

நந்தன்
கரோனா தொற்று உறுதிசெய்யப் பட்டாலும் நோய் அறிகுறி இல்லாதவர்களுக்கு தன்னளவில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால், அவர்கள் மூலமாக மற்றவர்களுக்கு வைரஸ் பரவும் என்பதால், அவர்களைத் தனிமைப் படுத்துவது அவசியம் என்று மருத்துவர்கள் தொடக்கம் முதலே வலியுறுத்திவருகின்றனர். அறிகுறி இல்லாதவர்களால் அவர்களுடைய உயிருக்குப் பெரிய ஆபத்து இல்லை என்ற போதும், அவர்களால் மற்றவர்களுக்கு நேரக்கூடிய ஆபத்தைத் தடுப்பதற்காகவே இப்படி வலியுறுத்தப்படுகிறது. அதனால், அறிகுறி இல்லாவிட்டாலும் ஒருவருக்குப் பரிசோதனை செய்யாமல் விட்டுவிடுவது சரியான அணுகுமுறை அல்ல.
பல வீடுகளில் முதியவர்கள், நோயாளிகள், கர்ப்பிணிகளுடன் ஒரே கழிப்பறையைப் பயன்படுத்தி வாழ்பவர் களே அதிகம். அதனால் அறிகுறி இல்லாமல் நோயுடன் இருப்பவர்களைக் கண்டறிவது முக்கியமாகிறது. அதற்குப் பரிசோதனை அவசியம். பரிசோதனையில் பாசிட்டிவ் என உறுதிப்படுத்தப்பட்டால், அவர்களைத் தனிமைப்படுத்த வேண்டும்.
ஆனால், சென்னையில் அரசு மருத்துவமனைகளிலோ ஆரம்ப சுகாதார மையங்களிலோ அறிகுறி இல்லாதவர்கள் பரிசோதனை செய்துகொள்வதற்கு வரவேற்பு இல்லை. தனியார் மையங்களில் பரிசோதனை செய்துகொள்பவர்களுக்கு மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு அவசியம். இது மட்டுமல்லாமல் தன் வீட்டிலோ அருகிலுள்ள பகுதியிலோ யாருக்கேனும் கரோனா தொற்று உறுதியானவுடன், தமக்குப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று பாதுகாப்பு உணர்வுடன் சிந்திப்பவர்களிடம் பரிசோதனை செய்துகொள்வதற்கு எதிரான மனநிலை உருவாக்கப்படுவதாகவே நாம் கேள்விப்படும் தகவல்களிலிருந்து உணர்ந்துகொள்ள முடிகிறது.
பரிசோதனை வேண்டாம்
சில நாட்கள் காய்ச்சல் கண்டு விடுபட்ட நண்பர் ஒருவர், தானாக முன்வந்து தனியார் பரிசோதனை மையம் ஒன்றில் கரோனா தொற்றுக்குப் பரிசோதனை எடுத்துக்கொண்டார். அவருக்குத் தொற்று இருப்பது உறுதியானது. அதையடுத்து மருத்துவமனையிலும் பராமரிப்பு மையத்திலும் சில நாட்கள் இருந்துவிட்டு, வீட்டிலும் சில நாட்கள் அவர் தனித்து இருக்க வேண்டியிருந்தது. ஆனால், மாநகராட்சி ஊழியர்களோ நண்பரின் 60 வயதைக் கடந்த தந்தை, தாய் மற்றும் மனைவி ஆகியோருக்கு அறிகுறி இல்லாததால் பரிசோதனை செய்யத் தேவையில்லை என்று கூறியிருக்கிறார்கள். அந்த வீட்டில் அறிகுறி இல்லாமல் ஒருவர் இருந்தால்? அவர் மூலம் இன்னொருவருக்குப் பரவித் தீவிர நோய்த்தொற்று ஏற்பட்டால் என்ன ஆகும்?
இன்னொரு நண்பருக்கு தொற்று உறுதியாகி சிகிச்சை, தனிமைப்படுத்தல் முடிந்து வீடு திரும்பினார். அவரைச் சந்தித்த நகராட்சி ஊழியர் ஒருவர், “நான்தான் அறிகுறி இல்லாதபோது பரிசோதனை செய்துகொள்ளாதீர்கள் என்று சொன்னேனே? இப்போது உங்களுக்குத்தான் தேவையில்லாத சிரமம். பரிசோதனை செய்தால் எல்லாருக்குமே தொற்று இருப்பதாகக் காட்டுகிறது. எனவே, நோய் அறிகுறி இல்லாதவர்கள் பரிசோதனை செய்துகொள்ளாமல் இருப்பதே நல்லது” என்று கூறிவிட்டுச் சென்றிருக்கிறார்.
