Published : 11 Jul 2020 08:38 am

Updated : 11 Jul 2020 08:38 am

 

Published : 11 Jul 2020 08:38 AM
Last Updated : 11 Jul 2020 08:38 AM

விடிவு பிறக்குமா? - முன்னணியில் 2 இந்திய கரோனா தடுப்பூசிகள்

corona-vaccines

த.வி. வெங்கடேஸ்வரன்

கரோனா தொற்று எனும் காரிருள் சூழ்ந்த கரிய வானத்தில் தென்படும் நம்பிக்கை ஒளிக்கீற்றுபோல் தடுப்பூசிகள் குறித்த செய்திகள் அமைந்துள்ளன. பாரத் பயோடெக் நிறுவனத்தின் ‘கொவாக்சின்', ஸைடஸ் காடில்லா நிறுவனத்தின் ‘ஸைகோவ்-டி' ஆகிய இரண்டு இந்தியத் தடுப்பூசிகளையும் சேர்த்து உலகம் முழுவதும் 21 தடுப்பூசிகள் மருத்துவப் பரிசோதனை நிலையை எட்டியுள்ளன. மத்திய மருந்துத் தரக் கட்டுப்பாடு அமைப்பு (CDSCO) இந்த இரண்டு தடுப்பூசிகளை மனிதர்களிடம் பரிசோதனை செய்வதற்கு சமீபத்தில் அனுமதி வழங்கியுள்ளது.


பல ஆண்டுகளாக உலகத் தடுப்பூசி உற்பத்தி மையமாக இந்தியா வளர்ந்துவந்துள்ளது. யூனிசெஃப் நிறுவனம் விநியோகிக்கும் அத்தியாவசியத் தடுப்பூசிகளில் சுமார் அறுபது சதவீதம் இந்தியாவில் தயாராகுபவை. கரோனாவுக்கான தடுப்பூசி உலகில் எங்கே கண்டுபிடிக்கப்பட்டாலும் இந்தியத் தடுப்பூசி நிறுவனங்களின் உதவியில்லாமல், போதுமான அளவில் உற்பத்தி செய்வது சாத்தியமில்லை. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள AZD1222 என்ற தடுப்பூசி, அமெரிக்காவின் மாடர்னா நிறுவனம் தயாரிக்கும் mRNA-1273 போன்ற பல தடுப்பூசித் தயாரிப்பு நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களுடன் உற்பத்தி செய்வதற் கான ஒப்பந்தங்களை ஏற்கெனவே இட்டுள்ளன.

உலகெங்கும் சுமார் 146 தடுப்பூசிகள் ஆய்வின் பல்வேறு நிலைகளில் உள்ளன. இவற்றில் 15 முதல் கட்ட மனித ஆய்வுகளிலும், 11 இரண்டாம் கட்ட மனித ஆய்வுகளிலும், 3 மூன்றாம் கட்ட மனித ஆய்வு நிலைகளிலும் உள்ளன. சீனாவின் கேன்சினோ பயலாஜிகல் நிறுவனம் தயாரித்துள்ள சீனத் தடுப்பூசி, ராணுவப் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலும் தடுப்பூசி தயாரிக்க உயிரி தொழில்நுட்பத் துறையின் முன்முயற்சியில் பல ஆய்வுகள் நடைபெற்றுவருகின்றன. ஐ.சி.எம்.ஆர்.ரின்கீழ் இயங்கும் தேசிய வைரலாஜி நிறுவனம், சி.எஸ்.ஐ.ஆர்.ரின்கீழ் இயங்கும் ‘சென்டர் பார் செல்லுலர் - மாலிகுலர் பயாலஜி' ஆகிய அமைப்புகள் அடிப்படை ஆய்வுகளை மேற்கொண்டுவருகின்றன. தேசிய வைரலாஜி நிறுவனத்துடன் இணைந்துதான் பாரத் பயோடெக் நிறுவனம் தடுப்பூசியை உருவாக்கியுள்ளது.

நோய்த் தடுப்பாற்றல்

ஒவ்வொரு கிருமியிடமும் குறிப்பிட்ட சிறப்பு வடிவம் கொண்ட ஆன்டிஜென் (விளைவூக்கி) எனப்படும் மூலக்கூறு காணப்படும். அந்த வடிவ மூலக்கூறு எதுவும் மனித உடலில் இருக்காது. எனவே, அந்த வடிவ மூலக்கூற்றைக் கொண்ட கிருமியை ஆபத்து என உணர்ந்து உடலின் நோய்த் தடுப்பாற்றல் மண்டலம் ஆண்டிபாடி எனும் எதிரணுவைச் சுரக்கும். கிருமியிடம் காணப்படும் ஆன்டிஜென், அதற்கு எதிராக செயல்பட நோய்த் தடுப்பாற்றல் மண்டலம் உருவாக்கும் எதிரணு ஆகிய இரண்டையும் திருகாணி, அதை திருகிக் கழற்றப் பயன்படும் மரைத்திருகியுடன் (Spanner) ஒப்பிடலாம். சரியாகப் பொருந்தி திருக முடிகிற மரைத்திருகி இருந்தால் எளிதில் திருகாணியைக் கழற்றிக் கிருமியை செயலிழக்க செய்துவிடலாம்.

