Published : 30 May 2020 08:25 AM
Last Updated : 30 May 2020 08:25 AM

நாவல் கரோனா வைரஸின் தன்மை மாறிவிட்டதா?

த.வி. வெங்கடேஸ்வரன்

‘நாவல் கரோனா வைரஸ் பத்து விதமான மரபியல் மாற்றங்களை சந்தித் துள்ளது: விஞ்ஞானிகள் அதிர்ச்சி' என்று பீதியைக் கிளப்புகிறது ஒரு செய்தி. மறுபுறம் 'இந்தியாவில் பரவும் நாவல் கரோனா வைரஸ் வகை கொஞ்சம் சாது, அதனால்தான் இறப்பு விகிதம் குறைவாக இருக்கிறது' என்று அதற்கு நேரெதிராக மற்றொரு தகவல்.

மாற்றம் என்பது பொது விதி, வைரஸும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால், பல மாற்றங்கள் வெறும் வெளித்தோற்றமே; சிலதான் உள்ளடக்க மாறுதல்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். மல்லிகை, கனகாம்பரம், சாமந்தி, பிச்சி என நான்கு வகை மலர்களை சேர்த்துகட்டிய கதம்ப மாலைபோல் a, u, g, c என்கிற நான்கு நியூகிளியோடைடுகளின் வரிசை அமைப்புதான் ஆர்.என்.ஏ. மரபணுத் தொகுதி.

வெவ்வேறு வகைவகையான உணவு வகைகளைத் தயார்செய்யும் செய்முறைகளைக் கொண்ட சமையல் புத்தகம்போல், ஒவ்வொரு உயிருக்கும் அதன் செயல்பாட்டுக்குத் தேவையான புரதங்களை தயார்செய்வது எப்படி என்கிற குறிப்புகள்தாம் a, u, g, c என்ற எழுத்துக்கள். இந்த எழுத்துகள் சங்கேத மரபணு மொழியில், மரபணுத்தொடரில் அந்தக் குறிப்புகளை எழுதியிருக்கின்றன.

மனிதன் - விலங்கு போன்ற உயிரினங்களில் இது இரட்டைச் சுருள் டி.என்.ஏ. வடிவத்தில் இருக்கும். நாவல் கரோனா வைரஸ் போன்றவற்றில் ஒற்றைச் சுருள் ஆர்.என்.ஏ. என்ற வடிவத்தில் இருக்கும். டி.என்.ஏ. தகவல்கள் a, t, g, c என்கிற நான்கு எழுத்துக்களிலும் ஆர்.என்.ஏ. a, u, g, c என்கிற நான்கு எழுத்துக்களிலும் எழுதப்பட்டிருக்கும். மரபணு மொழியைப் படித்து அதில் கூறப்பட்டுள்ள செய்தியை ஓரளவுக்கேனும் அறியும் ஆற்றலை மனித குலம் பெற்றுள்ளது. இதுதான் மூலக்கூறு உயிரியலின் அடிப்படை.

மரபணுத் தொடர் வரிசை

நுண்ணுயிரியின் மரபணுவை எடுத்து எழுத்து எழுத்தாக வரிசைப்படுத்துவதுதான் மரபணுத் தொடர் வரிசை. 'அகரமுதல' என்பதுதான் முதல் திருக்குறளின் முதல் ஆறு எழுத்துகள் என்றால், சுமார் 30,000 நியூகிளியோடைடு எழுத்துக்களைக் கொண்ட நாவல் கரோனா வைரஸின் மரபணுத் தொடரில் முதல் 21 எழுத்துக்கள் இவை: auuaaagguuuauaccuuccc.

மரபணு எழுத்துக்கள், குறிப்பிட்ட அமினோ அமிலத்தை சுட்டும். அந்த அமினோ அமிலங்களை கதம்பம்போல் குறிப்பிட்ட வரிசையில் கோக்கும்போது, தேவையான புரதம் உருவாகும். சமையல் குறிப்பில் எழுத்தைக் கூட்டி வார்த்தை; வார்த்தைகளை இணைத்து வாக்கியம். வாக்கியங்களைத் தொகுத்து செய்தி என நாம் வாசிப்பதுபோல் ரிபோசோம் போன்ற செல் உறுப்புக்கள் மரபணு வரிசையை வாசித்து, அமினோஅமிலங்களை சேர்த்துக் கோத்து, அதில் குறிப்பிடப்படும் புரதங்களை தயாரிக்கின்றன.

