும். (Serum levels of carbamazepine )

2. பின்னர் மருத்துவரைச் சந்தித்துத் தேவைப்பட்டால் டெக்ரிடால் அளவை (dose) அதிகப்படுத்தவும் - 400 மி.கி. முதல் 600 மி.கி. வரை

3. அதற்கும் சரியாகவில்லை என்றால், உரிய மருத்துவ ஆலோசனையுடன், மீண்டும் ஈ.ஈ.ஜி., ஸ்கேன் டெஸ்ட்களுடன், மற்றொரு வலிப்பு மருந்தைச் சேர்க்கவோ அல்லது வேறு புதிய வலிப்பு மருந்தைத் தொடங்கவோ செய்யலாம்.

திருமணம்

உங்கள் வயதோ, வலிப்பு நோயோ திருமணத்துக்குத் தடை இல்லை. தாராளமாகத் திருமணம் செய்துகொள்ளலாம். ஆனால் ஒரே ஒரு முக்கியமான விஷயம் பெண் வீட்டாருக்கு, முக்கியமாக உங்கள் வாழ்க்கையில் பங்கேற்கப்போகும் வருங்காலத் துணைவிக்கு, உங்கள் நோய் பற்றி தெரிவித்துவிடுங்கள் - அது உங்கள் எதிர்கால வாழ்க்கையில் பல மனக் கசப்புகளைத் தவிர்க்கும்.

தாம்பத்யம், உணவுப் பழக்கங்கள் போன்ற எதற்கும் எந்தத் தடையும் இல்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in