

டாக்டர் கு. தங்கவேல்
அருகிலுள்ள கடையில் காய்கறிகளை வாங்கிக்கொண்டிருந்தபோது யாரோ ஒருவர் தெரியாமல் என்னருகே நெருங்கி வந்துவிட்டார். என்னால் விலகி நிற்க முடியவில்லை. இதனால் கோவிட்-19 தொற்றி விடுமோ என்று நான் கவலைப்படுவது சரியா?
அவசியமில்லை. நாவல் கரோனா வைரஸ் தொற்று கொண்டவர்களுடன் நேரடித் தொடர்புகொள்வதால்தான் இந்த நோய் பெரும்பாலும் தொற்றுகிறது, இது போன்ற நிகழ்வுகள் மூலம் தொற்று பரவுவதற்கான சாத்தியம் மிகக் குறைவு. தொற்றுநோய் பரவுதல் சார்ந்த ஆய்வுகள், மூடப்பட்ட அறைகள் அல்லது மக்கள் நெரிசல் மிகுந்த இடங்களில் அதிக நேரம் நெருக்கமாகத் தொடர்புகொண்டிருந்தவர்களுக்கே நோய்த்தொற்று பரவுவதற்கான சாத்தியக்கூறு அதிகம் என்று தெரிவிக்கின்றன.
வீட்டில் பயன்படுத்தும் காய்கறிகள், பால் பாக்கெட்டுகளை சோப்பு நீர் கொண்டு கழுவ வேண்டுமா?
காய்கறிகளைத் தண்ணீரில் கழுவுவது எப்போதும் நல்லது. சோப்பு நீரில் கழுவுவது நல்லதல்ல, இது தேவையற்ற எதிர்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். காய்கறிகள், பழங்கள், பூக்களுக்கான மிகப்பெரிய மொத்த விற்பனைச் சந்தையான சென்னை கோயம்பேடு, கோவிட்-19 பெருமளவில் பரவுவதற்கான மையமாக மாறியது.
தொலைதூர இடங்களிலிருந்து வந்த ஆயிரக்கணக்கான (கேரளத்திலிருந்தும்கூட) விற்பனையாளர்கள், சுமைக்கூலித் தொழி லாளர்கள் போன்றோர் இவர்களில் உண்டு. பல்வேறு காரணங்களால் சந்தையுடன் தொடர்புடைய நபர்கள் பலருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டது. ஆனால், நோய்த்தொற்றுத் தடமறிதலில் ஒரு தொற்றுகூட, அந்த அங்காடியில் விற்கப்பட்ட காய்கறிகளின் மூலமாக ஏற்படவில்லை எனத் தெரியவந்துள்ளது. எனவே, காய்கறிகள் மூலம் வைரஸ் பரவுவதற்கு கோட்பாடு அடிப்படையில் சாத்தியம் உள்ளதே தவிர, உண்மையில் அவ்வாறு பரவுவதற்கான வாய்ப்பு அரிதினும் அரிது.
அஞ்சல்/கூரியர் மூலம் பெற்ற பொருள்களின் வழி கோவிட்-19 தொற்று வருவதற்கான ஆபத்து உள்ளதா?
அட்டைப் பெட்டிகள், சிப்பங்களில் 24 மணி நேரத்துக்கு தொற்றக்கூடிய நிலையில் வைரஸ் இருக்கும் என்பது செயற்கையாகக் கட்டுப்படுத்தப்பட்ட ஆய்வுக்கூட பரிசோதனை மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் நடைமுறை யதார்த்தத்தில், வேறுபட்ட சூழ்நிலைகள் - வெப்பநிலை மாற்றங்களுக்கு உள்ளான பொருட்கள் மூலம் தொற்று பரவும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
செய்தித்தாள்கள், நாணயங்கள், பணத் தாள்கள், ஏ.டி.எம். கார்டு மூலமாக கோவிட்-19 தொற்று பரவுமா?
மேற்கண்டவற்றின் மூலம் கோவிட்-19 பரவியதற்கான நோய்ப்பரவுதல் சான்றுகள் எதுவும் இல்லை. எனவே, இது குறித்து யாரும் அதீத பயம் கொள்ளத் தேவையில்லை. என்றாலும், இயன்றவரை சோப்பைக் கொண்டு கைகளை கழுவுவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தவறாமல் கடைபிடிப்பது நல்லது.