‘Wuhan-Hu-1' என்ற சீன நோயாளியிடமிருந்து கடந்த ஆண்டு டிசம்பர் 26 அன்று வைரஸ் சோதனை மாதிரி எடுக்கப்பட்டு, நாவல் கரோனா வைரஸின் மரபணு வரிசை முதன்முதலில் வரிசைப்படுத்தப்பட்டது. இந்த மரபணு வரிசையைப் படித்து, இந்த வைரஸ் 29 புரதங்களை உருவாக்கும் செய்முறைகளை தன்னுடைய ஆர்.என்.ஏ.வில் பதிந்துவைத்துள்ளது என்பது கண்டறியப்பட்டுவிட்டது.

திடீர் மரபணு மாற்றம்

நமது செல்களுக்குள் புகுந்து அதிலிருந்து ஆற்றல், மூலப்பொருள், செல் கருவிகளைக் களவாடி தனது பிரதியை நகல்செய்துப் பெருகுவதற் காகவே நம் மீது வைரஸ் தொற்றுகிறது. வைரஸின் ஆர்.என்.ஏ.வைப் படியெடுத்துப் புதியபுதிய நகல்களை வைரஸ் உருவாக்குவது இதில் முக்கியக் கட்டம்.

எதிர் வீட்டு சமையல் குறிப்பை பார்த்து நாம் படியெடுக்கும்போது, அங்கே இங்கே எழுத்துப்பிழை ஏற்பட்டுவிடலாம் அதுபோல் வைரஸின் ஆர்.என்.ஏ.வை செல் உறுப்பு படியெடுக்கும்போதும், பிழைகள் ஏற்படுவது இயல்பு. மாணவ, மாணவிகளுடைய குறிப்பு களில் ஆசிரியர் பிழைதிருத்துவதுபோல் நாவல் கரோனா வைரஸின் அமைப்பிலும் பிழைதிருத்தும் அமைப்பு உள்ளது. எனவே, பொதுவான பிழைகளை இந்த அமைப்பு களைந்துவிடும் என்றாலும், யானைக்கும் அடிசறுக்கும் தானே.

இப்படித் தப்பித் தவறி மரபணுத் தொடரில் ஏற்படும் பிழைகளே, மரபணு திடீர் மாற்றம் (Mutation). எடுத்துக்காட்டாக, ஜனவரி 8 தேதி அன்று ‘WH-09' என்ற நோயாளியிடம் எடுக்கப்பட்ட வைரஸ் மரபணுத் தொடரை, முதல்முதலில் மரபணு வரிசைப்படுத்தப்பட்ட ‘Wuhan-Hu-1' வரிசையுடன் பொருத்திப் பார்க்கப்பட்டது. இதில்தான் முதல் மரபணு திடீர் மாற்றம் கண்டறியப்பட்டது. முதல் நோயாளியினுடைய தொடரின் 186-வது எழுத்து ‘c'. ஆனால், புதிய நோயாளியிடம் தொற்றிய வைரஸில் அது ‘u' என்று மாறிவிட்டது. தமிழ்நாட்டிலிருந்து இதுவரை 18 நோயாளிகளின் வைரஸ் மாதிரிகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இதில் பதினேழு பேரின் வரிசையில் 1707-வது எழுத்து ‘c', ஒரே ஒருவரின் வரிசையில் இது ‘u'.

மாற்றமா, தோற்றமா?

மரபணு வரிசையில் ஏற்படும் எல்லா திடீர் மாற்றங்களும், வைரஸின் அடிப்படை குணத்தை மாற்றி விடுவதில்லை. அப்படி குணத்தை மாற்றக்கூடியதாக ஒரு மாற்றம் இருக்க வேண்டுமென்றால், அதன் 29 புரதங்களில் ஏதாவது ஒன்று உருவாகாமல் வேறு ஒரு புதிய புரதம் உற்பத்தியாக வேண்டும். அப்படி மாற்றம் ஏதாவது ஏற்பட்டால் கூடுதல் வீரியத்துடன் வைரஸ் நோய் பரவக்கூடும், அல்லது கூடுதல் ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். இப்படித் தான் புதிய துணையின எபோலா வைரஸ் உருவாகி, நோய்த்தொற்று ஏற்பட்ட பத்தில் நால்வர் இறக்கக் காரணமானது. சில வேளை திடீர் மாற்றங்களின் விளைவாக வைரஸின் வீரியம் குறைந்து, சாதுவான வரலாறும் உண்டு,