இன்னொரு நண்பரின் உறவினருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது. உடனடியாக ஒரு பராமரிப்பு மையத்தில் அவர் தங்கவைக்கப்பட்டார். அறிகுறி எதுவும் இல்லை. தனிமைப்படுத்துதல் காலம் முடிவதற்கு முன்பாகவே அவரை அனுப்பி, வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டார்கள். பல வீடுகள் ஒரே கழிப்பறையை பயன்படுத்தும் குடித்தனப் பகுதியில் வசிப்பவர் அவர். அவரால் எப்படித் தனிமைப்படுத்திக்கொள்ள முடியும்?
வேறோரு நண்பர் வீட்டில் நடந்த விஷயம் இன்னும் அதிர்ச்சியளிக்கிறது. அவர் வசிக்கும் தெருவில் ஒருவர் கரோனா வால் இறந்துவிட்டார். அதையடுத்து நண்பர் வீட்டில் உள்ள நால்வரும் பரிசோதனை செய்துகொண்டார்கள். அனைவருக்கும் தொற்று இருப்பது உறுதியானது. அடுத்தநாள் அவர்கள் வீட்டுக்கு வந்த மாநகராட்சி ஊழியர்கள், அறிகுறி இல்லாதபோது ஏன் பரிசோதனை மேற்கொண்டீர்கள் என்று சற்று கடுமையாகவே கேட்டிருக்கிறார்கள்.
இந்தச் சம்பவங்கள் வேறு வேறு இடங்களில் நிகழ்ந்தவை என்றாலும், இவை எல்லாமே பரிசோதனை செய்துகொள்வதற்கு எதிரான மன நிலையை உருவாக்குகின்றன. மற்றொரு புறம் இதுபோன்ற அறிகுறி இல்லாதவர்களால் மற்றவர்களுக்கு கரோனா பரப்பப்படுவதைப் பற்றிய அலட்சியமும் பெரிதாக இருப்பதைப் பார்க்க முடிகிறது.
சுமைகுறைப்பு நடவடிக்கையா?
பரிசோதனைப் பணியாளர்கள் - ஏற்பாடுகளால் ஏற்பட்ட சுமை, மருத்துவ மனைகள், பராமரிப்பு மையங்களில் இடப்பற்றாக்குறை ஆகியவை காரணமாக பரிசோதனை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கையை குறைக்க அரசு முயல்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. தொற்றுள்ளவர்கள், அவர்களுடன் ஒரே வீட்டில் இருந்தவர்கள் வெளியே வராமல் தனிமைப்படுத்திக்கொள்வதை உறுதிசெய்ய அரசும் மாநகராட்சி நிர்வாகமும் பல நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. ஆனால், தொற்று உறுதி செய்யப்பட்டபின் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள அனு மதிக்கப்படுபவர்களுக்கு தனிக் கழிப்பறை-தனியறை போன்ற வசதிகள் இருக்கின்றனவா, உண்மையிலேயே அவர்கள் தனிமைப்படுத்திக்கொள்வது சாத்தியமா என்பதையெல்லாம் உறுதி செய்வதற்கு என்ன ஏற்பாடு இருக்கிறது?
கரோனா என்பது பெருமளவு அறிகுறி யற்ற நோய். முறையான பரிசோதனை, அதன் பிறகு நோய் கண்டவர்களைத் தனிமைப்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் மட்டுமே கரோனா பரவுவதை திட்டவட்டமாகக் கட்டுப்படுத்த முடியும். ஆனால், தேசிய அளவில் கரோனா தொற்றுள்ளவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் இரண்டாவது இடத்திலும், தேசிய அளவிலான நோயாளிகளில் 10 சதவீதம் பேர் சென்னையிலும் உள்ளனர்.
இந்நிலையில் பரிசோதனைகளை ஊக்குவிக்காமல், பரிசோதனை செய்ய முன்வருபவர்களையும் நிராகரிக்கும் போக்கு கரோனா தொற்றுப் பரவலை அதிகரிக்கவே செய்யும். இந்த நோயைக் கட்டுப்படுத்துவது இயலாத ஒன்றாக கைமீறிப் போய்விடும் சாத்தியமும் இதில் இருக்கிறது. இந்தப் பின்னணியில் அரசின் செயல்பாடுகள் பரிசோதனைகளை ஊக்குவிப்பதாகவும் இயன்ற அளவு அதிகரிக்கும் வகையிலும் இருக்க வேண்டும். இல்லையென்றால், இந்த நோயைத் தமிழகத்தில் கட்டுப்படுத்துவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுவிடும்.