Published : 04 Jan 2020 12:30 pm

Updated : 04 Jan 2020 12:30 pm

 

Published : 04 Jan 2020 12:30 PM
Last Updated : 04 Jan 2020 12:30 PM

மருத்துவம் தெளிவோம் 16: மதுவால் ஏற்படும் பேராபத்து கணையம் கவனம்!

let-s-clarify-the-medicine

டாக்டர் கு. கணேசன்

வயிற்றில், இரைப்பைக்குக் கீழே இடப்பக்கமாக, ஒரு வாழை இலையை விரித்ததுபோல் இருக்கிறது, கணையம். குடலில் செரிமானத்துக்கு உதவும் என்சைம்களும் தாதுக்களும் அடங்கிய கணைய நீரை இது சுரக்கிறது. இந்த நீர் கணையக் குழாய் வழியாகக் குடலுக்கு வந்துசேருகிறது. அத்தோடு இன்சுலின், குளுக்ககான் ஆகிய ஹார்மோன்களைச் சுரப்பதும் கணையமே!

இன்சுலின் ரத்தத்தில் சர்க்கரையைக் கட்டுக்குள் வைத்திருக்கிறது. குளுக்ககான், ரத்தத்தில் சர்க்கரை குறையும்போது, கல்லீரலில் சேமிக்கப்பட்டுள்ள குளுக்கோஸை எடுத்து வந்து ரத்தத்தில் கலக்கிறது. இந்த இரண்டு ஹார்மோன்களும் புதுத் தம்பதிபோல் ஒன்றுக்கு ஒன்று புரிந்து செயல்படுவதால், ரத்தச் சர்க்கரை சரியாக இருக்கிறது. தம்பதிகளுக்குள் பிணக்கு வந்தால் குடும்ப உறவு கெடுவதுபோல் ஏதாவது ஒரு காரணத்தால் கணையம் பாதிக்கப்படுகிறது என்றால் நீரிழிவு நோய் ஏற்படுகிறது.

என்னென்ன காரணங்களால் கணையம் பாதிக்கப்படுகிறது?

கணையம் திடீரென்றோ சிறிது சிறிதாகவோ பாதிக்கப்படலாம். அப்போது கணையம் வீங்கிவிடும். அந்த நிலைமையைக் ‘கணைய அழற்சி’ (Pancreatitis) என்கிறோம். இதற்கு முக்கியமான காரணம் மது அருந்துவது. சொந்தக் காசில் சூனியம் வைத்துக்கொள்வதுபோல் அளவுக்கு அதிகமாக மது அருந்துபவர்களுக்குக் கணையக் குழாயில் ஒருவகைப் புரதப்பொருள் படிந்து நாளடைவில் அந்தக் குழாயை அடைத்துவிடும்.

அப்போது கணையத்தில் சுரக்கும் செரிமான நீர் குடலுக்குள் செல்லாமல் அங்கேயே தங்கிவிடும். அது கணையத்தின் செல்களை அழித்துவிடும். இதனால் கணைய அழற்சி ஏற்படும். இது பெரும்பாலும் தினமும் மது அருந்தும் பழக்கமுள்ள ஆண்களுக்கே வருகிறது. புகைபிடிக்கும் பழக்கம் உடனிருந்தால் இந்தப் பாதிப்பு விரைவில் வந்துவிடும்.

அடுத்த காரணம் இது. பித்தப்பையில் கற்கள் உண்டாகி பித்தக்குழாய் அடைத்துக்கொண்டால், கல்லீரலில் சுரக்கப்படும் பித்தநீர் மற்றும் முன்சிறுகுடலில் சுரக்கின்ற செரிமான நீர் ஆகியவை கணையத்துக்குள் நுழைந்து அங்குள்ள செல்களை அரித்துவிடுவதால் கணையத்தில் அழற்சி தோன்றும்.

கணையம் பாதிக்கப்பட வேறு காரணங்கள் உண்டா?