பெரும்பாலும் திருகாணியின் தலைப்பகுதி அறுகோண உருவம் கொண்டதாகவே இருக்கும் என்றாலும் ‘டி' வடிவத் தலை, பிளவுபட்ட தலை, கணினி வன்பொருள்களில் பயன்படுத்தப்படும் நட்சத்திர வடிவம் எனப் பல்வேறு வகைகள் உண்டு. அதேபோல் தலைப்பகுதியும் வெவ்வேறு அளவுகளில் அமையும். எனவே, பல்வேறு அளவு களில் வாய் அகலம் கொண்ட மரைத்திருகிகள் தவிர, பல்வேறு வகைத் திருகாணிகளின் மீது பொருந்தும் ஆலென் மரைத்திருகி, முதலை மரைத்திருகி, டார்க்சு மரைத்திருகி போன்ற பல வடிவங்களில் மரைத்திருகிகள் உள்ளன. திருகாணி மீது சரியாகப் பொருந்தும் மரைத்திருகி இருந்தால் மட்டுமே கழற்ற முடியும். அதுபோல் சரியாகப் பொருந்தும் எதிரணு இருந்தால் மட்டுமே ஆன்டிஜென் மீதுப் பிணைத்து கிருமியை செயலிழக்க வைக்கமுடியும்.

பல்வேறு வடிவத் தலைகளில் பொருந்தும் வகையில், பல்வேறு வாய் அகலம் கொண்ட வகைவகையான மரைத்திருகிகளை ஒரு வாகன மெக்கானிக் கைவசம் வைத்திருப்பார். அதேபோல், நமது உடலில் ஆயிரம் கோடி வடிவங்களைக் கொண்ட எதிரணு வகைகள் உள்ளன. கிருமித் தாக்கம் ஏற்படும்போது, இவற்றில் ஏதாவது ஒன்று பொருந்தும். அதனால் கிருமியை முளையிலேயே கிள்ளி எறிய முடியும். நோய்த் தொற்றும் ஏற்படாது.

ஜாடிக்கு ஏற்ற மூடி

இதுவரை நம் உடல் சந்திக்காத புதிய கிருமி, அதுவும் தற்போதுதான் பரிணாம வளர்ச்சியில் உருவான கிருமி என்றால், ஏற்கெனவே கையிருப்பில் உள்ள மரைத்திருகிகள் பற்றாது. அதேநேரம், தன்னிடம் உள்ள மரைத்திருகி சரியாகப் பொருந்தவில்லை என்றால் மெக்கானிக் பேசாமல் இருந்துவிடுவதில்லை. நூலைச் சுற்றி திருகாணியை இறுக்கிப்பிடிக்க அவர் முயல்வதுபோல், கைவசம் இருக்கும் எதிரணுக்களில் ஓரளவு பொருந்தும் எதிரணுவை வைத்து, சமாளிப்பதற்கு நோய்த் தடுப்பாற்றல் மண்டலம் முயலும்.

மரைத்திருகி உயிரற்றது; எதிரணு உயிருள்ள மூலக்கூறு. எனவே, எதிரணுவால் பரிணாம வளர்ச்சி அடைந்து புதிய வடிவம் எடுக்க முடியும். ஆங்கில எழுத்தான ‘Y' வடிவில் இருக்கும் எதிரணுவின் கால் பகுதி மாறாது. இரண்டு கைகள்போல் இருக்கும் பகுதியில், ஏதாவது ஒரு கைப் பகுதி மெல்லமெல்ல மாறி, காலப்போக்கில் புத்தம் பதிய கிருமியின் அறிமுகமற்ற ஆன்டிஜென்னின் மீது சரியாகப் பொருந்தும் வகையில் எதிரணு உருமாறும். ஒரு கிருமி மீது பொருந்தும் எதிரணு, பொதுவே மற்ற கிருமிகளின் ஆன்டிஜென்களுடன் சரியாகப் பொருந்தாது.

மறக்க முடியுமா?

