இளமைத் தோற்றம் தரும் பழம்

இளமைத் தோற்றம் தரும் பழம்
Updated on
2 min read

கனி

‘வைட்டமின்-சி’ நிறைந்த பழங்களில் முக்கிய மானது பப்பாளி. ஒரு நாளில் ஒரு முறை பப்பாளிப் பழம் சாப்பிட்டால், ஒரு நாளுக்குத் தேவையான வைட்டமின்-சி 313 சதவீதம் கிடைப்பதாகச் சொல் கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள்.

எலும்புத் தேய்மானம், இதய, நீரிழிவு நோய்களைத் தடுக்கவும் பப்பாளி உதவுகிறது. அத்துடன், பப்பாளியில் ஜீரணத்துக்கு உதவிசெய்யும் ‘என்சைம்’கள் அதிகமாக இருக்கின்றன. அதனால், நீங்கள் சாப்பிடும் உணவில் இருக்கும் வைட்டமின்கள், கனிமங்கள், புரதம் ஆகிய ஊட்டச்சத்துகள் உங்கள் உடலில் சேர்வதற்கு உதவுகிறது.

பப்பாளிப் பழத்தைச் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்…

குறையும் கொழுப்புச்சத்து

பாப்பாளியில் நார்ச்சத்து, வைட்டமின்-சி, ஆக்ஸிஜனேற்றத் தடுப்பான்கள் இருப்பதால், ரத்தக்குழாயில் கொழுப்புச் சத்து சேராமல் தடுக்க உதவுகிறது. மாரடைப்பு, உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் பப்பாளி உதவுகிறது.

குறையும் உடல் எடை

உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் தங்கள் உணவில் பப்பாளியைச் சேர்த்துக்கொள்வது சிறந்தது. பப்பாளியில் இருக்கும் குறைவான கலோரி உடல் எடையைச் சீராக வைத்துக்கொள்ள வழிவகுக்கிறது. அத்துடன், பப்பாளியில் இருக்கும் நார்ச்சத்து, மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுத்து, உங்கள் உடல் எடையைச் சராசரி அளவில் பராமரிக்க உதவுகிறது.

அதிகரிக்கும் எதிர்ப்பு ஆற்றல்

ஒரு சிறிய அளவிலான பப்பாளியில் 200 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கும் வைட்டமின்-சி, உங்கள் உடலின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க உதவுகிறது. உடலில் பலவிதமான தொற்றுகள் ஏற்படாமல் தடுக்க பப்பாளிப் பழம் சிறந்த மருந்தாகச் செயல்படுகிறது.

நீரிழிவுக்கு நல்லது

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிடுவதற்கு ஏற்றது பப்பாளிப் பழம். பப்பாளியில் இருக்கும் குறைவான சர்ச்கரை அளவு நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிறந்த தீர்வு. நீரிழிவு நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ள விரும்புபவர்களும் பப்பாளிப் பழத்தைச் சாப்பிடலாம்.

கண்களுக்குச் சிறந்தது

பப்பாளியில் அதிகமான ‘வைட்டமின்-ஏ’ சத்து உள்ளது. அதனால், பார்வைக் குறைபாடு ஏற்படுவதிலிருந்து தடுக்க உதவுகிறது. வயது காரணமாக ஏற்படும் கண் பார்வைக் கோளாறைத் தடுக்க நினைப்பவர்கள் பப்பாளிப் பழத்தை அதிக அளவில் எடுத்துக்கொள்வது நல்லது. கூர்மையான பார்வைக்குப் பப்பாளி சிறந்த மருந்தாகச் செயல்படுவதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

மூட்டு வீக்கத்தைக் கட்டுப்படுத்தும்

பப்பாளிப் பழத்தைச் சாப்பிடுவதால் எலும்புகள் வலுவடைகின்றன. பப்பாளியில் ‘வைட்டமின்-சி’யுடன் வீக்கத்தைக் கட்டுப்படுத்தும் பண்புகள் இருப்பதால் மூட்டு வீக்கத்திலிருந்து பாதுகாக்கிறது. ‘வைட்டமின்-சி’ குறைவாக இருக்கும் உணவைச் சாப்பிடுபவர்களுக்கு மூட்டு வீக்கம் வருவதற்கான சாத்தியம் மூன்று மடங்கு அதிகமாக இருப்பதாகத் தெரிவிக்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள்.

ஜீரணத்துக்கு உதவுகிறது

இன்றைய அவசரகதியான வாழ்க்கைமுறையில் சக்கை உணவு, துரித உணவைச் சாப்பிடுவதைத் தவிர்ப்பது என்பது சிரமம். அத்துடன், உணவகங்களில் அதிக எண்ணெய்யுடன் சமைக்கப்படும் உணவைச் சாப்பிடுவதையும் பலரால் தவிர்க்க முடியவில்லை. அன்றாடம் உணவில் பப்பாளிப் பழத்தைச் சேர்த்துக்கொள்வது இந்த மாதிரியான தவறுகளைச் சீர்செய்துகொள்ள உதவும். பப்பாளியில் இருக்கும் ‘பாப்பைன்’ (papain) என்ற ‘என்சைம்’ நார்ச்சத்துடன் இணைந்து உங்கள் ஜீரண மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது.

மாதவிடாய் வலிக்குத் தீர்வு

மாதவிடாயின் போது வலியை எதிர்கொள்ளும் பெண்கள் பப்பாளிப் பழத்தை அதிக அளவில் எடுத்துக்கொள்ளலாம். பப்பாளியில் இருக்கும் ‘பப்பைன்’ (papain) ‘என்சைம்’, மாதவிடாயின்போது ரத்தப்போக்குச் சீராக இருக்க உதவுகிறது.

என்றும் இளமை

எப்போதும் இளமையாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள், அன்றாடம் ஒரு பப்பாளிப் பழத்தைச் சாப்பிடுவது சிறந்தது. பப்பாளிப் பழத்தை நாள்தோறும் சாப்பிடுபவர்கள் தங்கள் உண்மையான வயதைவிட ஐந்து வயது குறைவான தோற்றத்துடன் இருப்பார்கள். பப்பாளியில் இருக்கும் வைட்டமின்-சி, வைட்டமின்-இ, ஆக்ஸிஜெனேற்றத் தடுப்பான்கள் தோலில் சுருக்கம் ஏற்படாமல் பாதுகாக்கின்றன.

புற்றுநோயைத் தடுக்கிறது

பப்பாளியில் இருக்கும் ஆக்ஸிஜனேற்றத் தடுப்பான்கள், பைட்டோ ஊட்டச்சத்துகள், ‘ஃப்ளேவனாயிட்கள்’ உடலில் இருக்கும் உயிரணுக்கள் பாதிப்படைவதிலிருந்து பாதுகாக்கின்றன. பப்பாளிப் பழத்தைச் சாப்பிடுவது புற்றுநோய் ஏற்படாமல் தடுக்க உதவுவதாகச் சொல்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள்.

மன அழுத்தத்தைக் குறைக்கிறது

ஒரு நாள் முழுவதும் கடுமையாக உழைத்துக் களைத்தபின், வீட்டுக்குச் சென்றவுடன் ஒரு தட்டு பப்பாளிப் பழத்தைச் சாப்பிடுவது சிறந்தது. பப்பாளியில் இருக்கும் வைட்டமின்-சி, மன அழுத்தத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது. பப்பாளியில் இருக்கும் வைட்டமின்-சி, மன அழுத்தத்தை ஏற்படுத்தும் சுரப்பிகளைச் சீராக்குவதாகச் சொல்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in