நோய்த்தொற்றிலிருந்து தப்பிக்க சித்த மருத்துவ வழிமுறைகள்

நோய்த்தொற்றிலிருந்து தப்பிக்க சித்த மருத்துவ வழிமுறைகள்
Updated on
2 min read

டாக்டர் வி.விக்ரம்குமார்

கரோனா வைரஸோ வேறு எந்த நோய்த்தொற்றோ அவை நம்மை தாக்காமல் இருக்க உடலையும் மனதையும் திடமாகவும் உற்சாகமாகவும் வைத்துக்கொண்டால்போதும். நோயிலிருந்து தற்காத்துக்கொள்ள சித்த மருத்துவம் முன்வைக்கும் நோய்த்தடுப்பு முறைகளை பின்பற்றுவது தற்போதைய சூழலில் கைக்கொடுக்கும். மரபு உணவு முறை, வாழ்க்கை முறை இப்போது அவசியம்.

பெருந்தொற்று நோயாக அறிவிக்கப்பட்டிருப்பதால் தனிநபர் சுகாதாரத்தை பேணுவது மிக மிக அவசியம். கைகளைக் கழுவ, மஞ்சள் கரைத்த நீர் அல்லது படிகாரம் கரைத்த நீரைப் பயன்படுத்தலாம். சிறந்த கிருமிநாசினி செய்கை கொண்டது மஞ்சள். மஞ்சள் கரைத்த நீரில் கைக்குட்டையை ஊறவைத்துப் பயன்படுத்தி வரலாம். மரபு முறைப்படி இருகைக் கூப்பி வணக்கத்தை தெரிவித்து நமது அன்பைப் பரிமாறலாம். அத்துடன் சில மணி நேர இடைவெளியில் கைகளைக் கழுவிக்கொண்டே இருக்க வேண்டும்.

வீடு, அலுவலகப் பகுதிகளை அடிக்கடி தூய்மைப்படுத்துவது நல்லது. மஞ்சள் கரைத்த நீர், திருநீற்றுப்பச்சிலை, நொச்சி, கற்பூரவள்ளி ஊறவைக்கப்பட்ட நீரை வீடு, வெளிப்பகுதிகளில் தெளிக்கப் பயன்படுத்தலாம். வெளியில் சென்று வந்தால் நிச்சயம் கை, கால், முகத்தை கழுவுவது அத்தியாவசியம். குழந்தைகள், முதியவர்களுக்கு நோய்த் தொற்று ஏற்படாமல் பார்த்துக்கொள்வது காலத்தின் கட்டாயம். கூட்டம் நிறைந்த பகுதிகள், தேவையில்லாத பயணங்களைத் தவிர்த்தல் நலம்.

உணவில் கவனம்

சூடாகத் தயாரித்த உணவை உட்கொள்வது அவசியம். வெயில் காலத்துக்கு இதமாக இருக்கும் என்பதற்காக தயவுசெய்து சில்லென்று இருக்கும் பன்னாட்டுக் குளிர்பானங்கள் வேண்டாம். குளிர்சாதனப் பெட்டியில் வைத்த உணவை எடுத்து உண்டு, நோய்களுக்கு வாசல் திறந்துவைக்க வேண்டாம்.

வேறு ஏதாவது நோய்தொற்றால் பாதிக்கப்பட்டு, தற்போதைய சூழலில் உடலின் நோய் எதிர்ப்புக் கட்டமைப்பை பலவீனப்படுத்தாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். உணவகங்களில் சாப்பிடுவதைத் தவிர்க்கலாம். பார்சல் உணவு, ஆன்லைனில் ஆர்டர் செய்யப்பட்ட உணவு போன்றவற்றையும் அடுத்த சில வாரங்களுக்குத் தவிர்ப்பதே நல்லது.

மிளகு, மஞ்சள் போன்ற நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் உணவுப் பொருட்களை அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்ளலாம். அஞ்சறைப் பெட்டியில் உள்ள பொருட்களுக்கு அதிகம் முன்னுரிமை கொடுக்கலாம். லவங்கப்பட்டை, அன்னாசிப்பூ, சுக்கு, கிராம்பு ஆகிய நறுமணமூட்டும் மருத்துவப் பொருட்களை சிறிதளவு எடுத்து குடிநீராக காய்ச்சிப் பயன்படுத்தலாம்.

பெரும்பாலான அஞ்சறைப் பெட்டிப் பொருட்களுக்கு கிருமிகளின் பெருக்கத்தை அழிக்கும் வன்மை உண்டு. பாக்கெட்டில் அடைத்த உணவுப் பொருட்களை கடைகளில் வாங்குவதற்கு பதிலாக, முடிந்தவற்றை வீட்டிலேயே தயாரித்து உணவாகக் கொள்ளலாம்.

