காந்தியின் உணவுக் குறிப்புகள்

காந்தியின் உணவுக் குறிப்புகள்
Updated on
2 min read

தொகுப்பு: கனி

உப்பு சத்தியாகிரகம் 90

உலக வரலாற்றின் அமைதியான போராட்டங் களுக்கான பக்கங்களில் காந்தியின் பெயர் நிலைபெற்றிருப்பதைப் போல, அவரது ஊட்டச்சத்தான உணவுப் பழக்கங்களும் ஆரோக்கிய உணவுக்கு முன்னுதாரணமாக இன்றளவும் திகழ்கின்றன. அவர் தன் உணவு முறையையும் போராட்ட வடிவிலேயே எப்போதும் அணுகிவந்திருக்கிறார்.

நீண்ட நாட்கள் உண்ணாவிரதம் இருப்பது அவரின் முக்கியமான போராட்ட வடிவமாக இருந்திருக்கிறது. அவரது உண்ணாவிரதப் போராட்டங்கள் வெற்றிபெற்றதற்கு அவரின் உணவுப் பழக்கமும் ஒரு காரணம். காந்தியின் உணவுப் பழக்கத்தைப் பற்றித் தொகுக்கப்பட்ட கட்டுரைகளிலிருந்து கீழ்க்கண்ட உணவுக் குறிப்புகள் எடுக்கப்பட்டுள்ளன.

சாலட்

ஒரு நபர் சராசரியாக எடுத்துக்கொள்ள வேண்டிய காய்கறி சாலட்டின் அளவு 90-100 கிராம் இருக்க வேண்டும். “வெள்ளரி அல்லது பூசணி அல்லது கடுகு இலைகள், சதகுப்பை (Dill) இலை, கோசுக்கிழங்கு இலை (turnip-tops), கேரட் இலை, முள்ளங்கி இலை, பட்டாணிச் செடி இலைகள் ஆகியவற்றைச் சேர்த்து இந்தச் சாலட்டைத் தயாரிக்கலாம்.

இலைகளை மட்டுமல்லாமல் முள்ளங்கி, கோசுக்கிழங்கு, கேரட் ஆகியவற்றைத் துண்டுகளாக வெட்டி இந்த சாலட்டில் சேர்த்துக்கொள்ளலாம். இந்தக் காய்கறிகளைச் சமைத்து சாப்பிடுவது என்பது பணவிரயம். சமைக்கும்போது இந்தக் காய்கறிகளில் இருக்கும் வைட்டமின் ஊட்டச்சத்துகள் முழுவதுமோ பாதி அளவோ தம் ஆற்றலை இழந்துவிடுகின்றன. சமைப்பதால் காய்கறிகள் அவற்றின் ‘நல்ல’ சுவையை இழந்துவிடுகின்றன. ஏனென்றால், சமைக்காத காய்கறிகள் இயற்கையான நல்ல சுவையுடன் இருக்கின்றன. சமைப்பதன் மூலமாக அவற்றின் சுவை அழிக்கப்படுகிறது.

அடுப்பில் வைக்காத உணவு

சமைக்காத உணவைக் கொண்டு 1929-ம் ஆண்டு, காந்தி பரிசோதனையில் ஈடுபட்டார். எண்ணெயில் சமைத்த காய்கறிகளைவிடச் சமைக்காத சிறிய அளவிலான பச்சைக் காய்கறிகளை உண்பது சிறந்தது என்பதைக் கண்டறிந்தார். இதன்மூலம் பொருளாதார அடிப்படையிலும், இயற்கை வளங்கள் நீண்ட காலத்துக்கு நீடிக்கும் என்று அவர் நம்பினார். காய்கறிகளை நன்றாக மென்று சாப்பிடுவதால், ஊட்டச்சத்துகள் அதிகரிக்கின்றன.

அத்துடன், வைட்டமின்களை உடல் அதிகமாக ஏற்றுக்கொள்கிறது. “மென்று சாப்பிடும்போது கூடுதலான அழுத்தம் கொடுக்க முடியாது. பலரும் இந்த மென்று சாப்பிடும் கலையைப் பற்றி எதுவும் அறிந்திருக்கவில்லை என்பதைக் கவனிக்கிறேன். அதனால் அவர்களின் பற்களும் ஈறுகளும் வலிமை யாக இருப்பதில்லை” என்று காந்தி கூறியிருக்கிறார்.

சப்பாத்தி

கோதுமையை அரைத்துப் பயன்படுத்துவதைவிட, முழு கோதுமையை வேகவைத்துச் சாப்பிடுவது சிறந்தது என்று காந்தி நம்பினார். “தானியங்களில் கோதுமை சிறந்தது. மனிதனால் கோதுமையை மட்டுமே கொண்டு வாழ்ந்துவிட முடியும். அதில் எல்லா ஊட்டச்சத்துகளும் சிறந்த சரிவிகிதத்தில் இருக்கின்றன.”

பயன்படுத்தும் கோதுமையுடன் அதைவிட நான்கு மடங்கு தண்ணீரை ஊற்ற வேண்டும். அதை 12-18 மணிநேரம் ஊறவைக்க வேண்டும். அதை பிரஷர் குக்கரில் ஒரு ஸ்பூன் வெல்லம் சேர்த்து வேகவைக்க வேண்டும். கோதுமைத் தானியங்கள் மென்மையானவுடன் சுவைக்கேற்றபடி உப்புச் சேர்த்து, பிசைந்து ரொட்டி, பிஸ்கட்களாகச் சாப்பிடலாம்.

சட்னி

நன்றாக வெட்டிய கீரை, வேப்ப இலைகள் அல்லது வேறு ஏதாவது மருத்துவக் குணம்கொண்ட மரத்தின் இலைகள், துருவிய தேங்காய், எலுமிச்சை அல்லது புளிக் கரைசல், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து சட்னியாக அரைத்துச் சாப்பிடலாம்.

பானம்

24 மணி நேரத்துக்கு 2.5 லிட்டர் தண்ணீர் அருந்தலாம். அத்துடன் காஃபைன் இல்லாத கோதுமை காபி: கோதுமைத் தானியங்களைச் சிவக்க நன்றாக வறுத்துக்கொள்ள வேண்டும். காபி பொடி அரைப்பதுபோல நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும். சுடவைத்த தண்ணீர், பாலுடன் ஒரு ஸ்பூன் இந்தக் கோதுமைப் பொடியைப் போட்டு சர்க்கரை போடாமல் குடிக்கலாம்.

நன்றி: The Hindu Businessline

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in