

தொகுப்பு: முகமது ஹுசைன்
கரோனா வைரஸ் தாக்குதலின் உக்கிரம் இன்னும் குறைந்தபாடில்லை. சொல்லப் போனால், முன்பைவிட அதன் வீரியம் அதிகரித்துள்ளது.
சீனாவை மட்டும் ஆட்டிப் படைத்து வந்த கரோனா வைரஸ் தற்போது உலகில் 78 நாடுகளில் பரவியுள்ளது. உலகெங்கும் 3000க்கும் அதிகமானோர் கரோனா வைரஸால் பலியாகி உள்ளனர். இந்தியாவில் 28 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கரோனாவை எப்படிக் கையாள வேண்டும் என்பதற்கான முன் அனுபவம் நம்மிடம் இல்லை என்று உலக சுகாதார நிறுவனம் கவலையுடன் கூறி உள்ளது.
கரோனா வைரஸ் பரவுவதைத் தவிர்க்க, மக்கள் கும்பலாகக் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று உலகம் முழுவதும் வல்லு நர்கள் அறிவுறுத்துகிறார்கள். பிரதமர் நரேந்திர மோடியும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும் இந்த ஆண்டு ஹோலி கொண்டாட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளனர்.
சமூக வலைத்தளங்களில், கரோனா வைக் குறித்தும், அதற்கான சிகிச்சைகள் குறித்தும், அதைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் உண்மைக்குப் புறம்பான தகவல்கள் தொடர்ந்து பரப்பப்படு கின்றன.
இந்நிலையில், சிங்கப்பூரைச் சேர்ந்த ஓவியக் கலைஞரான வீமன் கோ, கரோனா குறித்த அச்சத்தை, ஓவியங்கள் (கார்ட்டூன்) மூலம் களைந்துள்ளார்.
கரோனா வைரஸ் என்றால் என்ன, அது எவ்வாறு பரவுகிறது, நாம் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக் கைகள் போன்றவற்றை அனைவருக்கும் புரியும் எளிய முறையில் விளக்கியுள்ளார். கரோனா வைரஸ் தொடர்பாக வெளிவந்த முதல் கார்ட்டூன் தொகுப்பும் இதுவே.
ஒரு நீண்ட மருத்துவ விடுப்பிலிருந்த போது, கோவ் தனது நேரத்தை மற்றவர்களுக்குப் பயனுள்ளதாக மாற்ற வேண்டும் என்ற முனைப்பில், கரோனா வைரஸைப் பற்றிய பயனுள்ள தகவல்களை ஆராய்ச்சி செய்து சேகரித்தார்.
அவ்வாறு சேகரித்த தகவல்களை, தன்னுடைய சித்திரங்களின் மூலம் தெளிவாக விளக்கி, மக்கள் மனத்தில் நிறைந்தி ருக்கும் அச்சத்தைப் போக்க அவர் முயல்கிறார். கரோனா தொடர்புடைய எல்லாத் தகவல்களையும் பிரகாசமான காட்சிகளில் அவர் விவரிக்கும் விதம், அதை நன்கு புரிந்துகொள்ள உதவுகிறது.