Published : 25 Jan 2020 10:55 AM
Last Updated : 25 Jan 2020 10:55 AM

அச்சுறுத்துகிறதா டிஜிட்டல் உலகம்?

மு.வீராசாமி

புதிதாக மின்னணுக் கருவிப் பயன்பாட்டுப் பிரச்சினை (Digital Disorder) உருவாகிக் கொண்டிருப்பது பற்றி உலக நாடுகள் கவலை தெரிவித்து வருகின்றன. சீனா, தென்கொரியா, ஜப்பான் போன்ற நாடுகள் இணைய அடிமை என்பதை ஏற்கெனவே ஒரு தீவிர பொதுச் சுகாதாரப் பிரச்சினையாக உணர்ந்துள்ளன. இணைய விளையாட்டுக்கு அடிமை யாவது உடல்நலத்துக்குத் தீங்கானது என்று உலக சுகாதார நிறுவனம் மே 2019-ல் அறிவித்து இருக்கிறது.

எப்படி மதுவின் அடிமைத் தனத்திலிருந்து தீர்வு காண்பதற்காக மறுவாழ்வு நிலையங்கள் இருக்கின்றனவோ அதுபோன்று மின்னணுப் பயன்பாட்டுப் போதையிலிருந்து விடுபடுவதற்கு மறுவாழ்வு மையங்கள் வெளிநாடுகளில் உள்ளன. இந்தியாவில் முதன்முறையாக, பெங்களூருவில் உள்ள நிம்ஹான்ஸ் மருத்துவமனையில் நாட்டிலேயே முதலாவது ‘சட்’ கிளினிக் (Service for Healthy use of Technology) தொடங்கப்பட்டுள்ளது.

மின்னணு நோய்கள்

சமூக வலைத்தளங்களில், நம்மைச் சுற்றி நடக்கும் பல நிகழ்வுகளைப் பார்த்து நாம் இவற்றை எல்லாம் தவறவிடுகிறோமோ என்ற பயத்தால் துன்பப்பட்டு மனச்சோர்வாவது ‘போமோ’ (Fear of Missing Out – FoMo). செல்போன் அழைப்பு மணி அடிக்காதபோதும் அழைப்பதுபோன்ற உணர்வு உங்களுக்கு இருந்தால் அது ‘மறைமுக அழைப்பு மணி’ குறைபாடு. திடீரென உங்களுடைய செல்போன் ஒருநாள் வேலை செய்யாமல் போயிருக்கலாம் அல்லது செல்போன் நெட்வொர்க் இல்லாமல் போயிருந்திருக்கலாம். அப்போது ஏற்படும் யாரும் இல்லாத நடுக்காட்டில் தத்தளிப்பது போன்ற ஒருவித பதற்றமும் சோர்வும் ‘நோமோபோபியா’. முகநூலில் நம்மைத் தவிர மற்றவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று எண்ணி வருத்தம் அடைந்து அதனால் சோர்வடைவது ‘முகநூல் சோர்வு’.

ஆய்வு சொல்லும் சேதி

மின்னணுக் கருவிப் பயன்பாட்டுப் பிரச்சினை (Digital Disorder) குறித்து அண்மையில் வார இதழ் ஒன்று கள ஆய்வு மேற்கொண்டது. இந்தியா முழுவதும் உள்ள ஒன்பது பெருநகரங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் பலரும் மின்னணு கருவிகளுக்கு அடிமையாக இருப்பதைத் தவிர்க்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளனர். நாளொன்றுக்குக் குறைந்தது 7 முதல் 10 மணி நேரம் அதில் மூழ்கி இருக்கிறார்களாம்.

சாப்பிடும்போதும், கழிப்பறை செல்லும் போதும், வண்டி ஓட்டும்போதுகூட செல்போன் பயன்பாட்டைத் தவிர்க்க முடியவில்லையாம். படுக்கையிலும் செல்போனுக்குத்தான் முதலிடம். காலையில் தொடங்கி இரவுவரை ஒவ்வொருவரும் சராசரியாக ஏதாவது ஒரு வகையில் செல்போனை 150 தடவை பார்க்கிறார்களாம்.

உறவுகளோடு கைகோப்போம்

செல்போன் இன்று பல்வகைச் செயல்களுக்குப் பயன்படுத்தப்பட்டு வந்தாலும் அடிப்படையில் அது ஒரு தகவல்தொடர்பு சாதனம் என்பதை அடிக்கடி நினைவில்கொள்ள வேண்டும். தேவை என்றால் மட்டுமே செல்போனைப் பயன்படுத்துவது என்ற உறுதியை ஒவ்வொருவரும் எடுத்துக்கொள்ள வேண்டும். மின்னணுப் பயன்பாட்டுக்கு எதிராக அனைவரும் சேர்ந்து செயல்பட வேண்டிய தேவை தற்போது ஏற்பட்டுள்ளது. கைப்பேசியில் இருந்து கைகளை விடுவித்து மனித உறவுகளோடு கைகோத்தால், நாம் மட்டுமல்ல; நமது சுற்றமும் நலத்துடன், மகிழ்வுடன் இருக்கும்.

கட்டுரையாளர், மதுரை அரசு கண் மருத்துவ உதவியாளர் தொடர்புக்கு: veera.opt@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x