Published : 21 Dec 2019 11:31 AM
Last Updated : 21 Dec 2019 11:31 AM

இணையதள அடிமையா நீங்கள்?

ஆசாத்

நம்முடைய வாழ்க்கையை 1990-க்கு முன்பு, 1990-க்குப் பின்பு என இரண் டாகப் பிரிக்கலாம். 1990-க்குப் பின் நமது வாழ்க்கை முறை இயந்திரத்தனமாகி விட்டது. பெரும்பாலும் கைபேசியுடனோ மடிக் கணினியுடனோதான் அனைவருடைய நேரமும் இன்று கழிகிறது. விளையாடுவதாக இருந்தாலும் இணையதளத்தில்தான் பெரும்பாலானவர்கள் விளையாடுகிறார்கள். இதனால் பாதிக்கப்படுவது உடல்நலம் மட்டுமல்ல; மனநலமும்தான்.

அதிக அளவு இணையதளத்தைப் பயன்படுத்துவதும், இணையம் இல்லாமல் இருக்க முடியாது என்பதும், மது, புகைபோல் ஓர் அடிமைப் பழக்கம்தான். ஒரு வாரத்துக்கு 38.5 மணிநேரத்துக்கும் அதிகமாக இணையதளத்தைப் பயன்படுத்துகிறவர், மனத்தளவில் அதற்கு அடிமையாக இருப்பார் என்று ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. தற்போது, இணையதள உலகம் அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த அசுர வளர்ச்சியோ ஆரோக்கியமான முன்னேற்றத்துக்கு வழி வகுக்காமல், இணையத்துக்கு அடிமையான சமூகத்தையே உருவாக்கிவருகிறது.

அதிகாலை சூரிய உதயத்தின் அழகையோ குருவிகளின் சத்தத்தையோ ரசிக்கக்கூடத் தெரியாமல் இணையத்துக்கு அடிமையாகி வாழ்வின் மகிழ்ச்சியை இன்றைய தலைமுறையினர் தொலைத்து நிற்கின்றனர். அக்கம்பக்கத்தில் என்ன நடக்கிறது என்பது அவர்களுக்குத் தெரியாது.

சாப்பாட்டைவிட இணையதளமே அவர்களுக்கு முக்கியம். இணையதளத்துக்கு எதனால் அடிமையாகிறோம், எவ்வாறு அடிமை யாகிறோம், எதற்காக அடிமையாகிறோம், இணையதளத்துக்கு அடிமையாகி உள்ளதை எவ்வாறு அறிந்துகொள்வது? குறிப்பாக எந்தெந்த விஷயத்துக்காக இணைய அடிமை யாகிறோம் என்பதைக் குறித்து ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் மனநலத் துறையினர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தொகுப்பு இது

அதனால் உண்டாகும் பாதிப்புகள் என்னென்ன?

* நேரத்தைக் கையாளுவதில் சிரமம் உண்டாகும்.
* பொறுப்புகள் அனைத்தும் அரைகுறையாக நிற்கும்
* குடும்பத்துடன் ஆக்கப்பூர்வமாகச் செலவு செய்ய நேரம் இருக்காது
* உறவுகள், கல்வி, வேலை வாய்ப்புகளை இழக்க நேரிடுதல்
* மன அழுத்தம், பதற்றம்,
* தாம்பத்திய உறவில் நாட்டமின்மை,
* தற்கொலை எண்ணங்கள்,
* மதுவுக்கும், பிற போதைக்கும் அடிமையாதல்
* தூக்கமின்மை, தேவையற்ற எண்ணங்கள்.

எந்தெந்த விஷயங்களுக்காக இணையதளத்துக்கு அடிமையாகிறோம்?

* தகவல்களை அதிகமாகத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக
* கட்டுப்பாடில்லாமல் இணையதள விளையாட்டுகளைக் கணினி அல்லது செல்போனில் விளையாடுவதற்காக
* இணைய வழி சூதாட்டத்தில் ஈடுபடுவதற்காக
* இணையவழி ஷாப்பிங் மூலமாக விதவிதமான பொருள்களை வாங்குவதற்காக
* முகநூல், டிவிட்டர் மூலம் கிடைத்த இணையதள நண்பர்களுடன் நீண்டநேரம் உரையாடுவதற்காக
* பாலின இன்பக் காட்சிகளைப் பார்ப்பதற்காக

யார் யாரெல்லாம் எளிதில் பாதிக்கப்படக் கூடியவர்கள்?

* கூச்ச சுபாவம் உள்ளவர்கள், தங்கள் தாழ்வு மனப்பான்மை மனக்குறைகளை நிவர்த்தி செய்துகொள்ளப் பயன்படுத்திக் கொள்வார்கள்.
* பெற்றோர் குடும்பத்தினரின் கவனிப்பு இல்லாதவர்கள்.
* தன்னை அடையாளம் காட்டிக்கொள்ள விரும்பாதவர்கள்
* தனிமை விரும்பிகள்

இதிலிருந்து நாம் எப்படி மீள்வது? பிறரை எப்படி மீட்பது?

* மது, போதையில் பாதிக்கப்பட்டவர்களை அதிலிருந்து மீட்க நடவடிக்கை எடுப்பது போல் இணையதள அடிமைகளாக சிக்கியவர்களையும் மீட்க முடியும். பாதிக்கப் பட்டவர்களுக்குக் குடும்ப உறுப்பினர்களும் நண்பர்களும் உதவ வேண்டும்.
* ஒருவர் இணையதளத்தில் செலவிடும் தினசரி முறையைக் கண்டுபிடித்து, அதைப் படிப்படியாகக் குறைக்க வேண்டும்
* தொடர்புடையவரின் அன்றாடச் செயல்பாட்டில் அவரது சிந்தனையைக் கவரும் வகையில் உள்ள மாற்றுப் பழக்கங்களைக் கண்டறிந்து பழக்க வேண்டும்.
* இணையதள அடிமைப் பழக்கத்தால் கைவிடப்பட்ட அவரது வாடிக்கையான பழக்கவழக்கங்களைப் பட்டியலிட்டு அவருக்கு அதனை மீண்டும் தொடங்க வலியுறுத்துவது.
* கவனிப்பு அல்லது மேற்பார்வை இல்லாத வர்களைச் சுயஉதவி குழுக்களில் சேர்ப்பது.
* குடும்பம் சார்ந்த உறவு முறை பிரச்சினை களுக்கு சிகிச்சை எடுத்துக்கொள்வது.
* மனநிலைப் பிரச்சினைகளுக்கு மருத்துவரை அணுகுவது.
* நினைவூட்டல் அட்டைகள், இதனால் உண்டாகும் நன்மை தீமைகளை, தன் கைப்பட ஒரு அட்டையில் எழுதி வைத்துக் கொண்டு, அதனை அடிக்கடி படித்து நினைவூட்டிக்கொள்வது.
* இணையத்தால் பல்வேறு நன்மைகளும் உண்டு, தீமைகளும் உண்டு. தற்போதைய காலகட்டத்தில் பல வேலைகளுக்காக இணையதளத்தைப் பயன்படுத்தித்தான் ஆக வேண்டும். தேவையில்லாமல் இணையத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம். இணையம் இல்லாமல் இன்றைய உலகம் இல்லை. இணையத்தை மட்டும் உலகமாக நம்பிக்கொண்டிருப்பது பிழை என்பதை உள்ளார்ந்து உணர்வதே இணையதள அடிமை முறையிலிருந்து விடுபடுவதற்கான முதல் வழியாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x