Published : 25 Apr 2020 08:25 AM
Last Updated : 25 Apr 2020 08:25 AM

சிகிச்சை அறிவியல்: தடுப்புமருந்து எனும் எதிர்ப்பாயுதம்!

சஹஸ்

சமகாலத்தின் மோசமான உலகளாவிய தொற்றுநோயாக கோவிட்-19 கரோனா வைரஸ் உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. நோயால் பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு விகிதம் குறைவாக இருந்தாலும், உலகெங்கிலும் மிக வேகமாகப் பரவிவருவதுதான் இந்த அச்சத்துக்குக் காரணம். அதனால்தான் உலக சுகாதார அமைப்பு, கரோனாவை உலகளாவிய தொற்றுநோய் (pandemic) என அறிவித்துள்ளது.

உலகில் இதுவரை பத்து நோய்கள் உலகளாவிய தொற்றுநோய்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன:

1. எச்.ஐ.வி./எய்ட்ஸ் (பொ.ஆ. 2005-2012 உச்ச காலம்)

2. ஃபுளு பான்டெமிக் (பொ.ஆ. 1968)

3. ஆசிய ஃபுளு (பொ.ஆ. 1957)

4. ஃபுளு உலகளாவிய தொற்றுநோய்

(ஸ்பானிய ஃபுளு) (பொ.ஆ. 1918)

5. ஆறாவது காலரா உலகளாவிய

தொற்றுநோய் (பொ.ஆ.1910–1923)

6. ஃபுளு உலகளாவிய தொற்றுநோய் (பொ.ஆ. 1889-1890)

7. மூன்றாவது காலரா உலகளாவிய

தொற்றுநோய் (பொ.ஆ.1852-1860)

8. பூபானிக் பிளேக் (பொ.ஆ.1346-353)

9. ஜஸ்டினியன் பிளேக் (பொ.ஆ. 541-542)

10. அன்டோனைன் பிளேக் (பொ.ஆ. 165)

இந்த உலகளாவிய தொற்றுநோய்களால் பல்லாயிரக்கணக்கான மக்கள் மாண்டனர். ஆனால், இவற்றைக் காட்டிலும் சுமார் நான்கு நூற்றாண்டு களாக உலக மக்களைப் பாதித்தக் கொடிய கொள்ளைநோய் (epidemic) பெரியம்மை ஆகும் (smallpox). ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு விரைவாகப் பரவி, சில நூற்றாண்டுகளில் உலகின் கோடிக்கணக்கானவர்களின் மரணத்துக் கும் பார்வை பறிபோனதற்கும் பெரியம்மை எனும் கொடிய நோய் காரணமாக இருந்தது. பெரியம்மையின் தோற்றமும், பின்னர் அது அறிவியல்பூர்வமாக ஒழிக்கப்பட்ட விதமும், இன்றைய சூழலில் அவசியம் அறிய வேண்டிய வரலாறு!

பெரியம்மையின் தோற்றம்

சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முன்பே, பெரியம்மை நோய் எகிப்தில் தோன்றியதாகக் கருதப்பட்டது. ஆனால், ஐரோப்பியக் கண்டத்தில் உள்ள லிதுவேனியாவில் 2016-ல் கிடைத்த ஒரு குழந்தையின் பதப்படுத்தப்பட்ட சடலம் (மம்மி) இந்தக் கருத்தைப் புரட்டிப்போட்டது. பெரியம்மை நோய்க்குக் காரணமான வரியோலா (variola) எனும் வைரஸ், அந்தக் குழந்தையின் சடலத்தில் இருந்தது. அந்த வைரஸ் மாதிரிகள் கனடாவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி பரிசோதனை செய்ததில், அவை பெரியம்மை வைரஸ் என்று தெரியவந்தது. அந்த வைரஸின் டி.என்.ஏ. மூலத்தை ஆராய்ந்ததில், அதன் மூதாதை பொ.ஆ. 1530 - 1654 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட பொதுக் காலத்தில் (common era) தோன்றியுள்ளதாகத் தெரிகிறது; எனவே, பெரியம்மையின் தொடக்கம் சில நூற்றாண்டுகளுக்குமுன் நிகழ்ந்ததுதான்.

ஐரோப்பாவில் முதலில் பரவிய பெரியம்மை, பின்னர் ஐரோப்பியர்களின் காலனியாதிக்கம் காரணமாக பல நாடுகளுக்கும் பரவியது. வட, தென் அமெரிக்கக் கண்டங்களில் மட்டும் பொ.ஆ. 16,17-ம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் சுமார் 90 சதவீத செவ்விந்தியர்கள் பெரியம்மை உள்ளிட்ட தொற்றுநோய்களுக்குப் பலியாகினர். இதை ஜாரெட் டயமண்ட் தனது ‘துப்பாக்கிகள், கிருமிகள், எஃகு’ நூலில் விரிவாகப் பதிவுசெய்துள்ளார்.

பெரியம்மையின் பாதிப்புகள்

உலகில் இதுவரை லட்சக்கணக்கான மக்கள் பெரியம்மையால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 18-ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் மட்டும் ஆண்டுக்கு சராசரியாக எட்டு லட்சம் பேர்வரை இந்த நோயால் பாதிக்கப்பட்டனர். 20-ம் நூற்றாண்டில், சுமார் முப்பது முதல் ஐம்பது கோடி பேர் மாண்டனர். 1950-களின் தொடக்கத்தில் ஐந்து கோடி பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டனர். இந்தியாவில் 1868 தொடங்கி 1907 வரை சுமார் 47 லட்சம் பேர் பெரியம்மைக்குப் பலியானார்கள். 1926 முதல் 1930 வரை, இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எனப் பதிவுசெய்யப்பட்ட 9,79,738 பேரில் 42.3 சதவீதத்தினர் மரணத்தைத் தழுவினார்கள்.

