

டாக்டர் செந்தில்குமார் நல்லுசாமி
உயிரைப் பறிக்கும் தொற்றா நோய்களில் முதலிடத்தில் இருப்பது இதய நோய். 20 வருடங்களுக்கு முன் வயதானவர்களுக்கு மட்டுமே ஏற்பட்டு வந்த மாரடைப்பு, இப்போது இளைஞர்களுக்குக்கூட ஏற்படுகிறது.
மாரடைப்பு இன்றைக்குச் சாதாரணமாகி விட்ட நிலையில், அதுகுறித்த புரிதல்களோ, உடனடியாக மேற்கொள்ள வேண்டிய முதலுதவி குறித்தோ விழிப்புணர்வோ பெரும்பாலானவர்களுக்கு இல்லை என்பதே இன்றைய நிதர்சனம்
நெஞ்சு வலியின் காரணங்கள்
40 வயதைக் கடந்தவர்களுக்கு நெஞ்சில் வலி ஏற்பட்டாலே, அது மாரடைப்பாக இருக்குமோ என்ற பயம் தொற்றிக்கொள்கிறது. ஆனால், எல்லா வகையான நெஞ்சு வலியும் இதய பாதிப்பால் மட்டும் உண்டாவதில்லை. தசைகள், எலும்பு, குடல்புண் உள்ளிட்ட காரணங்களாலும் நெஞ்சு வலி ஏற்படலாம். நெஞ்சுப் பகுதியில் ஊசி குத்துவதைப் போலச் சிறிது நேரம் வந்து போகும் வலிக்கும், இதயத்துக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.
எலும்பு அல்லது தசையால் நெஞ்சில் வலி ஏற்படும்போது, அந்தக் குறிப்பிட்ட பகுதியில் அழுத்திப் பார்த்தால் அந்த இடத்தில் வலி அதிகமாகும். குனியும்போதா, தும்மல் ஏற்படும்போதோ ஏற்படும் வலி, எலும்பு, தசை போன்றவற்றால் ஏற்படும் வலியாக இருக்கலாம். குடல்புண்ணால் ஏற்படும் நெஞ்சு வலியாக இருந்தால், சாப்பிடும்போது வலி அதிகமாகவோ, குறைவாகவோ இருக்கலாம்.
ஆஞ்ஜைன்னா
நடைப்பயிற்சி, ஓட்டப்பயிற்சி, மாடிப்படி ஏறுதல், கடினமான உடல் உழைப்பு போன்றவற்றில் ஈடுபட்டிருக்கும்போது வலி ஏற்பட்டு, சிறிது நேரம் ஓய்வெடுத்தால் வலி குறைந்தாலோ அல்லது வலி இல்லாமல் இருந்தாலோ, அது ஆஞ்ஜைன்னாவாக இருக்கலாம். மேலும், கோபம், உணர்ச்சி வசப்படுதல், பய உணர்வு, அவசரம், அதிகக் குளிர், உடலுறவு போன்ற நேரத்திலும் இந்த வலி ஏற்படலாம்.
இதய பாதிப்பால் ஏற்படும் வலியானது, மூச்சுத் திணறலுடன் ஏற்படும். இதயத்தை முறுக்குவது அல்லது நெஞ்சின் மேல் அதிக எடையை வைத்திருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும். சிலருக்கு நெஞ்சின் கீழ்ப் பகுதியில் எரிவது போன்ற உணர்வு இருக்கும். இதயம் நெஞ்சின் இடது பகுதியிலிருந்தாலும், பொதுவாக இந்த வலி நெஞ்சின் நடுப்பகுதியில் உண்டாகும்.
மேலும், இந்த வலி தோள்பட்டை (பொதுவாக இடது தோள்பட்டை) அல்லது கீழ்த் தாடை பகுதிகளுக்குப் பரவும். முதுகுப் பகுதிக்கும் பரவலாம். சில நேரத்தில் நெஞ்சில் வலி ஏதும் இல்லாமல் மேற்கூறிய பகுதியில் ஏதாவதொரு பகுதியில் வலி ஏற்படலாம்.
