பணிக்குச் செல்லும் அம்மாக்களும் தாய்ப்பால் தருவது எப்படி?

பணிக்குச் செல்லும் அம்மாக்களும் தாய்ப்பால் தருவது எப்படி?
Updated on
2 min read

உலகத் தாய்ப்பால் வாரம் ஆகஸ்ட் 1 - 7

ஒவ்வொரு குழந்தையும் தாயிடம் பால் அருந்தும் உரிமையுடன்தான் பிறக்கிறது. குழந்தைக்குத் தாய்ப்பாலை அளிக்க வேண்டிய கடமை தாய்க்கு இருக்கிறது. இதில் மாற்றுக் கருத்து இல்லை.

முதல் ஆறு மாதங்கள் முடியும்வரை தாய்ப்பால் மட்டும், பிறகு இணை உணவுகளுடன் இரண்டு வயதுவரை தாய் பாலூட்ட வேண்டும் என்கிறது உலகச் சுகாதார நிறுவனம்.

நினைத்தால் முடியும்

பெண் விடுதலை, பெண் கல்வி, பெண்களுக்குப் பொருளாதாரச் சுதந்திரம், சம உரிமை எனப் பல்வேறு கோணங்களில் பெண்ணின் வாழ்க்கை நிர்ணயிக்கப்படும் இந்தக் காலகட்டத்தில், வேலைக்குச் செல்லும் பெண்கள் தாய்ப்பால் தருவது சாத்தியமா என்ற கேள்வி எழுகிறது.

முயன்றால் முடியாதது எதுவும் இல்லை. இது நிச்சயம் சாத்தியமே என உலகச் சுகாதார நிறுவனம், ஐ.நா. சபையின் குழந்தைகள் கூட்டமைப்பு, தாய்ப்பால் ஊக்குவிப்பு அமைப்பு போன்றவை அறிவித்துள்ளன. இதற்குச் சான்றாக அமைந்துள்ளது 2015-ம் ஆண்டுக்கான உலகத் தாய்ப்பால் வாரத்துக்கான மையக் கருத்து 'Breast feeding and work Let’s make it work'.

தேவை ஆதரவு

நேரம், இடம், ஆதரவு இந்த மூன்றையும் சரியாக நடைமுறைப்படுத்தினால் வேலைக்குப் போகும் அனைத்துப் பெண்களும் தொடர்ந்து தாய்ப்பால் தரலாம். குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்டுவது விடுமுறை எடுக்கமுடியாத வேலை அல்லவா? நாள் முழுவதும் விழிப்புணர்வுடன் செய்ய வேண்டிய வேலையும்கூட. தாய், குழந்தையுடன் அதிக நேரம் செலவிட வேண்டும்.

தாய்ப்பால் ஊட்டுவது குழந்தையின், குடும்பத்தின், நாட்டின், உலகின் எதிர்காலத்தைச் செழுமைப்படுத்தும் மிகச் சீரிய பணி. வேலையில் இருக்கும் பெண்கள் இந்தப் பணியையும் மகிழ்ச்சியுடன், சுகமான சுமையாக ஏற்றுக்கொண்டு செய்வதற்குப் பலமுனை ஆதரவு கட்டாயம் தேவை.

என்ன செய்யலாம்?

வீட்டில் கணவன், குடும்பத்தினர், நண்பர்கள் ஆகியோரின் அன்பும் ஆதரவும் தேவை.

பணியிடங்களில் முதலாளி, மேற்பார்வையாளர்கள், சக பணியாளர்கள் ஆகியோரின் ஒத்துழைப்பும் ஆதரவான வார்த்தைகளும் தேவை. இது தாயை ஊக்கப்படுத்தும்.

பணிப் பாதுகாப்பு மற்றும் சிறந்த மகப்பேறு சலுகைகள் போன்றவை பெண்களுக்கு ஆதரவு அளிக்கும்.

மகப்பேறு மற்றும் தாய்ப்பால் ஊட்டுவதால் தன்னுடைய உரிமைகள் எதுவும் மறுக்கப்படவில்லை என்ற நம்பிக்கையைப் பணிபுரியும் பெண்ணுக்கு நிறுவனம் ஏற்படுத்த வேண்டும்.

பணியில் இருந்துகொண்டே ஊதிய இழப்பு அதிகம் இல்லாமல், பேறு காலம் மற்றும் பாலூட்டும் காலம் தொடர்பான சட்ட விதிமுறைகள் அனைத்தையும் நிறுவனங்கள் செயல்படுத்த வேண்டும். இவற்றையெல்லாம் செய்ய வாய்ப்புள்ளது என்பதைப் பெண்களை வேலையில் அமர்த்தும்போதே தெரிவித்துவிட வேண்டும்.

சிறந்த முறையில் திட்டமிட்டுச் செய்தால் வேலையில் உள்ள பெண்களும் மகப்பேறு மற்றும் பாலூட்டுவதைச் சரியாக நிறைவேற்றலாம் என்பது பற்றிய விழிப்புணர்வை மருத்துவத் துறை ஏற்படுத்த வேண்டும்.

மேற்கண்ட வழிமுறைகளை வீட்டிலும் பணியிடத்திலும் சரியாகக் கடைப்பிடித்தால் பணிக்குச் செல்லும் பெண்களும் தொடர்ந்து குழந்தைக்குப் பாலூட்டி, நோயற்ற இளைய சமுதாயத்தை உருவாக்க முடியும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in