Published : 15 Feb 2020 09:55 am

Updated : 15 Feb 2020 09:55 am

 

Published : 15 Feb 2020 09:55 AM
Last Updated : 15 Feb 2020 09:55 AM

மருத்துவம் தெளிவோம் 22: இதயத் துடிப்பு தடைபடுவது ஏன்?

heart-rate

டாக்டர் கு. கணேசன்

அவருக்கு வயது 70. இரண்டு நாட்களாகச் சிறிது மயக்கமாக இருக்கிறது என்று சொல்லிக்கொண்டிருந்தார். அன்று வீட்டில் அவர் வழக்கமான நடைப்பயிற்சியின்போது, திடீரென்று மயங்கி விழுந்துவிட்டார். தலையில் பலத்த காயம். வீட்டார் அவரை அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.


அவரது நாடித்துடிப்பு குறைவாக இருந்த காரணத்தால், இசிஜி எடுத்துப் பார்த்தனர். அவரது இதயத் துடிப்பில் குறை இருந்தது அதில் கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது, அவரது இதயத்தின் வலது மேல் அறையிலிருந்து கீழ் அறைகளுக்கு வருகின்ற மின்சாரப் பாதையில் முழுமையாகத் தடை ஏற்பட்டதால் மயங்கிக் கீழே விழுந்திருக்கிறார். இந்தப் பிரச்சினைக்கு ‘இதயத் துடிப்பு முடக்கம்’ (Complete heart block) என்று பெயர்.

‘இதயத் துடிப்பு முடக்கம்’ எப்படி ஏற்படுகிறது?

ஓர் இயந்திரம் இயங்க வேண்டுமானால், அதற்கு மின்சக்தி தேவைப்படுவதைப் போல, நம் இதயம் துடிப்பதற்கும் சிறிதளவு மின்னோட்டம் தேவைப்படுகிறது. இதயத்தின் வலது மேலறையின் மேற்பகுதியில், ஒரு சிறிய ஜெனரேட்டர்போல் ‘எஸ்-ஏ நோடு’ (Sino Atrial Node – SA node) என்னும் மின்கணு உள்ளது. இதுதான் மின்சாரத்தை உற்பத்தி செய்து இதயத்தைத் துடிக்கச் செய்கிறது. இது வலது மேலறையின் கீழ்ப்பகுதியில் உள்ள ‘ஏ.வி. நோடு’ (Atrio Ventricular Node – AV Node) என்னும் துணை மின்கணுவுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இதனுடன் சிறப்பு நார்க்கற்றைகள்’ (Bundle of His-Purkinje Fibres) இணைந்துள்ளன. இவை கீழ்நோக்கி வலது, இடது கிளைகளாகப் பிரிந்து, இதயத்தசைகளின் கீழறைகளுடன் சீராகப் பிணைந்துள்ளன. வலது மேலறையின் மின்கணுவுடன் பாட்ச்மேன் நார்க்கற்றைகள் (Bachmann’s bundle) இணைந்து, இடது இதயத்தின் மேலறை முழுவதும் பிணைந்துள்ளன. இப்படி ஒரு சங்கிலிப் பின்னலாக இதயம் முழுவதும் நார்க்கற்றைகள் அமைந்து ஒரு மின்னோட்டப் பாதையை அமைத்துக் கொடுத்துள்ளதால், வலது இதயக் கணுவில் உற்பத்தியாகும் மின்னோட்டமானது எல்லா இதயத் தசைகளுக்கும் வழங்கப்படுகிறது.

இதன் பலனால், இதயம் தூண்டப்பட்டு சீரான எண்ணிக்கையிலும், லப், டப், லப், டப் என்னும் இயல்பான லயத்துடனும் துடிக்கிறது. இந்த மின்னோட்டப் பாதையில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டாலோ இதய மின்கணுவில் போதுமான அளவுக்கு மின்சாரம் உற்பத்தி ஆகாவிட்டாலோ, கீழ் அறைகளுக்கு மின்னோட்டம் செல்வது முழுவதுமாகத் தடைபடுகிறது. அப்போது இதயத் துடிப்பு குறைகிறது. அல்லது நின்றுவிடுகிறது. இப்படித் துடிப்பு நின்றுவிடும் நிலைமையை ‘இதயத் துடிப்பு முடக்கம்’ என்கிறோம்.

