Published : 16 May 2020 08:44 am

Updated : 16 May 2020 09:03 am

 

Published : 16 May 2020 08:44 AM
Last Updated : 16 May 2020 09:03 AM

நாவல் கரோனா வைரஸ் 40 லட்சம் பேரைத் தொற்றியது ஏன்?

novel-corona-virus

இ. ஹேமபிரபா

நாவல் கரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க நமக்கு முன்னே இருக்கும் முதன்மைத் தீர்வு ‘சமூக இடைவெளி’. கிட்டத்தட்ட இரண்டு மாத காலம் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டதும்கூட, ஆய்வாளர்களின் அறிவுறுத்தலின்படியே. ஊரடங்கைத் தவிர்த்து சமூக இடைவெளி ஏன் தேவை – இந்தத் தொற்று ஒரு மனிதரிடம் இருந்து இன்னொரு மனிதருக்கு எளிதில் பரவக்கூடியது, அதைத் தடுக்கவே.

இதில் இன்னொரு முக்கியமான கேள்வி எழுகிறது. ஏன் நாவல் கரோனா வைரஸ் இவ்வளவு எளிதாகத் தொற்றுகிறது? இந்த கேள்விக்கு விடை தெரிந்தால், அதாவது வைரஸில் இருக்கும் எந்த பொருள் இப்படி தொற்று எளிதில் பரவக் காரணமாக இருக்கிறது; அல்லது மனிதனின் உடலில் உள்ள எந்த அம்சம் வைரஸை உடனே ஏற்றுக்கொள்கிறது என்பது தெரிந்தால், அதற்கேற்றவாறு மருந்து கண்டுபிடித்துத் தொற்றைத் தடுத்து விடலாம்தானே!

சார்ஸும் கோவிட்டும்

கரோனா வைரஸின் வடிவம் குறித்து மக்கள் பரவலாக அறிந்திருக்கிறார்கள். கரோனா என்றால் கிரீடம் என்று பொருள். நுண்ணோக்கி வழியே காணும்போது – கரோனா வைரஸ்களின் மேற்பரப்பு கிரீடத்தைப் போல் தோன்றுவதால், இந்தப் பெயர். சாதாரண சளியை ஏற்படுத்தும் கரோனா வைரஸில் இருந்து, இறப்பை ஏற்படுத்தக்கூடிய சார்ஸ் (SARS), மெர்ஸ் (MERS) போன்ற ஏழு கரோனா வைரஸ் நோய்களைப் பற்றி மனிதர்களுக்குத் தெரியும். பொதுவாக, சுவாசப் பாதை சார்ந்த நோய் அறிகுறிகளை இவை ஏற்படுத்துகின்றன. இப்போது நம்மை பயங்கரமாக அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கரோனா வைரஸின் பெயர் - SARS-CoV-2. இந்த SARS-CoV-2 வைரஸ் நமக்கு ஏற்படுத்திக்கொண்டிருக்கும் நோயின் பெயர் கோவிட்-19 (COVID-19). COVI என்றால் COronaVIrus, D என்றால் Disease, 19 என்பது இந்த நோய் கண்டறியப்பட்ட ஆண்டு.

2003-2004-ம் ஆண்டு காலத்தில் ஏற்பட்ட சார்ஸ் நோய்தொற்றை ஏற்படுத்திய கரோனா வைரஸின் பெயர் SARS-CoV. இந்த இரண்டு வைரஸ்களும் அடிப்படை வடிவத்தில் ஒன்று போல் இருக்கின்றன; முதலாவது வௌவாலிடம் இருந்து மரநாய்க்கும், பிறகு மனிதர்களுக்கும் பரவியது. கோவிட்-19-ம் அதேபோல் பரவியிருக் கலாம் என்று கருதப்படுகிறது. இத்தனை ஒற்றுமை இருந்தாலும், சார்ஸ் வைரஸ் சுமார் 8,000 பேரிடம் மட்டுமே தொற்றி யது. ஆனால், கோவிட் உலகம் முழுவதும் லட்சக்கணக்கில் பரவியிருக்கிறதே ஏன்?

இனப்பெருக்கம் நடைமுறை

மனிதன் இனப்பெருக்கம் செய்ய கருமுட்டையும் விந்துவும் தேவை. பெண்ணின் உடலில் இவை இணைந்து கரு வளர்கிறது. அதாவது, தன் இனப்பெருக்கத்தை, மரபுத்தொகுதி கடத்துதலை தன்னுடைய உடலின் மூலம் அந்தப் பெண் செய்கிறார். பெரும்பாலான பாலூட்டிகள் இதுபோலவே செய்கின்றன. வேறொரு விலங்கின் உடல் தேவைப்படுவதில்லை. ஆனால், வைரஸால் இதைப் போன்று செய்ய முடியாது. வைரஸ் தன்னுடைய மரபுத்தொகுதியைப் பெருக்க வேண்டுமானால், வேறொரு உயிருள்ள பொருள் தேவை, அதாவது ஓம்புயிர் (Host). கரோனா வைரஸ் பரவுவதற்கு, நம்முடைய உடல்தான் ஓம்புயிர்.

