

முகமது ஹுசைன்
நலம் காக்கும் உணவுக் களஞ்சியம்
கு.கணேசன்
பக்.445;
ரூ.450;
காவ்யா, சென்னை-24
தொடர்புக்கு:
044- 2372 6882.
எந்தக் கீரையில் என்ன சத்து? குழந்தைகளுக்கு என்ன உணவு? குழந்தைகளுக்குப் பால் பவுடர் கொடுக்கலாமா? கர்ப்பிணிக்கு, பாலூட்டும் தாய்க்கு, வயதானவர்களுக்கு என்ன உணவு? சர்க்கரை நோய், இதய நோய், அல்சர், சிறுநீரகப் பாதிப்பு, காமாலை, மலச்சிக்கல் ஆகிய உடல் பாதிப்புகள் உள்ளவர்கள் எவற்றை உண்ண வேண்டும்? ஒவ்வொரு எண்ணெய்யிலும் உள்ள சத்துகள் எவை? இதய நோயாளிகள் முட்டை சாப்பிடலாமா என மிகவும் எளிமையாக உணவைப் பற்றிய பல தகவல்களை அள்ளித் தருகிறது இந்நூல்.
மன வளர்ச்சிக் குறைபாடுகள் டாக்டர் எம்.எஸ். தம்பிராஜா
வல்லமை பதிப்பகம்,
விலை: ரூ. 325
தொடர்புக்கு: 04652 278525
எழுத்தின் எளிமையும் தெளிவும் எழுத்தாளருக்குச் சொல்ல வரும் கருத்திலிருக்கும் புரிதலைப் பொறுத்தே அமையும். அதற்கு இந்தப் புத்தகமே சான்று. இந்தப் புத்தகத்தில், ஒரு சிக்கலான மருத்துவ நிலையை, புனைகதைக்கே உரியச் சுவாரசியமான மொழியில் டாக்டர் எம்.எஸ். தம்பிராஜா அடக்கி உள்ளார். ஆட்டிசம், அறிவுத்திறன் குறைபாடு, டிஸ்லெக்சியா (கற்றல் குறைபாடு) போன்றவற்றைப் பாமரனுக்கும் புரியும் மொழியில், அதே நேரம் கருத்துச் செறிவுடனும் அவர் எழுதியிருப்பதுடன் மட்டுமல்லாமல்; வாசிப்பவர் எளிதில் உள்வாங்கிக்கொள்ளும்படி வெகு நேர்த்தியாகக் கட்டமைத்து உள்ளார்.
நோய் தீர்க்கும் பாரம்பரிய உணவுகள்
சாவித்திரி கண்ணன்
காக்கைக் கூடு பதிப்பகம் * பக். 74; * ரூ. 85
தொடர்புக்கு: 9043605144
நம் பாரம்பரியத்தில் உணவு, வாழ்வியல் சார்ந்த ஒழுக்கம் ஆகியவற்றின் மூலமாக நோய்கள் வராமல் தடுக்கவும், வந்த நோய்களைத் தீர்க்கவுமான அணுகு முறைகள் பின்பற்றப்பட்டன. அவற்றை உள்வாங்கி எந்தெந்த நோய்களுக்கு என்னென்ன உணவைத் தவிர்க்க வேண்டும், என்னென்ன உணவை உட்கொள்ள வேண்டும், எந்த மாதிரியான வாழ்க்கைமுறை ஒழுக்கங்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்ற ஆய்வின் அடிப்படையில் இந்த நூலை சாவித்திரி கண்ணன் எழுதியுள்ளார். இந்தப் புத்தகத்தின் மூலம், உணவே மருந்தாகக் கருதக்கூடிய உயர்ந்த, ஆரோக்கியமான நம் உணவுப் பண்பாட்டுக்கு நம்மை மீண்டும் திரும்ப அவர் அழைக்கிறார்.
டிஜிட்டல் மாஃபியா
வினோத் குமார் ஆறுமுகம் * வி கேன் புக்ஸ்
பக். 132, * ரூ. 120
* தொடர்புக்கு: 9003267399
இன்றைய நவீனத் தொழில்நுட்ப யுகத்தில் சமூக வலைத்தளங்கள் நம்மை அடிமையாக்கிவிட்டன. நமது வாழ்வின் ஜீவனை அது நீர்த்துப் போகச் செய்துவிட்டது. ஊர்களை உயிர்ப்புத்தன்மை அற்றதாக மாற்றிவிட்டது. நமது உடையை, உணவை மட்டுமல்லாமல், நமது சிந்தனையையும் சமூக வலைத்தளங்களே இன்று தீர்மானிக்கின்றன. நம்மை ஒரு சோதனை எலியாகவே பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் கருதுகின்றன. தேர்தலில் உங்கள் ஓட்டு யாருக்கு என்பதையும் இன்று சில கார்ப்பரேட் நிறுவனங்களே தீர்மானிக்கின்றன. இந்தப் புத்தகம் உங்கள் ஓட்டுரிமையை மட்டுமல்ல; உங்கள் வாழ்வின் ஜீவனையும் மீட்டெடுக்க உதவும்.
