Published : 23 Nov 2019 10:18 AM
Last Updated : 23 Nov 2019 10:18 AM

சர்க்கரை கசக்கும்

மு.வீராசாமி

திருமணமான அந்தப் பெண்ணுக்கு 19 வயதுதான் இருக்கும். இரண்டு மாதக் கர்ப்பிணி. நடந்து வரும்போதே அவளுக்குக் கண்ணில் பிரச்சினை இருப்பது தெரிந்தது. அக்கம் பக்கம் கீழே பார்த்து- பார்த்து மெல்லத் தட்டுத் தடுமாறி வந்தார்.

கண்ணில் கண்புரை இருப்பது உறுதி செய்யப்பட்டது. இரண்டு கண்களிலும் 2 அடிக்குத்தான் பார்வை இருந்தது. கண்ணிலிருந்த புரையைப் பார்க்கும்போதும் எலும்பும் தோலுமாக இருந்த அவரின் உடல் அமைப்பைப் பார்க்கும்போதும் நீரிழிவு நோய் இருக்கலாமோ என்ற ஐயம் எழுந்தது.

தன் பெண்ணுக்கு இந்த இளம் வயதில் சர்க்கரை இருப்பதற்கு வாய்ப்பே கிடையாது என்று சொல்லி அதற்குரிய ஆய்வுக்கு அவரின் தந்தை முதலில் மறுத்தார். ஆனால், சர்க்கரைக்கான ஆய்வு, நீரிழிவு நோயை உறுதிசெய்தது. அதுவும் 300க்கு மேல்.

மேலும், கண்புரையும் அறுவை சிகிச்சைக்குத் தயார் நிலையிலிருந்தது. ‘பார்வைக் குறைவு பிரச்சினை உடனே ஏற்பட்டதில்லையே. ஓராண்டாகவே கொஞ்சம் கொஞ்சமாகப் பார்வை குறைந்து வந்திருக்குமே. ஏன் வீட்டில் சொல்லவில்லை’ என்று கேட்டதற்கு வீட்டில் சொன்னதாகவும் கண்டுகொள்ளவில்லை என்றும் அந்தப் பெண் வருத்தம் தெரிவித்தார்.

உணவில் தேவை கவனம்

சில ஆண்டுகளுக்கு முன் சென்னையில் மாணவர்களுக்கு நடத்திய ஆய்வு ஒன்றில், மாணவர்களில் கணிசமானோருக்கு - அதிலும் வளரிளம் மாணவிகளுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் தொடக்க நிலையில் இருப்பதைக் கண்டறிந்தார்கள்.

இதற்கு முக்கியக் காரணமே மாணவர்களின் வாழ்க்கைமுறை மாற்றமும், தவறான உணவுப் பழக்கமும்தான். பலர் காலை உண வைத் தவிர்க்கவே செய்கிறார்கள். இதுவும் நீரிழிவு நோய் வருவதற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது.

பரிசோதனை அவசியம்

நீரிழிவு நோய் இருப்பது உங்களுக்கு எப்படித் தெரியும் என்று அந்நோய் இருப்பவர்களிடம் கேட்டுப் பாருங்கள். உடம்பில் வேறு ஏதாவது ஒரு பிரச்சினைக்காக மருத்துவரிடம் செல்லும்போது தற்செயலாகக் கண்டுபிடித்ததாகத்தான் பலரும் சொல்வார்கள். அதற்குள் உடலில் நீரிழிவின் பாதிப்புகள் ஏற்கெனவே தொடங்கியிருக்கலாம்.

நீரிழிவு நோயைக் கண்டுபிடிப்பதற்குச் சிறந்த வழி 40 வயதை நெருங்கும்போது தாமாகவே முன்வந்து பரிசோதனை களைச் செய்துகொள்வதுதான். ஆறு மாதத்துக்கு ஒருமுறை பார்த்து வர வேண்டும். அப்போதுதான் ஒருவேளை நீரிழிவு இருந்தால் தொடக்க நிலையிலேயே சிகிச்சையை தொடங்க இயலும். பெற்றோருக்கு நீரிழிவு இருந்தால் இன்னும் கூடுதல் கவனம் தேவை.

