Published : 01 Feb 2020 10:29 AM
Last Updated : 01 Feb 2020 10:29 AM

மருத்துவம் தெளிவோம்! 20: சுவாசம் சுருங்கும் பிரச்சினைகள்!

டாக்டர் கு. கணேசன்

தை மாதம் பிறந்துவிட்டது. ஆனாலும், பனிப்பொழிவு இன்னும் குறைந்தபாடில்லை. பனிக்காலம் கொடுக்கும் ஆரோக்கியப் பிரச்சினைகளில் ஆஸ்துமா, நாட்பட்ட சுவாசத்தடை நோய் போன்ற சுவாசம் முட்டும் பிரச்சினைகளை எதிர்கொள்வதுதான் பலருக்கும் சிரமமாக இருக்கிறது.

பொதுவாக, பரம்பரைத் தன்மையும் ஒவ்வாமையும்தான் ஆஸ்துமா ஏற்பட முக்கியக் காரணங்கள். என்றாலும், பனிக் காலத்தில் உண்டாகும் குளிர்ந்த காற்று இந்த நோயைச் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கும்.

ஆஸ்துமா எவ்வாறு ஏற்படுகிறது?

ஆஸ்துமாவைத் தூண்டக்கூடிய காரணங்கள் ஆளுக்கு ஆள் வேறுபடும். ரோஸ்மில்க், பாதாம்பால் உள்ளிட்ட குளிர்பானங்கள், ஐஸ்கிரீம், சாக்லேட், கேக் போன்ற குளிர்ச்சியான உணவுப் பொருள்களை அடிக்கடி சாப்பிடுவது, ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை போன்ற புளிப்பான பழங்களைச் சாப்பிடுவது, அடிக்கடி தலைக்குத் தண்ணீர் ஊற்றுவது, சாம்பிராணி புகை போடுவது போன்ற பழக்க வழக்கங்களாலும் ஆஸ்துமா வரும்.

ஒட்டடைத் தூசு உள்ளிட்ட வீட்டுத் தூசுக்கள், படுக்கைப் பூச்சி, வாகனப் புகை, கொசுவிரட்டிகள், வாசனைத் திரவியங்கள், பூக்களின் மகரந்தம், வீட்டு வளர்ப்புப் பிராணிகளின் ரோமம், மன அழுத்தம், காற்றோட்டம் இல்லாத சூழல் போன்றவையும் ஆஸ்துமாவை வரவழைக்கும்.

ஆஸ்துமாவின் அறிகுறிகள் என்னென்ன, என்ன சிகிச்சை?

ஆஸ்துமா பாதிப்பு உள்ளவர்கள் சுவாசிக்க மிகவும் சிரமப்படுவார்கள். இளைப்பு உண்டாகும். நெஞ்சில் ‘விசில்’ சத்தம் கேட்கும். குறிப்பாக இரவில் இந்தச் சத்தம் அதிகமாக கேட்கும். சிலருக்கு இளைப்பு இருக்காது. பதிலாக, இடைவிடாத இருமல் இருக்கும். இதுவும் ஆஸ்துமா பிரச்சினைதான்.

ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்த இப்போது இன்ஹேலர், ரோட்டா ஹேலர், நெபுலைசர், நேசல் ஸ்பிரே போன்ற பல உள்ளிழுப்புக் கருவிகள் உள்ளன. இவற்றின் உதவியுடன் பாதுகாப்பான மருந்துகளை உறிஞ்சிக்கொண்டு ஆஸ்துமாவை விரைவில் கட்டுப்படுத்த முடியும். மூச்சுக்குழாயை உடனே விரிய வைக்கும் மருந்துகளும் ஒவ்வாமையைக் கட்டுப்படுத்தும் மருந்துகளும் கொடுக்கப்படும். அவற்றோடு நெஞ்சில் சளி சேர்ந்திருந்தால் அதற்கும் சிகிச்சை தேவைப்படும்.

‘நாட்பட்ட சுவாசத்தடை நோய்’ (COPD) என்றால் என்ன?

இதுவும் சுவாசத்தை அடக்கும் பிரச்சினைதான். காரணம்தான் வேறு. முக்கால்வாசிப் பேருக்கு பீடி, சிகரெட், சிகார் புகைப்பதால் மட்டுமே வரக்கூடியது. அடுத்த 20 ஆண்டுகளில் உலகில் இரண்டாம் உயிர்க்கொல்லியாக மாறக்கூடிய அளவுக்கு இந்த நோயின் தாக்குதல் அதிகமாகி வருகிறது. ஆனாலும், இந்த நோயின் தீவிரத்தை இன்னும் மக்கள் அவ்வளவாக அறியவில்லை என்பதுதான் பெருந்துயரம்.

புகைபிடிப்பது தவிர வேறு பிரச்சினைகளால் இந்த நோய் வர வாய்ப்பிருக்கிறதா?

