

ஜெய்
இந்தியாவின் முதல் கரோனாத் தொற்று நோயாளர் கேரளத்தில்தான் கண்டறியப்பட்டார். முன்னதாக, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மற்றொரு உயிர்க்கொல்லி வைரஸான நிபா, கேரளத்தைத் தாக்கியிருந்தது. கரோனா வைரஸ் தாக்குதல் அதன் பிறப்பிடமான வூகானில் மருத்துவம் பயின்ற கேரளத்தைச் சேர்ந்த மாணவர்கள் மூலம் வந்தது என்பதற்கு உறுதியான ஆதாரம் இருக்கிறது. ஆனால், நிபா எப்படி வந்தது என்பதே தெரியாத சூழலில் கேரள சுகாதாரத் துறை அதை எதிர்கொள்ள நேரிட்டது. அதிகாரிகள், சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவர்கள், தன்னார்வலர்கள் ஆகியோர் இணைந்து நடத்திய அந்த தீரமிக்க மருத்துவப் போராட்டம், உலக சுகாதாரத் துறை வரலாற்றில் நினைவுகூரப்படும் நிகழ்வு.
2018, மே 5-ல் கேரளத்தின் முதல் நிபா தாக்குதல் சந்தேகிக்கப்பட்டது. கோழிக்கோடு ‘பேபி மெமோரியல் மருத்துவமனை'யில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் விநோதமான காய்ச்சலால் உயிரிழந்தனர். அதற்குப் பிறகு, அந்த மருத்துவமனை மருத்துவர் அனூப், இது நிபாவாக இருக்கலாம் எனச் சந்தேகித்தார். ஆனால் சந்தேகம் உறுதியாவதற்கு முன்பு இந்த வைரஸ் வேகமாகப் பரவத் தொடங்கியிருந்தது.
கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை இந்த விநோதமான காய்ச்சலுடன் அனுமதிக்கப்படுவோருக்குச் சிகிச்சை அளிக்க முடியாமல் திணறியது. இந்த நிலையில் கோழிக்கோடு மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கோழிக்கோடு பொதுப்பணித் துறை விடுதி நிபாவுக்கான சிறப்பு அலுவலகமாக மாற்றப்பட்டது. கேரள சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா தலைமையில் அந்த அலுவலகம் பணியைத் தொடங்கியது.
இந்த உயிர்க்கொல்லி வைரஸிடம் இருந்து மக்களைக் காப்பற்றுவது, இது தீவிரவாதத் தாக்குதல் அல்ல என நிரூபிப்பது ஆகிய இரண்டு விதங்களில் நிபா வைரஸ் தாக்குதல் கேரள சுகாதாரத் துறைக்கு சவாலாக மாறியது. இந்த இரண்டு விஷயங்களையும் நோக்கி அந்தப் புதிய அலுவலகம் செயல்படத் தொடங்கியது. விரிவான குழு அமைக்கப்பட்டது; நிபா பாதிப்பு உறுதியானவர்கள் குறித்த விவரங்கள் - அவர்களுடைய தொடர்புகள் விசாரித்து அறியப்பட்டன. எல்லோரையும் இந்தக் குழு கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவந்தது.
இதற்கிடையில் நோயாளிகளுடன் தொடர்பே இல்லாதே பலரும் இந்த நோய்த் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பது கண்டறியப்பட்டது. இந்த இடத்தில் மத்திய அரசுப் பிரநிதிகள், இதைத் தீவிரவாதத் தாக்குதல் எனச் சந்தேகித்ததாக நிபாவைப் பின்னணியாகக் கொண்டு 2019-ல் ஆஷிக் அபு இயக்கத்தில் வெளியான 'வைரஸ்' என்னும் படம் சொல்கிறது. நிபாவின் முதல் நோயாளியின் பெயர் முகமது சாபித். மேலும் அவர் ஒன்றுக்கும் அதிகமான சிம் கார்டுகளை பயன்படுத்துவராக இருந்தார். இதெல்லாம் அந்தச் சந்தேகத்துக்கான ஆதாரமாக முன்வைக்கப்பட்டதாகப் படம் சொல்கிறது.
நிபாவைக் கையாண்ட பின்னணி
இந்தப் பின்னணியில் இந்த வைரஸ் தாக்குதலை இரண்டு கோணங்களில் விசாரிக்க முடிவெடுக்கப்பட்டது; ஒன்று, தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு இடையிலான தொடர்பு. இரண்டு, முதன்மை நோயாளியான சாபித்துக்கு நோய் வந்த காரணம். நிபா குழுவைச் சேர்ந்த சீது பொன்னுத்தம்பி என்னும் முதுநிலை மருத்துவ மாணவி, இந்த நோயாளிகளுக்குள் உள்ள தொடர்பை விசாரணை மூலம் கண்டறிந்துவிடுகிறார். மருத்துவமனையில் முதன்மை நோயாளி எக்ஸ்ரே எடுக்கக் காத்திருந்தபோது மற்றவர்களுடன் தொடர்பு ஏற்படுகிறது. அவர்கள் மூலம் மற்றவர்களுக்கும் அது தொற்றியதாகக் கண்டறியப்பட்டது.
