

மருத்துவர் கு. சிவராமன்
கரோனா- தற்சமயம் உலகில் அதிகம் வருத்தத்துடனும் வலியுடனும் பயத்துடனும் உச்சரிக்கப்படும் சொல். கோவிட்-19 (COVID-19) என உலக சுகாதார நிறுவனம் அதற்குப் பெயரும் இட்டுவிட்டது.
‘Middle East respiratory Disease , Spanish flu’ என ஊர் பெயரிலோ, ‘Swine flu’ என விலங்கு பெயரிலோ, இனி இந்த வைரஸை அழைக்கக் கூடாது. ‘பழைய பெயர்கள் தேவையின்றி ஊரையும் விலங்கையும் பழித்து, தேவையற்ற சமூக விலக்கலை ஏற்படுத்துகின்றன. வைரஸுக்குக்கூட இன, மொழி, சாதிய அடையாளம் கூடாது என உலக சுகாதார நிறுவனம் அறிவித்திருக்கிறது. இப்படியான அடையாளங்கள் தேவையற்ற பிரிவினையையும் விலக்கலையும் சமூகத்தில் உண்டாக்கிவிடும் என்பதே இதற்குப் பின்னுள்ள சிந்தனை.
கிட்டத்தட்ட ஒன்றரை மாதமாக உலகம் மிரண்டு போய்தான் நிற்கிறது. ‘இனி இப்படியான சிக்கல்களை அடிக்கடி எதிர்கொள்ளத்தான் வேண்டி யிருக்கும்’ என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துக்கொண்டே வந்திருக்கிறது. ‘தேமே என உறங்கிக் கொண்டிருந்த பாக்டீரியா, வைரஸ் பலவும் உசுப்பேறி உலாவரும் காலம் இது; உலகைச் சூடாக்கியதும், பனிமலைகளை உருக்கித் தள்ளியதிலும் இந்த வகை நுண்ணுயிரிகளின் ஆதிக்கம் அதிகரிக்கும்’, என உலக சுகாதார நிறுவனமும் சூழலியல் அறிவியலாளர்களும் நீண்ட காலமாக எச்சரித்து வருகின்றனர்.
நம் நிலை என்ன?
இப்படி ஒட்டுமொத்த சீனாவே ஒரு பக்கம் முடங்கிப் போயிருக்கிறது. இந்த வேளையில், இந்தியாவில் சத்தமில்லாமல் நடைபெறும் மருத்துவ உலகின் சங்கடங்களை சற்று உற்றுப்பார்க்க வேண்டியிருக்கிறது. கடந்த ஆண்டு டெங்கு தாக்குதல்போல், இந்த ஆண்டு டெங்கு தாக்குதல் இல்லை என்பதற்குப் பின்னாலும், எப்போதும் இல்லாதபடி தற்போது காய்ச்சலுக்கு பின்னால் உருவாகும் தீவிர மூட்டுவலியும், நுண்ணுயிரியின் அவதார மாற்றங்களும் உலக சுகாதார நிறுவன எச்சரிக்கையின் அடையாளங்களே.
டெங்கு நோய் உடலில் பரவும் விதம், அது கொடுக்கும் அறிகுறிகள், மருந்துகளுக்குக் கட்டுப்படும் விதம் ஆகிய அம்சங்களில் 2018 பருவத் தொற்றுக்கும் 2019 பருவத் தொற்றுக்கும் கணிசமான மாற்றம் பெற்றுள்ளது. ‘காய்ச்சல்- சுவாசக் கோளாறு- ரத்தத் தட்டுக் குறைவு- சுவாச மண்டலத் தீவிர நிலை- பல் உறுப்பு தாபிதப் பதற்றம்,’ என ஒவ்வொரு நிலையாக வராமல், அதன் அடையாளங்கள் மாறி மாறி மருத்துவக் குழு சுதாரிப்பதற்கு முன்னர் நடந்த மரணங்கள் நாம் அறிந்தவைதான்.
அதிகரிக்கும் சிக்கல்கள்
அதேபோல், Multi drug resistant tuberculosis எனும் மருந்துகளுக்குக் கட்டுப்படாத காச நோய் இந்தியாவில் பெருகிவருகிறது. ‘காச நோய் மருந்தை நேரடியாக நோயருக்கு விநியோகிக்கும் முறை (DOTS)’எனப் புதிய திட்டங்கள் பல வந்த பின்னரும், இந்தியாவில் காச நோய் கணிசமாகக் குறைந்ததுபோல் தெரியவில்லை. இன்னமும் புதிய நோயாளிகள் அதிகரித்துவருவதும், காசநோய்க் கணிப்பில் உள்ள சுணக்கமும் தயக்கமும் (மருத்துவரிடையேயும்கூட) இந்த நோய்க்கூட்டத்தைப் பெருக்கிக்கொண்டே வருகின்றன.
அடுத்ததாக, சாதாரண பூஞ்சைத் தொற்றுக்கு போடும் எதிர் பூஞ்சை நுண்ணுயிரிகள் சமீபமாகப் பலனற்று போவதை, மூத்த மருத்துவர்கள் தெரிவிக்கத் தொடங்கியுள்ளனர். காரணம் ‘பழைய பூஞ்சைகளுக்கு வந்த புதிய பலமா? அல்லது அவை எல்லாம் பூஞ்சை 2.0 என புதிய வடிவம் எடுத்துவிட்டனவா?’ என்பது இந்திய அறிவியல் உலகத்துக்கு இன்னும் புலப்படவில்லை. முன்பு எளிதாகக் கையாளப்பட்ட சுவாசமண்டலத் தொற்று, சிறுநீரக தொற்றுக்கான மருந்துகள், இப்போது அவ்வளவு எளிதாக நோய் நிலையைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
சிறுநீரக- சீரண மண்டல தொற்றாக வெகு சாதாரணமாக வரும் ‘ஈ - கோலை’ என்கிற நுண்ணுயிரி, இப்போது உயிரை மிரட்டும் ரத்தத் தட்டு குறைவு நோயைக்கூட (TTP) ஆங்காங்கே உருவாக்கத் தொடங்கியுள்ளது. இவையில்லாமல், பெருகி வரும் சர்க்கரை நோய்க் கூட்டத்தில், சர்க்கரை நோய் கட்டுப்படாத சூழலில், நுரையீரலில் வரும் காசமோ, மூச்சுக்குழல் தொற்றோ அசாதாரணமாவதும் அதிகரித்திருக்கிறது.