இஞ்சித் தேநீர், சுக்குக் கஷாயம், மிளகு ரசம், தூதுவளைத் துவையல், புதினா சட்னி, சின்ன வெங்காயம், மிளகுத் தூவிய பழ ரகங்கள் உதவும். குறிப்பாக நெல்லிக்காய் சிறப்பான நோய் எதிர்ப்பாற்றலை வழங்கும். நம்மிடையே கீரைகளுக்குப் பஞ்சமில்லை. நாள்தோறும் கீரை, காய் வகைகளைச் சாப்பிட்டு நோய்களுக்குப் பஞ்சத்தை ஏற்படுத்தலாமே!

உதவும் மருந்துகள்

சளி, இருமல் போன்ற அறிகுறிகளைக் கட்டுப்படுத்த சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் ஆடாதோடை மணப்பாகு, கபசுரக் குடிநீர், தாளிசாதி சூரணம், அதிமதுரச் சூரணம் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளலாம். அதேநேரம் மருந்துகளைப் பயன்படுத்த சித்த மருத்துவரின் ஆலோசனை முக்கியம்.

அறிகுறிகளுக்கு ஏற்ப மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகள் ஆரோக்கியத்தை நிலைநாட்டும். கபசுரக் குடிநீரை தடுப்பு மருந்தாக பயன்படுத்தலாம். திரிகடுகு மாத்திரை, வசந்த குசுமாகர மாத்திரை போன்ற சிறப்புமிக்க சித்த மருந்துகள் நுரையீரலை வன்மைப்படுத்தி நோய்த்தொற்றை குறைக்கக்கூடியவை.

வாழ்க்கை முறையை பொறுத்தவரையில் இளவெயிலில் சிறுநடைக் கொள்வது; குளிர்சாதனப் பயன்பாட்டை தவிர்ப்பது; வெயில் படும்படி ஜன்னல், கதவுகளை திறந்துவைப்பது; நாள்தோறும் இரண்டு வேளைக் குளிப்பது; வாரம் இரண்டு முறை எண்ணெய்க்குளியல் எடுத்துக்கொள்வது; நிம்மதியான உறக்கம்; மகிழ்வான மனநிலை… ஆகிய அனைத்தும் நம் உடலை வலிமைப்படுத்தக் கூடிய மரபு முறைகள்.

சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ள கழிவை வெளியேற்றும் பேதி மருந்துகளை மருத்துவரின் அறிவுரையோடு எடுத்துக்கொள்ளலாம். சுவாசப் பாதையை தூய்மைப்படுத்த ஆவிபிடிக்கலாம். முறையாக மூச்சுப்பயிற்சி செய்வது போன்ற அனைத்தும் தற்போதைய சூழலுக்கு பக்கபலமாக இருக்கும்.

பதற்றம், கலக்கம் வேண்டாம்!

நோய் வராமல் நம்மை பாதுகாக்க மரபு உணவு - வாழ்க்கை முறை நிச்சயம் பலன் அளிக்கும். சளி, இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனையை நாடுவது அவசியம். சுயவைத்தியம், அரசு அங்கீகாரமற்ற போலி மருத்துவர்களிடம் தயவுசெய்து செல்ல வேண்டாம்.

’தனிமைப்படுத்துதல்’ எனும் செயல்பாடு நெடுங்காலமாக நோய்த் தடுப்பு துறையில் பின்பற்றப்பட்டுவரும் வழக்கம்தான். சில தொற்றுநோய்கள் ஏற்பட்டால் நோய் பாதிக்கப்பட்டவரை தனிமைப்படுத்தப் படுத்துவது அவருக்கு மட்டுமல்லாமல், பிறருக்கும் நல்லது. அதே முறையை இப்போதும் பின்பற்றலாம்.

அதே வேளையில் சளி, இருமல் என்றாலே கரோனாதான் என்ற பதற்றமும் அவசியமில்லை. வீண் சலசலப்பை தூக்கியெறிந்து மகிழ்ச்சியாக நாட்களை நகர்த்துங்கள். மகிழ்ச்சியைத் தூண்டும் ஹார்மோன்கள் உடலில் சுரந்து நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும். நோய்த்தொற்று ஏற்படுமோ என்ற அச்சமே, உடலின் இயற்கையான நோய்க் கட்டமைப்பை சிதைத்து தொற்றுக்கு சிவப்புக் கம்பளம் விரித்துவிடும். அதனால் கலக்கமில்லாமல் கரோனாவை விரட்டுவோம்.

கட்டுரையாளர் தொடர்புக்கு: drvikramkumar86@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in