முன்பொரு நாள் எப்போதோ வித்தியாசமான அமைப்பு கொண்ட கருவியை பழுது பார்க்க வாங்கி வைத்திருந்த எலும்பு வடிவ மரைத்திருகியை, வேலை முடிந்ததும் மெக்கானிக் தூக்கி எறிந்துவிடுவது இல்லை. எதிர்காலத்தில் எப்போவாவது பயன் தரும் என்ற நோக்கத்துடன் தனது கருவிப் பெட்டியில் சேகரித்து வைத்திருப்பார். அதுபோல் ஒருமுறை புதிதாக உருவாக்கப்படும் எதிரணுவும் நோய்த் தடுப்பாற்றல் எதிரணுக்களின் சேகரிப்பில் இடம்பெற்றிருக்கும்.

புதிதாக எதிர்கொண்ட ஆன்டிஜென், அதற்கு ஏற்ற எதிரணு ஆகியவற்றைக் குறித்த நினைவுக்குறிப்பு பி-செல்கள். டி-செல்கள் எனப்படும் நோய்த் தடுப்பாற்றல் அமைப்புகளில் பதியப்படுகின்றன. இதைத் தான் நோய்த் தடுப்பாற்றல் நினைவுத்திறன் (immunological memory) என்கிறோம். அடுத்த முறை அதே கிருமி தாக்கும்போது, காலம் தாழ்த்தாமல் சரியாகப் பொருத்தும் எதிரணு பிணைந்து, அந்த கிருமியை செயலிழக்க வைத்துவிடும். கிருமித் தொற்று நோயை ஏற்படுத்தாது. அதனால்தான் ஒரு முறை ஒருவருக்குத் தட்டம்மை ஏற்பட்டால், மறுமுறை அது தாக்குவதில்லை. முதன்முறை ஏற்பட்ட கிருமித் தொற்றில் ஒருவர் பிழைத்துவிட்டால் எதிரணு-ஆன்டிஜென் நினைவுத் திறன் காரணமாக, நோய்த் தடுப்பாற்றல் திறனை அவர் பெற்றுவிடுகிறார்.

நாவல் கரோனா வைரஸை எடுத்துக் கொண்டால், அதன் மையத்தில் நியுகிளியோ கேப்சிடு என்ற புரதத்தை சுற்றி வெற்றிலைக் கொடிபோல் படரும் ஜீனோம் மரபு தகவல்கள் அடங்கிய ஆர்.என்.ஏ. இருக்கும். இதைச் சுற்றிக் கொழுப்புக் குமிழால் ஆன என்வலப் புரதம், மெம்பரேன் புரதங்களைக் கொண்ட மேலுறைபோல் அமைந்துள்ளது. பலாப்பழத்தின் முள் போல் வெளியே நீட்டிக்கொண்டு ஈட்டிமுனைப் புரதம் கொக்கி வடிவத்தில் உள்ளது. ஈட்டிமுனைப் புரதக் கொக்கியில் உள்ள S1 என்ற பகுதிதான் மனித சுவாச உறுப்புகளில் உள்ள செல்களில் காணப்படும் ACE2 என்ற ஏற்பிகளை பிடித்துக்கொண்டு இணைந்து கொள்கிறது. நியுகிளியோகேப்சிடு புரதத்தின் பகுதி, ஈட்டிமுனைப் புரததத்தில் உள்ள S2, S1 போன்ற பகுதிகள் ஆன்டிஜென்களாக செயல்படுகின்றன.

இழுபறிப் போர்

அறிமுகமில்லாத கிருமி்த் தொற்று என்றால், அதன் ஆன்டிஜென்னுக்குப் பொருந்தும் எதிரணு தயாராகும்வரை கிருமியின் கை ஓங்கியிருக்கும். பொருந்தி அழிக்கவல்ல எதிரணு தயாரானதும், கிருமிக்கும் நோய்த் தடுப்பாற்றல் மண்டலத்துக்கும் இழுபறி ஏற்படும்.

மூப்படைந்தவர் என்றால் நோய்த் தடுப்பாற்றல் மண்டலம் மெதுவாகவே செயல்படும். ஏழை வறியவர் - போதிய சத்துமிக்க உணவின்றிப் பசியால் வாடுபவராக இருப்பதால், நோய்த் தடுப்பாற்றல் வீரியமாக இருக்காது. சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு போன்ற நோய்களைக் கொண்டவர் என்றால், ஏற்கெனவே காட்டுத்தீ போல் வைரஸ் உடலெங்கும் பரவியிருக்கும்.