மணிபால் வைராலஜி நிறுவன மருத்துவர் அருண்குமார், நிபா வைரஸ் தொற்றின் மூலத்தை சாபித்தின் இன்ஸ்டாகிராம் பக்கம் வழி கண்டுபிடித்தார். சாபித் கையில் வெளவால் இருக்கும் ஒளிப்படத்தின் மூலம் அது நிரூபிக்கப்பட்டது. இது ஒருபுறம் இருக்க படத்துக்கு வெளியே, இதைக் குணப்படுத்தும் முறைக்காக ஏற்கெனவே நிபாவைக் கையாண்ட அனுபவம் கொண்ட மலேசியாவின் உதவியை கேரள அரசு நாடியது. மேலும் நிபா வைரஸ் ஆராய்ச்சியாளரான ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிறிஸ்டோபர் பிராடரின் உதவியும் நாடப்பட்டது. அதன்மூலம் ஆஸ்திரேலியாவிலிருந்து மருந்து இறக்குமதி செய்யப்பட்டு குணப்படுத்தப்பட்டது. அரசின் நடவடிக்கையால் நோய் பரவலும் கட்டுப்படுத்தபட்டது.
நிபா வைரஸ் மூலம் பெற்ற அனுபவத்தால், கரோனாவை தொடக்கத்திலேயே கேரளம் கவனத் துடன் கையாண்டது. தொற்று கண்டுபிடிக்கப்பட்டதும் கேரள முதல்வர் பினராயி விஜயன், அதை மாநிலப் பேரிடராக அறிவித்தார். அப்போது இந்தியாவில் கரோனா குறித்து விழிப்புணர்வே உருவாகியிருக்க வில்லை. அவர்களுக்கு ஏற்கெனவே கிடைத்திருந்த அனுபவத்தால், வூகானிலிருந்து நேரடியாக நோய்த்தொற்று கண்ட முதல் மூன்று நோயாளிகளும் குணமாகி வீடு திரும்பிவிட்டனர். ஆனால் ஐரோப்பா வழியாக வந்த தொற்றுதான் கேரள சுகாதாரத் துறைக்குச் சவாலாக மாறியது.
சவாலான தொற்று
மார்ச் முதல் வாரத்தில் பத்தனம்திட்டை ராணி பகுதியைச் சேர்ந்தவர் கரோனா அறிகுறியுடன் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் கரோனா பாதிப்புள்ள நாடுகளுக்குப் பயணிக்காதவர். அவருக்கு எப்படி இந்தத் தொற்று வந்தது என்ற விசாரணையில், அவருடைய அயல் வீட்டுக் குடும்பம் பற்றி சுகாதாரத் துறைக்குத் தெரியவந்தது. அந்தக் குடும்பம் இத்தாலியிலிருந்து தோகா வழியாக பிப்ரவரி 29-ல் வந்துள்ளது. அவர்கள் சுகாதாரத் துறையிடம் தெரிவிக்காமல் விமான நிலையத்திலிருந்து தப்பிவந்துவிட்டனர் என சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா, கேரள சட்டப்பேரவையில் குற்றம்சாட்டினார். தனியார் மருத்துவமனையில் அவர்கள் மருந்து வாங்கியதை விசாரணை மூலம் சுகாதாரத் துறை அதிகாரிகள் கண்டறிந்த பின்னர், மருத்துவமனைக்கு வர அவர்கள் சம்மதித்துள்ளனர்.
அதன் பிறகும் சென்ற இடங்களைப் பற்றிய விசாரணைக்கும் அவர்கள் ஒத்துழைக்கவில்லை. சி.சி.டி.வி. கேமரா, செல்போன் ஆகியவற்றைக் கொண்டு அவர்கள் சென்ற இடங்களைக் குறித்து விரிவான பட்டியல் ஒன்றைத் தயாரித்து விசாரித்த பிறகு ஒத்துக்கொண்டுள்ளனர். தேவாலயம், வங்கி, பல்பொருள் அங்காடி, அஞ்சலகம், உணவகம் என இந்தக் குடும்பம் 17 இடங்களுக்குச் சென்றுள்ளது. சென்ற இடங்கள், தேதி, செலவழித்த நேரம் ஆகியவற்றைக் கொண்டு கேரள சுகாதாரத் துறை ஜியோ டக் (Geotag) உடன் ஓர் வரைபடத்தை உருவாக்கியது.