குயிலுக்குக் கூடு கட்டத் தெரியாது. அதன் காரணமாக காகத்தின் கூட்டில் குயில் முட்டையிட்டுச் செல்கிறது. அந்தக் குயில் முட்டையை அடைகாத்து, காகம் குஞ்சை வளர்க்கிறது! அதுபோல், வைரஸ் தன்னுடைய மரபுத்தொகுதியைக் கடத்த மனித செல்களைப் பயன்படுத்திக்கொள்கிறது. நன்றாக இயங்கிக் கொண்டிருக்கும் மனித செல்லின் உள்ளே தன் மரபுத்தொகுதியை வைரஸ் செலுத்தும். வைரஸின் மரபுத்தொகுதியை இனப்பெருக்கம் செய்யும் வேலையை, அதாவது படியெடுக்கும் வேலையை மனித செல்களே செய்துவிடும். தன் வேலையைப் பார்க்காமல், வைரஸின் மரபுத்தொகுதியைப் பெருக்கிக்கொண்டிருக்கும் மனித செல் அழிந்துபோகும். இப்படியே ஒவ்வொரு செல்லாக வைரஸ் அழித்துவிடும். நம்முடைய உடல் உறுப்புகள் ஒவ்வொன்றும் நுணுக்கமான செல்களால் ஆனவை. அதனால், அந்தச் செல்கள் அழியும்போது, கடைசியில் உடல் உறுப்பும் செயலிழந்துவிடுகிறது. இப்படித் தான் கரோனா வைரஸால், மனிதர்களுக்கு இறப்பு நேர்கிறது.

எல்லா மனித செல்லுடனும் இணையுமா?

கரோனா வைரஸ் தன் மரபுத்தொகுதியைக் கடத்த வேண்டும், பெருக வேண்டுமென்றால், முதலில் மனித செல்லுடன் இணைய வேண்டும்! மனித உடலில் இருக்கும் எல்லா செல்களிலும் கரோனா வைரஸால் இணைய முடியாது. எடுத்துக் காட்டாக, கரோனா தொற்றுள்ள ஒருவரைத் தொட்டால் நம் கைகளில் வைரஸ் ஒட்டியிருக்கும். ஆனால், கைகளில் இருக்கும் செல்களுடன் கரோனா வைரஸால் இணைய முடியாது. ஒருவேளை கைகளைக் கழுவாமல் சாப்பிட்டு நம் உடலின் உள்ளே வைரஸ் நுழைந்தாலும்கூட, குறிப்பிட்ட மனித செல்களுடன் மட்டும்தான் கரோனா வைரஸால் இணைய முடியும்.

எப்படி இணைகிறது?

ஏற்கெனவே சொன்னதுபோல கரோனா வைரஸின் மேற்பரப்பு கிரீடம்போல் இருக்கும். அதில் ஈட்டி முனை போன்ற அமைப்புகள் இருக்கும். இந்த முனைகள் புரதத்தால் (protein) ஆனவை. இதை ஈட்டிமுனைப் (spike) புரதம் என்கிறார்கள். இந்த முனை மனித செல்லின் பரப்புடன் சரியாகப் பொருந்த வேண்டும். நுரையீரலில் உள்ள செல்களில் ACE2 என்னும் பெறுநர் நொதி (enzyme) இருக்கும். கரோனா வைரஸின் புரதம், இந்த ACE2 அமைப்புடன் எளிதில் பொருந்திவிடுகிறது. மிக மிக நன்றாகவும் பிணைப்புடனும் பொருந்திவிடுகிறது. எடுத்துக்காட்டாக, ஒரு சரியான சாவி ஒரு பூட்டில் பொருந்திக்கொள்வதுபோல், இது பொருந்தி விடுகிறது. இந்த ACE2 நொதி, நுரையீரல் மட்டுமில்லாமல் இதயம், சிறுநீரகம், குடல் ஆகிய உறுப்புகளிலும் இருக்கும். அதனால்தான், கரோனா தொற்று ஏற்பட்டால் இந்த உறுப்புகள் முதலில் பாதிப்புக்கு உள்ளாகின்றன.

இந்த நிலைவரை சார்ஸ் வைரஸும் நாவல் கரோனா வைரஸும் ஒன்றுபோலத்தான் இருக்கின்றன.

வேகமாகப் பரவுதல்

சார்ஸ் வைரஸ் தானாக மனித செல்லுடன் இணைந்தால்தான் உண்டு. ஆனால், நாவல் கரோனா வைரஸுக்கு இன்னொன்றும் உதவுகிறது. மனித செல்லில் உள்ள ஃபியூரின் (furin) என்னும் நொதிதான் அது. மனித செல்லுடன் இணைய வரும் கரோனா வைரஸின் பரப்பில் இருக்கும் ஈட்டிமுனைப் புரதத்தின் செயல்பாட்டை இந்த ஃபியூரின் அதிகரிக்கும். இதனால், நாவல் கரோனா வைரஸால் அதிக வீரியத்துடன் மனித செல்லுடன் இணையவும் முடியும், வேகமாகப் படியெடுத்து மற்ற செல்களுக்கும் எளிதில் பரவவும் முடியும்.