இதயத் துடிப்பு குறைந்து போவதற்கு என்ன காரணம்?

உடல் முழுவதும் ரத்தம் செலுத்த இதயம் நிமிடத்துக்கு 60-லிருந்து 100 முறை வரை துடிக்கிறது. ஒவ்வொரு துடிப்பின்போதும் 70 மி.லி. ரத்தத்தை உடலுக்குள் அது செலுத்துகிறது. நிமிடத்துக்கு 60 முறைக்கும் குறைவாக இதயம் துடிப்பதை ‘குறைத் துடிப்பு’ (Bradycardia) என்கிறோம். மாரடைப்பு, இதயத் துடிப்பு முடக்கம் (Heart block), குறை தைராய்டு போன்ற பிரச்சினைகளால் இதயத் தசைகளில் தொற்று (Myocarditis) ஏற்படுவது, இதயத் தசைகள் தொய்வு (Cardio myopathy) அடைவது, நாரிழையழற்சி (Fibrosis) ஏற்படுவது, சிறுவயதில் கீல்வாதக் காய்ச்சல் (Rheumatic fever) வந்து பின்னாளில் இதய வால்வுகளைப் பழுதாக்கிவிடுவது ஆகியவற்றாலும் இந்தப் பிரச்சினை உருவாகிறது. சில மருந்துகளின் பக்கவிளைவு, முதுமையின் விளைவு, ரத்தத்தில் சில தாதுக்கள் குறைவது அல்லது அதிகரிப்பது, வெளிக்காற்றில் கடுமையான ஆக்ஸிஜன் குறைவு (Hypoxia) போன்ற காரணங்களாலும் இதயத் துடிப்பு குறையும்.

‘இதயத் துடிப்பு முடக்கம்’ ஏற்பட்டவருக்கு என்னென்ன அறிகுறிகள் தெரியும்?

இந்தப் பிரச்சினையில் மூன்று நிலைகள் உள்ளன. முதலாம் நிலை ஆபத்து இல்லாதது. அப்போது கடுமையான சோர்வு தலைகாட்டும். உடல் பலவீனமாக இருக்கும். கிறுகிறுப்பு இருக்கும். இதற்கு மருந்து கொடுத்தாலே சரியாகிவிடும்.

அடுத்த கட்டத்தில் சிறிய அளவில் அவ்வப்போது மயக்கம் வரும். மனக்குழப்பமும் ஏற்படலாம். தற்காலிகமாக சுயநினைவை இழக்கலாம். இந்த இரண்டாம் நிலைக்குப் பெரும்பாலும் மருந்து சிகிச்சை பலன் அளிக்கும். இல்லாவிட்டால், ‘பேஸ்மேக்கர்’ (Pacemaker) கருவியைப் பொருத்த வேண்டி இருக்கும்.

மூன்றாம் நிலைதான் ஆபத்தானது. இந்த நிலைமையில் இதயம் துடிப்பதைத் திடீரென்று முழுமையாக நிறுத்திவிடும். அப்போது ஆழ்ந்த மயக்கம் வரும். சுயநினைவே இருக்காது. மூச்சுத்திணறல் ஏற்படும். சிலருக்கு இதயத்தின் சில பகுதிகள் தற்காப்புக்காகத் துடிக்கும். அப்போது அவருக்கு மயக்கம் தெளிந்தாலும் அடிப்படைப் பிரச்சினை சரியாகாது; மருத்துவ உதவி அவசரமாகத் தேவைப்படும். பலருக்கு உடனே ‘செயற்கைச் சுவாசம்’ கொடுத்தால்தான் இதயத் துடிப்பு மீளும். அப்போதுகூட இதயம் நிமிடத்துக்கு 30-க்கும் குறைவாகவோ அதிவேகமாகவோ துடிக்கும். இந்த இரண்டு நிலைமைகளும் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்.

அதைத் தவிர்க்க பயனாளியை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். எப்படி மாரடைப்பு வந்தவருக்கு முதல் ஒரு மணி நேரம் பொன்னானதோ, அதுபோல் இதயத் துடிப்பு முடக்கம் ஏற்பட்டவருக்கும் அந்த நேரம் பொன்னானது. அந்த நேரத்துக்குள் சிகிச்சை கிடைத்துவிட்டால் உயிர் பிழைக்க வாய்ப்பு உண்டு.