பொதுவாக, பெரியம்மையால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் முப்பது சதவீதத்தினர் பலியாகினர். மற்றொரு முப்பது சதவீதத்தினருக்குப் பார்வை பறிபோயிற்று. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் முகத்தில் ஆழமான அம்மை வடுக்கள் உருவாகின. இந்த நோய் தாக்கிய ஒருவருக்கு முதலில் உள்வாயிலும் தொண்டைக்குள்ளும் கொப்புளங்கள் தோன்றும்; பிறகு பதினைந்து நாட்களில் உடலெங்கும் பரவும். நோயாளிக்குக் கடுமையான காய்ச்சல் ஏற்படும். கொப்புளங்கள் உடைந்து அதிலிருந்து சீழ் வடியும். நோயாளியின் அருகில் செல்பவர்கள், இதனால் பாதிக்கப்படுவார்கள். இதன் கிருமிகள் காற்றிலும் பரவும்.

பெரியம்மைக்குக் காரணம் அறியாத மக்கள், இந்த நோயிலிருந்து தங்களைக் காப்பாற்ற கடவுளை வேண்டினார்கள். அம்மை நோயிலிருந்து, சீதள்மாதா என்ற கடவுள் தங்களைக் காக்கும் என்ற நம்பிக்கை வடஇந்தியாவில் நிலவுகிறது; தமிழ்நாட்டில் மாரியம்மன் வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது.

ஜென்னரின் வருகை

இங்கிலாந்தின் பெர்க்லி நகரைச் சேர்ந்த ஒரு மருத்துவர், எட்வர்ட் ஜென்னர். ஒருமுறை சாரா நெம்ஸ் என்ற பால்காரப் பெண்ணின் கையில் அம்மைக் கொப்பளங்கள் இருப்பதை ஜென்னர் பார்த்தார். ஆனால், அப்பெண்ணின் உடலில் வேறெங்கும் கொப்பளங்கள் இல்லை; அவருடைய கையில் இருந்ததைப் போன்ற கொப்பளங்கள் பால் சுரக்கும் மாட்டின் மடியிலும் இருப்பதை ஜென்னர் கவனித்தார். மாடுகளுக்கு ஏற்படும் இந்த அம்மை (Cow Pox), சாராவின் கைகளுக்குப் பரவியுள்ளது என்பதைக் கண்டுபிடித்தார்.

பசு அம்மையால் மனிதர்களுக்குப் பெரியம்மை ஏற்படவில்லை என்றால், இரண்டுக்கும் நிச்சயமாக ஏதோ தொடர்பு இருக்கும் என்று அவர் கணித்தார். சாராவின் கொப்பளங்களின் சீழ், பிறருடைய உடலில் செலுத்தப்பட்டால் பெரியம்மை நோய்க்கான எதிர்ப்பாற்றலை அது உருவாக்குமா என்று பரிசோதிக்க முடிவுசெய்தார். அதற்காக சாராவின் கையில் உள்ள கொப்பளத்தின் சீழில் இருந்து ஒரு சிறு துளியை ஜேம்ஸ் பிப்ஸ் எனும் ஒன்பது வயதுச் சிறுவனின் கையில் செலுத்தினார்.

சில நாட்கள் கழிந்தபின் முன்னைவிடச் சற்று அதிகமான அளவில் மறுபடியும் அந்தச் சிறுவன் கையில் சீழைச் செலுத்தினார். ஆனால் இந்த முறை செலுத்தப்பட்டது பெரியம்மை நோய்க் கொப்பளத்திலிருந்து எடுக்கப்பட்டது. இது நிச்சயம் ஒரு நெறியற்ற பரிசோதனைதான். ஆனால், ஜென்னரே ஆச்சரியப்படத்தக்க வகையில் அந்தச் சிறுவனை பெரியம்மை தாக்கவில்லை; தன் மகன் மீதும் இதே பரிசோதனையைத் ஜென்னர் செய்து பார்த்தார், அவனையும் அம்மை தாக்கவில்லை!

ஜென்னரின் கண்டுபிடிப்பு மனிதகுலம் ஒரு பெரும் நோயிலிருந்து விடுபடுவதற்கான விடியலைத் தொடங்கிவைத்தது. ஜென்னர் தனது கண்டுபிடிப்பிற்கு ‘வாக்சின்’ (Vaccine) எனப் பெயரிட்டார். ‘வாக்சா’ என்றால் லத்தீன் மொழியில் பசு என்று பொருள். தனது பரிசோதனையின் ஆய்வறிக்கையை லண்டன் ராயல் சொசைட்டியில் 1797-ல் ஜென்னர் சமர்ப்பித்தார். ஆனால், போதுமான சான்றுகள் இல்லை என்று அவருடைய ஆய்வறிக்கை நிராகரிக்கப்பட்டது.

(அடுத்த வாரம் நிறைவடையும்)

கட்டுரையாளர் தொடர்புக்கு:

sahas.sasi@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x