நிலம் உணவு நலம்
போப்பு * வாசல் பதிப்பகம் * பக். 80; * ரூ. 100
தொடர்புக்கு: 98421 02133
இந்த உலகில் எது ஒன்றையும் தனித்தனியாகப் புரிந்துகொள்வதைவிட, ஒன்று மற்றொன்றுடன் இணைத்திருக்கும் சங்கிலித் தொடரைப் புரிந்துகொள்வதுதான் முழுமையானது. உடலும் உணவும் தனித்தனியாகப் பேச வேண்டியது அல்ல; உடலையும் உணவையும் புரிந்துகொள்ள நிலத்தையும் நிலத்தின் பண்பினையும் இணைக்க வேண்டும். நிலம், உணவு, நலம் இதுவே ஒரு வட்டத்தை இணைக்கும் புள்ளிகள். மூன்று புள்ளிகளை இணைத்துப் பார்ப்பதுவே அகவிழி திறந்து கவனிக்கும் செயல். சரளமான நடையில், எளிமையான மொழியில் போப்பு எழுதியிருக்கும் இந்தப் புத்தகம் அகவிழி திறக்கும் புத்தகம்.
இனிப்பு தேசம்
மருத்துவர் கு. சிவராமன்
தமிழ் திசை பதிப்பகம்
மிகப் பெரிய நோயாக உருவாகிவரும் நீரிழிவைப் பற்றிய பொது நம்பிக்கைகள் சரியா, தவறா என்று ‘இனிப்பு தேசம்’ நூலில் பிரபல மருத்துவரும் எழுத்தாளருமான கு. சிவராமன் விளக்கியுள்ளார். நீரிழிவு நோய் குறித்த பயங்களைப் போக்கும் அதேநேரம், இந்த நோயைக் கையாள்வதில் கொள்ள வேண்டிய கவனத்தையும் இந்த நூல் வலியுறுத்துகிறது.
நலம், நலம் அறிய ஆவல்
டாக்டர் கு. கணேசன்
தமிழ் திசை பதிப்பகம்
எந்த மருத்துவப் பிரச்சினை களையும் எளிமையான, நேரடியான மொழியில் விளக்கக்கூடியவர் டாக்டர் கு. கணேசன். அந்த வகையில், இந்த நூல் வாசகர்களுடன் நேரடியாக உரையாடலே நடத்திவிடுகிறது. அனைவரின் ஆரோக்கியம் காப்பதையே நோக்கமாகக் கொண்ட டாக்டர் கு. கணேசன், இந்தப் புத்தகம் மூலம் வாசகர்களையும் மருத்துவ அறிவு பெற்றவர்களாக மாற்றி விடுகிறார்.
மூலிகையே மருந்து
டாக்டர் வி. விக்ரம்குமார்
தமிழ் திசை பதிப்பகம்
நம் வீடுகளிலும் புல்வெளி பகுதி களிலும் மிகச் சாதாரணமாக வளரக்கூடிய கீழாநெல்லி மஞ்சள் காமாலைக்கான கைகண்ட மருந்து. அதேபோல நம் அஞ்சறைப் பெட்டியிலிருக்கும் பல நறுமணப் பொருட்கள் மருத்துவ குணம் கொண்டவை. இதுபோன்ற 50 மூலிகைகளின் மருத்துவ குணங்களையும் பயன்களையும் இந்த நூல் எடுத்துரைக்கிறது. சித்த மருத்துவரும் மருத்துவ எழுத்தாளரு மான வி.விக்ரம்குமார் இந்த நூலை எழுதியிருக்கிறார்.
‘இந்து தமிழ்திசை’ வெளியீடுகள் சென்னை புத்தகக் காட்சியில் ‘இந்து தமிழ் திசை’ அரங்கில் (133 & 134) இந்தப் புத்தகங்கள் கிடைக்கும். தொடர்புக்கு: 7401296562