இதயத்துக்குத் தேவைப்படும் ஆக்சிஜன் அளவும், இதயத்துக்குக் கிடைக்கும் ஆக்சிஜன் அளவும் மாறுபடும்போது, இதயத்துக்குப் பாதிப்பு ஏற்பட்டு எச்சரிக்கை உணர்வாக இந்த வலி ஏற்படுகிறது. இதை மாரடைப்பு ஏற்படுவதற்கு முன் அறிவிப்பாக எடுத்துக்கொள்ளலாம். ரத்தக் குழாய்களில் ஓரளவு கொழுப்பால் ஏற்படும் அடைப்புதான் இதற்குக் காரணமாக உள்ளது.
ஆஞ்ஜைன்னா என்பது மாரடைப்புக்கு முந்தைய நிலை என எடுத்துக்கொள்ளலாம். எனவே, இதுபோன்று ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.
அடையாளம் காண்பது எப்படி?
ஆஞ்ஜைன்னாவால் ஏற்படும் வலியும் மாரடைப்பால் உண்டாகும் வலியும் கிட்டத்தட்ட ஒன்றாக இருப்பதால், இதை வேறுபடுத்திப் பார்க்க வேண்டும்.
மார்புப் பகுதியில் இயல்பான நிலைக்கு மாறான தொந்தரவு ஏற்படுதல், 15 முதல் 20 நிமிடங்கள் வரை தொடர்ந்து ஏற்படும் நெஞ்சுவலியுடன் அதிகக் களைப்பு, அதிக வியர்வை, மூச்சுத்திணறல், மாறுபட்ட நாடித்துடிப்பால் ஏற்படும் படபடப்பு போன்ற அறிகுறிகள் இருந்தால், மாரடைப்பால் ஏற்பட்ட வலியாக இருக்கலாம். இதனால், இதய நோய் மருத்துவரிடம் அவசர சிகிச்சை பெறுவது அவசியம்.
நெஞ்சு எரிச்சல், வாயுத் தொல்லை, தாடைப் பகுதியில் வலி போன்றவை இருந்தாலே, அது இதய பாதிப்பால் வந்த வலியாக இருக்கலாம் என்ற தவறான முடிவை எடுத்துக் கொள்ளக் கூடாது. ஏற்கெனவே மாரடைப்பு ஏற்பட்ட நோயாளிகளாக இருந்தால், அவர்களுக்கு நைட்ரேட் வகை (Sorbitrate/Isordil) மாத்திரைகளை மருத்துவர் அறிவுறுத்தி இருப்பார். அவர்களுக்கு நடக்கும்போதோ, மாடிப்படி ஏறும்போதோ நெஞ்சுவலி ஏற்பட்டால், நைட்ரேட் வகை (Sorbitrate/Isordil) மாத்திரைகளை நாக்கு அடியில் வைத்துக்கொண்டு, உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
ஒருவேளை சாதாரணமாக ஒருவர் நடக்கும்போதோ, மாடிப்படி ஏறும்போதோ நெஞ்சு வலி ஏற்பட்டால், நைட்ரேட் வகை மாத்திரைகளை நாக்கு அடியில் வைத்த பின், வலி குறைந்தால் அது ஆஞ்ஜைன்னாவாக இருக்கலாம். வலி தொடர்ந்து இருந்தால் மாரடைப்பாக இருக்கலாம். எனவே, அவர்களும் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.
தனியாக இருக்கும்போது மாரடைப்பு ஏற்பட்டால்...