இதை வெளியிட்டு அதில் குறிப்பிட்டுள்ள இடங்களில் அதே நாள், அதே நேரத்தில் இருந்தவர்கள் சுகாதாரத் துறையை அணுகக் கோரிக்கைவிடுக்கப்பட்டது. இந்தப் பணியில் நிபாவில் ஈடுபட்டதுபோல் தன்னார்வலர்கள் நூற்றுக்கணக்கானோர் ஈடுபட்டனர். தொற்றுக்கு ஆளானவர்களைக் கண்டறியும் பணியில் சுகாதாரத் துறையும் இறங்கியது. இந்தத் தேடுதல் மூலம் ஆயிரம் பேர் கண்டறியப்பட்டனர். கேரளத்தின் இரண்டாவது கரோனா தாக்குதலின் ஊற்றுக்கண்ணாக, இத்தாலியிலிருந்து திரும்பிய இந்தக் குடும்பம் ஆனது.
இந்த ராணி குடும்பம்போல், கோட்டயம் குடும்பமும் மூன்றாவது பெரும் பரவலுக்குக் காரணமானது. அந்தக் குடும்பத்தின் பயண விவரங்களையும் தீவிர விசாரணையில் கண்டறிந்து வெளியிட்டு, தொற்றுக்கு ஆளானவர்களைக் கண்டறியும் முயற்சியில் சுகாதாரத் துறை இறங்கியது. முதலில் தொற்று தீவிரமாக இருந்ததாகக் கருதப்பட்ட பத்தனம்திட்டை, கோட்டயம் மாவட்டங்களுக்கு அடுத்து காசர்கோட்டில் கரோனா நோய்த்தொற்று தீவிரமடைந்தது.
முன்மாதிரி மாநிலம்
கண்டறியப்பட்டவர்களில் நூற்றுக்கணக் கானோர் மருத்துவமனைக் கண்காணிப்பிலும் மற்றவர்கள் வீட்டுக் கண்காணிப்பிலும் வைக்கப்பட்டனர். இவர்களுடன் நாள்தோறும் தொடர்புகொண்டு நிலையை அறியத் தனிக் குழு அமைக்கப்பட்டது. தனிமைப்படுத்தப் பட்டவர்களுக்காக மனநல மருத்துவர்களும் நியமிக்கப்பட்டனர்.
அது மட்டுமல்லாமல் நாட்டிலேயே மிக அதிகமாக 20 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை கரோனா பேரிடரைச் சமாளிக்கக் கேரளம் ஒதுக்கியுள்ளது. இந்த நிலையில் மற்ற மாநில, மத்திய அரசுகளுக்கு முன்பே திரையரங்குகளையும் பள்ளிகளையும் மூட கேரள அரசு உத்தரவிட்டது. மாநிலத்துக்குள் இது விமர்சனம் செய்யப்பட்டாலும், பின்னால் மக்கள் ஊரடங்குக்கு பிரதமர் அழைப்பு விடுத்தது, கேரள அரசின் முடிவிலுள்ள நியாயத்தை உணர்த்தியது.
கடந்த வியாழன் இரவுவரை கேரளத்தில் 1,089 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவர்களில் 555 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 72 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கண்காணிப்பில் உள்ளனர். தேசியப் பரிசோதனை அளவுடன் ஒப்பிடும்போது, கேரளத்தில் அதிக அளவில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
குணமடைந்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இரண்டாம் கரோனா பரவலுக்குக் காரணமான ராணி குடும்பத்தினர், அவர்களுடைய குடும்பத்தைச் சேர்ந்த 93, 82 வயது முதியவர்கள் உட்பட பலர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதேபோல் இறப்பு விகிதம் நாட்டிலேயே மிகக் குறைவாக 0.58 ஆக உள்ளது. இதுவரை எட்டு பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர்.
திருவனந்தபுரத்தில் உள்ள சித்திரைத் திருநாள் மருத்துவ அறிவியல் தொழில்நுட்பக் கழகத்துக்கு பிளாஸ்மா சிகிச்சைக்கான அனுமதி கிடைத்துள்ளது. இந்த அனுமதியைப் பெற்ற முதல் மாநிலம் கேரளம். ஆனால் அதைப் பரிசோதித்துப் பார்க்க, தீவிரப் பாதிப்புக்கு உள்ளான கரோனா நோயாளிகள் கேரளத்தில் இல்லை என அந்நிறுவனத்தின் இயக்குநர் ஆஷா கிஷோர் தெரிவித்துள்ளார்.
தொடக்கத்தில் மகாராஷ்டிரத்துக்கு அடுத்தபடியாக அதிக கரோனா நோயாளிகளைக் கொண்டிருந்த கேரளம், தற்போது மொத்த நோயாளிகள் எண்ணிக்கையில் 17-வது இடத்துக்குப் பின்தங்கியிருப்பது நல்ல அறிகுறி. குணமடைந்தவர்களின் விகிதாச்சாரத்தில் நாட்டிலேயே முதல் மாநிலமாக உள்ளது. நிதி ஆயோக் அறிக்கையின்படி பொது சுகாதாரத் தரத்தில் தேசிய அளவில் கேரளம் முதலிடம் வகிப்பதற்கு இதைவிட வேறு சான்று எதுவும் தேவையில்லை.
கட்டுரையாளர் தொடர்புக்கு: jeyakumar.r@hindutamil.co.in