மாரடைப்பும் இதயத் துடிப்பு முடக்கமும் ஒன்றா?

இல்லை. இதயத் தசைகளுக்கு ரத்தம் எடுத்துச் செல்லும் தமனி ரத்தக் குழாய்கள் அடைத்துக்கொள்வதால் மாரடைப்பு ஏற்படுகிறது. மாறாக, இதயத் தசைகளுக்கு மின்னோட்டம் தடைபடுவதால் ஏற்படுவது, இதயத் துடிப்பு முடக்கம். அதேநேரம் மாரடைப்பு வந்தவருக்கு இதயத் துடிப்பு முடக்கமும் ஏற்படலாம்.

இதயத் துடிப்பு முடக்கத்துக்கு என்ன சிகிச்சை உள்ளது?

பயனாளிக்கு மருந்து சிகிச்சையுடன், தற்காலிகமாக ஒரு பேஸ்மேக்கர் கருவியை உடனே பொருத்தி அவருக்கு இதயத் துடிப்பை முறைப்படுத்துகின்றனர். பிறகு நிரந்தரமாகவே ஒரு பேஸ்மேக்கர் கருவியைப் பொருத்தி பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கின்றனர். இதனால் இவர்கள் இயல்பான வாழ்க்கைக்குத் திரும்பிவிடுகின்றனர்.

‘பேஸ்மேக்கர்’ என்றால் என்ன? அது எப்படி வேலை செய்கிறது?

இதயத் துடிப்பு குறைந்தவர்களுக்கு இதயத்தைச் செயற்கை முறையில் தூண்டி, மீண்டும் அதைச் சீராகத் துடிக்கச் செய்யும் கருவிக்கு ‘செயற்கை இதய முடுக்கி’ (Artificial Pacemaker) என்று பெயர். இதயத்தில் மின்கணு செய்யும் வேலையை இது செய்கிறது. இது பார்ப்பதற்கு ஒரு தீப்பெட்டி போலிருக்கும். எடை 30 கிராம். இதில் பேட்டரி, ஜெனரேட்டர், சிறிய மின் சுற்று, மின்கம்பிகள் ஆகியவை இருக்கும்.

பயனாளிக்கு மயக்க மருந்து கொடுத்து, சிறிய அறுவை சிகிச்சை மேற்கொண்டு, மார்பில் இடது அல்லது வலது காரை எலும்புக்கு (Clavicle) அருகில், அதிக ஆழம் இல்லாதவாறு இதைப் புதைத்து, மேற்தோலைத் தையல்போட்டு மூடிவிடுகின்றனர். இதயத்துக்குச் செல்லும் கழுத்துப் பெருஞ்சிரை (Carotid vein) ரத்தக் குழாய் வழியாக இதன் மின்கம்பிகளை இதய அறைகளுக்குள் கொண்டுசென்று பொருத்திவிடுகின்றனர்.

இது ஒரு கடிகாரத்தைப் போல் இயங்கிக்கொண்டிருக்கும். இதில் இதயம் எத்தனை முறை துடிக்க வேண்டும் என்று நிரல் எழுதப்பட்டிருக்கும். அதற்கேற்ப மின்தூண்டல்களை உருவாக்கி இது இதயத்துக்கு அனுப்புகிறது. அதனால் இதயம் தூண்டப்பட்டு துடிப்பு சீராகிவிடுகிறது. இதில் உள்ள மின்கலத்தின் ஆயுள்காலத்தைப் பொறுத்து குறிப்பிட்ட ஆண்டுகள் இடைவெளியில் இதை மாற்றிக்கொள்ள வேண்டும்.

கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்,

தொடர்புக்கு: gganesan95@gmail.com

அன்பு வாசகர்களே....


வரும் ஏப்ரல் 14 வரை வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசைமருத்துவம் தெளிவோம்இதயத் துடிப்புHeart rateதுடிப்பு முடக்கம்Heart blockPacemakerமாரடைப்புஅறுவை சிகிச்சை

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author