சார்ஸ் வைரஸின் பரப்பில் இருக்கும் ஈட்டிமுனைப் புரதத்தின் அமைப்புக்கும், நாவல் கரோனா வைரஸின் ஈட்டிமுனைப் புரதத்துக்கும் வேறுபாடு உண்டு. எனவே, நம் உடலில் உள்ள ஃபியூரின் நொதியால் சார்ஸ் வைரஸூடன் வினைபுரிய முடிவதில்லை. அதனால், சார்ஸ் நோயானது கோவிட் நோயைவிட விரைவாகப் பரவவில்லை என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

எளிதில் பரவுவதற்கு இதுவே காரணமா?

தட்டம்மையை உண்டாக்கும் வைரஸ், கொசுக்களால் பரவிய ஸிகா (Zika) வைரஸ், எய்ட்ஸ் நோயை உண்டாக்கும் HIV வைரஸ் போன்ற வைரஸ் வகைகள் எளிதில் தொற்று வதற்கு, ஃபியூரின் நொதி உதவிசெய்கிறது. சளி, காய்ச்சலை உண்டாக்கக்கூடிய குறிப்பிட்ட இன்ஃபுளூயன்சா (Influenza) வைரஸ் தொற்றுக்கும் ஃபியூரினின் உதவி தேவைப்படுகிறது.

ஆனால், நாவல் கரோனா வைரஸ் விஷயத்தில் இந்த கருத்தை எல்லா ஆய்வாளர்களும் அப்படியே ஏற்றுக்கொள்ளவில்லை. 1918-ம் ஆண்டு பரவிய ஸ்பானியக் காய்ச்சலை (Spanish flu) உண்டாக்கிய இன்ஃபுளூயன்சா வைரஸில் ஃபியூரின் நொதியின் பங்கு எதுவும் இல்லை. அந்த வைரஸில் ஃபியூரின் நொதி செயல்படுவதற்கு ஏற்றபடி எந்த புரதமும் இல்லை. இருந்தும்கூட உலகம் முழுதும் ஐம்பது கோடி பேருக்கு அந்த நோய் பரவியது. அதனால், ஃபியூரின் நொதி மட்டும் நாவல் கரோனா வைரஸ் பரவலுக்கு காரணமாக இருக்காது, மற்ற விஷயங்களையும் ஆய்வுசெய்ய வேண்டும் என்கிறார்கள் சில ஆய்வாளர்கள்.

தெரிந்துகொள்வதால் என்ன பயன்?

ஃபியூரின் நொதிதான் நாவல் கரோனா வைரஸ் பரவலுக்குக் காரணம் என்பது உறுதியாக நிறுவப்பட்டால், ஃபியூரினின் செயல்திறனைக் குறைக்கும் மருந்துகள் பயன்பாட்டுக்கு வரும். மருத்துவத் துறைக்கு இது புதிதில்லை. GBP என்னும் புரதம், ஃபியூரின் நொதியின் செயல்திறனை குறைக்கும். எய்ட்ஸ், தட்டம்மை உள்ளிட்ட பல வைரஸ் நோய்களுக்கு எதிராக, ஏற்கெனவே அது பயன்படுத்தப்பட்டுவருகிறது. இப்படி ஒரு சாத்தியக்கூறு இருப்பதால், தடுப்பூசி மட்டுமல்லாமல் இது போன்ற மருந்துகளைக் கண்டுபிடிப்பது குறித்தும் ஆய்வுசெய்துவருகிறார்கள்.

ஆனால், இன்னொரு விஷயமும் இதில் இருக்கிறது. ஃபியூரின் நமக்குத் தீங்கு மட்டும் விளைவிக்கவில்லை. நம்முடைய நோய் தடுப்பாற்றல் மண்டலத்தின் செயல்பாட்டுக்கும் இது உதவியாக இருக்கிறது. கரோனா நோய்த்தொற்றுக்கு காரணமாக இருக்கிறது என்பதால், இதன் செயல்பாட்டை நிறுத்திவிட்டு, வேறு ஏதாவது கிருமி நுழைவதற்கு வழிவகுத்து விட்டால் என்ன செய்வது? அந்த வழி சரி என்று தோன்றினாலும், ஒன்றைச் செய்யப்போய் அது பக்கவிளைவுகளை ஏற்படுத்திவிட்டால் என்ன செய்வது? அதனால்தான் நாவல் கரோனா வைரஸ் போன்ற புதிய வைரஸ் குறித்த ஆய்வுகள் தொடர்பான காலம் நீண்டுகொண்டே போகிறது. ஒரு தொற்றுநோயைப் புரிந்துகொள்வதில் இதுபோன்ற அறிவியல் பின்னணியைத் தெரிந்துகொள்வதும் அவசியமாகிறது.

கட்டுரையாளர், இஸ்ரேல் டெக்னியான் தொழில்நுட்ப நிறுவன ஆராய்ச்சியாளர்

தொடர்புக்கு: hemazephyrs@gmail.com


நாவல் கரோனா வைரஸ்Novel corona virusCorona virusசார்ஸ்கோவிட்SARSMERS

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author