

இளம் மருத்துவர்கள் நீண்டநேரம் வேலைபார்ப்பதால் அவர்கள் இளம் வயதிலேயே முதுமை அடைந்துவிடுகிறார்கள் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழக நரம்பியல் துறையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
250 பயிற்சி மருத்துவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட அந்த ஆய்வின் முடிவுகள் ‘Biological Psychiatry’ எனும் மருத்துவ ஆய்விதழில் சமீபத்தில் வெளியாகின. இதில் பயிற்சி மருத்துவர்களாக உள்ள இளைஞர்கள் வேலைப்பளு காரணமாக மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறார்கள் என்றும், இதனால் ‘டிலோமியர்’ (Telomere) என்ற செல் பாதிக்கப்பட்டு இளமையிலேயே முதுமையான தோற்றமும் (Ageing) முதுமைக் கால நோய்களும் விரைவிலேயே அவர்களைத் தாக்கும் அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மன அழுத்தம் முக்கியக்காரணி
“டிலோமியர் செல் பாதிப்பால் மரபணுவும் பாதிக்கப்படுகிறது. டிலோமியர் குறித்த இந்த ஆய்வில் நீண்டகால மன அழுத்தத்தின் விளைவுகளைக் கண்காணிக்க முடிந்தது” என்கிறார் மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் உடல் ஆய்வுத் துறைத் தலைவர் ஸ்ரீஜன் சென். இந்த ஆய்வுக்கு முதலில் தேர்வுசெய்யப்பட்டவர் கேத்ரின். இவர் தற்போது கலிபோர்னியாவில் மனநல மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். “பயிற்சி மருத்துவராகப் பணிபுரிந்தபோது நான் அதிக அளவு மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தேன். அது என்னுடைய செயல்பாட்டையும் பாதிக்கத் தொடங்கியது. அப்போது தான் ஸ்ரீஜனின் டிலோமியர் செல் குறித்த ஆய்வு பற்றிக் கேள்விப்பட்டேன்.
அந்த ஆய்வில் என்னையும் இணைத்துக்கொண்டேன். எங்களுடைய ஆய்வில் நீண்டநேர வேலைப்பளு காரணமாக, மன அழுத்தம் ஏற்பட்டு, அதனால் டிலோமியர் பாதிக்கப்படுகிறது என்பதைக் கண்டறிந்தோம். மேலும், மன அழுத்தம் காரணமாக டிலோமியர் சுருங்கியிருந்ததையும் கண்டுபிடித்தோம். முதுமைக் கால நோய்களின் தாக்கத்தையும் முதுமையான தோற்றம் ஏற்படுவதையும் இது எங்களுக்கு உணர்த்தியது. இந்த ஆராய்ச்சி முடிவுகள் எனக்கு ஆச்சரியம் அளித்தன. தற்போது என்னுடைய பணிச்சூழலை மாற்றிக் கொண்டுள்ளேன். இதனால் மனம் அமைதியாக உள்ளது” என்கிறார் கேத்ரின்.
அனைவரும் அடக்கம்
இவர்களுடைய ஆய்வின்போது, பயிற்சி மருத்துவர்களின் மரபணு மாதிரிகள் அவர்கள் பயிற்சிக்குச் செல்வதற்கு முன்பாகவே சேகரிக்கப்பட்டன. பயிற்சிக்கு முந்தைய அவர்களுடைய மன அழுத்தத்தின் அளவும் மருத்துவப் பயிற்சிக்குப் பிந்தைய மன அழுத்தத்தின் அளவும் ஒப்பீடு செய்யப்பட்டன. இதில் மருத்துவப் பயிற்சிக்குப் பிறகு, மாணவர்களிடம் மன அழுத்தத்தின் அளவு அதிகரித்திருப்பது கண்டறியப்பட்டது.
“டிலோமியர் செல் பாதிப்பு பயிற்சி மருத்துவர்களிடம் மட்டுமல்லாமல்; அதிக நேரம் பணியாற்றும் நபர்களிடமும் காணப்படுகிறது. குறைந்த நேரம் பணியாற்றும் நபர்களுக்கு மன அழுத்தம் குறைவாக உள்ள காரணத்தால் அவர்களுக்கு டிலோமியர் செல் பாதிப்பு குறைவாக உள்ளது” என்கிறார் மருத்துவ அறிவியலாளர் ஸ்ரீஜன். பயிற்சி மருத்துவர்கள் மட்டுமல்லாது ராணுவத்தினர், ஆய்வு மாணவர்கள், புதிய தொழில்முனைவோர், கருவுற்ற பெண்கள், இளம் பெற்றோர் என வேலைப்பளு அதிகமாக உள்ளவர்களிடமும் இந்த ஆய்வை மேற்கொள்ள அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
திட்டமிட்டு வேலை செய்ய வேண்டும்
இந்த ஆய்வில் ஈடுபட்ட மாணவர்கள் வாரத்துக்கு 64.5 மணி நேரம் வேலைச் செய்கிறார்கள். இதனால் அவர்களுடைய டிலோமியர் செல் சுருங்குவதாகக் கண்டறியப் பட்டுள்ளது. வேலைப்பளு அதிக அளவு இல்லாத நபர்களிடம் இந்தப் பாதிப்பு குறைவாகக் காணப்படுகிறது. பயிற்சி மருத்துவர்களாக உள்ளவர்கள் தங்களுடைய வேலையைத் திட்டமிட்டுச் செய்ய வேண்டும். சரியான நேரத்தில் உறங்கி, சரியான நேரத்தில் எழுந்திருக்க வேண்டும், மனஅழுத்தத்தைக் குறைக்கும் மகிழ்ச்சியான செயல்பாடுகளில் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டும் என்று அந்த ஆய்வறிக்கை அறிவுறுத்துகிறது.
- ஆசாத்