இருக்கிறது. சிகரெட் புகைத்தவர்கள் வெளிவிட்ட புகையை அடுத்தவர்கள் சுவாசித்தால் (Passive smoking) அவர்களுக்கும் நாட்பட்ட சுவாசத்தடை நோய் வரலாம். கரிப்புகை, விறகடுப்புப் புகை, சாம்பிராணிப் புகை என்று வீட்டில் ஏற்படும் புகையைத் தொடர்ந்து சுவாசிப்பவர்களுக்கும் இது வரலாம். வாகனப் புகை, தொழிற்சாலைப் புகை, ரசாயனப் புகை போன்றவையும் இந்த நோயைத் தூண்டலாம். இந்த நோயுள்ள 100 பேரில் 2 பேருக்கு AAT புரதம் வம்சாவளியில் குறைவாக இருப்பதால் வருகிறது.

புகைப்பதால் நுரையீரல் எப்படிப் பாதிக்கப்படுகிறது?

நுரையீரலுக்குள் நுழையும் புகையின் நச்சுக்கள் மூச்சுக்குழாயைத் தின்றுவிடுகின்றன. அதனால் மூச்சுக்குழாயில் வீக்கம் உண்டாகிறது. அங்கு சளி சேருகிறது. அப்போது மூச்சுக்குழாயின் உட்புறத்தில் அடைப்பு ஏற்படுகிறது. இதன் ஆரம்பநிலையை நம்மால் உணர முடியாது.

சாதாரண சளி, மூச்சிளைப்பு என்றுதான் நினைத்துக் கொண்டிருப்போம். நாட்பட நாட்பட இது சாதாரணக் கட்டத்தைக் கடந்துவிடுகிறது. நிரந்தமாகவே மூச்சுக்குழாய் வீங்கி அழற்சி அடைகிறது (Chronic bronchitis). அப்போது மூச்சுக் குழாய்க்குள் சிறிதுகூடக் காற்று செல்ல முடியாத அளவுக்குச் சளி சேர்ந்து அடைத்துக்கொள்கிறது. இந்தச் சளியை வெளியேற்ற இடைவிடாமல் இருமல் வருகிறது; மூச்சுத்திணறலும் ஏற்படுகிறது.

அடுத்து, இவர்களுக்கு நுரையீரலில் உள்ள நுண்ணிய காற்றுப்பைகள் உடைந்து வீங்கிவிடும். இங்குள்ள காற்று வெளியேற முடியாமல் அங்கேயே தங்கிவிடும். நாளடைவில் மொத்த நுரையீரலும் வீங்கிவிடும் (Emphysema). சுவாசிக்கும்போது நுரையீரல் விரிந்துகொடுக்கச் சிரமப்படும். நாட்பட்ட நுரையீரல் அழற்சியும் நுரையீரல் வீக்கமும் இணைந்துகொண்டால் சுவாசத்தை ரொம்பவே சுருக்கிவிடும். இதுதான் இவர்களுக்கு மோசமான நிலைமை; பலருக்கும் உயிராபத்தைக் கொடுக்கும் நிலைமை.

ஆஸ்துமாவும் நாட்பட்ட சுவாசத்தடை நோயும் ஒன்றா?

இல்லை. ஆஸ்துமா பெரும்பாலும் சிறுவயதிலேயே ஏற்படும்; ஒவ்வாமை, மூக்கொழுகல் போன்ற துணை அறிகுறிகள் காணப்படும்; பரம்பரைத் தன்மை இருக்கும்; பயனாளிக்குத் தற்காலிகமாகவே சிரமங்களைக் கொடுக்கும். ஆஸ்துமாவால் நோயாளியின் உடலின் மற்ற பகுதிகளில் பாதிப்புகள் ஏற்படுவதில்லை.

மாறாக, நாட்பட்ட சுவாசத்தடை நோய் நடுத்தர வயதில்தான் ஆரம்பிக்கும். புகைப்பழக்கம்தான் முக்கியக் காரணமாக இருக்கும். இந்தப் பாதிப்பு உள்ளவர்களுக்கு நுரையீரலின் பல பகுதிகள் சரிசெய்ய முடியாத அளவுக்கு நிரந்தரமாகவே செயலிழந்துவிடும். ஆகவே, இதற்கு அனுதினமும் சிகிச்சை தேவைப்படும். ஆஸ்துமாகூட அநேகருக்குக் குணமாக வாய்ப்புண்டு. ஆனால், நாட்பட்ட சுவாசத்தடை நோயைக் குணப்படுத்த முடியாது; கட்டுப்படுத்தவே முடியும்.

இந்த நோயால் உடலில் மற்ற உறுப்புகள் எப்படிப் பாதிக்கப்படுகின்றன?