குளிர்சாதனக் கருவி மூலம் நாவல் கரோனா வைரஸ் பரவுமா?
சுவாச நோய்களை ஏற்படுத்தும் வைரஸ் வகைகள் வெவ்வேறு அளவிலான நீர்த்திவலைகள் மூலம் பரவும்: சற்றே பெரிய 5-10 மைக்ரான் விட்டம் கொண்டவை திவலைகள் என்றும், 5 மைக்ரானுக்கும் கீழான விட்டம் கொண்டவை திவலைக் கரு (Droplet nuclei) எனவும் குறிப்பிடப்படுகின்றன. திவலைகள், அவற்றின் எடை காரணமாக விரைவாக ஒரு இடத்தில் படிந்துவிடும்.
ஆனால், திவலைக் கருக்கள் நீண்ட நேரம் காற்றில் மிதக்கக்கூடியவை. அவை காற்றின் மூலம் ஒரு மீட்டருக்கும் அதிகமான தொலைவுக்குப் பரவும் தன்மை கொண்டவை. தற்போதுள்ள ஆதாரங்களின்படி, சார்ஸ்-கோவ்-2 வைரஸ் முதன்மையாகத் திவலைகள் மூலமே பரவுகிறது.
என்றாலும் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் வென்டிலேட்டர் வசதி போன்ற தீவிர சிகிச்சை முறைகளின்போது, காற்றில் பரவும் திவலைக் கருக்கள் நோயாளியின் வாய், மூக்கு ஆகிய பாகங்களிலிருந்து வெளிப்பட்டு சுற்றியுள்ள காற்றில் தங்கியிருப்பது ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது. ஆனாலும், திவலைக் கருக்கள் காற்றின் மூலம் பரவுவதற்கான சாத்தியம் தீவிர சிகிச்சைப் பிரிவு போன்ற இடங்களைத் தவிர்த்த மற்ற இடங்களில் மிகமிக அரிதே. எனவே, குளிர்சாதனக் கருவிகள் மூலம் இந்த நோய் பரவுவதற்கான சாத்தியம் கிட்டத்தட்ட இல்லை.
என்றாலும், சூடேற்றம், காற்றோட்டம், குளிர்சாதனக் கருவி சார்ந்த (Heating, Ventialtion, Air Conditioning - HVAC) கூட்டமைப்புகள் / சங்கங்கள், கோவிட்-19 நோய்த்தொற்றுப் பரவலின்போது குளிர்சாதனக் கருவிகளைப் பயன்படுத்தும் முறை குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளன. இதன்படி வீட்டிலுள்ள குளிர்சாதனக் கருவியின் காற்றை மறுசுழற்சி செய்ய வேண்டும். குளிர்சாதனக் கருவி இயங்கும்போது ஜன்னல்களை சற்றே திறந்துவைப்பதன் மூலம் வெளிக்காற்று உள்வருமாறு செய்வதால், காற்று மறுசுழற்சி செய்யப்படுகிறது. அந்த வீட்டில் நோய்த் தொற்றுக்குள்ளான நபர், குளிர்சாதனக் கருவி பொருத்தப்பட்ட தனிமை அறையில் இருந்தால், இந்த வழிகாட்டுதல் பொருந்தும்.
மையப்படுத்தப்பட்ட குளிர்சாதனக் கருவி கொண்ட அலுவலகம் போன்ற இடங்களில், அந்தக் குளிர்சாதனக் கருவியிலேயே, வெளிக்காற்று உள்வருவதற்கான அமைப்பு இருந்தால், அவற்றை இயக்கலாம். அவ்வாறு வெளிக்காற்றை உள்ளெடுக்கும் கருவி பொருத்தப்படாமல் இருந்தால், ஜன்னல்களை சிறிது திறந்துவைக்க வேண்டும். தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்தல், அடிக்கடி கைகழுவுதல், முகக்கவசம் அணிதல், அலுவலகத்திலும்- பொது இடங்களிலும் தரையை சுத்தப்படுத்துதல் ஆகியவற்றை முறையாகக் கடைப்பிடித்தபடியே, குளிர்சாதனக் கருவி செயல்முறை வழிகாட்டுதல்களையும் சேர்த்துப் பின்பற்றும்போது நோய்ப்பரவல் பெருமளவில் தடுக்கப்படுகிறது.