தனிமையில் காலை வேளையில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருக்கும்போதோ, வாகனங்களை ஓட்டிச் செல்லும்போதோ மாரடைப்பு ஏற்பட்டால், பதற்றப்படாமல் இருக்க வேண்டும். பயந்தால் உடலில் உருவாகும் Catectecholamines என்ற ஹார்மோன் இதயத்துடிப்பை அதிகமாக்கி, ஆக்சிஜன் தேவை அளவையும் அதிகரிக்கச் செய்து இதய தசையைப் பாதிக்கிறது. இந்த ஹார்மோன்கள் முறையற்ற இதயத்துடிப்பை (Arrhythmias) ஏற்படுத்தும். எனவே, தனியாக இருந்தால் உடனடியாக உறவினர்கள்/நண்பர்களை உதவிக்கு அழைத்து மருத்துவமனையில் சேர ஏற்பாடு செய்ய வேண்டும்.
தனியாக வாகனத்தில் செல்லும்போது ஏற்பட்டால், சாலையின் ஓரத்தில் வாகனத்தை நிறுத்தி, வாகனத்தின் ஒலிப்பானைத் தொடர்ந்து ஒலிக்கச் செய்து மற்றவர்களைக் கவனத்தை ஈர்த்து மருத்துவமனையில் சேர்ப்பதற்கான உதவியைப் பெறலாம். நடந்தோ வாகனத்தை நீங்களாக ஓட்டியோ மருத்துவமனைக்குச் செல்ல முயல வேண்டாம்.
ஏற்கெனவே மாரடைப்பு ஏற்பட்ட நோயாளியாக இருந்தால், நைட்ரேட் வகை மாத்திரையை நாக்குக்கு அடியில் வைத்துக் கொள்ளலாம். இது இதயத்துக்கு நல்ல ரத்தத்தை எடுத்துச் செல்லும் ரத்தக் குழாய்கள் சுருங்குவதைத் தடுத்துப் பாதிக்கப்பட்ட இதயப் பகுதிக்கு அதிக அளவு ரத்தத்தை எடுத்துச் செல்ல உதவும்.
ஆஸ்பிரின் மாத்திரையையும் எடுத்துக் கொள்ளலாம். இது ரத்த அடர்த்தியைக் குறைத்து, ரத்தம் உறைதலைத் தடுத்து இதய தசைகளைக் காப்பாற்றுகிறது. வயிற்றுப்புண் இருந்தால், மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் ஆஸ்பிரின் மாத்திரையை எடுத்துக்கொள்ளக் கூடாது.
நெஞ்சுவலி இல்லாமலும் வருமா?
சில நோயாளிகளுக்கு நெஞ்சுவலி உள்ளிட்ட எந்த அறிகுறியும் இல்லாமலோ குறைவாகவோ அவர்களுக்குத் தெரியாமல் மாரடைப்பு ஏற்படலாம். இதற்குக் காரணம், நோயாளிகள் தங்களுக்கு ஏற்படும் இந்த வகை அறிகுறிகளை உணராது இருக்கலாம்.
நெஞ்சுவலி இல்லாமல் ஏற்படும் மாரடைப்பு Silent Heart Attack ஆகும். 25 முதல் 30 சதவீதம் வரை இதய நோயாளிகளுக்கு இந்த வகை மாரடைப்பு ஏற்படுகிறது. இந்த வகை நோயாளிகள், சாதாரணமாக வேறு வகை காரணத்துக்காகச் சிகிச்சை பெறச் செல்லும்போது எடுக்கப்படும் இசிஜி அல்லது எக்கோ ஸ்கேன் மூலம் இந்த பாதிப்பு தெரியவரும்.
பொதுவாக, அதிக வருடங்களாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த Silent Heart Attack வரலாம். நீரிழிவு நோயாளிகளுக்கு நரம்பு பாதிக்கப்பட்டு வலி ஏற்படும் உணர்வைத் தெரிவிக்க இயலாத நிலை உண்டாகிறது. இதனால் மாரடைப்பு ஏற்படும்போது அவர்களால் வலி உணர்வை உணர்ந்துகொள்ள இயலுவதில்லை.
கட்டுரையாளர், இதய நோய் நிபுணர்,
தொடர்புக்கு: drnsenthilkumar.nallusamy@gmail.com