நுண்ணுயிர் கொல்லிக்கு எதிர்ப்பாற்றல்
இவையெல்லாமே இந்தியாவில் ஆங்காங்கே அதிகரித்துவரும் நுண்ணுயிரிகளின் ஆட்டங்கள். மருத்துவ உலகம் சற்று கவனமாக அணுக வேண்டிய மிக முக்கியமான காலத்தில் உள்ளோம். இந்த நுண்ணுயிரிகள் தாறுமாறாகத் தகராறு பண்ணுவதற்கும், நுண்ணுயிர் கொல்லிகள் செயல் புரியாமல் போகும் நிலை உருவாவதற்கும் மிக முக்கியக் காரணம், 'மருத்துவ உலகம் நுண்ணுயிர் கொல்லி மருந்துகளை (ஆன்டி பயாட்டிக்) நெறியின்றி கையாளுவதே' என்கிறனர் மருத்துவ ஆய்வாளர்கள். இன்னும் இலகுவாகச் சொன்னால், ‘கொசுவை அடிக்க ஏகே47’ என எடுத்துச் செல்லும் மனோபாவம், கடந்த 25 ஆண்டுகளில் மருத்துவ உலகில் அதிகரித்துள்ளது.
மருந்து நிறுவனங்கள் புது புது வடிவ நுண்ணுயிர் கொல்லிகளை சந்தைக்கு ஆண்டுக்கு ஆண்டு தள்ளியதில், ‘எதற்கு லேசான அடிப்படை மருந்துகள்? எடு அணுகுண்டை’ என்கிற மனோபவாத்தில் மருத்துவமனைகள், மருத்துவர்கள் செயல்பட்டார்கள். தொடக்க நிலை நுண்ணுயிர் கொல்லிகளை பயன்படுத்த வேண்டிய இடங்களில், தீவிர நுண்ணுயிர் கொல்லி மருந்துகளைப் பயன்படுத்தியதால்தான், பல நுண்ணுயிரிகள் பலம் பெற்றதும், மருந்துகளுக்கு செயல்படாமல் போவதும் பெருகியதற்கான காரணம் என்கின்றன மருத்துவ ஆய்வுகள்.
நாம் தயாரா?
அடுத்து உணவுப் பொருட்களில் சேர்க்கும் வேதிப்பொருட்கள் முதல் சூழலியலைச் சிதைத்த பல அம்சங்களும் இந்த நுண்ணுயிரிகளை பலம் பொருந்தியவையாக மாற்றிக்கொண்டே வந்துள்ளன. நம் ஒவ்வொருவர் குடலிலும் கோடிக்கனணக்கான பாக்டீரியாக்கள், வைரஸ்கள் குடியிருக்கின்றன.
அவை சீரணத்துக்காக மட்டுமே என்று மருத்துவ உலகம் எண்ணிக்கொண்டிருந்தது. இப்போது அவை சீரணத்துக்கான Probiotics மட்டுமல்ல, 'நம் நோய் எதிர்ப்பாற்றல், புத்திசாலித்தனம், புற்றுநோய் முதலான நோய்கள் பரவாது தடுக்க', எனப் பல பணிகளுக்கு அந்த நுண்ணுயிரிகளின் தேவை மிக அவசியம் என்ற புரிதல் அதிகரித்து வருகிறது. Gut biome -Second genome என பெயரிட்டு நுட்பமாகப் பார்க்கத் தொடங்கிவிட்ட அவற்றை நாம் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். அந்த Gut biome கூட்டத்தை சிதைக்கும் வண்ணம் வேதிப்பொருட்களை அள்ளித்தெளித்த சக்கை துரித உணவைச் சாப்பிடுவதும்கூட வைரஸ் பாக்டீரியாவை தூண்டிவிடலாம்.
நம்மைவிட அறிவியலிலும், தொழில்நுட்பத்திலும் பலம் பொருந்திய சீனாவே இப்படி திணறுவைதைப் பார்க்கையில், இந்தியா இப்படிப்பட்ட சவாலை எப்படி எதிர்கொள்ளும் என யோசிக்கையில், சற்று அச்சமாகவே உள்ளது. இங்கே உள்ள வெப்பம் நமக்குப் பெரும் பாதுகாப்பு என்கிற வாதம் அடிக்கடி முன்வைக்கப்படுகிறது.
இதை தர்க்கத்துக்கு வைத்துக்கொள்ளலாமே ஒழிய, எல்லா நிலையிலும் அதுவே உண்மையாகி விடாது. சீனத்தில் புது வைரஸ் என்றால், இங்கே உள்ள தட்பவெப்பத்துக்கு ஏற்றாற்போல் வேறு ஒரு புது பாக்டீரியாவோ, பூஞ்சையோ, வைரஸோ பலம் பொருந்தியதாக மாற சாத்தியமில்லாமல் இல்லை. அதை கணக்கில் கொண்டு அரசும் சுகாதாரத் துறையும் செயல்பட வேண்டும்.
கட்டுரையாளர் தொடர்புக்கு: herbsiddha@icloud.com