நுரையீரல்களுக்குத் தேவையான அளவு ஆக்ஸிஜன் கிடைக்காதபோது அல்லது மிகவும் குறைந்த அளவுதான் கிடைக்கிறது என்கிறபோது, மற்ற உடல் உறுப்புகளுக்குத் தேவைப்படும் ஆக்ஸிஜன் அளவும் குறைந்துவிடுகிறது அல்லவா? இதனால் இதயம், மூளை, சிறுநீரகம், கண், எலும்பு போன்ற உறுப்புகளும் பாதிக்கப்படுகின்றன. மன அழுத்தம் ஏற்படும்.

நாட்பட்ட சுவாசத்தடை நோயை அறிவது எப்படி?

சின்னச் சின்ன வேலைகளைச் செய்யும்போது சுவாசிக்க சிரமம் ஏற்படும். மூச்சுத்திணறும். அடிக்கடி சளி வெளியேறும். நெஞ்சு இறுகியதுபோலிருக்கும். அப்போது நெஞ்சு வலிக்கும். இந்த அறிகுறிகள் இருக்கும்போதே வழக்கமான ரத்தப்பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். மார்பு எக்ஸ்-ரே, சி.டி. ஸ்கேன் எடுத்துப் பார்க்க வேண்டும். நுரையீரலின் செயல்திறனை அறியும் ‘ஸ்பைரோமெட்ரி’ பரிசோதனை மிக முக்கியம். FEV1/FVC அளவு 0.70க்குக் குறைவாக இருந்தால் இந்த நோய் இருப்பது உறுதி.

இந்த நோயில் பல நிலைகள் உள்ளன. அதற்கேற்ப சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும். நோய் நாட்பட்டுவிட்டால், எந்த நேரமும் சளியைத் துப்பிக்கொண்டிருக்க வேண்டும். சுவாசிக்க ரொம்பவே சிரமப்பட வேண்டும். நெஞ்சை ஒருவர் அமுக்குவதுபோல் இருக்கும். நடக்கும்போது ஓர் எட்டு வைத்தால்கூட மூச்சு முட்டும். உடற்பயிற்சி செய்தாலும் இந்தப் பிரச்சினை ஏற்படும். இவர்களுக்குக் குளிர்காலத்தில் நெஞ்சில் சளி உறைந்து கட்டியாகிவிடும் என்பதால் மூச்சுத்திணறல் அதிகமாகவே படுத்தி எடுக்கும். இரவில் உறக்கம் கெடும்.

என்னென்ன சிகிச்சைகள் உள்ளன?

ஆஸ்துமாவுக்குக் கொடுக்கப்படும் அதே சிகிச்சைதான் இதற்கும் இருக்கிறது. நோயின் தொடக்கத்தில் இது சரிப்படும். நோய் நாட்பட்டுவிட்டால் இவர்கள் நிரந்தரமாகவே இன்ஹேலரைப் பயன்படுத்த வேண்டும். பெரும்பாலும் இவர்களுக்கு ஸ்டீராய்டு சிகிச்சையே முக்கியமாகத் தேவைப்படும்.

சிலருக்கு ஆக்ஸிஜன் கொடுக்க வேண்டியதிருக்கும். மிகவும் மோசமான நிலையில் உள்ளவர்களுக்கு வெண்டிலேட்டர் பொருத்த வேண்டியதிருக்கும். அதைத் தொடர்ந்து வீட்டிலேயே ஆக்ஸிஜன் கொடுப்பதற்கும் ஏற்பாடு செய்ய வேண்டியதிருக்கும். நுரையீரலின் வீக்கத்தைக் குறைக்கும் அறுவை சிகிச்சைகளும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையும் நவீன மருத்துவத்தில் உள்ளன.

இதைத் தடுப்பது எப்படி?

முற்றிலுமாகப் புகைப்பழக்கத்துக் குத் தடை போட வேண்டும். விறகடுப்பு சமையலுக்கு விடை கொடுக்க வேண்டும். மற்ற எல்லா வகையிலும் புகை கலந்த காற்றைச் சுவாசிக்கும் சூழலைத் தவிர்க்க வேண்டும். இது முடியாத சூழ்நிலையில் புகையை விட்டு ஒதுங்கி இருப்பது நல்லது.

முகத்திரை மாட்டிக்கொள்ளலாம். காலையில் எழுந்ததும் தினமும் மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டும். மாசில்லாத நல்ல காற்றோட்டம் உள்ள இடங்களில் 30 முதல் 45 நிமிடங்களுக்குத் தினமும் நடைப்பயிற்சி செய்ய வேண்டும். நோய் எதிர்ப்பாற்றல் தருகின்ற, புரதம் மிகுந்த உணவைச் சாப்பிட வேண்டும். பன்றிக் காய்ச்சல் உள்ளிட்ட ஃபுளு காய்ச்சலுக்கும் நிமோனியாவுக்கும் முறைப்படி தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்,
தொடர்புக்கு: gganesan95@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x