வைரஸ் வெளிப்படுத்தும் புரதங்களில் பெரும் மாற்றம் ஏற்படும்போது, அதை புதிய துணையினம் (Strain) எனப்படும். வெளிப் படுத்தும் புரதங்களில் பெரும் வேறுபாடு இல்லையென்றால், அந்த மாற்றம் வெறும் மேற்தோற்றத்தில் மட்டும்தான். அது வேற்று ருவம் (Varient) எனப்படும். புதிய துணையினமாக ஒரு வைரஸ் மாறினால்தான், புதிய குணங்கள் வெளிப்படும். வெறும் வேற்றுருவம் என்றால், நடத்தை எல்லாம் ஒன்றுபோலத்தான் இருக்கும்.

தனியினம் உருவாகியுள்ளதா?

இதுவரை உலகம் முழுவதும் 4,307 நோயாளி களிடமிருந்து வைரஸ் மாதிரி எடுக்கப்பட்டு, மரபணுத் தொடர் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் 198 திடீர் மாற்றங்கள் இனம் காணப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக புரதங்களில் மாற்றம் ஏதும் ஏற்பட்டுள்ளதா என மதிப்பீடுசெய்து பார்த்தபோது, குறிப்பிடத்தக்க புரத மாற்றம் ஏதும் தென்படவில்லை.

குறிப்பிட்ட வேற்றுருவ வைரஸ், மற்ற வேற்றுருவங்களைவிட கூடுதல் நபர்களிடம் தென்பட்டால், அதன் பரவும் விகிதம் கூடுதலாக இருக்கிறது என அனுமானிக்க முடியும். அதாவது வேற்றுருவ வைரஸ் வகைகளில், மற்றவற்றைவிட ஒன்று மட்டும் கூடுதலாகத் தொற்றுகிறது என்று பொருள். அப்படிப்பட்ட தரவுகளும் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. இதுவரை கிடைத்த தகவல்களின் அடிப்படையில், உலகில் எங்கும் வலிமை குன்றிய அல்லது வீரியமிக்க புதிய நாவல் கரோனா வைரஸ் துணையினம் உருவானதற்கு சான்று ஏதுமில்லை.

இந்தியாவில் ஆய்வு

இந்திய நோயாளிகளிடம் வேற்றுருவ வைரஸ் உருவாவதைக் கண்காணிக்கவும், அவற்றுக்கு ஏதாவது தனிக்குணம் இருக்கிறதா என ஆராய்ச்சிசெய்யவும் டெல்லியில் உள்ள ‘இன்ஸ்டிடியூட் பார் ஜீனோமிக்ஸ் அண்ட் இண்டகிரெடிவ் பயாலாஜி', ஹைதராபாத்தில் உள்ள ‘சென்டர் பார் செல்லுலர் - மாலிகுலர் பயாலாஜி' ஆகிய நிறுவனங்கள் இணைந்து ஆய்வுகளைத் தொடங்கியுள்ளன. இந்தியாவிலிருந்து இதுவரை 190 நோயாளிகளிடமிருந்து வைரஸ் பிரித்தெடுக்கப்பட்டு, மரபணுத்தொடரை வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

மக்களிடம் பரவலாக பரிசோதனை மாதிரிகளைச் சேகரித்து ஆய்வுசெய்து, ஏதாவது குறிப்பிட்ட வேற்றுருவ வைரஸ் கூடுதலாகப் பரவுகிறதா என ஆராய்ச்சி நடத்தப்படும். மேலும், நோய் அறிகுறியே வெளிப்படாமல் கிருமித் தொற்று ஏற்பட்டவர்கள் முதல், மிதமான அறிகுறி, கடுமையான அறிகுறி, தீவிர நிலைக்கு சென்று மரணம் அடைந்தவர்கள்வரை உள்ள நோயாளிகளிடமிருந்து வைரஸ் மாதிரிகளைச் சேகரித்தும் ஆய்வு நடத்தப்படும். இதன் தொடர்ச்சியாக நோயின் தன்மைக்கும் அவர்களைத் தாக்கும் வேற்றுருவ வைரஸுக்கும் தொடர்பு உள்ளதா என்பதை அறியலாம். இப்படிப்பட்ட தீவிர ஆய்வுகளுக்கு பிறகே, புதிய துணையினம் உருவாகியுள்ளது என்ற முடிவை எட்ட முடியும்.

கட்டுரையாளர், மத்திய அரசின் விஞ்ஞான் பிரசார் நிறுவன விஞ்ஞானி

தொடர்புக்கு: tvv123@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x