Published : 11 Apr 2020 08:37 AM
Last Updated : 11 Apr 2020 08:37 AM

கரோனா பரிசோதனை: ஏன் இவ்வளவு தாமதம்?

கார்த்திக் பாலசுப்ரமணியன்

நாட்டில் கரோனா தொற்று அதிவேகமாகப் பரவிவரும் இந்த வேளையில், சாதாரண சளி காய்ச்சல் வந்தவர்களும் உடனடியாக அஞ்சி, முதலில் கரோனா தொற்றுக்கான பரிசோதனையை செய்து பார்த்துவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால், இந்தப் பரிசோதனை டைபாய்டு அல்லது நீரிழிவுப் பரிசோதனை vபோல் எல்லா பரிசோதனை நிலையங்களிலும் எளிதில் செய்யக்கூடியது அல்ல.

கரோனா வைரஸ் கிருமிகளின் இருப்பை உறுதிசெய்ய உலக சுகாதார நிறுவனமும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகமும் வரையறைகளை வகுத்துள்ளன. இந்த வரையறைகளில் தேர்ச்சிபெறும் பரிசோதனைக் கூடங்கள் மட்டுமே, இந்தப் பரிசோதனையை செய்ய அனுமதிக்கபடும். இந்த வரையறைகளைச் சரியாக பின்பற்றாத நிலையில் இந்த பரிசோதனை மேற்கொள்பவர்களுக்கும், பரிசோதனைக்கு பிந்தைய உயிர்க்கழிவுகளிலிருந்தும்கூட தொற்று பரவலாம். இந்த பரிசோதனைக்கு ஏன் இவ்வளவு கால தாமதம் ஏற்படுகிறது என்ற கேள்வியும் பலருக்கும் இருக்கும். இந்த பரிசோதனையின் வரலாற்றையும் அதன் பின்னால் இருக்கும் அறிவியலையும் அதற்குப் புரிந்து கொள்ளவேண்டும்.

கண்டறியப்பட்ட விதம்

கரோனா தொற்றை உண்டாக்கும் வைரஸை 'SARS-CoV-2' என்று அழைக்கிறார்கள். இந்த வைரஸின் மரபுத்தொகுதி (genome), சார்ஸ் (SARS) வைரஸின் மரபுத்தொகுதியோடு 70% ஒத்து போவதால், SARS எனும் பெயர் ஒட்டிக்கொண்டது. சீனாவில் முதன்முதலில் இந்த வைரஸால் நோயுற்ற வர்களிடம் நடத்தப்பட்ட பல்வேறு பரிசோதனைகளுக்குப் பிறகு இது சார்ஸ் நோயாக இருக்கலாம் என்று முதலில் கருதப்பட்டது.

அதற்கான பரிசோதனைகளில், சார்ஸ் குடும்பத்தை சேர்ந்த வைரஸ் இதுவென்று கணடறியப் பட்டது. இந்த நோயைக் கண்டறிந்தபின் நான்கு நாட்களில் இந்த வைரஸின் மரபணுக்களை ஆராய்ச்சியாளர்கள் பிரித்தெடுத்தார்கள். பின்னர் அதைக் கண்டறிய துரித மூலக்கூறு மரபியல் பரிசோதனையை (rapid molecular genetic tests) வடிவமைத்தார்கள்.

இந்த முறைதான் தற்போது உலகமெங்கும் பின்பற்றப்படுகிறது. இது மிகவும் புதிய முறையாக இருப்பதால், இந்த ஆய்வுக்கான வேதிபொருட்களைத் தயாரிக்கும் நிறுவனங்களும் உற்பத்தி, வழங்கல் - பகிர்வில் பின்தங்கியே இருக்கின்றன. இந்தியாவில் முதலில் இறக்குமதி செய்யப்பட்ட வேதிபொருட்களை வைத்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது பூனேவிலுள்ள ஒரு தனியார் ஆய்வு நிறுவனம் இந்த ஆய்வுக்கான வேதிப்பொருட்களை தயாரித்து விநியோகிக்க அனுமதி பெற்றுள்ளது.

மாதிரி சேகரிப்பு

ஒருவருக்கு இந்த நோய் உள்ளதா என்பதை அறிய ஒரு கிருமியழிக்கப்பட்ட 'ஸ்வாப்' (ஒரு ஐஸ்கிரிம் குச்சியில் பஞ்சு இணைக்கப்பட்டதைப் போன்றது) மூலம் தொண்டையின் அடிபகுதியில், அதாவது மூச்சு குழாயின் மேல்பகுதிலிருந்து மாதிரி எடுக்கப்படும். இந்த பஞ்சில் நோய் உண்டாக்கும் வைரஸின் மரபணு இருக்கிறதா என்று பரிசோதனை செய்யப்படும். ரத்த மாதிரிகளை வைத்தோ நுண்ணோக்கியில் வைத்தோ வைரஸ் இருக்கிறதா என்று இந்த பரிசோதனையில் பார்க்கப்படுவதில்லை.