உண்டு. அம்மைக்கட்டு, மஞ்சள் காமாலை, எய்ட்ஸ் போன்ற நோய்களை உருவாக்கும் வைரஸ் கிருமிகளும் சிலவகை பாக்டீரியாக்களும் கணைய அழற்சியை உண்டாக்கும். இவை தவிர, ஊட்டச்சத்துக் குறைபாடு, மிகை பேராதைராய்டு பிரச்சினை, டிரைகிளிசரெய்டு மிகைக் கொழுப்பு, பரம்பரைக் கோளாறு, புற்றுநோய், தன் தடுப்பாற்றல் நோய், தேள்கடி உள்ளிட்ட விஷக்கடிகள், வயிற்றில் அடிபடுவது, சில மருந்துகளின் பக்கவிளைவு போன்றவற்றாலும் கணையம் பாதிக்கப்படலாம். ஆனால், இவை எல்லாமே மிகவும் அரிதாகவே கணைய அழற்சிக்கு வழி அமைக்கும்.

பரிசோதனைகள் என்னென்ன?

வழக்கமான ரத்தப் பரிசோதனைகளுடன் அமிலேஸ் அளவு கணிக்கப்படும். இதன் இயல்பு அளவு 40-80 சோமாகி அலகுகள். கணைய அழற்சியில் இது 1000 அலகுகளைத் தாண்டிவிடும். அடுத்ததாக, ரத்தத்தில் லைப்பேஸ் அளவும் அதிகரிக்கும். வயிற்றை எக்ஸ்-ரே, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், சி.டி.ஸ்கேன்/எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்துப் பார்ப்பதும் ERCP பரிசோதனையும் கணையம் பாதிக்கப்பட்டுள்ளதை உறுதி செய்யும்.

என்னென்ன அறிகுறிகள் உண்டாகும்?

கணைய அழற்சியில் இரு வகை உண்டு; வகையைப் பொறுத்து அறிகுறிகள் ஏற்படும்.

1. ‘திடீர்க் கணைய அழற்சி’ (Acute Pancreatitis): வயிற்று வலி திடீரென்று தொடங்கும். மேல் வயிற்றில் வலி ஆரம்பித்து முதுகுப் பக்கம் பரவும். குனிந்தால் வலி சிறிதளவு குறையும். படுத்தால், உணவு சாப்பிட்டால் வலி கடுமையாகிவிடும். சிலர் வலி தாங்க முடியாமல், தரையில் உருளுவார்கள். வாந்தி மிரள வைக்கும்.

கடுமையான இரைப்பைப் புண் உள்ளவர்களுக்கும் இதே போன்றுதான் வயிறு வலிக்கும். ஆனால், அவர்களுக்கு வாந்தி எடுத்த பின்னர் வயிற்று வலி குறைந்துவிடும். கணைய அழற்சி உள்ளவர்களுக்கு வாந்தி எடுத்தாலும் வயிற்று வலி குறையாது. கடுமையான கணைய பாதிப்பு என்றால் ரத்த வாந்தியும் ஏற்படும். மலம் கறுப்பாகப் போகும். லேசான காய்ச்சல் இருக்கும். இது குணமாக வாய்ப்புண்டு.

2. நாட்பட்ட கணைய அழற்சி (Chronic Pancreatitis): இது சிறிது சிறிதாகக் கணையம் பாதிக்கப்பட்டு, நாளடைவில் நோய் தோன்றும். ஒருவர் 5 வருடங்கள் தொடர்ந்து மது குடிப்பவராக இருந்தால், நாட்பட்ட கணைய அழற்சி அவரை ஆட்டிப்படைக்கத் தயாராகிவிட்டது என்று பொருள். இது மெல்ல மெல்ல ஆளைக் கொல்லும் நோய். முதலில் அஜீரணம் ஆக்கிரமிக்கும். சாப்பிடவே பிடிக்காது. குமட்டும். அப்படியே சாப்பிட்டாலும் வாந்தி கொட்டும்.