நாங்கள் சிறிய வீட்டில் வசிக்கிறோம், எங்களுடைய முதுமையான பெற்றோ ரிடம் உடல்ரீதியான இடைவெளியை எப்படி அனுசரித்து, அவர்களுக்குத் தொற்று ஏற்படாமல் பாதுகாக்க முடியும்?
இது மிகவும் கடினமானதுதான். ஆனாலும் ஒன்றை முக்கியமாக நினைவில் கொள்ள வேண்டும் – வைரஸ் தொற்று ஏற்படுவது பல்வேறு சாத்தியக்கூறுகளின் அடிப்படையில் அமைவது. வைரஸை எதிர்கொள்ளும் எல்லோரும் தொற்றைப் பெறுவதில்லை; தொற்றைப் பெற்றவர்கள் எல்லோரும் நோயுறுவதில்லை; நோயுற்றுவர்கள் அனைவரும் இறந்து போவதுமில்லை. தொற்றைப் பெறுவதற்கான சாத்தியத்தைக் குறைக்கக் குறைக்க நோயுறுவதற்கான சாத்தியக்கூறுகளும் குறையும்.
வயதில் சிறியவர்கள், முதியவர்களிடமிருந்து உடலளவில் அதிகபட்ச இடைவெளியை பராமரிக்கும் பட்சத்தில், அவர்களுக்கு வைரஸ் தொற்றுவதற்கான சாத்தியமும் குறையும். எடுத்துக்காட்டாக, முதுமையான தந்தை/தாய்/தாத்தா/பாட்டி ஆகியோருக்குப் பிரத்யேகமாக ஒரு நாற்காலியை ஒதுக்கிக் குடும்பத்தில் உள்ள யாரும் அதைப் பயன்படுத்த வேண்டாமெனக் கூறலாம்; கோடைக் காலத்தில், வீட்டுக்கு வெளியே சிலர் தூங்குவது போன்ற நடைமுறையையும் பின்பற்றலாம். இதுபோன்ற வேறு பல உத்திகளை ஒவ்வொரு குடும்பமும் தங்கள் சாத்தியத்துக்கு உட்பட்டுக் கண்டறிய வேண்டும்.
கோவிட்-19 இல் இருந்து குணமடைந்த ஒருவர், மீண்டும் நோய்தொற்றுக்கு உள்ளாக முடியுமா?
கோவிட்-19 இல் இருந்து குணமடைந்த ஒருவர் மீண்டும் பாதிக்கப்படுவார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. தென்கொரியாவின் தொடக்க அறிக்கைகள் சிலவற்றில் நோயிலிருந்து மீண்டவர்கள் என்று நம்பப்பட்ட சிலர், மீண்டும் தொற்றுக்கு ஆளானதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அவர்களில் சிலருக்கு முந்தைய பரிசோதனையில் தொற்றில்லை (False Negative) என்று தவறாகவும் (அ) சிலருக்கு இரண்டாம் பரிசோதனையில் இறந்த வைரஸ் பகுதிகளும் கண்டறியப்பட்டதால் மீண்டும் தொற்று ஏற்பட்டுவிட்டது என்று தவறாகவும் (False Positive) அறிக்கை கொடுத்துவிட்டதாக பிற்பாடு விளக்கமளிக்கப்பட்டது.
கோவிட்-19 லிருந்து முற்றிலும் குண மடைந்த நபர் தொடர்ந்து வைரஸை பரப்பிக் கொண்டிருப்பாரா?
இல்லை. ஒரு நபர் நோயிலிருந்து முழுமையாக குணமடைந்தவுடன், அவரது உடம்பில் வைரஸ் இருக்காது. எனவே, அவர் தொடர்ந்து வைரஸை பரப்புவது சாத்தியமில்லை. இருந்தாலும், குணமடைந்த நபரை இரண்டு முறை பரிசோதிக்க வேண்டும். இரண்டு பரிசோதனைகளிலும் வைரஸ் இல்லையென்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
(இன்னும் சில கேள்விகளுக்கான பதில்கள் அடுத்த வாரம்)
கட்டுரையாளர், ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி தொற்றுநோயியல் துணைப் பேராசிரியர்
தொடர்புக்கு: thangavel@ehe.org.in