பெரும்பாலான உயிர்களின் மரபணுத்தொகுதிகள் டி.என்.ஏ.வால் (DNA) ஆனவை. ஆனால், பல வைரஸ்களின் மரபணுத்தொகுதிகள் ஆர்.என்.ஏ.வால் (RNA) ஆனவை. இந்த மரபணுத்தொகுதிகளில்தான் இந்த வைரஸின் செயல்பாடு, இதன் அமைப்பு உட்பட பல நூறு இயக்கங்கள் மூலக்கூறு வடிவில் எழுதப்பட்டிருக்கும். இந்த வைரஸை இயக்கும் ரிமோட் கண்ட்ரோல் என்று இதைச் சொல்லலாம். எடுத்துக்காட்டாக, SARS-CoV-2 ஒருவரின் உடலுக்குள் சென்றவுடன் என்ன வகையான புரதங்களைத் தயாரிக்க வேண்டும் என்ற வழிமுறைகள் இந்த மரபணுக்களிடம் உள்ளன. இந்த புரதங்கள்தான் இந்த நோய்க்கான அறிகுறிகள் வெளிப்படக் காரணமாக இருக்கின்றன.

உறுதிப்படுத்துவது எப்படி?

தொண்டையின் அடிப்பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரியில் வைரஸின் மரபணுக்கள் இருக்கலாம். அதாவது வைரஸின் ஆர்.என்.ஏ. ஆனால் எடுக்கப்படும் மாதிரியில் ஆர்.என்.ஏ.வின் அளவு மிகவும் குறைவாக இருக்கும். அதனால் வைரஸின் சொற்ப மரபணுவை, பல்லாயிரம் பிரதிகள் எடுக்கவேண்டும். அப்போதுதான் அது இருப்பதை உறுதிசெய்ய முடியும். சுருக்கமாகச் சொன்னால், முதலில் ஒரு எழுத்தை ஒரு சொல்லாக்கி, பின் சொற்களை வரிகளாக்கி, வரிகளை பக்கங்களாக்கி, பின் ஒரு புத்தகமாக்குவதைப் போன்றதுதான் இது.

இப்படி மரபணுவைப் பெருக்கும் முறை 'பலபடிவ நொதித் தொடர்வினை' (Polymerase Chain Reaction), சுருக்கமாக PCR எனப்படுகிறது. மேற்கூறியதுபோல் படிவம் எடுப்பதிலும் சிறிய சிக்கல் இருக்கிறது. அது என்னவென்றால் ஆர்.என்.ஏ.வை (RNA) சுலபமாகப் பிரதியெடுத்துவிட முடியாது என்பதே. ஆனால், டி.என்.ஏ.வை (DNA) எளிதாகப் பிரதியெடுக்கலாம். இதனால் மாதிரியில் இருக்கும் ஆர்.என்.ஏவை முதலில் டி.என்.ஏ.வாக மாற்ற வேண்டும். இதற்கு, எதிர் நகலெடுத்தல் (Reverse Transcription) என்று பெயர். எளிமையாகச் சொல்ல வேண்டுமென்றால் படச்சுருளில் இருந்து ஒளிப்படத்தை அச்சிடுவதைப் போன்றது இது.

பின்னர் டி.என்.ஏ.வை பல்லாயிரம் பிரதிகள் எடுத்து, அதில் SARS-CoV-2 வைரஸுக்கே பிரத்யேகமாக உள்ள மரபணுக்களைக் கண்டறிய வேண்டும். பின் அவற்றின் அளவைக் கணக்கிட வேண்டும். மரபணுவின் அளவை கணக்கிட உடனொளிர்வு சாயம் (Flouresence Dye) பயன்படுத்தப்படுகிறது. ஒரு மாதிரியில் வைரஸ் மரபணு இருந்தால், அது உடனொளிர்வை வெளிப்படுத்தும். அதை இயந்திரங்கள் கணக்கிட்டு ஒருவருக்கு கரோனா பாதிப்பு இருக்கிறதா என்று கூறும். இந்த பரிசோதனைகளை படிப்படியாகச் செய்ய 5-6 மணி நேரம் ஆகலாம். அதேநேரம், ஒரு நேரத்தில் எத்தனை மாதிரிகளை ஓர் ஆய்வகம் கையாளுகிறது என்பதைப் பொறுத்து, ஒரு மாதிரி பெறப்பட்ட காலத்திலிருந்து பரிசோதனை முடிவைப் பெறுவதற்கான காலம் அதிகரிக்கலாம்.

ஆய்வக அங்கீகாரம்

இந்தப் பரிசோதனைகளை மேற்கொள்ள வைரஸ் தொற்று பரவுவதற்கு சாத்தியமில்லாத பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட பரிசோதனைக் கூடங்கள் வேண்டும். அத்துடன் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தாலோ அதற்கு இணையான ஒரு ஆராய்ச்சிக் கழகத்தாலோ அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும். இது மட்டுமல்லாமல் மேற்கூறிய மரபணுப் பரிசோதனைகளை மேற்கொள்ளத் தேவையான வேதிப்பொருட்கள், கருவிகள் தேவைபடுகின்றன. இவை அனைத்துக்கும் மேலாக இந்தப் பரிசோதனையை மேற்கொள்ள தேர்ந்த பரிசோதனைக்கூட ஆய்வகர்களும் தேவைப்படுகின்றனர்.

