

டாக்டர் சு. முத்துச் செல்லக் குமார்
சீனாவின் உஹான் நகரில் மையமிட்டுள்ள புதிய கரோனா வைரஸ் தொற்று உலகெங்கும் பரவி மக்களைப் பெரும் அச்சத்துக்கு ஆளாக்கியுள்ளது. ஜலதோஷம் போன்ற பாதிப்பை ஏற்படுத்தும் இந்த வைரஸ், 2003-ம் ஆண்டில் சார்ஸ் என்னும் புதிய வைரஸாக உருவெடுத்து 8,000 பேரைப் பாதித்து, 774 பேர் இறக்கக் காரணமாக இருந்தது. 2012-ம் ஆண்டில் மெர்ஸ் என்னும் புதிய வைரஸாக உருவெடுத்து 2,506 பேரைப் பாதித்து, 862 பேர் இறக்கக் காரணமாக இருந்தது.
2019-ஆம் ஆண்டில் ‘நாவல் கரோனா வைரஸ்’ (2019-nCoV) என்னும் புதிய வைரஸாக உருவெடுத்த இந்த வைரஸ், இதுவரை 50,000 பேரைப் பாதித்து, 1300 பேருக்கும் மேலானவர்கள் இறக்கக் காரணமாகி உள்ளது. தொடர்ந்து பல்வேறு நாடுகளுக்கும் அது பரவி வருகிறது. இவற்றைத் தடுப்பதற்குத் தடுப்பூசி எதுவும் இல்லை. சிகிச்சை செய்ய மருந்துகளும் இல்லை. நோயாளிகளிடமிருந்து இது விரைவாகப் பரவுவதால், தற்காப்பு ஒன்றே சிறந்த வழி.
தற்காப்பு வழிகள்
1. நோய்த் தொற்று ஏற்பட்டவரிடமிருந்து ஒதுங்கி இருக்க வேண்டும்.
2. கைகளை அடிக்கடி ஆல்கஹால் சார்ந்த கிருமி நாசினியால் கழுவ வேண்டும்.
3. தும்மல், இருமல் வரும்போது, வாய்ப் பகுதியையும் நாசிப் பகுதியையும் கைக்குட்டையால் மூடிக்கொள்ள வேண்டும்.
4. முகக் கவசங்கள் அணிந்து, நோய்த்தொற்றைத் தடுப்பது.
அறுவை சிகிச்சை முகமூடிகள்
அறுவை சிகிச்சை செய்யும்போது, மருத்துவர்கள், செவிலியர்கள் மயக்க மருந்து தருபவர்கள், அறுவைகூடப் பணியாளர்கள் ஆகியோர் அறுவை சிகிச்சை முகமூடிகளைப் பயன்படுத்துகிறார்கள். வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தவோ தூசி உள்ளிட்ட நுண்துகள்களை வடிகட்டவோ இது பயன்படாது.
பி1 முகக் கவசம்
மரம் அறுத்தல் / மரமிழைத்தல், துளைத்தல், மணல் அரைத்தல், கலவை செய்தல், தோட்ட வேலை போன்ற பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு பி1 மாஸ்க் பயன்படுகிறது. இவை, வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தப் பயன்படாது.
பி2, பி3 வகை முகக் கவசம்
அமெரிக்காவில் கிடைக்கும் N95 மாஸ்க்கும் ஐரோப்பாவில் கிடைக்கும் பி2, பி3 மாஸ்க் வகைகளும் இணையானவை. கரோனா போன்ற கொடிய வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த இதுவே பயன்படும்.
கே.எஃப். 94 வகை முகமூடிகள்
கே.எஃப். 94 வகை முகக் கவசம் கொரியாவில் கிடைக்கிறது. இது கிட்டத்தட்ட N95 முகக் கவசம் போன்று சிறப்பானதே. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த இதுவும் பயன்படும்.
என்-95 (N95) முகமூடிகள் - வடிப்பான்கள்
95 சதவீதக் காற்றின் நுண்துகள்களையும் (Particle Filtration Efficiency (PFE) இது தடுத்து நிறுத்திவிடும். அதனால்தான் 95 என்று இது அழைக்கப்படுகிறது. மேலும், இது 99 சதவீத பாக்டீரியா போன்ற நுண்கிருமிகளைத் (BFE - Bacterial Filtration Efficiency) தடுத்து நிறுத்தி விடும். சுத்தமான காற்றைச் சுவாசிக்கவும் கரோனா போன்ற வைரஸ் தொற்றுகளைத் தடுக்கவும் இது உதவுகிறது.
என்-99 (N99) முகமூடிகள் - வடிப்பான்கள்
95 சதவீதக் காற்றின் நுண்துகள்களை இது வடிகட்டுகிறது. சுத்தமான காற்றைச் சுவாசிக்கவும் கரோனா போன்ற வைரஸ் தொற்றுகளைத் தடுக்கவும் இவை உதவுகின்றன. இவற்றை நீண்ட நேரம் அணிவது சிரமம். குறிப்பாக, நுரையீரல் பாதிப்பு உள்ளவர்கள், இதய நோயாளிகள் போன்றவர்கள் இதை அணிந்து சுவாசிப்பதற்கு மிகவும் கடினமாக இருக்கும்.
என்-95 ஏன் சிறந்த தேர்வாக இருக்கிறது?
என்-95, மாஸ்க் என்-99 ஐவிட 50 சதவீதம் குறைவான சுவாச எதிர்ப்பை வழங்குகிறது. மூச்சுத் திணறல் இல்லாமல் நீண்ட காலத்துக்கு நீங்கள் என்-95 முகமூடியை அணியலாம் என்பதால் அதுவே சிறந்ததாக ஏற்கப்பட்டு, பரிந்துரைக்கப்படுகிறது.
முகக் கவசங்களை எவ்வாறு கவனமாகப் பயன்படுத்த வேண்டும்?
என்-95 முகமூடிகளைச் சரியாக முகத்தில் பொருத்தினால் மட்டுமே நோய்த் தொற்றைத் தவிர்க்க முடியும். இஷ்டத்துக்குக் கழற்றுவது, எடுப்பது, கீழே வைப்பது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது.
நோய் வராமல் தடுக்க நினைப்பவர்கள், முகமூடியைக் கழற்றி மறந்து போய் வெளிப்பகுதியை உட்புறமாக அணிந்தால் அதில் சேரும் கிருமிகள் நாசி வழியாக எளிதில் உடலைச் சென்று அடைந்து நோயை ஏற்படுத்திவிடும்.
ஒருவர் பயன்படுத்திய முகக் கவசங்களை மற்றவர் கண்டிப்பாகப் பயன்படுத்தக் கூடாது. முறையாகப் பயன்படுத்தினால், கரோனா வைரஸை மட்டுமல்ல; காற்றில் பரவும் எண்ணற்ற கிருமிகளையும் தடுத்து நிறுத்தும் கவசமாக இது இருக்கும்.
கட்டுரையாளர், மருத்துவப் பேராசிரியர்
தொடர்புக்கு: muthuchellakumar@gmail.com