Published : 04 Jul 2020 09:35 AM
Last Updated : 04 Jul 2020 09:35 AM

சிறிய மருத்துவமனைகளுக்கு சீல் வைப்பது சரியா? - ஒரு மருத்துவரின் குரல்

மருத்துவரான நான், தென் மாவட்டம் ஒன்றில் சிறிய மருத்துவமனையை நடத்திவருகிறேன். எங்கள் மாவட்டத்தில் கோவிட்-19 நோயாளிகள் எண்ணிக்கை 500-யை ஒட்டிய அளவிலேயே இருக்கிறது. ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டு முதல் இரண்டு மாதங்களுக்கு மருத்துவமனையைத் திறக்கவில்லை. தொடர்ந்து கேட்டவர்களுக்கு தொலைபேசி மூலமாகவே ஆலோசனை வழங்கிவந்தேன். இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஜூன் மாதத்தில்தான் மருத்துவமனையைத் திறந்தேன்.

தனிநபர் பாதுகாப்பு உடை, முகக்கவசம், கண் கவசம் ஆகியவற்றை அணிந்துகொண்டு பல்வேறு சிக்கல்களுடன்தான் நோயாளிகளைப் பார்த்துவருகிறேன். கடந்த இரண்டு வாரங்களாக காய்ச்சல் நோயாளிகள் அதிக அளவில் வருகிறார்கள். நம்மைத் தேடி வருபவர்களுக்கு சிகிச்சை தர முடியாது என்று கூறுவது சாத்தியமில்லை. அதனால் நெருக்கடிகள் இருக்கும்போதும், நோயாளிகளைப் பரிசோதித்து மருந்துகளைப் பரிந்துரைத்துவருகிறேன். அறிகுறியற்ற கரோனா நோயாளி மூலம் மருத்துவமனையில் இருக்கும் எங்களுக்கும் நோய் பரவுவதற்கு இருக்கும் சாத்தியத்தைத் தாண்டியே, இந்த சிகிச்சைகளை வழங்கிவருகிறோம்.

அதிகரிக்கும் காய்ச்சல்

எங்கள் மருத்துவமனைக்கு சில கட்டடங்கள் தள்ளி மற்றொரு மருத்துவமனை உள்ளது. இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற வந்து சென்ற நோயாளி ஒருவருக்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு கோவிட்-19 பாசிட்டிவ் என்று தெரியவந்தது. இதையடுத்து அந்த மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டுவிட்டது. இது சற்று சிக்கலான நிலையை ஏற்படுத்துகிறது. கோவிட்-19 என்பது உலக அளவிலான ஒரு போராட்டம். அந்த வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் முன்களப் பணியாளர்கள் நேரடியாகவும் மற்றவர்கள் மறைமுகமாகவும் போரிட்டுவருகிறார்கள்.

இந்நிலையில், கோவிட்-19 தவிர்த்த மற்ற உடல்நலப் பிரச்சினைகளும் மக்களுக்குத் தோன்றாமல் இல்லை. குறிப்பாக சமீபத்திய வாரங்களில் தமிழகத்தின் பல பகுதிகளில் வேறு வகைக் காய்ச்சல்களும் பரவிவருகின்றன. இந்நிலையில் அனைத்து நோயாளிகளும் அரசு மருத்துவ வசதிகளை மட்டுமே நாடுவது சாத்தியமில்லை. அப்படியே நாடினாலும், அரசு மருத்துவக் கட்டமைப்பால் மட்டுமே அனைத்து நோய்களையும் இந்த இக்கட்டான தருணத்தில் சமாளிப்பது கடினம். அது மட்டுமல்லாமல் அரசு மருத்துவக் கட்டமைப்பு வசதியை அதிகமானோர் நாடும்போது, கோவிட்-19 நோயாளிகள் மூலம் மற்றவர்களுக்கு அந்த நோய் பரவுவதற்கான சாத்தியமும் அதிகரிக்கிறது.

என்ன செய்யலாம்?

இவ்வளவு பிரச்சினைகள் இருக்கும்போது அரசு மருத்துவக் கட்டமைப்பு மூலமே அனைத்து நோய்களுக்கும் இந்த இக்கட்டான காலத்தில் சிகிச்சை அளித்துவிட முடியுமா? திட்டவட்டமான வழிகாட்டு நெறிமுறைகளுடன் சிறிய மருத்துவமனைகள் உட்பட தனியார் மருத்துவமனைகள் செயல்பட அனுமதிக்கலாம். மாறாக, ஒரு மருத்துவமனைக்கு வந்து சென்றவருக்குக் கோவிட்-19 வந்தது என்பதாலேயே, அந்த மருத்துவமனைக்கு சீல் வைப்பது எப்படி சரியாக இருக்கும்? அரசே ஒவ்வொரு பகுதியிலும் காய்ச்சல் சிகிச்சை மையங்களை ஏற்பாடு செய்யலாம். அங்கு காய்ச்சலுடன் வருபவர்களில் யாருக்குக் கோவிட்-19 இருக்கிறது என்பதை அடுத்த கட்டமாகக் கண்டறியலாம்.

அப்போது கோவிட்-19 நோயாளிகள் மற்ற மருத்துவமனைகளை நாடுவது குறையும். மற்ற நோய் இருப்பவர்கள் தாங்கள் வழக்கமாகப் பார்த்துவரும் மருத்துவர், மருத்துவமனைக்குச் செல்வது எளிதாகும். இதுபோன்ற நடைமுறைகளைப் பின்பற்றாமல், பொத்தாம் பொதுவாக சிறிய மருத்துவமனைகளை முடக்குவது சரியான போக்கு தானா? கரோனா பாதிப்பு தொடர்கிற இந்தக் காலத்தில் நோயாளிகளுக்கும் மருத்துவமனைகளுக்கும் சேர்த்தே இது பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

- பெயர் வெளியிட விரும்பாத மருத்துவர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x