நல வாழ்வு கேப்ஸ்யூல்: ஈரானின் அமைச்சருக்கு கரோனா வைரஸ்

நல வாழ்வு கேப்ஸ்யூல்: ஈரானின் அமைச்சருக்கு கரோனா வைரஸ்
Updated on
2 min read

தொகுப்பு: ஷங்கர்

ஈரானின் சுகாதாரத் துறை துணை அமைச்சர் இராஜ் ஹரிர்சிக்கு கரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக அவரே தெரிவித்துள்ளார். சமூக ஊடகங்களில் தன்னை கரோனா வைரஸ் தாக்கியிருப்பதாகவும் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டி ருப்பதாகவும் கூறியுள்ளார்.

மத்திய கிழக்கு நாடுகளில் கரோனா வைரஸ் பரவும் என்ற அச்சம் மக்களைச் சூழ்ந்திருக்கும் நிலையில் அமைச்சருக்கு ஏற்பட்ட இந்தத் தாக்குதல் மேலும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தனக்கு வந்துள்ள வைரஸ் தொற்றைப் பற்றி, இந்த வைரஸ் ஜனநாயகமானது என்று கூறி, அது அமைச்சர், சாதாரண மனிதன் என்ற பேதம் பார்ப்பதில்லை என்று நகைச்சுவையாக அவர் பேசியுள்ளார்.

ஐசிடி - 11

நெருக்கமான உறவுகளை மரணத்தால் இழப்பது அனைவர் வாழ்க்கையிலும் ஓர் அங்கமாகவே உள்ளது. ஆனால், அந்த இழப்பால் ஏற்படும் உளவியல்ரீதியான பாதிப்புகளிலிருந்து குறுகிய காலத்திலேயே விடுபடுபவர்கள் நிறையப் பேர்.

ஆனால், நீண்டகாலமாக நெருக்கமானவர்களின் மரணம் ஏற்படுத்திய பிரிவுத் துயரால் வருந்துபவர்களின் குறைபாடுகள் தனித்துவம் வாய்ந்தவை. அவர்கள் அனுபவிக்கும் இழப்பை வேதனையின் அடிப்படையில் அணுக வேண்டுமென்று உலக சுகாதார நிறுவனம் 2018-ம் ஆண்டு அறிவித்து வகைப்படுத்தியது.

ஐசிடி-11 என்று அதை வகைப்படுத்தியுள்ளனர். அதனடிப்படையில் நெருங்கியவர்களின் மரணத்தால் மனவேதனைக்கு உள்ளாகுபவர்களின் மனநிலைக் குறைபாடுகளுக்கான சிகிச்சை வசதிகளை 2022-ம் ஆண்டுக்குள் நடைமுறைப்படுத்தவும் உலக சுகாதார நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

காலம்தான் சரியான மருத்துவர் என்று சொல்வது எல்லா வேதனைகளுக்கும் பொருத்தமாக இல்லையென்பதை உணர்த்தும் உலக சுகாதார நிறுவனம் மன நல ஆலோசனை, மருத்துவம் என உறவை இழப்பதால் ஏற்படும் மனநலக் குறைபாட்டுக்கு ஆளாகுபவர்களுக்குத் தனியான சிகிச்சை வழிமுறைகளை வகுத்துள்ளது.

பொது மருத்துவத்துக்குச் செலவு குறைவு

கடந்த பத்தாண்டுகளில் இந்திய அரசு தன் குடிமகனின் ஆரோக்கியத்துக்காகச் செலவழிக்கும் தொகை 621 ரூபாயிலிருந்து 1,112 ரூபாயாக அதிகரித்துள்ளது. ஆனாலும், குறைந்த வருவாயை ஈட்டும் நாடுகளான பூட்டான், இலங்கை, நேபாளம் ஆகிய நாடுகளை ஒப்பிடும்போது இது மிகவும் குறைவுதான்.

அந்த நாடுகள் தங்களது ஜிடிபியில் 2.5, 1.6, 1.1 சதவீதப் பங்கை ஆரோக்கியத்துக்காகச் செலவழிக்கின்றன. முதல் உலக நாடுகளான சுவிட்சர்லாந்து ஒரு குடிமகனுக்கு 6 ஆயிரத்து 944 டாலர் செலவழிக்கிறது. அமெரிக்கா 4 ஆயிரத்து 802 டாலர்களைச் செலவழிக்கிறது. இங்கிலாந்து 3 ஆயிரத்து 500 டாலர்களைச் செலவழிக்கிறது.

புதினா சாப்பிடுவதற்கு உதவும்

உணவகங்களிலோ திருவிழா விருந்துகளிலோ நன்றாகச் சாப்பிட உட்காரும்போது நெஞ்செரிச்சல் இருந்தால் உடனடியாக புதினாவை மெல்லுங்கள். இதயக் கோளாறு சாராத நெஞ்செரிச்சலுக்கு மிகவும் உதவிகரமாக புதினா எண்ணெய் இருக்கிறது. உணவுக் குழாய் தசைகளை எளிதாக்கும் பண்பு புதினாவில் உள்ளது என்பது ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in