ஒருவேளை உங்களுக்கு இளம் வயது, ஊட்டச்சத்துக் குறைபாடு ஏதுமில்லை என்றால் நோய்த் தடுப்பாற்றல் மண்டலம் சுறுசுறுப் பாக விரைந்து செயல்பட்டு, பொருந்தும் எதிரணு வைத் தயாரித்து கிருமியை விரட்டிவிடும். வெறும் சளிக் காய்ச்சல் நோயா அல்லது தீவிர சுவாசக் கோளாறு ஏற்படுமா; வாழ்வா சாவா என எல்லாமே இழுபறிக்குச் செல்லும். கிருமி, நோய் தடுப்பாற்றல் ஆகிய இரண்டில் எது விரைவாகத் தாக்கத்துடன் செயல்படுகிறதோ, அதைப் பொருத்து இந்த இழுபறியின் முடிவு அமையும்.

தடுப்பூசி செயல்படும் முறை

செயற்கையாக நோய்த் தடுப்பாற்றலைக் தூண்டி ஆபத்தான உயிர்க்கொல்லிக் கிருமிக்குப் பொருந்தும் எதிரணுக்களை உருவாக்கி, நோய்த் தடுப்பாற்றல் நினைவை ஏற்படுத்துவதுதான் தடுப்பூசி. நோய்த் தடுப்பாற்றல் மண்டலத்தைத் தூண்டிவிட, செயல்படும் நிலையில் உள்ள கிருமி அவசியமில்லை. கிருமியின் ஆன்டிஜென்களை அறிமுகம் செய்தாலே போதும். அந்த ஆன்டிஜென்னை ஆபத்து என உணர்ந்து நோய்த் தடுப்பாற்றல் மண்டலம் பிணைந்துகொள்வதற்கு உரிய எதிரணுக்களைத் தயாரித்துவிடும். எதிரணுவைத் தயாரித்துவிட்டால், அது நோய்த் தடுப்பாற்றல் நினைவை உருவாக்கிவிடும்.

பள்ளிக்கூட ஆய்வகத்தில் தவளை, பாம்பு, பல்லி போன்றவற்றைக் கண்ணாடிக்குடுவையில் ஃபார்மால்டிஹைடு திரவத்தில் பதப்படுத்தி வைத்துள்ளதை பார்த்திருப்போம். அதுபோல் கரோனா வைரஸை செயற்கையாக வளர்த்து, அதை ஃபார்மால்டிஹைடு திரவத்தில் செலுத்தினால், வைரஸ் செயலிழந்துவிடும். ஆனால், அதன் உடற்கூறுகள் - குறிப்பாக ஆன்டிஜென் சிதையாமல் இருக்கும்.

இப்போது இந்த செயலிழந்த வைரஸை நம் உடலில் செலுத்தினால் நோய் ஏற்பாடாது. ஆனால், அந்த பதப்படுத்திய வைரஸ் உடல்கூறுகளில் ஆன்டிஜென் உள்ளதால், நோய்த் தடுப்பாற்றல் மண்டலம் தூண்டப்பட்டு எதிரணு உருவாகிவிடும். இதுதான் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிக்கும் கொவாக்சின் எனும் செயலிழந்த வைரஸ் தடுப்பூசி.

ஈட்டிமுனைப் புரதத்தின் S2, S1 பகுதிகள் ஆன்டிஜென்னாக செயல்படுகின்றன. இந்தப் புரதத்தை தயாரிக்கும் ஆர்.என்.ஏ. ஜீனோம் பகுதியை பிளாஸ்மிடு டி.என்.ஏ.-வில் புகுத்தித் தயாரிப்பதுதான் ஜைடஸ் காடில்லா நிறுவனத்தின் ஸைகோவ்-டி தடுப்பூசி. பிளாஸ்மிடு டி.என்.ஏ. உடலுக்குள் செலுத்தப்பட்ட பின்னர், மனித செல்களில் கரோனா வைரஸின் ஈட்டிமுனைப் புரதத்தை உருவாக்கும். இந்த ஆன்டிஜென்களுக்கு எதிரான எதிரணுகளை நோய்த் தடுப்பாற்றல் மண்டலம் உருவாக்கி நோய்த் தடுப்பாற்றலைப் பெற்றுவிடும்.

கட்டுரையாளர், மத்திய அரசின் விஞ்ஞான் பிரசார் நிறுவன விஞ்ஞானி

தொடர்புக்கு: tvv123@gmail.comஇந்தியாகரோனா தடுப்பூசிகள்கரோனாகரோனா தொற்றுCorona vaccinesஜாடிஇழுபறிப் போர்யூனிசெஃப் நிறுவனம்கிருமி்த் தொற்று

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x