மிகவும் நாற்றமெடுத்த மலம் நுரை நுரையாகவும் கொழுப்புக் கொழுப்பாகவும் போகும். ஊட்டச்சத்துக் குறைபாடு உண்டாகும். உடல் மெலியும். மஞ்சள் காமாலை ஏற்படும். 100-ல் 20 பேருக்கு நீரிழிவு ஏற்படும். நாட்பட்ட கணைய அழற்சியைக் குணப்படுத்த வழியில்லை. இந்த நோயில் கணையப் பாதிப்புகள் நிரந்தரமாகிவிடும் என்பதுதான் அதற்குக் காரணம். இதன் தீவிரத்தைக் கட்டுப்படுத்தலாம். அதற்குத் தொடர் சிகிச்சை தேவைப்படும்.

கணைய அழற்சிக்கு என்ன சிகிச்சை தரப்படுகிறது?

கணையம் வீங்கி இருந்தால் மருந்துகள் மூலமே குணப்படுத்தி விடலாம். நோயின் மூல காரணத்தை அறிந்து சிகிச்சை தரும்போது நோய் குணமாகிவிடும். அதேநேரம் மதுவை மறப்பதற்கு வழி தேடினால்தான் மறுபடியும் பிரச்சினை வராது. கணையம் அழுகி விட்டாலோ, அதில் ரத்தப்போக்கு ஏற்பட்டுவிட்டாலோ, கல் அடைப்பு இருந்தாலோ அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.

நோயாளிகள் செய்யும் தவறு தெரியுமா?

நாட்பட்ட கணைய அழற்சியில் வயிற்று வலி நிரந்தரமாக இருக்காது. கார்ப்பரேசன் தண்ணீர் லாரி மாதிரி எப்போதாவது வந்துபோகும். என்றாலும், வயிற்று வலி ஏற்கெனவே சொன்னதுபோல் கடுமையாகவே இருக்கும். பலரும் இதை அல்சர் எனத் தப்பாகப் புரிந்துகொண்டு, கடைகளில் அல்சர் மருந்துகளை பாட்டில் பாட்டில்களாக வாங்கிக் குடிப்பார்கள். வலி குறையாது. நாளாக நாளாக வயிறு உப்பி மூச்சுவிட முடியாது. தேன் பாட்டிலைத் தேடியவருக்குத் தேள் கொட்டிய கதையாகிவிடும்.

அப்போது டாக்டரிடம் ஓடுவார்கள். ERCP மூலம் பரிசோதித்தால், எதிர்க்கட்சிகள் முழுநேரம் ‘பந்த்’ நடத்துவதுபோல், பித்தநீர் துளிகூடக் குடலுக்குச் செல்ல முடியாமல் பித்தக்குழாய் அடைத்திருக்கும். உடனே அதை விரித்து, அடைப்பை அகற்றி, ‘ஸ்டென்ட்’டைப் பொறுத்துவார்கள். இதற்கு அவசர ஆபரேஷன், உயிர் ஆபத்து என எல்லாவற்றையும் கடந்துவர வேண்டும். இவர்களில் பத்தில் ஒருவர் இறப்பைச் சந்திக்கிறார் என்பதுதான் பெருந்துயரம்.

இந்த நோயைத் தடுக்க முடியுமா?

தாராளமாகத் தடுக்கலாம். அதற்கு மது அருந்துவதை அறவே தவிர்க்க வேண்டிது முக்கியம். புகைபிடிக்கக் கூடாது. பித்தப்பையில் கற்கள் இருந்து அடிக்கடி தொல்லை தருகிறது என்றால் அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டும். மஞ்சள் காமாலை, அம்மைக்கட்டு போன்ற நோய்களுக்குக் குழந்தைப் பருவத்திலேயே தடுப்பூசி போட்டுக்கொள்வது நல்லது. சுய மருத்துவம் கூடாது. வயிற்றில் அடிபடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

கட்டுரையாளர்,
பொதுநல மருத்துவர்,
தொடர்புக்கு: gganesan95@gmail.com

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

மருத்துவம் தெளிவோம்மதுகணையம் கவனம்பரிசோதனைகள்கணைய அழற்சிசிகிச்சைநோயாளிகள்Acute PancreatitisChronic Pancreatitis

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

there-is-currently-no-vaccine-to-prevent-corona

இனிமே இப்படித்தான்!

இணைப்பிதழ்கள்

More From this Author