

உளவியலாளர்களின் மூலம் அறிவியல் வழிமுறைகளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கும் செயலி Happify. மன அழுத்தம், நேர மேலாண்மை, எதிர்மறைச் சிந்தனைகளைத் தவிர்த்தல் போன்றவற்றை பின்தொடர வழிசெய்யும் ‘track’ என்ற தேர்வை முதன்முறையாகச் செயலியைத் திறக்கும்போது சொடுக்கவேண்டும். இதன் மூலம் சிறு செயல்பாடுகளை இந்தச் செயலி அன்றாடம் உங்களுக்கு வழங்கும்.
நமது உடலில் என்னென்ன பாதிப்புகள் இருக்கின்றன என்பதை முழுமையாக உணர்ந்துகொள்ள குறிப்பிட்ட இடைவெளிகளில் முழு உடல் பரிசோதனை அவசியம். 30 வயதைக் கடந்தவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை, 40-ஐக் கடந்தவர்கள் ஆண்டுக்கு இரண்டு முறை, 50-ஐக் கடந்துவிட்டால் ஆண்டுக்கு ஒருமுறை என முழு உடல் பரிசோதனை செய்துகொள்வது நோய் வருமுன் காப்பதற்கு உதவும்.
நீரிழிவு நோயாளிகளுக்கு ‘நா வறட்சி’அதிகமாக இருக்கும். அதிமதுரத்தை வாயில் ஒதுக்கிக் கொண்டு உமிழ் நீரைப் பருக நா வறட்சி மறையும். அதிமதுரத்தின் இனிப்பு சர்க்கரைச் சத்தால் (glucose) ஆனது அல்ல என்பதால், அதன் இனிப்பைக் கண்டு நீரிழிவு நோயாளிகள் பயப்படத் தேவையில்லை.
சுவாசத்துக்கும் மனநலத்துக்கும் தொடர்பு உண்டு. கடும் மன உளைச்சலில் இருக்கும் ஒருவர் மூச்சை ஒருமுறை ஆழ்ந்து இழுத்துவிடும்போது மன அமைதி பெறுகிறார் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மெதுவாக, ஆழ்ந்து மூச்சுவிடுதல் நினைவுத்திறனுக்கும் வலுசேர்க்கும்.
Contagion (2011)
ஹாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களைக் கொண்டு புகழ்பெற்ற இயக்குநர் ஸ்டீவன் சோடர்பர்க் இயக்கிய திரைப்படம் ‘கான்டேஜியன்’ (தொற்று). திடீரென்று பரவும் வைரஸ் ஒன்று, பொது சுகாதாரத்துக்கும் சமூக ஒழுங்குக்கும் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பதை விறுவிறுப்பாகச் சொல்லும் இந்தப் படம், கோவிட்-19 (கரோனா வைரஸ்) நிகழ்வுகளை நினைவுபடுத்தும்.
தொகுப்பு: அபி