இந்தியாவில் நோய்த்தொற்று கண்டறியப்பட்டது முதல் பரிசோதனைக்கான வேதி்ப்பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன. பூனேவில் உள்ள தேசிய வைரஸ் ஆராய்ச்சி நிறுவனத்தில் மட்டும் பரிசோதனை செய்யப்பட்டு வந்தது. தற்போது நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான அரசு, தனியார் பரிசோதனைக்கூடங்களில் கரோனா தொற்றுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்தியாவில் கரோனா பரிசோதனைக் கூடங்களின் விவரங்களை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தன்னுடைய இணையதளத்தில் வெளியிட்டுள்ளது (https://covid.icmr.org.in/index.php/testing-facilities).

இந்தியாவில் கரோனா தொற்று ஏற்பட்ட முதல் நாளில் இருந்ததைவிட, இன்று பல பரிசோதனை கூடங்கள் மேம்படுத்தப்பட்டிருந்தாலும், நமது மக்கள்தொகையுடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை மிகவும் குறைவே. இந்தியாவில் உள்ள அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்ய பல மாதங்களும், பல்லாயிரம் கோடி ரூபாயும் தேவைப்படும். அதனால்தான் நோய் அறிகுறி இருப்பவர்களுக்கும், நோயுற்றவருடன் தொடர்பில் இருப்பவர்களுக்கு மட்டும் பரிசோதனை செய்ய அரசு பரிந்துரைக்கிறது. இந்த நிலையிலும்கூட இதுவரை பல்லாயிரக்கணக்கான மாதிரிகளை அரசு மருத்துவத் துறை பரிசோதித்துள்ளது.

தற்போது எல்லோருக்கும் பரிசோதனை செய்ய உரிய அமைப்பு, பொருள் வசதி நம்மிடம் இல்லை. தற்போது அதிக நோயுற வாய்ப்புள்ளவர்களுக்கும் நோய்வாய்ப்பட்டவர்களுக்கும் மட்டும் பரிசோதனை செய்யப்படுகிறது. வேறு வகையான குறுகிய காலப் பரிசோதனை முறைகள் ஒப்புதல் பெறும் நிலையிலேயே உள்ளன. எனவே, ஒவ்வொருவரும் சமூக இடைவெளியைக் கடைபிடித்து நம்மை மட்டுமல்லாமல், நம் நாட்டையும் காப்பற்ற ஒத்துழைக்க வேண்டும்.

துரித முறை என்றால்?

சமீபத்திய கண்டுபிடிப்பான 'துரித கோவிட் கருவி', வைரஸின் மரபணுத்தொகுதிகளைத் தேடாமல், நோய் தொற்றுக்கு நம் உடல் வெளிப்படுத்திய எதிர்ப்பைப் பதிவுசெய்து, ஒருவருக்கு நோய் வந்ததைக் கண்டறிகிறது. எடுத்துக்காட்டாக, நாம் நாள்தோறும் வைக்கும் உணவை ஒரு நாய் வந்து உண்டு செல்கிறது என வைத்துக்கொள்வோம்.

மரபணு முறையில் கண்டறிவது என்பது, உணவை அது சாப்பிடும்போது நாம் நேரில் பார்ப்பதைப் போன்றது. இந்த துரித முறையில் நாயைக் காணாமல், அது உண்டு சென்ற பிறகு தட்டு காலியாக இருப்பதை வைத்து, நாய்தான் அதை சாப்பிட்டுப் போயிருக்க வேண்டும் எனத் தெரிந்துகொள்வதைப் போன்றது.
இந்த முறையில் கரோனா வைரஸுக்கு எதிராக நமது உடல் வெளிப்படுத்திய நோயெதிர்ப்பு பொருட்கள் கண்டறியப்படுகின்றன.

இந்தப் பொருள்கள் Antibodies எனப்படுகின்றன. இந்த துரித முறைபடி ஒருவருக்கு நோய்த்தொற்று இருக்கிறது என்று கண்டுபிடிக்க 30 நிமிடம் மட்டும் போதும். இந்த துரித முறை, கோவிட் நோயாளியை மற்றவர்களிடம் இருந்து வேகமாகப் பிரித்தறியும் முறை (Screening Process) மட்டுமே.

ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பதாக இந்த துரித முறையில் கண்டுபிடிக்கப்பட்டால், பின்னர் அதை உறுதிபடுத்த மரபணு முறைக்கு மாதிரி அனுப்பப்படும். இந்த முறையில் ஒரே நாளில் நாடெங்கும் பல்லாயிரம் பேருக்கு நோய்த்தொற்று இருக்கிறதா என்பதைக் கண்டறியலாம்.

கட்டுரையாளர், புனேயில் உள்ள அகர்கர் ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானி

தொடர்புக்கு: diatomist@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x