கட்டுப்பாடு அவசியம்

நீரிழிவு நோயாளிகளிடம் ‘இப்படிச் சாப்பிடுகிறீர்களே, கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணுங்க’ என்று சொல்லிப் பாருங்கள். அதற்கு, ‘அட போகும்போது என்னத்தை அள்ளிட்டுப் போகப்போறோம்? வாயைக் கட்டுப்படுத்திக்கிட்டு எப்படிங்க இருக்க முடியும்; அப்படி ஒரு வாழ்க்கைத் தேவையா’ என்ற ரீதியில் தான் அவர்கள் பேச்சு இருக்கும்.
சிலர் நீரிழிவுக்கு மருந்து சாப்பிட்டுக்கொண்டு இருப்பார்கள்.

கொஞ்ச நாளிலேயே நல்ல முன்னேற்றம் தெரிய ஆரம்பித்தவுடன் மருந்தை நிறுத்திவிடுவார்கள். அவர்களிடம் கேட்டால், என் வேலை அப்படி. உணவில் கட்டுப்பாடாகவும் இருக்க முடியவில்லை. நேரத்துக்கு மருந்தை எடுத்துக்கொள்ளவும் முடியவில்லை என்று சமாதானம் சொல்லிக்கொள்வார்கள்.

சிகிச்சையை நிறுத்தக் கூடாது

நீரிழிவுக்கு மருத்துவம் செய்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் உடல் உறுப்புகள் பாதிப்புக்கு உள்ளாகும் என்பது தெரியாது என்று இந்தக் காலத்தில் யாரும் சொல்ல முடியாது. தெரிந்தும் இவ்வாறு துன்பப்படுவதற்குக் காரணம், ஒன்று நீரிழிவு என்று தெரிந்துவிட்டால் வாய்க்கு ருசியாகச் சாப்பிட முடியாதே என்று நினைப்பது.

மற்றொன்று, வாழ்நாள் முழுவதும் மருந்து மாத்திரை சாப்பிட வேண்டும் என்பதைச் சுமையாக நினைப்பது. சிலர் ஒரு பக்கம் மாத்திரை சாப்பிடுவார்கள். இன்னொரு பக்கம் சர்க்கரை போட்டு டீ, காபி குடிப்பார்கள். கேட்டால், ‘அதுதான் மாத்திரை சாப்பிடுகிறேனே, அதைச் சரிக்கட்டிவிடும்’ என்று சமாளிப்பார்கள்.

நீரிழிவுக்கு மருத்துவரின் அறிவுரைப்படி தொடர் சிகிச்சை எடுத்துக்கொள்வது பக்கவிளைவுகள் ஏற்படாமல் தடுக்க உதவும். அரசு மருத்துவமனைகளிலும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இதற்கான மருந்து மாத்திரைகள் இலவசமாகக் கிடைக்கின்றன.

எனவே, மருந்து மாத்திரைகளை விலைகொடுத்து வாங்க வேண்டுமே என்று கவலைப்படத் தேவையில்லை. பணம் நிறையச் செலவாகுமே என்ற பயமும் தேவை இல்லை. குடும்ப மருத்துவரின் ஆலோசனையின்றி சிகிச்சையை எக்காரணம் கொண்டும் நிறுத்தவே கூடாது.

கட்டுக்குள் வைப்பது எளிது

2040-ல் இந்நோயினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 64 கோடியாகிவிடும் என்று ‘உலக நீரிழிவு நோய் கூட்டமைப்பு’ தெரிவிக்கிறது. வாழ்க்கைமுறை மாற்றம், தகுந்த உணவுப் பழக்கம் ஆகியவற்றின் மூலம் நீரிழிவு நோய் வருவதைத் தடுக்கவோ தள்ளிப்போடவோ அதன் பக்கவிளைவுகளிலிருந்து கரித்துக் கொள்ளவோ முடியும்.

நீரிழிவு நோய்க்கு மருத்துவம் செய்துகொள்ளாததால் ஏற்படும் பக்கவிளைவுகளைச் சமாளிப்பது பெருங்கஷ்டம் என்பதை நினைக்கும்போது, அதைக் கட்டுப்படுத்துவதே நல்லது என்பதை ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

கட்டுரையாளர், மதுரை அரசு
கண் மருத்துவ உதவியாளர் தொடர்புக்கு: veera.opt@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x